M’Cheyne Bible Reading Plan
உடன்படிக்கைப் பெட்டி
37 சீத்திம் மரத்தினால் பெசலெயேல் பரிசுத்தப் பெட்டியைச் செய்தான். அந்தப் பெட்டி 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் 1 1/2 முழு உயரமும் கொண்டவையாக இருந்தன. 2 அவன் பெட்டியின் உட்புறத்தையும் வெளிப்புறத்தையும் பசும் பொன் தகட்டால் மூடினான். பெட்டியைச் சுற்றிலும் பொன் சட்டங்களைச் செய்தான். 3 அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை நான்கு மூலைகளிலும் இணைத்தான். அவ்வளையங்கள் பெட்டியைச் சுமப்பதற்கென்று பயன்படுத்தப்பட்டன. ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு வளையங்கள் இருந்தன. 4 பின் அவன் பெட்டியைச் சுமப்பதற்குத் தேவையான தண்டுகளைச் செய்தான். அவன் சீத்திம் மரத்தால் அத்தண்டுகளைச் செய்து அவற்றைப் பசும் பொன்னால் மூடினான். 5 பெட்டியின் இருபுறங்களிலுமுள்ள வளையங்களினுள்ளே தண்டுகளைச் செலுத்தினான். 6 பின் கிருபாசனத்தை பசும் பொன்னால் செய்தான். அது 2 1/2 முழ நீளமும் 1 1/2 முழ அகலமும் உடையதாக இருந்தது. 7 இரண்டு கேருபீன்களைச் செய்வதற்கு பெசலெயேல் பொன்னைச் சுத்தியால் அடித்து உருவமைத்தான். இந்தக் கேருபீன்களை கிருபாசனத்தின் இரண்டு ஓரத்திலும் வைத்தான். 8 ஒரு கேருபீனை கிருபாசனத்தின் ஒரு ஓரத்திலும், மற்றொரு கேருபீனை எதிர் ஓரத்திலும் வைத்தான். மூடியோடு இரண்டு கேருபீன்களையும் எதிரெதிரே ஒன்றாக இணைத்தான். 9 கேருபீன்களின் சிறகுகள் வானத்தை நோக்கி உயர்த்தப்பட்டிருந்தன. கேருபீன்கள் தங்கள் சிறகுகளால் பெட்டியை மூடியிருந்தன. கிருபாசனத்தின் மேல் குனிந்த நிலையில் தூதர்கள் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக்கொண்டிருந்தனர்.
விசேஷ மேசை
10 பின் அவன் சீத்திம் மரப் பலகையிலான மேசையைச் செய்தான். அம்மேசை 2 முழ நீளமும் 1 முழ அகலமும் 1 முழ உயரமும் உள்ளதாக இருந்தது. 11 அவன் மேசையை பசும் பொன்னினால் மூடினான். மேசையைச் சுற்றிலும் பொன் சட்டங்களை இணைத்தான். 12 பின் அவன் 3 அங்குல அகலமுள்ள ஒரு சட்டத்தை மேசையைச் சுற்றிலும் இணைத்தான். அவன் சட்டத்தின் மேல் பொன் தகட்டை வைத்தான். 13 பின் அவன் நான்கு பொன் வளையங்களைச் செய்து அவற்றை மேசையின் நான்கு கால்களுமுள்ள நான்கு மூலைகளிலும் வைத்தான். 14 மேசையின் மேற்பகுதியைச் சுற்றிலும் உள்ள சட்டத்தினருகே அவன் அந்த வளையங்களை இணைத்தான். மேசையைச் சுமக்கும் தண்டுகளைத் தாங்குவதற்கு அவ்வளையங்கள் பயன்பட்டன. 15 பின் அவன் சீத்திம் மரப்பலகையால் செய்யப்பட்ட மேசையைச் சுமக்கும் தண்டுகளைச் செய்தான். தண்டுகளைச் சுத்த பொன்னால் மூடினான். 16 பின் அவன் மேசையில் பயன்படுத்தப்படுவதற்குரிய எல்லாப் பொருட்களையும் செய்தான். தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள், கிண்ணங்கள், பாத்திரங்கள் ஆகியவற்றையும் அவன் பொன்னால் செய்தான். பானங்களின் காணிக்கைகளை ஊற்றுவதற்குக் கிண்ணங்களும் பாத்திரங்களும் பயன்பட்டன.
குத்துவிளக்குத் தண்டு
17 பிறகு அவன் குத்துவிளக்கைச் செய்தான். அவன் பசும் பொன்னை அடித்து அதன் பீடத்தையும், தண்டையும் செய்தான். பின் அவன் பூக்கள், மொட்டுகள், இதழ்கள் ஆகியவற்றைச் செய்து எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்தான். 18 குத்துவிளக்குக்கு ஆறு கிளைகள் இருந்தன. மூன்று கிளைகள் ஒரு புறத்திலும் மூன்று கிளைகள் எதிர் புறத்திலும் இருந்தன. 19 ஒவ்வொரு கிளையிலும் மூன்று பூக்கள் இருந்தன. அப்பூக்கள் மொட்டுகளோடும், இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 20 குத்துவிளக்கின் தண்டில், மேலும் நான்கு பூக்கள் இருந்தன. அவையும் மொட்டுகளோடும் இதழ்களோடும் பூத்த வாதுமைப் பூக்களைப் போல செய்யப்பட்டன. 21 தண்டின் இருபுறங்களிலுமிருந்து மூன்று கிளைகள் வீதம் ஆறு கிளைகள் இருந்தன. கிளைகள் தண்டோடு இணைந்த மூன்று இடங்களுக்கும் கீழே மொட்டுகளோடும் இதழ்களோடும் கூடிய ஒவ்வொரு பூ இருந்தது. 22 பூக்களும் கிளைகளும் கொண்ட வேலைப்பாடுகள் உடைய அந்தக் குத்துவிளக்கு முழுவதும் பொன்னால் ஆனதாக இருந்தது. இந்தப் பொன் சுத்தியால் அடிக்கப்பட்டு ஒன்றாக இணைக்கப்பட்டிருந்தது. 23 இந்தக் குத்துவிளக்கிற்கு ஏழு அகல்களை அவன் செய்தான். பின் அவன் திரி கத்தரிக்கும் கருவிகளையும், சாம்பல் கிண்ணங்களையும் பொன்னால் செய்தான். 24 குத்து விளக்கையும் அதற்குத் தேவையான பொருட்களையும் செய்வதற்கு அவன் 75 பவுண்டு எடையுள்ள சுத்தமான பொன்னைப் பயன்படுத்தினான்.
நறுமணப் பொருள்களை எரிப்பதற்கான பீடம்
25 நறுமணப் பொருள்களை எரிக்கும்படியான பீடத்தையும் அவன் செய்தான். சீத்திம் மரத்தால் இதைச் செய்தான். பீடம் சதுரவடிவமானது. அது 1 முழ நீளமும் 1 முழ அகலமும் 2 முழ உயரமுமாக இருந்தது. நறுமணப் பீடத்தில் நான்கு கொம்புகள் ஒவ்வொரு மூலையிலும் ஒன்வொன்றாக இருந்தன. இவை நறுமணப் பீடத்தோடு ஒன்றாக அடிக்கப்பட்டன. 26 நறுமணப் பீடத்தின் மேல்புறம், பக்கங்கள், கொம்புகள் ஆகியவற்றை அவன் பசும்பொன்னால் மூடினான். பின்பு அவன் நறுமணப் பீடத்தைச் சுற்றிலும் பொன் சட்டத்தை இணைத்தான். 27 நறுமணப் பீடத்திற்கு இரண்டு பொன் வளையங்கள் செய்தான். அதன் ஒவ்வொரு பக்கத்திலும் பொன் தகட்டிற்கு அடியில் சேரும்படி பொன் வளையங்களைப் பொருத்தினான். நறுமணப் பீடத்தைத் தூக்கிச் செல்லும்போது, தண்டைக் கோர்க்கும்படி இந்தத் தங்க வளையங்கள் இருந்தன. 28 அவன் சீத்திம் மரத்தினாலான தண்டுகளைச் செய்து அவற்றையும் பொன்னால் மூடினான்.
29 பிறகு அவன் பரிசுத்த அபிஷேக எண்ணெயைத் தயாரித்தான். அவன் சுத்தமான நறுமணப் பொருளையும் தயாரித்தான். நறுமணத் திரவியங்களைத் தயாரிக்கும் முறையிலேயே இப்பொருட்கள் அனைத்தையும் அவன் செய்தான்.
16 “நீங்கள் உங்கள் நம்பிக்கையை இழந்துவிடக் கூடாது என்பதற்காக இவைகளை நான் உங்களுக்குச் சொல்லி இருக்கிறேன். 2 மக்கள் தங்கள் ஆலயங்களில் இருந்து உங்களை வெளியேற்றுவர். மேலும் உங்களைக் கொல்பவன் தேவனுக்கு சேவை செய்கிறவன் என்று மக்கள் எண்ணும்படியான காலம் வரும். 3 அவர்கள் பிதாவைப்பற்றியும் என்னைப்பற்றியும் அறிந்துகொள்ளாததால் இப்படிச் செய்வார்கள். 4 நான் இப்பொழுது இவற்றைப்பற்றியெல்லாம் சொல்லிவிட்டேன். எனவே இவை நிகழும் காலம் வரும்போது, நான் ஏற்கெனவே உங்களுக்கு எச்சரித்திருக்கிறேன் என்பதை நினைவுபடுத்திக்கொள்வீர்கள்.
பரிசுத்த ஆவியானவரின் பணிகள்
“நான் உங்களோடு இருந்தேன். எனவே தொடக்கத்தில் இவற்றையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. 5 இப்பொழுது நான் என்னை அனுப்பினவரிடம் செல்லப் போகிறேன். ‘நீங்கள் எங்கே போகிறீர்கள்’ என்று யாரும் என்னை இதுவரை கேட்கவில்லை. 6 எனினும் நான் இவற்றைச் சொன்னதால் உங்கள் இருதயம் துக்கத்தால் நிரம்பிவிட்டது. 7 ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். நான் போவது உங்களுக்கு நன்மையைத் தரும். ஏனென்றால் நான் போனால், உதவியாளரை அனுப்புவேன். நான் போகாவிட்டால் அந்த உதவியாளர் வரமாட்டார்.
8 “அவர் வரும்போது இவற்றைப்பற்றிய உண்மைகளையெல்லாம் உலகிலுள்ள மக்களுக்கு நிரூபிப்பார். அதோடு பாவத்தின் குற்றம்பற்றியும், தேவனோடு உள்ள சரியான உறவுபற்றியும், நியாயத்தீர்ப்புபற்றியும் விளக்குவார். 9 அந்த உதவியாளர், மக்கள் என்னை நம்பாததால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்பதை நிரூபிப்பார். 10 அவர் தேவனிடம் எனக்கிருக்கிற நல்ல உறவுபற்றியும் நிரூபிப்பார். ஏனென்றால் நான் பிதாவிடம் செல்கிறேன். அப்பொழுது நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். 11 நியாயத்தீர்ப்புபற்றிய உண்மையை அவர் உலகத்துக்கு நிரூபிப்பார். ஏனென்றால் இந்த உலகை ஆளுகிற சாத்தான் ஏற்கெனவே நியாயந்தீர்க்கப்பட்டிருக்கிறான்.
12 “உங்களிடம் சொல்வதற்கு என்னிடம் ஏராளமான செய்திகள் இருக்கின்றன. ஆனால் இப்பொழுது நீங்கள் தாங்கிக்கொள்ள முடியாதபடி அந்தச் செய்திகள் அதிகப்படியானவை. 13 ஆனால் உண்மையின் ஆவியானவர் வரும்போது அனைத்து உண்மைகளிலும் உங்களை வழிநடத்திச் செல்வார். ஆவியானவர் அவரது சொந்த வார்த்தைகளைக் கூறுவதில்லை. அவர் என்ன கேட்டிருக்கிறாரோ அவற்றையே பேசுவார். 14 நடக்கப்போகிறவற்றைப்பற்றி மட்டுமே அவர் பேசுவார். உண்மையின் ஆவியானவர் எனக்கு மகிமையைக் கொண்டுவருவார். எப்படி என்றால் அவர் என்னிடம் கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார். 15 பிதாவினுடையவைகள் எல்லாம் என்னுடையவைகள். அதனால்தான் ஆவியானர் என்னிடமிருந்து கருத்துக்களைப் பெற்று உங்களுக்குச் சொல்லுவார் என்றேன்.”
துயரம் மகிழ்ச்சியாக மாறும்
16 பின்னும் இயேசு “இன்னும் கொஞ்ச காலத்திற்குப்பின் என்னை நீங்கள் பார்க்க முடியாது. அதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின் நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்” என்றார்.
17 இயேசுவின் சீஷர்களில் சிலர் ஒருவருக்கொருவர், “‘கொஞ்ச காலத்திற்குப்பின் பார்க்கமுடியாது. கொஞ்ச காலத்திற்குப் பிறகு நீங்கள் என்னை மீண்டும் பார்க்கலாம்’ என்றாரே, இயேசு எதைக் கருதி இவ்வாறு கூறுகிறார். ‘நான் பிதாவிடம் போகிறேன்’ என்று ஏன் கூறுகிறார். 18 ‘கொஞ்ச காலம்’ என்று கூறினாரே அதன் பொருள் என்ன? அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையே” என்று பேசிக்கொண்டனர்.
19 சீஷர்கள் தன்னிடம் அதைப்பற்றிக் கேட்க விரும்புவதை இயேசு கவனித்தார். ஆகையால் இயேசு அவர்களிடம், “நீங்கள் உங்களுக்குள் என்ன பேசிக்கொள்கிறீர்கள்? நான், ‘இன்னும் கொஞ்ச காலத்திற்குப் பிறகு என்னைப் பார்க்க முடியாது. அப்புறம் கொஞ்ச காலத்திற்குப் பின்பு மீண்டும் என்னைப் பார்ப்பீர்கள்’ என்று சொன்னேனே, அதைப் பற்றியா? 20 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அழுது துக்கப்படுவீர்கள். ஆனால் உலகம் மகிழ்ச்சியாக இருக்கும். நீங்கள் துக்கப்படுவீர்கள். ஆனால் உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்.
21 “ஒரு பெண், குழந்தையைப் பெற்றெடுக்கும்போது அவளுக்கு வலி ஏற்படும். ஏனென்றால் அவளுக்குக் குறிப்பிட்டவேளை நெருங்கி இருக்கும். ஆனால் குழந்தை பிறந்ததும் அவள் தன் வலியை மறந்துவிடுவாள். குழந்தை இந்த உலகுக்கு வந்துவிட்டது என்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். 22 உங்களுக்கும் இதைப்போலத்தான். இப்பொழுது நீங்கள் துயரமாக இருக்கிறீர்கள். ஆனால் நான் மீண்டும் உங்களைப் பார்ப்பேன். அப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எவராலும் உங்கள் மகிழ்ச்சியைப் பறிக்க முடியாது. 23 அந்த நாளில் நீங்கள் என்னிடம் எதைப்பற்றியும் கேட்கமாட்டீர்கள். நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். என் பேரில் நீங்கள் எதைக் கேட்டாலும் என் பிதா உங்களுக்குத் தருவார். 24 இதுவரை நீங்கள் என்பேரால் எதையும் கேட்கவில்லை. கேளுங்கள், அப்பொழுது நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். உங்கள் மகிழ்ச்சி முழுமையான மகிழ்ச்சியாக இருக்கும்.
உலகத்தின் மீது வெற்றி
25 “நான் இவற்றையெல்லாம் உங்களுக்கு மறை பொருளில் கூறியிருக்கிறேன். ஆனால் காலம் வரும். அப்போது நான் இவ்வாறு மறைபொருளில் பேசாமல் வெளிப்படையாகச் செய்திகளை அந்தப் பிதாவைப்பற்றிக் கூறுவேன். 26 அந்த நாளில் நீங்கள் பிதாவிடம் என்பேரில் உங்களுக்கானதைக் கேட்பீர்கள். நான் உங்களுக்காக என் பிதாவிடம் கேட்டுக்கொள்ளும் தேவை இருக்காது என்று சொல்கிறேன். 27 என் பிதா அவராகவே உங்களை நேசிக்கிறார். ஏனென்றால் நீங்கள் என்னிடம் அன்பாக இருந்தீர்கள். நான் தேவனிடம் இருந்து வந்ததாக நீங்கள் நம்பியிருந்தீர்கள். 28 நான் இந்த உலகத்துக்கு என் பிதாவிடம் இருந்து வந்தேன். இப்பொழுது நான் இந்த உலகத்தைவிட்டுப் போகிறேன். என் பிதாவிடம் திரும்பிப் போகிறேன்” என்றார்.
29 பிறகு இயேசுவின் சீஷர்கள் அவரிடம், “நீர் இப்பொழுது எங்களிடம் தெளிவாகப் பேசிக்கொண்டிருக்கிறீர். புரிந்து கொள்வதற்குக் கடினமான வார்த்தைகளை நீர் பயன்படுத்தவில்லை. 30 உமக்கு எல்லாம் தெரியும் என்பதை நாங்கள் இப்போது தெரிந்துகொண்டோம். உம்மிடம் ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்பதற்கு முன்னரே அக்கேள்விக்கு உம்மால் பதில்கூற முடியும். இவை நீர் தேவனிடம் இருந்து வந்தவர் என்பதை எங்களை நம்ப வைக்கிறது” என்றனர்.
31 இயேசு அவர்களிடம், “எனவே நீங்கள் இப்போது நம்புகிறீர்கள். 32 என்னைக் கவனியுங்கள். நீங்கள் சிதறிப்போகிற வேளை இதோ நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வீட்டிற்குப் போய் என்னை விட்டு விலகிப் போவீர்கள். அந்த நேரம் இதோ வந்துவிட்டது. நீங்கள் என்னை விட்டுப் போவீர்கள். நான் தனியே இருப்பேன். எனினும் நான் உண்மையில் தனித்திருக்கமாட்டேன். ஏனென்றால் என்னோடு என் பிதா இருக்கிறார்.
33 “என்னில் உங்களுக்கு சமாதானம் இருக்கும்பொருட்டு இவற்றை நான் உங்களுக்குச் சொன்னேன். இந்த உலகத்தில் உங்களுக்குத் தொந்தரவுகள் ஏற்படும். ஆனால் தைரியமாக இருங்கள். நான் உலகத்தை வென்றுவிட்டேன்” என்றார்.
13 ஒரு ஞானமுள்ள மகன், தான்செய்யவேண்டியது என்னவென்று தன் தந்தை கூறும்போது அவன் அதனைக் கவனமாகக் கேட்பான். ஆனால் வீண் பெருமையுள்ளவனோ, ஜனங்கள் தன்னைத் திருத்த முயலும்போது கவனிப்பதில்லை.
2 நல்லவர்கள், தாம் சொல்லுகிற நல்லவற்றுக்காகத் தகுந்த வெகுமதிகளை அடைகிறார்கள். ஆனால் தீயவர்களோ எப்பொழுதும் தவறானவற்றைச் செய்ய விரும்புகின்றனர்.
3 ஒருவன் தான் சொல்லுகின்றவற்றில் எச்சரிக்கையோடு இருந்தால் அது அவன் வாழ்வைக் காப்பாற்றும். ஆனால் சிந்தித்துப் பார்க்காமல் பேசுகின்றவர்களின் வாழ்க்கை அழிந்துப்போகும்.
4 சோம்பேறி பலவற்றை விரும்புவான், ஆனால் அவனால் அவற்றை அடைய முடிவதில்லை. ஆனால் கடினமாக உழைக்கிறவர்கள் தாம் விரும்புவதைப் பெற் றுக்கொள்வார்கள்.
5 நல்லவர்கள் பொய்யை வெறுக்கிறார்கள். தீயவர்களோ அவமானமடைவார்கள்.
6 நல்ல குணமானது நேர்மையானவர்களைக் காப்பாற்றுகிறது. ஆனால் தீமையோ பாவங்களை நேசிக்கிறவர்களைத் தோற்கடிக்கும்.
7 சிலர் செல்வந்தர்களைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் எதுவுமில்லை. மற்றும் சிலரோ ஏழையைப்போன்று நடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் செல்வந்தர்களாக இருப்பார்கள்.
8 செல்வமுள்ளவன் சில சமயங்களில் தன் உயிரைக் காப்பாற்ற ஒரு தொகையைச் செலுத்த வேண்டியதாயிருக்கும். ஆனால் ஏழைக்கு இதுபோன்ற மிரட்டல்கள் எதுவும் ஏற்படாமல் இருக்கும்.
9 ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப்போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன்.
10 மற்றவர்களைவிட தம்மைச் சிறந்தவர்களாக நினைப்பவர்கள் துன்பத்தையே உருவாக்குகிறார்கள். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிப்பவர்கள் ஞானம் உடையவர்கள்.
11 ஒருவன் பணம் பெறுவதற்காக மற்றவனை ஏமாற்றலாம். பிறகு அப்பணமும் அவனை விட்டு உடனடியாகப் போய்விடும். ஆனால் கடினமாக சம்பாதிக்கிறவனின் பணமானது மென்மேலும் வளர்ந்து பெருகும்.
12 நம்பிக்கை எதுவும் இல்லாவிட்டால் மனம் சோர்வடையும். நீ விரும்புவதுபோல எல்லாம் நடந்தால் நீ மகிழ்ச்சியால் நிரப்பப்படுவாய்.
13 மற்றவர்கள் உதவிசெய்ய முயற்சிக்கும்போது ஒருவன் அவர்களது வார்த்தைகளைக் கவனிக்காமல் புறக்கணித்தால், பிறகு அவன் தனக்குத்தானே துன்பத்தை வரவழைத்துக்கொள்கிறான். ஆனால் மற்றவர்கள் சொல்வதைக் கவனிக்கிறவன் அதற்கு தகுந்த வெகுமதியைப் பெறுகிறான்.
14 ஞானம் உள்ளவனின் போதனைகள் வாழ்வைத் தரும். அந்த வார்த்தைகள் துன்ப காலத்தில் உதவும்.
15 புரிந்துகொள்ளும் நல்ல உணர்வுள்ளவர்களை ஜனங்கள் விரும்புவார்கள். ஆனால் நம்ப முடியாதவர்கள் வாழ்வு கடினமாகிப்போகிறது.
16 ஞானமுள்ளவர்கள் எதையும் செய்வதற்கு முன் சிந்திக்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ, தம் செயல்கள் மூலம் தமது முட்டாள்தனத்தைக் காட்டிக்கொள்வார்கள்.
17 ஒரு தூதுவனை நம்ப முடியாவிட்டால் அவனைச் சுற்றிலும் துன்பங்களே ஏற்படும். ஆனால் ஒருவன் நம்பிக்கைக்கு உரியவனாக இருந்தால் சமாதானம் உண்டாகும்.
18 ஒருவன் தன் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், அவன் ஏழையாகவும் அவமானத்துக்குரியவனாகவும் இருப்பான். ஆனால் தான் விமர்சிக்கப்படும்போதும் தண்டனைக்குட்படும்போதும் கவனிக்கிறவன் பயன் அடைகிறான்.
19 ஒருவன் ஒன்றை விரும்பி, அதனைப் பெற்றுக்கொண்டால் அவன் மகிழ்ச்சி அடைகிறான். ஆனால் முட்டாள்களோ தீயதை விரும்பி, மாற மறுக்கிறார்கள்.
20 ஞானமுள்ளவர்களோடு நட்பாக இரு, நீயும் ஞானம் அடைவாய். ஆனால் நீ முட்டாள்களை நண்பர்களாக்கினால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்.
21 பாவிகள் எங்கே போனாலும் துன்பங்கள் அவர்களைத் துரத்தும். ஆனால் நல்லவர்களுக்கு நல்லவையே நடக்கும்.
22 நல்லவர்களுக்குத் தம் பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் கொடுக்கிற அளவிற்குச் செல்வம் இருக்கும். தீயவர்களிடம் உள்ள அனைத்தையும் முடிவில் நல்லவர்கள் பெற்றுக்கொள்வார்கள்.
23 ஒரு ஏழை, ஏராளமான விளைச்சலைத் தரும் நல்ல நிலத்தை வைத்திருக்கலாம், ஆனால் அவன் தவறான தீர்மானங்கள் செய்தால் பட்டினியாக இருப்பான்.
24 ஒருவன் உண்மையாகவே தன் பிள்ளைகளை நேசித்தால், அவர்கள் தவறு செய்யும் போது அவற்றைத் திருத்தவேண்டும். நீ உன் மகனை நேசித்தால் அவனுக்குச் சரியான பாதையைப் போதிக்க வேண்டும்.
25 நல்லவர்கள், தமக்கு எது தேவையோ அவற்றைப் பெற்றுக்கொள்வார்கள். ஆனால் தீயவர்களோ, முக்கியமானவற்றைப் பெறாமலேயே இருப்பார்கள்.
பிள்ளைகளும் பெற்றோர்களும்
6 பிள்ளைகளே கர்த்தர் விரும்புவது போல நீங்கள் உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். இதுவே நீங்கள் செய்ய வேண்டிய சரியான செயலாகும். 2 “நீங்கள் உங்களுடைய தாய்க்கும் தகப்பனுக்கும் மரியாதை கொடுக்கவேண்டும்” [a] என்று கட்டளை கூறுகிறது. இதுதான் முதல் கட்டளை. அதிலே ஒரு வாக்குறுதி உள்ளது. 3 “பிறகு எல்லாம் உங்களுக்கு நல்லதாகும். நீங்கள் பூமியில் நீண்ட வாழ்வைப் பெறுவீர்கள்!” என்பது தான் அந்த வாக்குறுதி.
4 தந்தைமார்களே! உங்கள் குழந்தைகளைக் கோபப்படுத்தாதீர்கள். கர்த்தருக்கேற்ற கல்வியாலும், பயிற்சியாலும் அவர்களை மேலான நிலைக்குக் கொண்டு வாருங்கள்.
அடிமைகளும், எஜமானர்களும்
5 அடிமைகளே பூமியில் உள்ள உங்கள் எஜமானர்களுக்கு அச்சத்தோடும், மரியாதையோடும் கீழ்ப்படிந்திருங்கள். நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போன்று உண்மையான மனதோடு கீழ்ப்படியுங்கள். 6 அவர்கள் கவனித்துக்கொண்டு இருக்கும்போது மட்டும் நல்லெண்ணத்தைப் பெற உங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியக் கூடாது; நீங்கள் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவது போலக் கீழ்ப்படியுங்கள். தேவன் விரும்புவதை நீங்கள் முழு மனதுடன் செய்யுங்கள். 7 உங்கள் வேலையைச் செய்யுங்கள். சந்தோஷமாய் செய்யுங்கள். கர்த்தருக்கு சேவை செய்வதுபோல எண்ணுங்கள். மனிதருக்கு சேவை செய்வதாக எண்ணாதீர்கள். 8 அவரவர் செய்யும் நற்செயலுக்கு ஏற்றபடி ஒவ்வொருவருக்கும் கர்த்தர் பலன் தருவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அவர்கள் அடிமைகள்போல இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி ஒவ்வொருவரும் தத்தம் நற்செயலுக்கு ஏற்றபடி பலன்களைப் பெறுவர்.
9 எஜமானர்களே, இதைப்போன்றே நீங்களும் உங்கள் அடிமைகளிடம் நல்லவர்களாகவும் இருங்கள். அவர்களை மிரட்டாதீர்கள். உங்களுக்கும் உங்கள் அடிமைகளுக்கும் எஜமானராய் இருக்கிற தேவன் பரலோகத்தில் இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள். அவர் எல்லாரையும் ஒன்று போலவே நியாயந்தீர்க்கிறார்.
முழு ஆயதங்களையும் அணியுங்கள்
10 இறுதியாக நான் எழுதுவது யாதெனில்: அவரது பெரும் பலத்தால் நீங்கள் உங்களை பலப்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறுகிறேன். 11 அவரது முழு ஆயுதங்களையும் அணிந்துகொள்ளுங்கள். அதற்குப் பிறகு உங்களால் சாத்தானின் தந்திரங்களை எதிர்த்துப் போராட முடியும். 12 நமது போராட்டம் பூமியிலுள்ள மக்களை எதிர்த்தல்ல. நாம் இருட்டில் உள்ள அரசர்களையும், அதிகாரிகளையும், அதிகாரங்களையும் எதிர்த்தே போராடுகிறோம். வானமண்டலங்களில் உள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளுக்கு எதிராகப் போர் செய்கிறோம். 13 அதனால்தான் தேவனின் முழுக் கவசங்களும் உங்களுக்குத் தேவை. அப்போது தான் உங்களால் தீங்கு நாளில் எதிர்த்து பலத்துடன் இருக்க முடியும். போர் முடித்த பிறகும் வல்லமையுடன் நிற்கமுடியும்.
14 எனவே உண்மை என்னும் இடுப்புக் கச்சையைக் கட்டிக்கொண்டு வலிமையாகுங்கள். சரியான வாழ்க்கை என்னும் கவசத்தை உங்கள் மார்பில் அணிந்துகொள்ளுங்கள். 15 சமாதானத்தின் நற்செய்தி என்னும் செருப்புகளை உங்கள் கால்களில் அணிந்துகொண்டு முழு தயார் நிலையில் நில்லுங்கள். 16 நம்பிக்கை என்னும் கேடயத்தைக் கைகளில் தாங்கிக்கொள்ளுங்கள். சாத்தான் எறியும் அம்புகளை அதனால் தடுத்துவிட முடியும். 17 தேவனின் வார்த்தை என்னும் தலைக்கவசத்தை அணிந்துகொள்க! ஆவி என்னும் வாளை எடுத்துக்கொள்க. அது தேவனின் போதகங்களாகும். 18 எப்பொழுதும் ஆவிக்குள் பிரார்த்தனை செய்யுங்கள். எல்லா வகையான பிரார்த்தனைகளையும் செய்து உங்களுக்குத் தேவையான அனைத்தையும் கேளுங்கள். இதனைச் செய்வதற்கு எப்பொழுதும் தயாராக இருங்கள். ஒருபோதும் மனம் தளராதீர்கள். எப்பொழுதும் தேவனுடைய எல்லாப் பிள்ளைகளுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
19 எனக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள், அப்பொழுது நான் பேசும்போது தேவன் எனக்கு வார்த்தைகளைக் கொடுப்பார். நான் அச்சம் இல்லாமல் சுவிசேஷத்தின் இரகசிய உண்மைகளைப் போதிக்க வேண்டும். 20 நற்செய்தியைப் போதிக்கும் பணி என்னுடையது. அதை இப்பொழுது சிறைக்குள் இருந்து செய்கிறேன். இதற்கான தைரியத்தை நான் பெற்றுக்கொள்ள எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
இறுதி வாழ்த்துக்கள்
21 நான் நேசிக்கிற நம் சகோதரன் தீகிக்குவை உங்களிடம் அனுப்புவேன். கர்த்தரின் பணியில் அவன் நம்பிக்கைக்குரிய தொண்டன். எனக்கு ஏற்பட்ட எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். அப்பொழுது உங்களுக்கு என் நிலை என்னவென்றும், நான் செய்துகொண்டிருப்பது என்னவென்றும் தெரியும். 22 அதற்காகத்தான் நான் அவனை அனுப்புகின்றேன். எனவே நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளவும், உங்களை தைரியப்படுத்தவும் நான் அவனை அனுப்புகிறேன்.
23 பிதாவாகிய தேவனிடமிருந்தும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் உங்களுக்கு நம்பிக்கையோடு கூடிய சமாதானமும் அன்பும் கிடைப்பதாக. 24 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் அழியாத அன்புள்ள அனைவருக்கும் தேவனின் இரக்கம் உண்டாவதாக, ஆமென்.
2008 by World Bible Translation Center