Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 26

பரிசுத்தக் கூடாரம்

26 கர்த்தர் மோசேயை நோக்கி, “பரிசுத்தக் கூடாரம் பத்து திரைச் சீலைகளால் தைக்கப்பட வேண்டும். இந்த திரைச்சீலைகள் மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம் சிவப்பு ஆகிய நூல்களால் நெய்யப்படவேண்டும். ஒரு திறமை வாய்ந்த ஓவியன் இத்திரைச் சீலையில் சிறகுகளுள்ள கேரூபீன்களின் ஓவியங்களை நெய்ய வேண்டும். எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். ஒவ்வொன்றும் 28 முழ நீளமும் 4 முழ அகலமுமாக இருக்கவேண்டும். இரண்டு பிரிவாகத் திரைகளை இணை. ஐந்து திரைகளை ஒன்றாகவும், மற்ற ஐந்து திரைகளை வேறாகவும் இணை. ஒரு பிரிவின் விளிம்பில் இளநீலத் துணியால் கண்ணிகளை உருவாக்கு. இவ்வாறே மற்ற பிரிவின் விளிம்பு திரையிலும் செய். முதலிணைப்பில் 50 கண்ணிகளும் இரண்டாம் இணைப்பில் 50 கண்ணிகளும் தைக்கவேண்டும். பின்பு திரைகளை இணைப்பதற்கு 50 பொன்வளையங்களைச் செய். அது பரிசுத்தக் கூடாரத்தை ஒன்றாக இணைத்துவிடும்.

“பரிசுத்தக் கூடாரத்திற்கு மேல் மற்றொரு கூடாரத்தை உருவாக்கு. இக்கூடாரம் செய்வதற்குப் பதினொரு திரைகளைப் பயன்படுத்து. வெள்ளாட்டு மயிரால் இத்திரைகளை நெசவு செய். எல்லாத் திரைகளும் ஒரே அளவுடையதாய் இருக்க வேண்டும். 30 முழ நீளமும் 4 முழ அகலமும் உடையதாய் அது இருக்கவேண்டும். ஐந்து திரைகளை ஒன்றாகவும், வேறு 6 திரைகளை ஒன்றாகவும் இணைக்கவேண்டும். ஆறாம் திரையின் பாதிப் பகுதியை கூடாரத்தின் முன் பகுதியில் மடித்துவிட வேண்டும். 10 ஒரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் இன்னொரு திரையிணைப்பின் கடைசித் திரையில் 50 கண்ணிகளையும் தைக்கவேண்டும். 11 பின்னர் திரைகளை இணைப்பதற்கு 50 வெண்கல வளையங்களைச் செய். அவை கூடாரத்தின் இருபகுதிகளையும் ஒன்றாக இணைக்கும். 12 இக்கூடாரத்தின் இறுதித் திரையின் பாதிப்பகுதி பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கும். 13 அதன் பக்க வாட்டில் பரிசுத்தக் கூடாரத்தின் திரைகள் பரிசுத்தக் கூடாரத்தின் கீழ்ப்புற ஓரங்களைக் காட்டிலும் ஒரு முழம் தாழ்வாகத் தொங்கும். இவ்வாறு பரிசுத்தக் கூடாரம் மகா பரிசுத்தக் கூடாரத்தை முற்றிலும் மறைக்கும். 14 மகா பரிசுத்தக் கூடாரத்தை மறைப்பதற்கு இரண்டு உறைகளைச் செய். சிவப்புச் சாயம் தீர்த்த ஆட்டுக்கடா தோலினால் ஒரு உறையும் மெல்லிய தோலினால் மற்றொரு உறையும் செய்யப்பட வேண்டும்.

15 “பரிசுத்தக் கூடாரத்தைத் தாங்குவதற்காகச் சட்டங்களை சீத்திம் மரத்தால் செய்ய வேண்டும். 16 அச்சட்டங்கள் 10 முழ உயரமும் 1 1/2 முழ அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும். 17 ஒவ்வொரு புறமுள்ள தூண்கள் குறுக்குத் துண்டுகளால் ஒவ்வொரு சட்டமாகச் சேர்க்கப்படவேண்டும். பரிசுத்த கூடாரத்தின் எல்லாச் சட்டங்களும் ஒரே அளவுடையதாக இருக்க வேண்டும். 18 பரிசுத்த கூடாரத்தின் தென் புறத்திற்கென்று 20 சட்டங்களை உருவாக்கு. 19 சட்டங்களுக்கு 40 வெள்ளிப் பீடங்களை உண்டாக்கு. ஒவ்வொரு சட்டத்தின் கீழும் இரண்டு பீடங்கள் வீதம் அமைய வேண்டும். ஒவ்வொரு பக்கத் தூணுக்கும் ஒருபீடம் வீதம் இருக்கவேண்டும். 20 பரிசுத்தக் கூடாரத்தின் மறுபக்கத்திற்கென்று (வடக்குப் புறம்) மேலும் இருபது சட்டங்கள் செய். 21 நாற்பது வெள்ளி பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கும் இரண்டு வீதம் செய். 22 ஆறு சட்டங்கள் பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்திற்கு (மேற்குப்பக்கம்) அமைத்துவிடு. 23 பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்து மூலைகளுக்கென்று இரண்டு சட்டங்கள் செய். 24 மூலைகளிலுள்ள சட்டங்கள் அடியில் சேர்க்கப்படவேண்டும். மேற்புறத்தில் சட்டங்களை ஒரு வளையத்தால் இணைக்கவேண்டும். இரண்டு மூலைகளுக்கும் அவ்வாறே செய். 25 கூடாரத்தின் மேற்குப்புறத்திற்கு எட்டுச் சட்டங்கள் இருக்கும். 16 வெள்ளிப் பீடங்கள் ஒவ்வொரு சட்டத்திற்கு இரண்டு வீதம் அமையும்.

26 “பரிசுத்த கூடாரத்தின் சட்டங்களுக்குச் சீத்திம் மரத்தாலான தாழ்ப்பாள்களைச் செய். பரிசுத்த கூடாரத்தின் முன்புறத்திற்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்கவேண்டும். 27 பரிசுத்த கூடாரத்தின் பின்னாலுள்ள (மேற்குப் புறத்தின்) சட்டங்களுக்கு ஐந்து தாழ்ப்பாள்கள் இருக்க வேண்டும். 28 நடுவிலுள்ள தாழ்ப்பாள் ஒரு மூலையிலிருந்து மறுமூலைவரைக்கும் சட்டங்கள் வழியாகச் செல்லவேண்டும்.

29 “இந்த சட்டங்களைப் பொன் தகட்டால் மூடு. தாழ்ப்பாள்களை இணைப்பதற்குப் பொன் வளையங்களை உண்டுபண்ணு. தாழ்ப்பாள்களுக்கும் பொன் முலாம் பூசு. 30 மலையில் நான் உனக்குக் காட்டிய மாதிரியின்படியே பரிசுத்தக் கூடாரத்தை உண்டாக்கு.

பரிசுத்த கூடாரத்தின் உட்புறம்

31 “பரிசுத்தக் கூடாரத்தின் உட்புறத்தில் விரிப்பதற்கு மெல்லிய துகிலினால் ஒரு விசேஷ திரைச்சீலையை உண்டாக்கு. நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலால் அந்தத் திரைச்சீலையை உண்டாக்கி, அதிலே கேரூபின்களின் சித்திரங்களைப் பின்னு. 32 சீத்திம் மரத்தால் நான்கு தூண்களை உண்டாக்கி அவற்றைப் பொன்னால் மூடு. நான்கு தூண்கள் மேலும் பொன்னால் ஆன கொக்கிகளை இணை. தூண்களுக்கு அடியில் நான்கு வெள்ளி பீடங்களை வை. பிறகு திரைச் சீலையைத் தங்கக் கொக்கிகளில் தொங்கவிடு. 33 பொன் வளையங்களுக்குக் கீழே திரைகளைத் தொங்கவிடு. நீ செய்த உடன்படிக்கைப் பெட்டியைத் திரைக்குப் பின்னே வை. இந்தத் திரையானது பரிசுத்த இடத்தையும், மகா பரிசுத்த இடத்தையும் பிரிக்கும். 34 உடன்படிக்கைப் பெட்டியை அதன் கிருபாசனத்தால் மூடிவை.

35 “பின்பு பரிசுத்த இடத்தின் திரையின் முன்புறத்தில் நீ செய்த விசேஷ மேசையை வை. பரிசுத்த கூடாரத்தின் வடக்குப்புறத்தில் மேசை இருக்க வேண்டும். குத்துவிளக்குத் தண்டை தெற்குப்புறத்தில் வை. அது மேசையின் குறுக்காக இருக்கும்.

பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயில்

36 “பரிசுத்தக் கூடாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு ஒரு திரையை உருவாக்குங்கள். நீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும், மெல்லிய துகிலாலும், இத்திரையை உண்டாக்கு. அதில் சித்திரங்களைப் பின்னி வை. 37 திரைகளுக்குப் பொன் கொக்கிகளை உண்டாக்கு. பொன் முலாம் பூசப்பட்ட சீத்திம் மரத்தால் ஐந்து தூண்களைச் செய். ஐந்து தூண்களுக்கும் வெண்கலத்தால் ஐந்து பீடங்களைச் செய்” என்றார்.

யோவான் 5

38 வருட நோயாளி குணமடைதல்

பிறகு, இயேசு எருசலேமுக்கு யூதர்களின் ஒரு பண்டிகையின்போது சென்றார். அங்கே ஐந்து மண்டபங்கள் உள்ள ஒரு குளம் இருந்தது. யூதமொழியில் இதற்கு பெதஸ்தா [a] என்று பெயர். இந்தக் குளம் ஆட்டுவாசல் அருகே இருந்தது. குளத்தின் அருகில் உள்ள மண்டபத்தில் நோயாளிகள் பலர் படுத்துக்கிடந்தனர். [b] அவர்களில் சிலர் குருடர்கள்; சிலர் சப்பாணிகள்; சிலர் சூம்பிப்போன உறுப்புகளை உடையவர்கள். அவர்களில் ஒருவன் முப்பத்தெட்டு ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டிருந்தான். இயேசு அந்த நோயாளி அங்கு படுத்துக்கிடப்பதைக் கண்டார். அவன் நீண்ட காலமாக நோயாளியாக இருப்பதை அவர் அறிந்தார். ஆகையால் அவர் அவனிடம், “நீ குணமடைய விரும்புகிறாயா?” என்று கேட்டார்.

“ஐயா, தண்ணீர் கலங்கும்போது நான் போய் நீரில் இறங்குவதற்கு எனக்கு உதவி செய்ய யாருமில்லை. முதல் மனிதனாகப் போய் மூழ்குவதற்கு முயல்வேன். ஆனால் எனக்கு முன்னால் எவனாவது ஒருவன் முதல் மனிதனாகப் போய் மூழ்கிவிடுகிறான்” என்று அந்த நோயாளி பதில் சொன்னான்.

பிறகு இயேசு “எழுந்து நில். உனது படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்றார். உடனே அந்த நோயாளி குணமடைந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

இது நிகழ்ந்த அந்த நாளோ ஓய்வு நாள். 10 ஆகையால் யூதர்கள், “இன்று ஓய்வு நாள். நீ படுக்கையை எடுத்துக்கொண்டு போவது சரியல்ல” என்று அவனிடம் கூறினர்.

11 ஆனால் அந்த மனிதன், “ஒரு மனிதர் என்னைக் குணமாக்கினார். எனது படுக்கையை எடுத்துக்கொண்டு போகும்படிக் கூறினார்” என்றான்.

12 “உன்னை குணமாக்கிப் படுக்கையை எடுத்துக் கொண்டு போகும்படி சொன்ன அவன் யார்?” என்று யூதர்கள் கேட்டனர்.

13 ஆனால் அந்த மனிதனுக்கு தன்னைக் குணமாக்கியவர் யார் என்று தெரியவில்லை. அங்கே ஏராளமான மக்கள் இருந்தனர். இயேசுவும் அவ்விடம் விட்டு மறைந்து போயிருந்தார்.

14 பிறகு இயேசு அவனை ஆலயத்தில் கண்டுபிடித்தார். இயேசு அவனிடம், “பார், இப்பொழுது நீ குணமாகிவிட்டாய். உனக்குக் கேடுவராதபடி மேலும் பாவம் செய்யாமல் இருப்பாயாக” என்று கூறினார்.

15 பிறகு அந்த மனிதன் யூதர்களிடம் திரும்பிப் போனான். அவன் யூதர்களிடம், “இயேசுதான் என்னைக் குணமாக்கியவர்” என்று சொன்னான்.

16 இயேசு இவ்வாறு ஓய்வு நாளில் நோயைக் குணப்படுத்தியதால் யூதர்கள் இயேசுவைக் குற்றம்சாட்டத் தொடங்கினர். 17 ஆனால் இயேசுவோ யூதர்களிடம், “எனது பிதா (தேவன்) வேலை செய்வதை நிறுத்துவதே இல்லை. நானும் வேலை செய்துகொண்டிருக்கிறேன்” என்றார்.

18 இதைக் கேட்ட யூதர்கள் இயேசுவைக் கொன்றுவிடக் கடுமையாக முயற்சி செய்தார்கள். அவர்கள், “முதலில் இயேசு ஓய்வு நாளின் சட்டத்தை உடைத்துவிட்டார். பிறகு அவர் தேவனை அவரது பிதா என்று கூறுகிறார். அவர் தன்னை தேவனுக்குச் சமமாகக் கூறி வருகிறார்” என்று விளக்கம் கூறினர்.

தேவ அதிகாரம் பெற்ற இயேசு

19 ஆனால் இயேசுவோ, “உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், இந்தக் குமாரன் தனியாக எதுவும் செய்வதில்லை. இவர் தன் பிதாவிடம் எதைப் பார்க்கிறாரோ அவற்றையே செய்து வருகிறார். 20 பிதா குமாரனை நேசிக்கிறார். அவர் தான் செய்பவற்றையெல்லாம் தனது குமாரனுக்குக் காட்டி வருகிறார். இந்த மனிதன் குணமானான். இதைவிட மேலான காரியங்களைப் பிதாவானவர் தனது குமாரன் மூலம் செய்வார். பின்பு நீங்கள் எல்லோரும் ஆச்சரியப்படுவீர்கள். 21 பிதாவானவர் இறந்தவர்களை உயிரோடு எழுப்புகிறார். இதைப்போலவே அவரது குமாரனும் தமது விருப்பத்தின்படி இறந்துபோனவர்களை உயிரோடு எழச் செய்வார்.

22 “அத்துடன் பிதாவானவர் யாருக்கும் தீர்ப்பளிப்பதில்லை. ஆனால் அவர் இத்தகைய தீர்ப்பளிக்கும் அதிகாரத்தை தன் மகனிடம் ஒப்படைத்திருக்கிறார். 23 தேவன் இதைச் செய்தார். எனவே அனைத்து மக்களும் பிதாவுக்குச் செய்கிற மரியாதையைக் குமாரனுக்கும் செய்ய வேண்டும். ஒருவன் குமாரனுக்கு மரியாதை செய்யாவிட்டால் அவன் பிதாவையும் அவமரியாதை செய்தவனாகிறான். பிதாவே தன் குமாரனை நம்மிடம் அனுப்பியிருக்கிறார்.

24 “நான் உங்களுக்கு உண்மையாகவே கூறுகிறேன், நான் சொல்கிறதை எவன் கேட்டு என்னை அனுப்பினவரை நம்புகிறானோ அவனுக்கு நித்தியமான வாழ்வு உண்டு. அவன் தீர்ப்புக்கு உட்படமாட்டான். அவன் ஏற்கெனவே மரணத்தை விட்டு நீங்கி ஜீவனைப் பெற்றவனாகிறான். 25 உங்களுக்கு ஓர் உண்மையைக் கூறுகிறேன். முக்கியமான வேளை வரும். அவ்வேளை ஏற்கெனவே இங்கே இருக்கிறது. பாவத்தில் இறந்தவர்கள் தேவகுமாரனுடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். குமாரனிடமிருந்து கேட்பவற்றை நம்புகிறவர்கள் நித்திய ஜீவனைப் பெறுகின்றார்கள். 26 பிதாவிடமிருந்தே (தேவனிடமிருந்தே) ஜீவன் வருகின்றது. ஆகையால் அவர் தன் குமாரனுக்கும் ஜீவனையளிக்கும் அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறார். 27 அத்துடன் அவர் குமாரனுக்கு, அனைத்து மக்களுக்கும் தீர்ப்பளிக்கிற அதிகாரத்தையும் கொடுத்திருக்கிறார். ஏனென்றால் அந்தக் குமாரனே மனித குமாரனாக இருக்கிறார்.

28 “இதுபற்றி நீங்கள் ஆச்சரியப்பட வேண்டாம். செத்துப்போய் கல்லறையில் இருக்கிறவர்கள் அவரது சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 29 அப்போது அவர்கள் கல்லறையை விட்டு வெளியே வருவார்கள். தங்கள் வாழ்வில் நன்மையைச் செய்தவர்கள், எழுந்து நித்திய ஜீவனைப் பெறுவார்கள். தீமை செய்தவர்கள் எழுந்து தண்டனையைப் பெறுவார்கள்.

30 “நான் தனியாக எதுவும் செய்வதில்லை. நான் எனக்குச் சொல்லியிருக்கிறபடியே தீர்ப்பளிக்கிறேன். எனவே எனது தீர்ப்பு நீதியானதே. ஏனென்றால் நான் எனக்குப் பிடித்தமானதைச் செய்வதில்லை; என்னை அனுப்பினவருக்குப் பிடித்தமானதையே செய்கிறேன்.

யூதர்களிடம் இயேசு பேசுதல்

31 “நானே என்னைப்பற்றிச் சொல்லி வந்தால், மக்கள் அதை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். 32 ஆனால் என்னைக்குறித்து மக்களிடம் சொல்லுகிற வேறொருவர் இருக்கிறார். அவர் என்னைக் குறித்துச் சொல்வது உண்மையென்று எனக்கும் தெரியும்.

33 “நீங்கள் யோவானிடம் சிலரை அனுப்பியிருந்தீர்கள். அவன் உங்களுக்கு உண்மையைப்பற்றிச் சொன்னான். 34 மக்களுக்கு என்னைப்பற்றி ஒருவன் சாட்சி சொல்லி விளக்க வேண்டும் என்ற தேவை எனக்கில்லை. ஆனால் நீங்கள் இரட்சிக்கப்படும்படியாக இவற்றை நான் உங்களுக்குக் கூறுகிறேன். 35 யோவான் எரிந்து ஒளியைக் கொடுக்கிற ஒரு விளக்கைப்போன்றிருந்தான். நீங்கள் அவனது ஒளியைப் பெற்று சில காலம் மகிழ்ச்சி அடைந்தீர்கள்.

36 “ஆனால் நான் யோவானைவிடப் பெரியவர் என்பதற்கு என்னிடம் சாட்சி உள்ளது. நான் செய்கிற செயல்களே எனக்கு உரிய சாட்சிகளாகும். இவைகளே என் பிதா, நான் செய்யும்படியாகக் கொடுத்தவை என்பதைக் காட்டுகின்றன. 37 என்னை அனுப்பிய என் பிதா, என்னைப் பற்றி அவரே சாட்சி தருகிறார். ஆனால் நீங்கள் அவர் சத்தத்தை ஒருபொழுதும் கேட்டதில்லை. அவர் எப்படி இருப்பார் என்று நீங்கள் பார்த்ததும் இல்லை. 38 பிதாவின் அறிவுரை உங்களில் வாழ்வதுமில்லை. ஏனென்றால் பிதா அனுப்பிய ஒருவரை நீங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. 39 நீங்கள் வேதவாக்கியங்களைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவை நித்திய ஜீவனை உங்களுக்குக் கொடுக்குமென்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த வாக்கியங்களே என்னைப்பற்றி கூறுகின்றன. 40 ஆனால் அந்த நித்திய ஜீவனைப் பெற விரும்பும் நீங்கள், என்னிடம் வர மறுக்கின்றீர்கள்.

41 “நான் மனிதர்களிடமிருந்து பாராட்டைப் பெற விரும்பவில்லை. 42 ஆனால் நான் உங்களை அறிவேன். தேவனுடைய அன்பு உங்களில் இல்லை என்பதையும் அறிவேன். 43 நான் என் பிதாவிடமிருந்து வந்திருக்கிறேன். நான் அவருக்காகப் பேசுகிறேன். ஆனால் என்னை நீங்கள் ஒப்புக்கொள்ள மறுக்கிறீர்கள். வேறொருவன் வந்து அவன் தனக்காகவே பேசினால் அவனை ஏற்றுக்கொள்கிறீர்கள். 44 நீங்கள் உங்களில் ஒருவரை ஒருவர் பாராட்டுவதில் விருப்பம்கொள்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பாராட்டைப் பெற முயற்சி செய்வதில்லை. ஆகையால் நீங்கள் எவ்வாறு நம்பிக்கை வைக்க முடியும்? 45 நான் பிதாவின் முன்னால் நின்று உங்களைக் குற்றம் சொல்வேன் என்று நினைக்கவேண்டாம். மோசேதான் உங்கள் குறைகளைச் சொல்கிறவன். மோசே மட்டுமே உங்களைக் காப்பாற்ற முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்கள். 46 நீங்கள் உண்மையிலேயே மோசேயை நம்பினீர்களானால் என்னிலும் நம்பிக்கை வைத்திருப்பீர்கள். ஏனென்றால் மோசே என்னைப்பற்றித்தான் எழுதியிருக்கிறான். 47 ஆனால் நீங்கள் மோசே எழுதினவைகளை நம்பமாட்டீர்கள். ஆகையால் நான் சொல்வதையும் உங்களால் நம்பமுடியாது” என்று கூறினார்.

நீதிமொழிகள் 2

ஞானத்தின் உரையைக் கேளுங்கள்

என் மகனே நான் சொல்லுகின்றவற்றை ஏற்றுக்கொள். என் கட்டளைகளை நினைவில்கொள். ஞானத்தின் குரலைக் கேட்டு உன்னால் முடிந்தவரை புரிந்துகொள்ள முயற்சிசெய். ஞானத்தைக் கூப்பிடு. புரிந்துகொள்ளுவதற்காகச் சத்தமிடு. ஞானத்தை வெள்ளியைப்போல் தேடு, மறைந்துள்ள புதையல்களைத் தேடுவதுபோன்று தேடு. நீ இவற்றைச் செய்தால், கர்த்தரை மதிக்கக் கற்றுக்கொள்வாய். நீ உண்மையிலேயே தேவனைப்பற்றிக் கற்றுக்கொள்ளலாம்.

கர்த்தர் ஞானத்தைக்கொடுக்கிறார். அவரது வாயிலிருந்து அறிவும் புரிந்துகொள்ளுதலும் வருகின்றன. நல்லவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் அவர் உதவி செய்கிறார். மற்றவர்களிடம் நேர்மையாக நடந்துகொள்பவர்களை அவர் காப்பாற்றுகிறார். அவர் தனது பரிசுத்தமான ஜானங்களைக் காக்கிறார்.

கர்த்தர் உனக்கு ஞானத்தைக்கொடுப்பார். அப்போது நீ நல்லவற்றையும், நேர்மையானவற்றையும், சரியானவற்றையும் புரிந்துகொள்ளுவாய். 10 ஞானம் உனது இருதயத்திற்குள் வரும். உனது ஆத்துமா அறிவால் மகிழ்ச்சி அடையும்.

11 ஞானம் உன்னைக் காப்பாற்றும். புரிந்துகொள்ளுதல் உன்னைப் பாதுகாக்கும். 12 ஞானமும் புரிந்துகொள்ளுதலும் கெட்டவர்களைப் போன்று தீயவழியில் செல்வதைத் தடுக்கும். அந்த ஜனங்களின் வார்த்தைகளில்கூட தீமை இருக்கும். 13 அவர்கள் நேர்மையையும், நன்மையையும் விட்டுவிட்டு பாவத்தின் இருளில் வாழ்கிறார்கள். 14 அவர்கள் தீமை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறார்கள். கெட்ட வழிகளில் செல்வதில் சந்தோஷம் அடைகிறார்கள். 15 அவர்கள் நம்பிக்கைக்குரியவர்களல்ல. அவர்கள் பொய் சொல்லுவார்கள், ஏமாற்றுவார்கள். ஆனால் உனது ஞானமும் புரிந்துகொள்ளுதலும் இவை அனைத்திலுமிருந்து உன்னை விலக்கி வைக்கும்.

16 அந்நிய பெண்ணிடமிருந்து ஞானம் உன்னைப் பாதுகாக்கும். மென்மையான வார்த்தைகளைப் பேசி உன்னைத் தன்னோடு சேர்ந்து பாவம்செய்யத் தூண்டும் அவளிடமிருந்து ஞானம் உன்னைக் காக்கும். 17 அப்பெண் இளமையில் திருமணமாகித் தன் கணவனைவிட்டு விலகியிருக்கலாம். அவள் தேவனுக்கு முன் செய்த தனது திருமண ஒப்பந்தத்தை மறந்தாள். 18 அவளுடைய வீட்டிற்குள் செல்வது மரணத்திற்கு வழிவகுக்கும். தொடர்ந்து அவளைப் பின்பற்றி நீ சென்றால் அவள் உன்னைக் கல்லறைக்கு அழைத்துச் செல்வாள். 19 அவள் ஒரு கல்லறையைப் போன்றவள். அவளிடத்தில் செல்பவன் ஒருபோதும் திரும்பி வருவதில்லை. அவன் தன் வாழ்வை இழப்பான்.

20 ஞானம் நீ நல்லவர்களை முன்மாதிரியாகக்கொண்டு பின்பற்றிச் செல்ல உதவிசெய்யும். நல்லவர்களின் வழியில் நீ வாழ ஞானம் உதவி செய்யும். 21 சரியான வழியில் வாழ்கிறவர்கள் தங்கள் நாட்டிலேயே வாழ்வார்கள். எளிமையானவர்களும் நேர்மையானவர்களும் தம் சொந்த ஊரில் தொடர்ந்து வாழலாம்.

22 ஆனால் பொய்பேசுகிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் தம் நாட்டை இழப்பார்கள். தீயவர்கள் தம் சொந்த நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.

கலாத்தியர் 1

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதாவது: நான் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. நான் மனிதர்களிடமிருந்து அனுப்பப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும் என்னை அப்போஸ்தலனாக ஆக்கினார்கள். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழும்படி செய்தவர். இந்த நிருபம் என்னோடு இருக்கிற என் சகோதரர்கள் அனைவரும் கலாத்தியா [a] நாட்டில் உள்ள சபைகளுக்கு அனுப்புவது,

பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.

ஒரே ஒரு உண்மையான நற்செய்தி

கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.

10 என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நான் மக்களிடம் முயற்சி செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்? அவ்வாறு நான் மனிதர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தால் இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக நான் இருக்க முடியாது.

பவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது

11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.

13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.

15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.

18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் [b] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.

22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center