M’Cheyne Bible Reading Plan
22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே, அவன் திருடிய மாட்டுக்குப் பதிலாக ஐந்து மாடுகளைக் கொடுக்க வேண்டும். அல்லது திருடிய ஒரு ஆட்டிற்காக நான்கு ஆடுகளைக் கொடுக்க வேண்டும். திருட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும். 2-4 அவனுக்கு கொடுக்க எதுவும் சொந்தமில்லையென்றால், அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். ஆனால் அந்த மனிதன் தான் திருடிய மிருகத்தை வைத்திருந்தானாகில், தான் திருடிய ஒவ்வொரு மிருகத்திற்காகவும் இரண்டு மிருகங்களைக் கொடுக்க வேண்டும். அது மாடா, கழுதையா, அல்லது ஆடா என்பது ஒரு பொருட்டல்ல.
“இரவில் திருடும்படி ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது திருடன் கொல்லப்பட்டால், அவன் கொலைக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்.
5 “ஒருவன் தன் வயலில் அல்லது திராட்சைத் தோட்டத்தில் நெருப்பு மூட்டக் கூடும். அந்த நெருப்பு பரவி, அடுத்த வயலிலோ அல்லது திராட்சைத் தோட்டத்திலோ பற்றிக்கொள்ள நேர்ந்தால் அயலானின் நஷ்டத்திற்கு ஈடாக அவன் விளைச்சலின் சிறந்த பலனுக்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்.
6 “ஒருவன் வயலின் முட்புதர்களை எரிக்கும்படி நெருப்பு வைக்கக்கூடும். அது பரவி அடுத்தவனின் வயலிலுள்ள பயிர்களையோ, தானியத்தையோ அழித்தால், அழிந்து போனவற்றின் விலையை அழிவுக்குக் காரணமாக இருந்தவன் கொடுக்க வேண்டும்.
7 “ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும். 8 ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்றவாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார்.
9 “காணாமற்போன மாடு, கழுதை, ஆடு அல்லது துணிகளைக் குறித்து இருவர் முரண்பட்டால் நீ என்ன செய்ய வேண்டும்? ஒருவன், ‘இது என்னுடையது’ என்றும் இன்னொருவன், ‘இல்லை, அது எனக்குரியது’ என்றும் கூறுகிறான். இருவரும் தேவனுக்கு முன்னே போக வேண்டும். யார் குற்றவாளி என்பதை தேவன் தீர்மானிப்பார். குற்றவாளியான மனிதன் அப்பொருளின் இருமடங்கு விலையை மற்றவனுக்குக் கொடுக்கவேண்டும்.
10 “ஒருவன் அடுத்தவனிடம் தனது மிருகத்தைச் சில காலம் கவனித்துக்கொள்ளும்படியாக விடலாம். அது கழுதை அல்லது மாடு அல்லது ஆடாக இருக்கலாம். யாரும் பார்க்காதபோது ஒருவன் அதனைக் காயப்படுத்தவோ, கொல்லவோ, திருடவோ செய்தால் நீ என்ன செய்ய வேண்டும்? 11 அதைப் பெற்றுகொண்டவன் அம்மிருகத்தைத் தான் திருடவில்லை என்பதை விளக்க வேண்டும். அது உண்மையானால் கர்த்தரின் சந்நிதியில் சென்று நான் திருடவில்லை என்று ஆணையிட வேண்டும். மிருகத்தின் உரிமையாளனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் அந்த மிருகத்திற்காக எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை. 12 ஆனால் அண்டை வீட்டுக்காரன் மிருகத்தைத் திருடியிருந்தால், அவன் அதற்கான விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். 13 காட்டு மிருகங்கள் அதனைக் கொன்றிருந்தால் அதன் உடலைச் சாட்சியாக அண்டை வீட்டுக்காரன் எடுத்துவர வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்துக்காக அவன் விலை கொடுக்க வேண்டாம்.
14 “அண்டை வீட்டுக்காரனிடமிருந்து ஒருவன் எதையேனும் இரவல் பெற்றுக்கொண்டால், அவனே அப்பொருளுக்குப் பொறுப்பாளியாவான். ஒரு மிருகம் காயமுற்றாலோ அல்லது மரித்தாலோ அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தின் விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொருளின் உரிமையாளன் அங்கு இல்லாதிருந்தால், அண்டை வீட்டுக்காரன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். 15 ஆனால் உரிமையாளனே அங்கிருந்தால் அயலான் அதற்கு பொறுப்பேற்க அவசியமில்லை. அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தை வேலைக்குப் பயன்படுத்தும்போது அதற்குக் குத்தகை செலுத்தும் பட்சத்தில் அம்மிருகம் மரித்தாலோ அல்லது காயப்பட்டாலோ அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிருகத்தைப் பயன்படுத்தியதற்காக அவன் ஏற்கெனவே கொடுத்த பணமே போதுமானது.
16 “மணமாகாத கன்னியிடம் ஒரு மனிதன் பாலின உறவு கொண்டால், அவன் அவளை மணந்துகொள்ள வேண்டும். அப்பெண்ணின் தந்தைக்குப் பரிசுப் பொருளை அவன் கொடுக்க வேண்டும். 17 பெண்ணின் தந்தை அவனைத் தன் மகள் மணக்கச் சம்மதிக்காவிட்டாலும் கூட, அவன் அப்பணத்தைக் கொடுத்துத் தீர வேண்டும். அவளுக்குரிய முழு ஈட்டுப் பொருளையும் அவன் செலுத்தியே ஆகவேண்டும்.
18 “எந்தப் பெண்ணையும் மந்திரம் செய்ய நீ அனுமதிக்கக் கூடாது. அவள் மந்திரம் செய்தால் அவள் வாழ அனுமதிக்காதே.
19 “மிருகத்தோடு யாரும் உடலுறவு கொள்ளலாகாது. அவ்வாறு செய்யும் மனிதன் கொல்லப்பட வேண்டும்.
20 “பொய்த் தேவர்களுக்கு ஒருவன் பலி செலுத்தினால் அம்மனிதன் கொல்லப்பட வேண்டும். தேவனாகிய கர்த்தருக்கு மட்டுமே நீங்கள் பலி செலுத்த வேண்டும்.
21 “முன்பு எகிப்தில் அந்நியர்களாக இருந்தீர்கள் என்பதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். எனவே, உங்கள் நாட்டில் வாழும் எந்த அந்நியனையும் ஏமாற்றவோ, காயப்படுத்தவோ கூடாது.
22 “கணவனை இழந்த பெண்களுக்கும், பெற்றோரற்ற குழந்தைகளுக்கும் எந்தத் தீமையும் செய்யாதீர்கள். 23 விதவைகளுக்கும், அநாதைகளுக்கும் ஏதேனும் தீங்கு செய்தீர்களானால் நான் அதை அறிவேன். அவர்கள் பட்ட துன்பத்தைப்பற்றிக் கூறும்போது, நான் கேட்பேன். 24 எனக்கு மிகுந்த கோபம் உண்டாகும். உங்களைப் பட்டயத்தால் கொல்லுவேன். அப்போது உங்கள் மனைவியர் விதவைகளாவார்கள். உங்கள் பிள்ளைகள் அநாதைகளாவார்கள்.
25 “என் ஜனங்களில் ஏழையான ஒருவனுக்கு நீங்கள் கடனாகப் பணம் கொடுத்தால், அதற்கு வட்டி கேட்காதீர்கள். உடனே அப்பணத்தைத் திருப்பும்படியாக வற்புறுத்தக் கூடாது. 26 நீ கொடுக்கவிருக்கும் பணத்திற்கு அடமானமாக தன் மேற்சட்டையை ஒருவன் கொடுத்தால் சூரியன் மறையும் முன்னர் அந்த மேற்சட்டையைத் திரும்பக் கொடுத்து விடவேண்டும். 27 அம்மனிதனுக்கு மேற்சட்டை இல்லாமலிருந்தால் உடலைப் போர்த்திக்கொள்ள எதுவுமிராது. அவன் தூங்கும்போது சளிபிடிக்கும். அவன் என்னைக் கூப்பிட்டால் நான் அவனைக் கேட்பேன். நான் இரக்கம் பொருந்தியவராக இருப்பதால் நான் அவனுக்கு செவிகொடுப்பேன்.
28 “நீங்கள் தேவனையோ, ஜனங்கள் தலைவர்களையோ சபிக்கக் கூடாது.
29 “அறுவடையின்போது நீங்கள் முதல் தானியத்தையும், முதல் பழங்களின் ஈற்றையும் எனக்குக் கொடுக்க வேண்டும். வருடத்தின் இறுதிவரைக்கும் காத்திராதீர்கள்.
“உங்கள் முதற்பேறான மகன்களை எனக்குக் கொடுங்கள். 30 முதலில் பிறந்த ஆடுகளையும், மாடுகளையும் எனக்குக் கொடுங்கள். முதற்பேறான குட்டியானது தாயுடன், ஏழுநாட்கள் இருக்கட்டும், எட்டாவது நாள் அதை எனக்குக் கொடுங்கள்.
31 “நீங்கள் என் விசேஷ ஜனங்கள். எனவே கொடிய மிருகங்களால் கொல்லப்பட்ட விலங்குகளின் மாமிசத்தை உண்ணாதீர்கள். அந்த மரித்த மிருகத்தை நாய்கள் தின்னட்டும்.
கிறிஸ்து உலகத்துக்கு வருதல்
1 உலகம் ஆரம்பிக்கும் முன்பே வார்த்தை [a] இருந்தது. அந்த வார்த்தை தேவனோடு இருந்தது. அந்த வார்த்தை தேவனாகவே இருந்தது. 2 அவர் (வார்த்தை) தொடக்கக் காலத்திலேயே தேவனோடு இருந்தார். 3 அனைத்தும் அவர் (வார்த்தை) மூலமாகவே உண்டாக்கப்பட்டன. அவரில்லாமல் எதுவும் உருவாகவில்லை. 4 அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் உலகத்து மக்களுக்கு ஒளியாய் இருந்தது. 5 அந்த ஒளி இருளிலே வெளிச்சத்தைத் தந்தது. இருளானது அந்த ஒளியை மேற்கொள்ளவில்லை.
6 யோவான் என்ற பெயருள்ள ஒரு மனிதன் இருந்தான். அவன் தேவனால் அனுப்பப்பட்டவன். 7 அவன் அந்த ஒளியைப் (கிறிஸ்து) பற்றி மக்களிடம் சொல்வதற்காக வந்தான். எனவே மக்கள் அனைவரும் யோவான் மூலமாக அந்த ஒளியைப்பற்றிக் கேள்விப்படவும் நம்பிக்கை வைக்கவும் முடிந்தது. 8 யோவான் ஒளியல்ல. ஆனால் அவன் அந்த ஒளியைப்பற்றி மக்களிடம் சொல்லவே வந்தவன். 9 அனைத்து மக்களுக்கும் வெளிச்சத்தைத் தருகிற அந்த உண்மையான ஒளி உலகத்திற்கு வந்து கொண்டிருந்தது.
10 அவர் (வார்த்தை) உலகத்தில் ஏற்கெனவே இருந்தார். உலகம் அவர் மூலமாகவே உண்டாக்கப்பட்டது. ஆனால் உலகம் அவரை அறிந்துகொள்ளாமல் இருந்தது. 11 அவருக்குச் சொந்தமான உலகத்துக்கு அவர் வந்தார். ஆனால் அவருக்குச் சொந்தமான மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. 12 சிலர் அவரை ஏற்றுக்கொண்டனர். அவர்கள் நம்பினர். தன்னை நம்பியவர்களுக்கு தேவனின் பிள்ளைகளாவதற்கு உரிமையைக் கொடுத்தார். 13 இந்தப் பிள்ளைகள் ஏனைய சிறிய குழந்தைகள் பிறப்பதைப்போல பிறக்கவில்லை. இவர்கள் ஒரு தாய் தந்தையின் விருப்பத்தின்படியோ, திட்டத்தின்படியோ பிறக்கவில்லை. இந்தக் குழந்தைகள் தேவனாலேயே பிறந்தனர்.
14 வார்த்தை ஒரு மனிதனாகி நம்மிடையே வாழ்ந்தார். அவரது மகிமையை நாம் பார்த்தோம். அந்த மகிமை தந்தையின் ஒரே மகனுக்கு உரியது. அவ்வார்த்தை கிருபையும், உண்மையும் நிறைந்ததாயிற்று. 15 அவரைப்பற்றி யோவான் மக்களிடம், “நான் சொல்லிக்கொண்டிருந்தவர் இவர்தான். ‘எனக்குப் பின்னால் வருகிறவர் என்னிலும் மேலானவர். இவர் எனக்கு முன்னரே இருப்பவர்’” என்று சாட்சி சொன்னான்.
16 அவர் (கிறிஸ்து) கிருபையும், உண்மையும் நிறைந்தவராய் இருந்தார். அவரிடமிருந்து நாமனைவரும் கிருபையின் மேல் கிருபை பெற்றோம். 17 மோசே மூலம் சட்டங்கள் கொடுக்கப்பட்டன! ஆனால் இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே கிருபையும், உண்மையும் வந்தன. 18 எந்த மனிதனும் ஒருபோதும் தேவனைப் பார்த்ததில்லை. ஆனால் இயேசுவாகிய ஒரே குமாரனே தேவன். அவர் பிதாவுக்கு (தேவனுக்கு) மிகவும் நெருக்கமானவர். அத்துடன் குமாரனே தேவனின் தன்மையை நமக்கு வெளிக்காட்டினார்.
இயேசுவைப்பற்றி யோவான்(A)
19 எருசலேமிலுள்ள யூதர்கள் ஆசாரியரையும் லேவியரையும் யோவானிடம் அனுப்பி வைத்தார்கள். “நீர் யார்?” என்று கேட்பதற்காக அவர்களை யூதர்கள் அனுப்பினர். 20 யோவான் அவர்களிடம் தாராளமாகப் பேசினான். அவன் பதில் சொல்ல மறுக்கவில்லை. “நான் கிறிஸ்து அல்ல” என்று யோவான் தெளிவாகக் கூறினான். இது தான் அவன் மக்களிடம் சொன்னது.
21 “பிறகு நீர் யார்? நீர் எலியாவா?” என்று மேலும் யூதர்கள் யோவானிடம் கேட்டார்கள். “இல்லை. நான் எலியா இல்லை” என்று யோவான் பதிலுரைத்தான்.
“நீர் தீர்க்கதரிசியா?” என யூதர்கள் கேட்டனர்.
“இல்லை. நான் தீர்க்கதரிசி இல்லை” என்றான் யோவான்.
22 “நீர் யார்? உம்மைப்பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். எங்களை அனுப்பியவர்களுக்கு நாங்கள் சொல்வதற்கென்று ஒரு பதில் சொல்லுங்கள். உம்மைப்பற்றி நீர் என்ன சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.
23 யோவான் அவர்களிடம் தீர்க்கதரிசி ஏசாயாவின் வார்த்தைகளைச் சொன்னான்.
“வனாந்தரத்தில் சத்தமிடுகிறவனின் ஓசையாக நான் இருக்கிறேன்.
‘கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள்.’” (B)
24 யூதர்களான இவர்கள் பரிசேயர்கள் என்பவர்களால் அனுப்பப்பட்டிருந்தனர். 25 “நீர் கிறிஸ்து அல்ல என்று கூறுகிறீர். நீர் எலியாவோ தீர்க்கதரிசியோ அல்ல என்றும் கூறுகிறீர். பின்னர் நீர் ஏன் ஞானஸ்நானம் கொடுக்கிறீர்?” என அவர்கள் யோவானிடம் கேட்டார்கள்.
26 “நான் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால் உங்களோடு இங்கே இருக்கிற ஒருவர் உங்களால் அறியப்படாதவராக இருக்கிறார். 27 அந்த ஒருவர்தான் எனக்குப் பின்னால் வருகிறவர். அவரது செருப்பின் வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவன் நான்” என்று யோவான் பதிலுரைத்தான்.
28 இந்நிகழ்ச்சிகள் யாவும் யோர்தான் ஆற்றின் அக்கரையில் உள்ள பெத்தானியாவில் நடைபெற்றன. இங்கேதான் யோவான் மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்தான்.
இயேசு, தேவ ஆட்டுக்குட்டி
29 மறுநாள் தன்னை நோக்கி இயேசு வருவதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர் தான் தேவனுடைய ஆட்டுக்குட்டி. உலகத்தின் பாவங்களை சுமந்து தீர்க்கப்போகிறவர். 30 நான் ஏற்கெனவே சொல்லிக்கொண்டிருந்தவர் இவர் தான். ‘எனக்குப் பிறகு ஒரு மனிதர் வருவார். அவர் என்னிலும் மேலானவர். ஏனென்றால் அவர் எனக்கு முன்னமே வாழ்ந்துகொண்டிருக்கிறவர். அவர் எப்போதும் வாழ்கிறவர்.’ 31 இவரை நானும் அறியாதிருந்தேன். ஆனாலும் நான் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்க வந்திருக்கிறேன். ஆகையால் இஸ்ரவேல் மக்கள் இயேசுதான் கிறிஸ்து என அறிந்துகொள்ள முடியும்.
32-33 “கிறிஸ்து யாரென்று நானும் அறியாமல்தான் இருந்தேன். ஆனால் தேவன் என்னைத் தண்ணீரால் ஞானஸ்நானம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தார். ‘நீ யார் மீது பரிசுத்த ஆவியானர் இறங்கி அமர்வதைக் காண்பாயோ, அவர்தான் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் கொடுக்கிறவர்’ என்று தேவன் என்னிடம் கூறினார்” என்றான். “நான் அவ்வாறு நிகழ்வதைப் பார்த்தேன். ஆவியானவர் பரலோகத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தேன். அந்த ஆவியானவர் ஒரு புறாவைப்போல் இறங்கி இயேசுவின் மீது அமர்ந்தார். 34 நான் இதைத்தான் மக்களிடம் சொல்லி வருகிறேன். ‘இயேசுதான் தேவனின் குமாரன்’” என்று யோவான் சொன்னான்.
இயேசுவின் முதல் சீஷர்கள்
35 மறுநாள் மறுபடியும் யோவான் அங்கே இருந்தான். அவனோடு அவனைப் பின்பற்றுகிற சீஷர்களில் இரண்டு பேர் இருந்தனர். 36 இயேசு நடந்துசெல்வதை யோவான் பார்த்தான். “பாருங்கள், இவர்தான் தேவனின் ஆட்டுக்குட்டி” என்றான்.
37 அந்த இரு சீஷர்களும் யோவான் கூறுவதைக் கேட்டார்கள். ஆகையால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். 38 “உங்களுக்கு என்ன வேண்டும்?” என்று இயேசு திரும்பி அவர்களைப் பார்த்து கேட்டார்.
அந்த இருவரும், “போதகரே, நீங்கள் எங்கே தங்கியிருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
39 “என்னோடு வாருங்கள். நீங்கள் கண்டுகொள்வீர்கள்” என்று இயேசு பதிலுரைத்தார். எனவே அவர்கள் இருவரும் அவர் பின்னால் சென்றனர். இயேசு தங்கியிருக்கும் இடத்தையும் கண்டனர். அன்று அவர்கள் அவரோடு அங்கே தங்கியிருந்தனர். அப்பொழுது நேரம் சுமார் நான்கு மணி.
40 இயேசுவைப்பற்றி யோவான் சொன்னதன் மூலமாகத் தெரிந்துகொண்டதால் அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து சென்றனர். அந்த இருவரில் ஒருவன் பெயர் அந்திரேயா. அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். 41 முதல் காரியமாக அவன் தன் சகோதரன் சீமோன் பேதுருவைப் போய்ப் பார்த்தான். “நாங்கள் மேசியாவைக் (அதன் பொருள் கிறிஸ்து) கண்டுகொண்டோம்” என்று கூறினான்.
42 பிறகு அந்திரேயா சீமோனை இயேசுவிடம் அழைத்துக் கொண்டு வந்தான். இயேசு சீமோனைப் பார்த்து, “நீ யோவானுடைய மகனான சீமோன். நீ கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (“கேபா” என்பதற்கு “பேதுரு” என்று அர்த்தம்.)
43 மறுநாள் இயேசு கலிலேயாவுக்குச் செல்லத் தீர்மானித்தார். இயேசு பிலிப்புவைக் கண்டு, “என்னைத் தொடர்ந்து வா” என்றார். 44 பிலிப்பு, அந்திரேயா, பேதுரு ஆகியோரின் ஊரான பெத்சாயிதாவைச் சேர்ந்தவன். 45 பிலிப்பு நாத்தான்வேலைப் பார்த்து, “மோசே எழுதியிருக்கிற சட்டங்களை எண்ணிப்பார். மோசே வரப்போகிற ஒரு மனிதரைப்பற்றி எழுதினார். தீர்க்கதரிசிகளும் அவரைப்பற்றி எழுதி இருக்கிறார்கள். நாங்கள் அவரைத் தெரிந்துகொண்டோம். அவர் பெயர் இயேசு. யோசேப்பின் மகன். நாசரேத்திலிருந்து வருகிறார்.”
46 ஆனால் நாத்தான்வேல் பிலிப்புவிடம், “நாசரேத்தா? நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வர இயலுமா?” எனக் கேட்டான்.
“வந்து பார்” என்று பதிலுரைத்தான் பிலிப்பு.
47 நாத்தான்வேல் தன்னிடம் வந்துகொண்டிருப்பதை இயேசு பார்த்தார். “இதோ வந்துகொண்டிருக்கிற இவன் உண்மையாகவே தேவனின் மக்களில் ஒருவன். இவனிடம் எந்த தவறும் இல்லை” என்று இயேசு கூறினார்.
48 “என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?” என நாத்தான்வேல் கேட்டான்.
பிலிப்பு என்னைப்பற்றி உனக்குக் கூறும் முன்பே, “நீ அத்தி மரத்தின் கீழே நிற்கும்போதே உன்னைப் பார்த்தேன்” என்று இயேசு சொன்னார்.
49 பிறகு இயேசுவிடம், “ஆண்டவரே! நீங்கள் தான் தேவகுமாரன். இஸ்ரவேலின் அரசன்” என்று நாத்தான்வேல் கூறினான்.
50 “நான் உன்னை அத்தி மரத்தின் அடியில் பார்த்ததாக ஏற்கெனவே கூறியிருக்கிறேன். அதனால் என்மீது நீ நம்பிக்கை வைத்தாய். ஆனால் அதைவிட மேலும் சிறந்தவைகளைக் காண்பாய்” என்று இயேசு கூறினார். 51 அவர் மேலும், “நான் மெய்யாகவே உங்களுக்குக் கூறுகிறேன். பரலோக வாசல் திறந்திருப்பதையும், மனிதகுமாரனிடத்திலிருந்து தேவதூதர்கள் மேலே செல்வதையும் கீழே இறங்குவதையும் நீங்கள் காண்பீர்கள்” [b] என்றார்.
கர்த்தர் யோபுவை நோக்கி:
40 “யோபுவே,
“நீ சர்வ வல்லமையுள்ள தேவனோடு விவாதித்தாய்.
தவறிழைத்த குற்ற முடையவனாக என்னை நீ நியாயந்தீர்த்தாய்!
நீ தவறு செய்தாயென இப்போது நீ ஒப்புக்கொள்வாயா?
நீ எனக்குப் பதில் கூறுவாயா?” என்றார்.
3 அப்போது யோபு, தேவனுக்குப் பதிலுரைத்தான். அவன்:
4 “நான் பேசுவதற்கும் தகுதியற்றவன்!
நான் உம்மிடம் என்ன கூறமுடியும்?
நான் உமக்கு பதில் கூற முடியாது!
நான் என் கைகளை வாயின் மீது வைப்பேன்.
5 நான் ஒரு முறை பேசினேன், ஆனால் நான் மீண்டும் பேசமாட்டேன்.
நான் இருமுறை பேசினேன், ஆனால், இனிமேல் எதுவும் கூறமாட்டேன்” என்றான்.
6 அப்போது புயலிலிருந்து கர்த்தர் மீண்டும் யோபுவிடம் பேசினார். கர்த்தர்,
7 “யோபுவே, உன் இடையைக் கட்டிக்கொண்டு
நான் உன்னிடம் கேட்கப்போகும் கேள்விகளுக்குப் பதில் கூறு,
8 “யோபுவே, நான் நியாயமற்றவனென்று நீ நினைக்கிறாயா?
என்னை தவறிழைக்கும் குற்றவாளியாகக் கூறுவதால், நீ களங்கமற்றவனெனக் காட்ட நினைக்கிறாய்!
9 யோபுவே, உன் கரங்கள் தேவனுடைய கரங்களைப்போன்று வலிமையுடையனவா?
இடிபோல முழங்க வல்ல தேவனுடைய குரலைப்போன்ற குரல் உனக்கு உள்ளதா?
10 நீ தேவனைப் போலிருந்தால், பெருமையடைந்து உன்னை நீயே மகிமைப்படுத்திக் கொள்ள முடியும்.
நீ தேவனைப் போலிருந்தால், ஆடையைப்போன்று மகிமையையும், மேன்மையையும் நீ உடுத்திக்கொள்ள முடியும்.
11 நீ தேவனைப் போலிருந்தால், உன் கோபத்தை வெளிப்படுத்தி அகங்காரமுள்ள ஜனங்களைத் தண்டிக்க முடியும்.
அந்த அகங்காரமுள்ள ஜனங்களைத் தாழ்மையுள்ளோராக்க முடியும்.
12 ஆம், யோபுவே, அந்த அகங்காரம் நிரம்பிய ஜனங்களைப் பார், அவர்களைத் தாழ்மையுள்ளோராக்கு.
தீயோர் நிற்குமிடத்திலேயே அவர்களை நசுக்கிவிடு.
13 அகங்காரமுள்ள ஜனங்கள் எல்லோரையும் மண்ணுக்குள் புதைத்துவிடு.
அவர்கள் உடலை துணியால் சுற்றி அவர்களின் கல்லறைக்குள் வைத்துவிடு.
14 யோபுவே, உன்னால் இக்காரியங்களையெல்லாம் செய்ய முடிந்தால், அப்போது நான்கூட உன்னை வாழ்த்துவேன்.
உன் சொந்த ஆற்றலால் உன்னை நீ காப்பாற்றிக்கொள்ளக்கூடும் என்பதை நான் ஒப்புக்கொள்வேன்.
15 “யோபுவே, பிகெமோத்தை நீ கவனித்துப்பார்.
நான் (தேவன்) பிகெமோத்தை [a] உண்டாக்கினேன், உன்னையும் உண்டாக்கினேன்.
பிகெமோத் பசுவைப்போல, புல்லைத் தின்கிறது.
16 பிகெமோத்தின் உடம்பு மிகுந்த வல்லமை பொருந்தியது.
அதன் வயிற்றின் தசைகள் வல்லமை மிக்கவை.
17 பிகெமோத்தின் வால் கேதுரு மரத்தைப் போல் ஆற்றலோடு காணப்படுகிறது.
அதன் கால் தசைகள் மிகுந்த பலமுள்ளவை.
18 பிகெமோத்தின் எலும்புகள் வெண்கலம் போன்று பலமுள்ளவை.
அதன் கால்கள் இரும்புக் கம்பிகளைப் போன்றவை.
19 நான் (தேவன்) உண்டாக்கிய மிருகங்களுள் பிகெமோத் மிகவும் வியக்கத்தக்கது.
ஆனால் நான் அதை வெல்ல (தோற்கடிக்க) முடியும்.
20 காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப்
பிகெமோத் தின்கிறது.
21 தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது.
அது உளையிலுள்ள (சேற்றிலுள்ள) நாணல்களின் கீழ் மறைந்துக்கொள்ளும்.
22 தாமரைக் கொடிகள் அவற்றின் நிழலில் பிகெமோத்தை மறைக்கும்.
நதியருகே வளரும் அலரி மரங்களின் கீழே அது வாழும்.
23 நதியில் வெள்ளம் பெருக்கெடுத்தால், பிகெமோத் ஓடிப்போய்விடாது.
யோர்தான் நதியின் தண்ணீர் அதன் முகத்தில் அடித்தாலும் அது அஞ்சாது.
24 பிகெமோத்தின் கண்களை ஒருவனும் குருடாக்கி அதனை வலையில் அகப்படுத்தவும் முடியாது.
பவுலும்-தேவசபையும்
10 நான் பவுல். உங்களை வேண்டிக்கொள்கிறேன். கிறிஸ்துவின் கருணையோடும், சாந்தத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களோடு இருக்கும்போது தாழ்மையுடையவனாகவும் உங்களைவிட்டுத் தூரமாயிருக்கும்போது உங்கள் மேல் கண்டிப்புடனும் இருப்பதாகச் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். 2 நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன். 3 நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை. 4 உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். 5 தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். 6 அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.
7 உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 8 கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. 9 இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். 11 “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
12 தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.
13 எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 14 அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். 15 மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். 16 உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். 17 ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” [a] 18 தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.
2008 by World Bible Translation Center