Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 38

பலிகளை எரிக்கும் பீடம்

38 பலிபீடத்தை பெசலெயேல் சீத்திம் மரத்தால் செய்தான். இப்பலிபீடம் பலிகளை எரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது. அது சதுரவடிவமானது. அது 5 முழ நீளமும் 5 முழ அகலமும் 3 முழ உயரமும் உடையது. அவன் பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு கொம்பைச் செய்து வைத்தான். அவற்றைப் பலிபீடத்தோடு இணைத்து ஒன்றாக அடித்தான். பின்பு பலிபீடத்தை வெண்கலத்தால் மூடினான். பலிபீடத்தில் பயன்படுத்தப்படும் எல்லா கருவிகளையும் வெண்கலத்தால் செய்தான். பானைகள், கரண்டிகள், கிண்ணங்கள், முள்கரண்டிகள், பெரிய கொப்பரைகளையும் செய்தான். பின்னர் பலிபீடத்திற்காக வெண்கலத்தாலான வலைப் பின்னல் போன்ற ஒரு சல்லடையை உண்டாக்கினான். பலிபீடத்தின் அடித்தட்டில் அந்தச் சல்லடையைப் பொருத்தினான். அது பலிபீடத்தின் நடுப்பகுதியில் (பாதி உயரத்தில்) பொருந்தியது. பின் அவன் பித்தளை வளையங்களை செய்தான். பலிபீடத்தைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு இவ்வளையங்கள் பயன்பட்டன. சல்லடையின் நான்கு மூலைகளிலும் அவன் அந்த வளையங்களை வைத்தான். பின் அவன் சீத்திம் மரத்தினால் தண்டுகளைச் செய்து அவற்றை வெண்கலத்தால் மூடினான். பலிபீடத்தின் பக்கங்களிலுள்ள வளையங்களில் தண்டுகளைச் செலுத்தினான். தண்டுகள் பலிபீடத்தைச் சுமப்பதற்குப் பயன்பட்டன. பலிபீடத்தின் நான்கு பக்கங்களையும் சீத்திம் பலகைகளினால் செய்தான். அது வெறுமையான பெட்டியைப் போன்று உள்ளே ஒன்றுமில்லாதிருந்தது.

அவன் வெண்கலத்தாலான தொட்டிகளையும், அதன் பீடங்களையும் செய்தான். பெண்கள் கொடுத்த வெண்கல முகக் கண்ணாடிகளை அதற்குப் பயன்படுத்தினான். இந்தப் பெண்களே ஆசரிப்புக்கூடாரத்தின் நுழைவாயிலில் திருப்பணியாற்றி வந்தனர்.

பரிசுத்த கூடாரத்தைச் சுற்றியுள்ள பிரகாரம்

பின்னர் முற்றத்தைச் சுற்றி திரைச் சீலைகள் எழுப்பினான். 100 முழ நீளமுள்ள தொங்குதிரையை தெற்குப் பக்கத்தில் எழுப்பினான். மெல்லிய துகிலால் அத்திரைகள் அமைந்தன. 10 தெற்குப் பக்கத்துத் திரைகளை 20 தூண்கள் தாங்கின. அவற்றிற்கு 20 வெண்கல பீடங்கள் அமைந்தன. தூண்களுக்கான கொக்கிகளையும் திரைச் சீலைத் தண்டுகளையும் வெள்ளியால் செய்தான். 11 பிரகாரத்தின் வடக்குப்புறத்தில் 100 முழ நீளமான திரைச் சுவர் அமைந்தது. 20 வெண்கலப் பீடங்கள் உள்ள 20 தூண்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்பட்டன.

12 வெளிப்பிரகாரத்தின் மேற்குப் பக்கத்தில் 50 முழ நீளமான தொங்குதிரையை அமைத்தான். அந்த 10 தூண்களுக்கும், 10 பீடங்கள் இருந்தன. தூண்களின் கொக்கிகளையும் திரைப் பூண்களையும் வெள்ளியால் அமைத்தான்.

13 வெளிப் பிரகாரத்தின் கிழக்குப்புறத்திலிருந்து தொங்குதிரை 50 முழ அகலம்Ԕஉடையதாக இருந்தது. பிரகாரத்தின் நுழைவாயில் இப்பக்கத்தில் இருந்தது. 14 நுழைவாயிலின் ஒரு பக்கத்தில் தொங்கு திரை 15 முழ நீள முடையதாகவும் மூன்று பீடங்களின்மேல் நின்ற மூன்று தூண்களைக் கொண்டதாகவும் இருந்தது. 15 நுழை வாயிலின் மறுபுறத்திலுள்ள தொங்கு திரைகள் 15 முழ நீளமுடையதாக இருந்தது. அந்தப் பக்கத்தில் மூன்று தூண்களும் அவற்றிக்கு மூன்று பீடங்களும் அமைத்தனர். 16 பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகள் மெல்லிய துகிலால் செய்யப்பட்டன. 17 தூண்களின் பீடங்கள் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. கொக்கிகளும், திரைப்பூண்களும், வெள்ளியால் செய்யப்பட்டன. தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. பிரகாரத்தின் தூண்களில் வெள்ளியாலான திரைப்பூண்கள் இருந்தன.

18 பிரகார நுழைவாயிலின் தொங்குதிரைகள் மெல்லிய துகிலாலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூல்களாலும் நெய்யப்பட்டன. அவற்றில் பல சித்திரங்களும் வடிவமைக்கப்பட்டிருந்தன. திரையானது 20 முழ நீளமும் 5 முழ உயரமும் உடையதாக இருந்தது. அவை பிரகாரத்தைச் சுற்றிலும் அமைந்த தொங்கு திரைகளின் உயரம் கொண்டிருந்தன. 19 தொங்குதிரையை நான்கு தூண்களும், வெண்கல பீடங்களும் தாங்கின. தூண்களின் கொக்கிகள் வெள்ளியால் ஆனவை ஆகும். தூண்களின் மேற்பகுதிகளும் வெள்ளியால் மூடப்பட்டன. திரைப் பூண்களும் வெள்ளியாலாயின. 20 பரிசுத்தக் கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகள் வெண்கலத்தால் செய்யப்பட்டன.

21 உடன்படிக்கையின் கூடாரமாகிய பரிசுத்த கூடாரத்திற்குத் தேவைப்பட்ட பொருட்களை எல்லாம் லேவி குடும்பத்தார் எழுதி வைத்துக்கொள்ளும்படியாக மோசே கட்டளையிட்டான். பட்டியலைத் தயாரிக்கும் பொறுப்பை ஆரோனின் மகனாகிய இத்தாமார் ஏற்றுக்கொண்டான்.

22 மோசேக்கு கர்த்தர் விதித்த எல்லாக் கட்டளைகளையும் யூதாவின் கோத்திரத்தின் வழியே வந்த ஊரின் மகனாகிய ஊரியின் மகன் பெசலெயேல் நிறைவேற்றினான். 23 தாண் கோத்திரத்தைச் சேர்ந்த அகிசாமாகின் மகனான அகோலியாப் அவனோடு ஒத்துழைத்தான். அகோலியாப் மிகச் சிறந்த சித்திரை கைவேலையாளும், நெசவில் நிபுணனும் ஆவான். மெல்லிய துகிலை நெய்வதிலும், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலை நெய்வதிலும் அவன் தலைசிறந்தவனாக இருந்தான். 24 கர்த்தரின் பரிசுத்த இடத்திற்கு 2 டன்கள் எடைக்கு மேற்பட்ட பொன் காணிக்கையாக அளிக்கப்பட்டது. (அதிகாரப் பூர்வமான அளவு எடையின்படி அது எடையிடப்பட்டது.)

25 எண்ணிக்கை எடுக்கப்பட்ட மனிதர்கள் அனைவரும் 3 3/4 டன்கள் வெள்ளி கொடுத்தனர். (இதுவும் அதிகாரப்பூர்வமான அளவின் தராசில் நிறுக்கப்பட்டது) 26 இருபதும் அதற்கு மேற்பட்ட வயதுமுடைய ஆண்கள் எண்ணப்பட்டனர். 6,03,550 ஆண்கள் இருந்தனர். ஒவ்வொருவனும் 1 பெக்கா வெள்ளியை வரியாக அளித்தான். (அதிகாரப்பூர்வமான அளவின்படி 1 பெக்கா என்பது 1/2 சேக்கல் எடை அளவாகும்.) 27 கர்த்தரின் பரிசுத்த இடத்தின் தொங்கு திரைகளுக்கும் 100 பீடங்களை உண்டாக்குவதற்கு அந்த 3 3/4 டன்கள் வெள்ளியைப் பயன்படுத்தினார்கள். ஒவ்வொரு பீடத்திற்கும் சுமார் 75 பவுண்டு வெள்ளி வீதம் உபயோகப்படுத்தப்பட்டது. 28 மீதமுள்ள 50 பவுண்டு வெள்ளியால் கொக்கிகளையும், திரைப்பூண்களையும், தூண்களின் வெள்ளிப் பூச்சையும் செய்தனர்.

29 கர்த்தருக்கு 26 1/2 டன்களுக்கும் அதிகமான வெண்கலம் தரப்பட்டது. 30 ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலின் பீடங்களைச் செய்வதற்கு அது பயன்பட்டது. பீடத்தையும், சல்லடையையும் செய்வதற்கும் வெண்கலத்தைப் பயன்படுத்தினர். பலிபீடத்தின் எல்லாக் கருவிகளையும், பாத்திரங்களையும் செய்வதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. 31 பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும், நுழைவாயிலில் உள்ள தொங்கு திரைகளின் பீடங்களையும் அமைப்பதற்கு வெண்கலம் பயன்படுத்தப்பட்டது. வெண்கலத்தால் பரிசுத்தக்கூடாரத்திற்கும், வெளிப்பிரகாரத்தின் தொங்கு திரைகளுக்கும் தேவையான கூடார ஆணிகளைச் செய்தனர்.

யோவான் 17

சீஷர்களுக்காகப் பிரார்த்தனை

17 இவற்றையெல்லாம் இயேசு சொன்ன பிறகு, அவர் தனது கண்களால் வானத்தை (பரலோகத்தை) அண்ணாந்து பார்த்தார். “பிதாவே, நேரம் வந்துவிட்டது. உமது குமாரனுக்கு மகிமையைத் தாரும். அதனால் உமது குமாரனும் உமக்கு மகிமையைத் தருவார். உமது குமாரன் அவரிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிரந்தர வாழ்வைக் கொடுக்கும்படியாக அனைத்து மக்கள் மீதும் அவருக்கு அதிகாரம் கொடுத்தீர். அந்த மனிதர்கள், நீர்தான் உண்மையான தேவன் என்பதையும் உம்மால் அனுப்பப்பட்டவர் இயேசு கிறிஸ்து என்பதையும் தெரிந்துகொள்வார்கள். இவ்வாறு தெரிந்துகொள்வதுதான் நிரந்தரமான வாழ்க்கை. நான் செய்யுமாறு நீர் கொடுத்த வேலைகளை நான் முடித்துவிட்டேன். நான் பூமியில் உம்மை மகிமைப்படுத்தினேன். இப்பொழுது, உம்மோடு இருக்கும் மகிமையைத் தாரும். உலகம் உண்டாவதற்கு முன்பிருந்தே உம்மோடு நான் கொண்டிருந்த மகிமையைத் தாரும்.

“உலகத்திலிருந்து சில ஆட்களை நீர் எனக்குக் கொடுத்தீர். நான் அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தினேன். அவர்கள் உம்முடையவர்களாக இருந்தார்கள். அவர்களை எனக்குத் தந்தீர். அவர்கள் உமது போதனைக்குக் கீழ்ப்படிந்தார்கள். நீர் எனக்குத் தந்தவையெல்லாம் உம்மிடமிருந்து வந்தவை என்று அவர்கள் இப்போது தெரிந்துகொண்டனர். நீர் எனக்குக் கொடுத்த போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்தேன். அவற்றை அவர்கள் ஏற்றுக்கொண்டனர். உண்மையாகவே நான் உம்மிடமிருந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் தெரிந்துகொண்டார்கள். நீர் என்னை அனுப்பிவைத்ததையும் அவர்கள் நம்புகிறார்கள். நான் அவர்களுக்காக இப்பொழுது வேண்டுகிறேன். நான் உலகில் உள்ள மக்களுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. ஆனால் நீர் எனக்குக் கொடுத்த மக்களுக்காக வேண்டுதல் செய்கிறேன். ஏனென்றால் அவர்கள் உம்முடையவர்கள். 10 என்னுடையவை எல்லாம் உம்முடையவை. உம்முடையவை எல்லாம் என்னுடையவை. அவர்களில் நான் மகிமை அடைந்திருக்கிறேன்.

11 “இப்பொழுது நான் உம்மிடத்தில் வந்துகொண்டிருக்கிறேன். நான் இனிமேல் உலகத்தில் இருக்கமாட்டேன். ஆனால் இவர்கள் இப்பொழுதும் உலகத்தில் தான் இருக்கிறார்கள். பரிசுத்த பிதாவே, உமது பெயரின் வல்லமையினால் அவர்கள் பாதுகாப்பாக இருக்கச் செய்யும். இதன் மூலம் நீரும் நானும் ஒன்றாக இருப்பதுபோலவே அவர்களும் ஒன்றாயிருப்பார்கள். 12 நான் அவர்களோடு இருந்தபோது அவர்களைப் பாதுகாத்து வந்தேன். நீர் எனக்குத் தந்த உமது பெயரின் வல்லமையினால் அவர்களைப் பாதுகாத்தேன். அவர்களில் ஒருவன் மட்டும் இழக்கப்பட்டான். (யூதாஸ்) அவன் இழக்கப்படுவதற்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவன். ஏற்கெனவே வேதவாக்கியங்களில் எழுதப்பட்டவை நிறைவேறும்படியே அவன் இழக்கப்பட்டான்.

13 “நான் இப்பொழுது உம்மிடம் வருகிறேன். ஆனால் இவற்றையெல்லாம் நான் உலகில் இருக்கும்போதே வேண்டிக்கொள்கிறேன். நான் இவற்றையெல்லாம் கூறுகிறேன். ஆதலால் அவர்கள் எனது மகிழ்ச்சியைப் பெறமுடியும். அவர்கள் எனது முழுமையான மகிழ்ச்சியையும் பெறவேண்டும் என நான் விரும்புகிறேன். 14 உமது போதனைகளை நான் அவர்களுக்குக் கொடுத்திருக்கிறேன். உலகம் அவர்களை வெறுக்கிறது. ஏனென்றால் அவர்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்கள் அல்லர். நானும் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன்.

15 “அவர்களை உலகத்திலிருந்து வெளியே எடுக்கும்படி நான் உம்மை வேண்டிக்கொள்ளவில்லை. அவர்களை நீர் தீமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். 16 நான் இந்த உலகத்தை சாராதது போலவே அவர்களும் இந்த உலகத்தைச் சாராதவர்களாக இருக்கிறார்கள். 17 உம்முடைய உண்மையின் மூலம் உமது சேவைக்கு அவர்களைத் தயார்படுத்தும். உமது போதனையே உண்மை. 18 நீர் என்னை உலகத்துக்கு அனுப்பிவைத்தீர். அது போலவே நானும் அவர்களை உலகத்துக்குள் அனுப்புகிறேன். 19 நான் சேவைக்காக என்னைத் தயார் செய்து கொண்டேன். நான் இதனை அவர்களுக்காகவே செய்கிறேன். எனவே, அவர்களும் உமது சேவைக்காக உண்மையில் தம்மைத் தயார் செய்துகொள்வார்கள்.

20 “நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்கிறேன். இவர்களுக்காக மட்டுமல்ல இவர்களுடைய உபதேசங்களால் என்மீது நம்பிக்கை வைக்கிறவர்களுக்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். 21 பிதாவே, என்னில் நம்பிக்கை வைக்கிற அனைவரும் ஒன்றாயிருப்பதற்காகவும் நான் வேண்டிக்கொள்கிறேன். நீர் என்னில் இருக்கிறீர். நான் உம்மில் இருக்கிறேன். அவர்கள் எல்லோரும் நம்மில் ஒன்றாக இருக்கும்படிக்கும் நான் உம்மை வேண்டிக்கொள்கிறேன். ஆகையால் இவ்வுலகம் நீர் என்னை அனுப்பினதில் நம்பிக்கைகொள்ளும். 22 நீர் எனக்குத் தந்த மகிமையை நான் தருவதால் அவர்கள் ஒன்றாக இருப்பார்கள். நானும் நீரும் ஒன்றாக இருப்பது போல, 23 நான் அவர்களில் இருப்பேன்; நீர் என்னில் இருப்பீர். ஆக அனைவரும் ஒன்றாக இருப்பார்கள். பிறகு இந்த உலகம் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொள்ளும். நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோலவே நீர் அவர்களிடமும் அன்பாக இருக்கிறீர் என்பதையும் உலகம் தெரிந்து கொள்ளும்.

24 “பிதாவே! நீர் எனக்குத் தந்த இவர்கள், நான் எங்கே இருந்தாலும் என்னுடனே இருக்குமாறு விரும்புகிறேன். அவர்கள் என் மகிமையைக் காண வேண்டும் எனவும் விரும்புகிறேன். உலகம் உண்டாவதற்கு முன்னரே நீர் என்னுடன் அன்பாக இருந்தீர். இதனால் எனக்கு நீர் மகிமை தந்தீர். 25 பிதாவே! நீர் நல்லவராக இருக்கிறீர். இந்த உலகம் உம்மை அறிந்துகொள்ளவில்லை. ஆனால் உம்மை நான் அறிந்துகொண்டுள்ளேன். இந்த மக்கள் நீர் என்னை அனுப்பினதைத் தெரிந்துகொண்டுள்ளனர். 26 உம்மை நான் அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். இன்னும் வெளிப்படுத்துவேன். பிறகு நீர் என்னிடம் அன்பாக இருப்பதுபோன்று அவர்களும் அன்பாக இருப்பார்கள். நானும் அவர்களுக்குள் வாழ்வேன்” என்றார்.

நீதிமொழிகள் 14

14 ஞானமுள்ள பெண் தன் ஞானத்தால் ஒரு வீடு எவ்வாறு அமையவேண்டுமோ அவ்வாறு உருவாக்குகிறாள். ஆனால் அறிவற்ற பெண்ணோ தன் முட்டாள்தனமான செயலால் தன் வீட்டையே அழித்துவிடுகிறாள்.

சரியான வழியில் வாழ்கிறவர்கள் கர்த்தரை மதிக்கிறார்கள். ஆனால் நேர்மையாக இல்லாதவன் கர்த்தரை வெறுக்கிறான்.

அறிவற்றவனின் வார்த்தைகள் அவனது துன்பத்திற்குக் காரணமாகின்றன. ஆனால் ஞானமுள்ளவனின் வார்த்தைகள் அவனைக் காக்கும்.

வேலை செய்வதற்கு எருதுகள் இல்லாவிட்டால் களஞ்சியங்கள் வெறுமையாக இருக்கும். எருதுகளின் பலத்தைப் பயன்படுத்தி ஜனங்கள் அதிக விளைச்சலைப் பெறமுடியும்.

உண்மையானவன் பொய் சொல்வதில்லை. அவனே ஒரு நல்ல சாட்சியாக இருக்க முடியும். ஆனால் நம்பத் தகாதவனோ உண்மையைச் சொல்வதில்லை. அவன் ஒரு பொய் சாட்சிக்காரன்.

தேவனைக் கேலிச்செய்பவர்கள் ஞானத்தைத் தேடலாம். ஆனால் அவர்கள் அதனைக் கண்டடையமாட்டார்கள். தேவனை நம்புகிறவர்கள் உண்மையான ஞானமுடையவர்கள். அவர்களுக்கு அறிவு எளிதாக வரும்.

முட்டாளோடு நட்புகொள்ளாதே. உனக்கு போதிக்கும் அளவுக்கு அவனிடம் எதுவும் இல்லை.

புத்திசாலிகள் அறிவுள்ளவர்கள். ஏனென்றால் அவர்கள் தாம் செய்யப்போவதைப்பற்றி எச்சரிக்கையோடு சிந்திக்கிறார்கள். ஏமாற்றிப் பிழைத்துவிடலாம் என்று நினைக்கிற காரணத்தால் அறிவீனர்கள் முட்டாள்களாக இருக்கிறார்கள்.

மூடர்கள் தாம் செய்யும் தவறான செயல்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்ற கருத்தை ஏளனம் செய்கின்றனர். ஆனால் அறிவாளிகளோ ஏற்புடையவர்கள் ஆவதற்குப் பெரும் முயற்சி செய்வார்கள்.

10 ஒருவன் வருத்தமாயிருந்தால் அந்த வருத்தத்தை அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும். இதுபோலவே ஒருவனது மகிழ்ச்சியையும் அவனால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

11 தீயவனின் வீடு அழிக்கப்படும். நல்லவனின் வீடு என்றும் வாழும்.

12 ஜனங்கள் சில வழிகளைச் சரியானது என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவ்வழி மரணத்திற்கே அழைத்துச் செல்லும்.

13 ஒருவன் வெளியே சிரித்துக்கொண்டிருந்தாலும் உள்ளே சோகமாக இருக்கலாம். அச்சிரிப்புக்குப் பிறகும்கூட, அத்துயரமானது அவனோடேயே இருக்கிறது.

14 தீயவர்கள் தாம் செய்யும் தவறுகளுக்குத் தண்டனை பெறுவார்கள். நல்லவர்கள் தாம் செய்யும் நற்செயல்களுக்காக விருது பெறுகிறார்கள்.

15 முட்டாள் தான் கேட்கிற அனைத்தையும் நம்புகிறான். ஆனால் அறிவுள்ளவனோ எல்லாவற்றைப்பற்றியும் ஆழமாகச் சிந்திக்கிறான்.

16 அறிவுள்ளவன் கர்த்தரை மதித்து, தீயவற்றிலிருந்து விலகி இருப்பான். ஆனால் அறிவற்றவனோ எதையும் சிந்திக்காமல் செய்வான்; எச்சரிக்கையாக இருக்கமாட்டான்.

17 விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.

18 அறிவற்றவர்கள் தங்கள் மூடத்தனத்திற்காகத் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அறிவாளிகளோ ஞானத்தையே வெகுமதியாகப் பெறுவார்கள்.

19 நல்லவர்கள் தீயவர்களுக்கு எதிராக வெற்றிப் பெறுவார்கள். தீயவர்கள் அவர்களின் உதவிக்காகக் கெஞ்சும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

20 ஏழைகளுக்கு அவர்களுடைய பக்கத்து வீட்டாரும்கூட நண்பர்களாக இருப்பதில்லை. ஆனால் செல்வர்களுக்கோ ஏராளமான நண்பர்கள்.

21 உனது பக்கத்து வீட்டுக்காரர்களைப்பற்றி கெட்டவற்றை நினையாதே. நீ மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைத்தால், ஏழை ஜனங்களிடம் இரக்கமாக இரு.

22 தீமைபுரியத் திட்டமிடும் எவனுமே தவறு செய்தவனாகிறான். ஆனால் ஒருவன் நன்மை செய்ய முயல்வதால் நிறைய நண்பர்களைப் பெறுகிறான். எல்லோரும் அவனை நேசித்து நம்புகின்றனர்.

23 நீ கடினமாக உழைத்தால் உனக்குத் தேவையானதை நீ பெறுவாய். ஆனால் நீ எதையும் செய்யாமல் பேசிக்கொண்டே இருந்தால் ஏழையாவாய்.

24 அறிவுள்ளவர்கள் செல்வத்தால் வெகுமதிகளைப் பெறுவர். ஆனால் அறிவற்றவர்களோ முட்டாள்தனத்தையே பெறுகின்றனர்.

25 உண்மையைப் பேசுகிறவர்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள். பொய் சொல்லுகிறவன் மற்றவர்களின் மனதைப் புண்படுத்துகிறான்.

26 கர்த்தரை மதிக்கிறவன் பாதுகாப்பாக இருப்பான். அவனது பிள்ளைகளும் பாதுகாப்பாக வாழ்வார்கள்.

27 கர்த்தரை மதிப்பது உண்மையான வாழ்வைத் தரும். அது அவன் மரண வலையில் விழாமல் அவனைக் காப்பாற்றும்.

28 ஒரு அரசன் ஏராளமான ஜனங்களை ஆட்சி செய்தால் அவன் பெரியவன் ஆகிறான். ஆனால் ஆளுவதற்கு ஜனங்கள் இல்லாதவனோ ஒன்றும் இல்லாதவன் ஆகிறான்.

29 பொறுமையுள்ளவன் மிகவும் புத்திசாலி. விரைவில் கோபப்படுபவன் முட்டாள் என்பதைக் காட்டிக்கொள்கிறான்.

30 மனதில் சமாதானம் உள்ள ஒருவன், உடலிலும் ஆரோக்கியமாக இருப்பான். ஆனால் பொறாமையோ நோய்களுக்குக் காரணமாகிறது.

31 ஏழைகளுக்குத் துன்பம் செய்கிறவன் தேவனுக்கு மரியாதை செய்யாதவன் எனக் காண்பித்துக்கொள்கிறான். ஏனென்றால் இருவரையும் தேவனே படைத்துள்ளார். ஆனால் ஒருவன் ஏழைகளிடம் தயவாக இருந்தால் அவன் தேவனையும் மகிமைப்படுத்துகிறான்.

32 தீய மனிதன் தன்னுடைய துன்மார்க்கத்தினால் தோற்கடிக்கப்படுவான். ஆனால் நல்ல மனிதனோ மரணகாலத்திலும் கூட அடைக்கலம் பெறுவான்.

33 அறிவுள்ளவன் அறிவுள்ளவைகளையே சிந்திக்கிறான். ஆனால் அறிவற்றவர்களோ அறிவைப்பற்றிக்கொஞ்சமும் அறிந்துகொள்ளமாட்டார்கள்.

34 நல்ல குணம் நாட்டைப் பெருமைக்குரியதாக்கும். ஆனால் பாவமோ ஜனங்களை வெட்கப்பட வைக்கும்.

35 அறிவுள்ள தலைவர்கள் இருந்தால் அரசன் மகிழ்ச்சியோடு இருப்பான். ஆனால் முட்டாள்தனமான தலைவர்கள்மேல் அரசன் கோபப்படுவான்.

பிலிப்பியர் 1

இயேசு கிறிஸ்துவின் ஊழியர்களாகிய பவுலும் தீமோத்தேயுவும் பிலிப்பி நகரத்தில் கிறிஸ்து இயேசுவுக்குள் வாழ்கிற தேவனுடைய பரிசுத்த மக்களுக்கும் உங்கள் கண்காணிப்பாளர்களுக்கும், விசேஷ உதவியாளர்களுக்கும், உங்கள் மூப்பர்களுக்கும் சிறப்பு உதவியாளர்களுக்கும் எழுதுவது.

நம்முடைய பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.

பவுலின் பிரார்த்தனை

எப்போதும் உங்களை நினைத்துக்கொண்டு நான் தேவனுக்கு நன்றி சொல்கிறேன். உங்கள் அனைவருக்காக எப்போதும் மகிழ்ச்சியோடு நான் பிரார்த்தனை செய்கிறேன். மக்களிடம் நான் நற்செய்தியைக் கூறும்போது அதற்கு உதவி செய்த உங்கள் அனைவருக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நீங்கள் சுவிசேஷத்தை நம்பிய நாள் முதல் நீங்கள் நற்கிரியைகளில் பங்கேற்று எனக்கு உதவியுள்ளீர்கள். உங்களில் தேவன் நற்செயல்களைச் செய்யத் தொடங்கினார். அவர் இதை உங்களில் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறார். இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது தேவன் தன் வேலையை உங்கள் மூலம் செய்து முடிப்பார். அதைப் பற்றி நான் உறுதியாய் இருக்கிறேன்.

உங்கள் அனைவரையும் குறித்து இவ்வாறு நான் நினைப்பது சரியென்று எண்ணுகிறேன். இதில் நான் உறுதியாகவும் உள்ளேன். ஏனென்றால் உங்களை என் இதயத்தில் வைத்திருக்கிறேன். நான் உங்களை மிக நெருக்கமாக உணர்கிறேன். எனெனில் நீங்கள் அனைவரும் என்னோடு தேவனுடைய கிருபையைப் பகிர்ந்துகொள்கிறீர்கள். நான் சிறையில் இருக்கிறபோதும், நற்செய்திக்காக உத்தரவு சொல்லி அதைத் திடப்படுத்தி வருகிறதிலும், நீங்கள் தேவனுடைய கிருபையை என்னோடு பங்கிட்டுக்கொள்கிறீர்கள். உங்களைப் பார்க்க நான் மிகவும் விரும்புகிறேன் என்று தேவனுக்குத் தெரியும். கிறிஸ்து இயேசுவின் அன்புடன் உங்கள் அனைவரையும் நான் நேசிக்கிறேன்.

உங்களுக்காக என்னுடைய பிரார்த்தனை இதுவே:

உங்கள் அன்பு மேலும் மேலும் வளர்வதாக. உங்களுக்கு அறிவும், அன்போடு கூட புரிந்துகொள்ளுதலும் உண்டாவதாக. 10 பிறகு நன்மைக்கும் தீமைக்கும் உள்ள வேறுபாட்டை உங்களால் கண்டுகொண்டு, நன்மையை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் கிறிஸ்து வரும்போது நீங்கள் தூய்மையடையவும், தவறு இல்லாதவர்களாக இருக்கவும், 11 இயேசு கிறிஸ்துவின் உதவியுடன், அவர் மூலம் நீங்கள் பல நற்செயல்களைச் செய்து தேவனுக்கு மகிமையையும் பாராட்டுகளையும் சேர்க்க வேண்டும்.

பவுலின் துன்பங்கள் உதவியது

12 சகோதர சகோதரிகளே! எனக்கு ஏற்பட்ட அந்தத் துன்பங்கள் எல்லாம் நற்செய்தியைப் பரப்புகிற பணிக்கே உதவியது என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். 13 சிறைக்குள் நான் ஏன் இருக்கிறேன் என்பது தெளிவாகிறது. ஏனென்றால் நான் கிறிஸ்துவின் நம்பிக்கையாளன். காவலர்களுக்கும் மற்ற மக்களுக்கும் இது தெரியும். 14 இன்னும் நான் சிறைப்பட்டிருக்கிறேன். அது நன்மைக்குத்தான் என்று பல விசுவாசிகள் இப்போது எண்ணுகின்றனர். எனவே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அச்சமில்லாமல் பரப்புவதில் மேலும் தைரியம் உள்ளவர்களாக இருக்கிறார்கள்.

15 கிறிஸ்துவைப் பற்றிச் சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள், என்றாலும் அவர்கள் பொறாமையும், கசப்புணர்வும் கொண்டவர்களாக உள்ளார்கள். இன்னும் சிலர் உதவி செய்யும் விருப்பத்தோடு கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். 16 இவர்கள், அன்பினால் கிறிஸ்துவைப்பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். தேவன் எனக்கு இந்தப் பணியை நற்செய்தியைப் பாதுகாப்பதற்காகத் தந்துள்ளார் என்பதை இவர்கள் அறிவர். 17 மற்றவர்களோ தன்னலம் காரணமாக கிறிஸ்துவைப் பற்றி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களின் பிரச்சார நோக்கம் தவறானது. சிறைக்குள் எனக்குத் தொல்லைகளை உருவாக்க அவர்கள் விரும்புகின்றனர். 18 அவர்கள் எனக்குத் தொல்லை கொடுத்தால் அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. மக்களிடம் அவர்கள் இயேசுவைப் பற்றிக் கூறுகிறார்கள் என்பதுதான் முக்கியமான விஷயம். நானும் இயேசுவைப் பற்றி அவர்கள் மக்களிடம் சொல்ல வேண்டும் என்றே விரும்புகிறேன். அவர்கள் அதைச் சரியான நோக்கத்தோடு செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தவறான நோக்கத்தோடு போலியாகப் பிரச்சாரம் செய்தாலும் கூட நான் மகிழ்ச்சியடைகிறேன். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவைப் பற்றிப் பேசுகிறார்கள்.

இதனால் தொடர்ந்து நான் மகிழ்ச்சியடைவேன். 19 எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவியானவர் எனக்கு உதவுகிறார். ஆகையால் இந்தத் துன்பங்கள் எனக்கு விடுதலையைத் தரும் என்று எனக்குத் தெரியும். 20 எதிலும் நான் கிறிஸ்துவிடம் தவறமாட்டேன். இதுவே நான் விரும்புவதும், நம்புவதும் கூட. இந்த உலகத்தில் என் வாழ்வில் நான் இயேசுவின் உயர்வைக் காட்ட வேண்டும். அதனை வெளிப்படுத்தும் தைரியத்தை எப்போதும் போல இப்போதும் பெறுவேன் என்று நான் நம்புகிறேன். நான் வாழ்ந்தாலும் சரி, மரித்தாலும் சரி, இதைச் செய்ய விரும்புகிறேன். 21 கிறிஸ்துவை என் வாழ்வின் ஜீவனாக நம்புகிறேன். இதனால் நான் இறந்து போனாலும் எனக்கு லாபம்தான். 22 இந்த சரீரத்தில் நான் தொடர்ந்து வாழ்ந்தால் கர்த்தருக்குத் தொண்டு செய்ய என்னால் முடியும். ஆனால் வாழ்வு, சாவு என்பவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது? எனக்குத் தெரியவில்லை. 23 வாழ்வு, சாவு இரண்டிலொன்றைத் தேர்ந்தெடுப்பது கடினமானது. இந்த வாழ்க்கையை விட்டுவிட்டு நான் கிறிஸ்துவோடு வாழ விரும்புகிறேன். அது சிறந்தது. 24 ஆனால் நான் சரீரத்தில் தரித்திருப்பது உங்களுக்கு மிக அவசியம். 25 உங்களுக்கு நான் தேவையானவன் என்பதை அறிவேன். அதனால் உங்களோடு இருக்க நான் விரும்புகிறேன். உங்கள் நம்பிக்கையில் நீங்கள் மகிழ்ச்சியுடன் வளரவும் நான் உதவுவேன். 26 மீண்டும் உங்களோடு நான் இருக்கும்போது நீங்கள் கிறிஸ்துவாகிய இயேசுவுக்குள் மிகவும் மகிழ்ச்சியாய் இருப்பீர்கள்.

27 நற்செய்திக்குப் பொருந்துகிற வாழ்வை வாழ்வது பற்றி உறுதி செய்துகொள்ளுங்கள். பிறகு உங்களைப் பார்வையிட நான் வந்தாலோஅல்லது உங்களை விட்டு நான் தூரம் போனாலோ உங்களைப் பற்றி நான் நல்ல செய்திகளையே கேள்விப்படுவேன். நற்செய்தியிலிருந்து வரும் நம்பிக்கைக்காக நீங்கள் தொடர்ந்து பலத்தோடு பொது நோக்கத்துக்காக ஒன்று சேர்ந்து குழுவாகப் பணியாற்றுகிறீர்கள் என்று நான் கேள்விப்படுவேன். 28 உங்களுக்கு எதிரான மக்களைப் பற்றி நீங்கள் அச்சப்பட வேண்டாம். உங்கள் பகைவர்கள் இழப்புக்குள்ளாவர். நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள். இச்சான்றுகள் தேவனிடமிருந்து வந்தன. 29 ஏனென்றால் கிறிஸ்துவினிடத்தில் நம்பிக்கை செலுத்துவதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுவதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது. 30 நான் உங்களோடு இருந்தபோது நற்செய்திக்கு எதிராக இருந்த மக்களுடன் நான் எதிர்கொள்ள நேர்ந்த போராட்டங்களை நீங்கள் பார்த்தீர்கள். இப்போது நான் எதிர்கொண்டுவரும் போராட்டங்களைப் பற்றியும் நீங்கள் கேள்விப்படுகிறீர்கள். நீங்களும் இது போன்ற போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center