Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யாத்திராகமம் 27

தகனபலிகளுக்குரிய பலிபீடம்

27 கர்த்தர் மோசேயை நோக்கி, “சீத்திம் மரத்தால் ஒரு பலிபீடம் செய். அப்பலிபீடம் சதுர வடிவமாக இருக்கவேண்டும். 5 முழ நீளமும், 5 முழ அகலமும், 3 முழ உயரமும் இருக்கட்டும். பலிபீடத்தின் நான்கு மூலைகளிலும் நான்கு கொம்புகளைப் பொருத்து. இப்படி பலிபீடமும், கொம்புகளும் ஒரே துண்டாக இருக்கும். பலிபீடத்தை வெண்கலத்தால் மூட வேண்டும்.

“பலிபீடத்தில் பயன்படுத்தும் பாத்திரங்களும், கருவிகளும் வெண்கலத்தால் செய்யப்பட்டவையாக இருக்கட்டும். பானைகள், அகப்பைகள், கிண்ணங்கள், முள் கரண்டிகள், நெருப்புச் சட்டிகள் ஆகியவற்றைச் செய். பலிபீடத்தின் சாம்பலை அகற்றுவதற்காக இவை பயன்படும். பலபீடத்திற்கு வலை போன்ற ஒரு சல்லடை செய்யவேண்டும். சல்லடையின் நான்கு மூலைகளிலும் ஒவ்வொரு வெண்கல வளையங்களை உண்டாக்கு. பலிபீடத்தின் கீழ்ப்புறத்தில் பாதி உயரத்தில் அந்த சல்லடையை உட்கார வை.

“பலிபீடத்திற்கான தூண்களை சீத்திம் மரத்தால் செய்து அதை வெண்கலத்தால் மூட வேண்டும். பலிபீடத்தின் இருபக்கங்களிலும் வளையங்களின் வழியே தண்டுகளைச் செலுத்து. பலிபீடத்தைச் சுமப்பதற்கு இத்தண்டுகளைப் பயன்படுத்து. பல கைகளால் செய்யப்பட்ட பக்கங்களை உடைய உட்குழியுள்ள பெட்டியைப்போல பலிபீடத்தைச் செய்ய வேண்டும். நான் மலையில் உனக்குக் காண்பித்தபடியே பலி பீடத்தைச் செய்யவேண்டும்.

பரிசுத்தக் கூடாரத்தின் வெளிப்பிரகாரம்

“பரிசுத்த கூடாரத்திற்கு ஒரு வெளிப்பிரகாரம் அமைப்பாயாக. அது 100 முழ நீளமான திரைகளால் தெற்குப்புறம் மறைக்கப்படட்டும். மெல்லிய துகிலால் இத்திரைகள் அமைய வேண்டும். 10 20 வெண்கல பீடங்கள் உள்ள 20 தூண்களைப் பயன்படுத்து. தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும். 11 வடபுறத்திலும் திரைச் சுவர் 100 முழ நீளமாக இருக்க வேண்டும். அதற்கு 20 தூண்களும், 20 வெண்கலப் பீடங்களும் இருக்கவேண்டும். தூண்களின் கொக்கிகளும், திரைப் பூண்களும் வெள்ளியால் செய்யப்படவேண்டும்.

12 “வெளிப்பிரகாரத்தின் மேற்குப்புறத்தில் 50 முழ நீளமுள்ள திரைச்சுவர் இருக்க வேண்டும். 10 தூண்களும், 10 பீடங்களும் இருக்க வேண்டும். 13 வெளிப்பிரகாரத்தின் கிழக்குப் புறமும் 50 முழ அகலம் இருக்க வேண்டும். 14 வெளிப்பிரகாரத்தின் நுழை வாயில் கிழக்குப் புறத்திலேயே அமையட்டும். நுழைவாயிலின் ஒருபுறம் 15 முழ நீளமான திரைகளும், 3 தூண்களும், 3 பீடங்களும் இருக்க வேண்டும். 15 அதன் மறுபுறமும் 15 முழ நீளமான திரைகளும், மூன்று தூண்களும், அவற்றிற்கு மூன்று பீடங்களும் இருக்கட்டும்.

16 “வெளிப்பிரகாரத்தின் நுழைவாயிலை மூடுவதற்கு 20 முழ நீளமான திரை இருக்கவேண்டும். மெல்லிய துகில், இளநீலம், இரத்தாம்பரம், சிவப்பு நூலாலும் ஆகிய துணிகளால் திரைகளையும், அதில் சித்திர வேலைப்பாடுகளையும் செய். நான்கு பீடங்கள் உள்ள நான்கு தூண்கள் திரைக்கென இருக்கட்டும். 17 வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள அனைத்துத் தூண்களும் வெள்ளி பூண்களும், வெள்ளிக் கொக்கிகளும், வெண்கலப் பீடங்களும் கொண்டதாக இருக்கவேண்டும். 18 100 முழ நீளமும் 50 முழ அகலமும் கொண்டதாக வெளிப்பிரகாரம் இருக்கவேண்டும். வெளிப்பிரகாரத்தைச் சுற்றிலுமுள்ள திரைகளின் சுவர் 5 முழ உயரம் இருக்க வேண்டும். திரைகள் மெல்லிய துகிலால் நெய்யப்பட வேண்டும். தூண்களின் பீடங்கள் வெண்கலத்தாலாக வேண்டும். 19 எல்லாக் கருவிகளும், கூடாரத்தின் ஆணிகளும், பரிசுத்தக் கூடாரத்திற்குத் தேவையான எல்லாப் பொருட்களும் வெண்கலத்தால் அமைய வேண்டும். வெளிப்பிரகாரத்திற்கான திரைகளுக்குத் தேவையான கூடார ஆணிகளும் வெண்கலத்தால் செய்யப்பட வேண்டும்.

அகல் எண்ணெய்

20 “தரத்தில் உயர்ந்த ஒலிவ எண்ணெயைக் கொண்டுவரும்படியாக இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கட்டளையிடு. தினமும் மாலை நேரத்தில் ஏற்றப்பட வேண்டிய விளக்கிற்கு இந்த எண்ணெயைப் பயன்படுத்து. 21 ஆரோனும், அவன் மகன்களும் விளக்கைச் சுத்திகரிக்கும் வேலையைச் செய்ய வேண்டும். ஆசரிப்புக் கூடாரத்தின் முன் அறைக்குள் அவர்கள் செல்வார்கள். இது உடன்படிக்கை இருக்கும் அறைக்கு முன்பாக இருக்கும் வெளிப்புற அறை. ஒரு திரை இந்த இரண்டு அறைகளையும் பிரிக்கும். மாலை முதல், காலைவரை கர்த்தருக்கு முன் விளக்கு தொடர்ந்து எரிந்துக்கொண்டே இருக்கும்படி அவர்கள் அதைக் கவனித்து வரவேண்டும். இஸ்ரவேல் ஜனங்களும், அவர்கள் சந்ததியும் இச்சட்டத்தை என்றென்றைக்கும் பின்பற்ற வேண்டும்” என்றார்.

யோவான் 6

5,000 க்கு மேற்பட்ட மக்களுக்கு உணவு(A)

பிறகு இயேசு திபேரியாக் கடல் என அழைக்கப்படும் கலிலேயாக் கடலின் அக்கரைக்குப் போனார். ஏராளமான மக்கள் அவரைப் பின் தொடர்ந்தனர். ஏனென்றால் இயேசு வழியில் நோயாளிகளைக் குணப்படுத்தித் தன் வல்லமையை வெளிப்படுத்தியதை அவர்கள் கண்டிருந்தனர். இயேசு மலையின்மேல் ஏறினார். அங்கே தம்மைப் பின்தொடர்ந்தவர்களோடு உட்கார்ந்தார். அப்பொழுது யூதருடைய பஸ்கா பண்டிகை நெருங்கிக்கொண்டிருந்தது.

ஏராளமான மக்கள் அவரை நோக்கி வருவதை இயேசு கண்களை ஏறெடுத்து நோக்கினார். பிலிப்புவிடம் இயேசு, “இவர்களெல்லாம் உண்பதற்கு நாம் அப்பத்தை எங்கே வாங்குவது?” என்று கேட்டார். (பிலிப்புவை சோதனை செய்வதற்காகவே இயேசு அவனிடம் இவ்வாறு கேட்டார். தனது திட்டத்தை இயேசு ஏற்கெனவே தெரிந்து வைத்திருந்தார்.)

பிலிப்பு, “இவர்களில் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் அப்பம் உண்பதற்குக்கூட, நாம் அனைவரும் ஒரு மாதத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டியதிருக்குமே” என்றான்.

அந்திரேயா அவரது இன்னொரு சீஷன். அவன் சீமோன் பேதுருவின் சகோதரன். அந்திரேயா இயேசுவிடம், “இங்கே ஒரு சிறுவன் வாற்கோதுமையால் ஆன ஐந்து அப்பத் துண்டுகளையும், இரண்டு சிறு மீன்களையும் வைத்திருக்கிறான். ஆனால் அவை இவ்வளவு மிகுதியான மக்களுக்குப் போதுமானதல்ல” என்றான்.

10 “மக்களை உட்காரும்படிக் கூறுங்கள்” என்றார் இயேசு. அந்த இடத்தில் நிறைய புல் இருந்தது. அங்கே ஐயாயிரம் எண்ணிக்கை வரையுள்ள ஆண்கள் உட்கார்ந்தனர். 11 பிறகு இயேசு அப்பத் துண்டுகளை எடுத்தார். அவர் தேவனுக்கு நன்றி சொன்னார். அதை அங்கு அமர்ந்திருந்தவர்களுக்குப் பகிர்ந்தளிக்கச் செய்தார். அவர் மீனையும் அதைப்போலவே பகிர்ந்தளிக்கச் செய்தார். இயேசு அவர்களின் தேவைக்கு ஏற்றவாறு வேண்டியமட்டும் கொடுத்தார்.

12 அனைத்து மக்களும் வேண்டிய மட்டும் உண்டனர். அவர்கள் உண்டு முடித்ததும் இயேசு தன் சீஷர்களிடம், “உண்ணப்படாத அப்பத்துண்டுகளையும் மீன் துண்டுகளையும் சேகரியுங்கள். எதையும் வீணாக்க வேண்டாம்” என்றார். 13 எனவே சீஷர்கள் அவற்றைச் சேகரித்தனர். மக்கள் ஐந்து அப்பத்துண்டுகளிலிருந்தே உண்ண ஆரம்பித்தனர். ஆனால் உண்டு பிறகு மீதியிருந்த துணுக்குகளோ பன்னிரண்டு கூடைகளில் நிரப்பப்பட்டன. 14 இயேசு செய்த இந்த அற்புதத்தை மக்கள் கண்டனர். “இவர் உண்மையிலேயே உலகத்தில் வருகிறவரான தீர்க்கதரிசியாக இருக்க வேண்டும்” என்றனர் மக்கள்.

15 அவரை மக்கள் அரசராக்கவேண்டும் என விரும்பினர். இதனை இயேசு அறிந்தார். மக்கள் தங்கள் எண்ணத்தைத் திட்டமாக்கிச் செயல்படுத்த விரும்பினர். எனவே இயேசு அவர்களை விட்டுத் தனியாக மலையில் ஏறினார்.

இயேசு தண்ணீர் மீது நடத்தல்(B)

16 அன்று மாலை இயேசுவின் சீஷர்கள் கலிலேயாக் கடற்கரைக்கு இறங்கிச் சென்றனர். 17 அப்பொழுது இருட்ட ஆரம்பித்தது. எனினும் இயேசு அவர்களிடம் திரும்பி வரவில்லை. இயேசுவின் சீஷர்கள் படகில் ஏறிக் கடலைக் கடந்து கப்பர்நகூமிற்குச் செல்லத்தொடங்கினர். 18 காற்று வேகமாக அடித்துக்கொண்டிருந்தது. கடலில் பெரிய அலைகள் வர ஆரம்பித்தன. 19 அவர்கள் மூன்று நான்கு மைல் தூரத்திற்குப் படகைச் செலுத்தினர். அதன் பின்பு அவர்கள் இயேசுவைக் கண்டனர். அவர் தண்ணீர்மேல் நடந்துவந்துகொண்டிருந்தார். அவர் படகை நெருங்கி வந்தார். அவரது சீஷர்கள் அஞ்சினர். 20 “நான்தான். பயப்பட வேண்டாம்” என்று இயேசு அவர்களிடம் கூறினார். 21 இயேசு இவ்வாறு சொன்னதும் அவர்கள் மகிழ்ச்சி அடைந்து படகில் அவரை ஏற்றிக்கொண்டனர். உடனே அவர்கள் போக விரும்பிய இடத்திற்குப் படகு வந்து சேர்ந்தது.

மக்கள் இயேசுவைத் தேடுதல்

22 மறுநாள் வந்தது. கடலின் அக்கரையில் சில மக்கள் தங்கியிருந்தனர். இயேசு தன் சீஷர்களோடு படகில் செல்லவில்லை என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். இயேசுவின் சீஷர்கள் இயேசு இல்லாமல் தனியாகச் சென்றதை அவர்கள் தெரிந்திருந்தனர். அங்கிருந்து செல்ல அந்த ஒரு படகு மட்டும்தான் உண்டு என்பதையும் அவர்கள் தெரிந்துகொண்டனர். 23 அப்போது திபேரியாவிலிருந்து சில படகுகள் வந்தன. அப்படகுகள், கர்த்தர் நன்றி சொன்னதற்குப் பின் மக்கள் உணவு உண்ட இடத்தின் அருகில் நின்றன. 24 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே இல்லை என்பதை மக்கள் அறிந்துகொண்டனர். ஆகையால் அவர்கள் படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்குச் சென்றனர். அவர்கள் இயேசுவைக் காண விரும்பினர்.

ஜீவ அப்பமான இயேசு

25 கடலின் அக்கரையில் இயேசுவை மக்கள் கண்டுபிடித்தனர். அவர்கள், “போதகரே, நீங்கள் இங்கு எப்பொழுது வந்தீர்கள்?” என்று கேட்டனர்.

26 “ஏன் என்னைத் தேடுகிறீர்கள்? எனது வல்லமையை வெளிப்படுத்தும் எனது அற்புதங்களைப் பார்த்தீர்கள். அதற்காகவா என்னைத் தேடுகிறீர்கள்? இல்லை. நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் அப்பத்தை உண்டீர்கள், திருப்தியாக உண்டீர்கள், அதனால் என்னைத் தேடுகிறீர்கள். 27 பூமியிலுள்ள உணவுகள் கெட்டு அழிந்துபோகும். ஆகையால் அத்தகைய உணவுக்காக நீங்கள் வேலை செய்யவேண்டாம். ஆனால் எப்பொழுதும் நன்மையையும் நித்திய வாழ்வையும் தருகிற உணவுக்காக வேலை செய்யுங்கள். மனித குமாரனே உங்களுக்கு அத்தகைய உணவினைத் தருவார். தேவனாகிய பிதா, தான் மனித குமாரனோடு இருப்பதைக் காட்டிவிட்டார்” என்று இயேசு கூறினார்.

28 “நாங்கள் எத்தகைய செயல்களைச் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்?” என்று மக்கள் இயேசுவிடம் கேட்டனர்.

29 “தேவனால் அனுப்பப்பட்ட ஒருவரை நீங்கள் நம்பவேண்டும். இதுவே நீங்கள் செய்யத்தக்கது என்று தேவன் விரும்புகிறார்” என இயேசு பதிலுரைத்தார்.

30 “தேவனால் அனுப்பப்பட்டவர் நீர்தான் என்பதை நிரூபிக்க என்ன அற்புதத்தை நீர் செய்யப் போகிறீர். நீர் செய்யும் அற்புதத்தைப் பார்க்க முடியுமெனில், அதற்குப் பின்னர் நாங்கள் உம்மை நம்புவோம். என்ன செய்யப் போகிறீர்? 31 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் தேவன் கொடுத்த மன்னாவை (உணவு) உண்டார்கள். இது ‘தேவன் பரலோகத்தில் இருந்து அவர்களுக்கு உண்பதற்கு அப்பத்தைக் கொடுத்தார்,’ [a] என்று எழுதப்பட்டிருக்கிறது” என்று மக்கள் கேட்டனர்.

32 “நான் உண்மையைச் சொல்லுகிறேன். பரலோகத்திலிருந்து அப்பத்தை உங்களுக்கு கொடுத்தது மோசே அல்ல. ஆனால் என்னுடைய பிதா பரலோகத்திலிருந்து உண்மையான அப்பத்தை உங்களுக்குக் கொடுக்கிறார். 33 தேவனின் அப்பம் என்பது என்ன? பரலோகத்திலிருந்து பூமிக்கு வந்து உலகத்துக்காக ஜீவனைத் தருகிற ஒருவர்தான் தேவனின் அப்பம்” என்றார் இயேசு.

34 “ஆண்டவரே, எப்பொழுதும் அந்த அப்பத்தை எங்களுக்குத் தாரும்” என்றனர் மக்கள்.

35 “நான்தான் உங்களுக்கு ஜீவனளிக்கும் அப்பம். என்னிடம் வருகிற மனிதன் என்றென்றைக்கும் பசியோடு இருப்பதில்லை. என்மீது நம்பிக்கை வைக்கிற எவனும் எப்பொழுதும் தாகமாய் இருப்பதில்லை. 36 நீங்கள் என்னைப் பார்த்திருந்தும் என்மீது நம்பிக்கையில்லாமல் இருக்கிறீர்கள் என்று நான் உங்களுக்குச் சொன்னேன். 37 எனது பிதா என் மக்களை எனக்குத் தந்திருக்கிறார். அம்மக்களில் ஒவ்வொருவரும் என்னிடம் வருவார்கள். என்னிடம் வருகிற ஒவ்வொருவரையும் நான் ஏற்றுக்கொள்வேன். 38 நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புகிறாரோ அதைச் செய்வதற்காக நான் பரலோகத்தில் இருந்து வந்திருக்கிறேன். நான் விரும்புவதைச் செய்வதற்கு வரவில்லை. 39 தேவன் கொடுத்த மக்களில் எவரையும் நான் இழக்கக்கூடாது. நான் இறுதி நாளில் அவர்களையெல்லாம் எழுப்புவேன். என்னை அனுப்பினவர் நான் செய்யவேண்டும் என்று விரும்புவதும் இதைத்தான். 40 குமாரனைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவரில் நம்பிக்கை வைத்து நித்திய ஜீவனைப் பெறுகின்றனர். நான் அந்த மனிதர்களை இறுதி நாளில் எழுப்புவேன். இதுதான் எனது பிதாவின் விருப்பமும் ஆகும்” என்றார் இயேசு.

41 பிறகு யூதர்கள் இயேசுவைப்பற்றி முறு முறுக்கத் தொடங்கினர். ஏனென்றால் “நான் பரலோகத்திலிருந்து வந்த அப்பம்” என்று இயேசு சொன்னார். 42 அதற்கு யூதர்கள், “இவர் இயேசு. நாங்கள் இவரது தந்தையையும் தாயையும் அறிவோம். இயேசு யோசேப்பின் மகன். அவர் எப்படி நான் பரலோகத்திலிருந்து வந்தேன் என்று சொல்லலாம்?” என்று கேட்டனர்.

43 “ஒருவருக்கொருவர் குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். 44 என்னை அனுப்பியவர் அந்தப் பிதாதான். அவரே மக்களை என்னிடம் அழைத்து வருகிறவர். நான் இறுதி நாளில் அவர்களை எழுப்புவேன். என் பிதா என்னிடம் மக்களை அழைத்து வராவிட்டால், எவரும் என்னிடம் வர முடிவதில்லை. 45 இது தீர்க்கதரிசிகளின் மூலம் எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவன் எல்லா மக்களுக்கும் கற்றுத் தருவார்.’ [b] மக்கள் அப்பிதாவைக் கவனிக்கிறார்கள். கற்றுக்கொள்கிறார்கள். பிறகு அவர்கள் என்னிடம் வருகிறார்கள். 46 எவரும் பிதாவைப் பார்த்திருப்பதாக நான் கருதவில்லை. தேவனிடம் இருந்து வந்தவர் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறார்.

47 “நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒருவன் நம்பிக்கை வைத்தால் அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 48 நானே ஜீவனளிக்கும் அப்பம். 49 உங்கள் மூதாதையர்கள் தேவன் கொடுத்த மன்னாவை வனாந்தரத்தில் உண்டார்கள். ஆனால் அவர்கள் மற்றவர்களைப்போன்றே மாண்டுபோனார்கள். 50 நான் பரலோகத்தில் இருந்து வந்த அப்பம். ஒரு மனிதன் இதனை உண்பானேயானால் அவன் என்றென்றைக்கும் உயிர்வாழ்வான். 51 என்னுடைய சரீரம் தான் அந்த அப்பம். நான் என் சரீரத்தைத் தருவேன். உலகில் உள்ளவர்கள் வாழ்வைப் பெறுவார்கள்” என்று இயேசு கூறினார்.

52 பிறகு யூதர்கள் தங்களுக்குள் விவாதம் செய்துகொண்டனர். “எவ்வாறு இந்த மனிதன் தனது சரீரத்தை நாம் உண்ணும்படி தருவான்?” என்றனர் அவர்கள்.

53 “நான் உண்மையைக் கூறுகிறேன். நீங்கள் மனித குமாரனின் சரீரத்தை உண்ணவேண்டும். அவரது இரத்தத்தை அருந்த வேண்டும். இதனை நீங்கள் செய்யாவிட்டால், உங்களுக்கு உண்மையான வாழ்க்கை கிடைக்காது. 54 எனது சரீரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான். நான் அவனை இறுதி நாளில் எழுப்புவேன். 55 எனது சரீரமே உண்மையான உணவு. எனது இரத்தமே உண்மையான பானம். 56 ஒருவன் எனது சரீரத்தைப் புசித்து என் இரத்தத்தை அருந்துவானேயானால் அவன் என்னிலும் நான் அவனிலும் வாழ்வதாகும்.

57 “பிதா என்னை அனுப்பினார். பிதா வாழ்கிறார். அவரால் நானும் வாழ்கிறேன். ஆகையால் என்னை உண்ணுகிறவன் என்னால் உயிர் வாழ்கிறான். 58 நமது மூதாதையர்கள் வனாந்தரத்தில் புசித்த அப்பத்தைப்போல் அல்ல நான். அவர்கள் அந்த அப்பத்தை உண்டார்கள். ஆனால், மற்றவர்களைப்போன்று அவர்கள் இறந்துபோயினர். நானோ பரலோகத்திலிருந்து இறங்கி வந்த அப்பம். இதனை உண்ணுகிற எவனும் நித்திய ஜீவனைப் பெறுவான்” என்றார் இயேசு.

59 இவை எல்லாவற்றையும் இயேசு, கப்பர்நகூமிலுள்ள யூதர்களின் ஜெப ஆலயத்தில் போதனைசெய்யும்போது கூறினார்.

நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகள்

60 இயேசுவின் சீஷர்கள் இவற்றைக் கேட்டார்கள். “இந்த உபதேசங்கள் ஏற்றுக்கொள்வதற்குக் கடினமானவை, இவற்றை யாரால் ஏற்றுக் கொள்ள முடியும்?” என சீஷர்கள் கூறினர்.

61 அவருடைய சீஷர்கள் முறுமுறுப்பதை இயேசு அறிந்துகொண்டார். எனவே இயேசு அவர்களிடம், “நான் சொன்னவற்றை ஏற்றுக்கொள்வதில் சிரமம் இருக்கிறதா?” என்று கேட்டார்.

62 “அப்படியானால் மனித குமாரன் தாம் வந்த இடத்திற்கே திரும்பி ஏறிப்போவதைக் காண்பது எப்படியிருக்கும்? 63 ஒரு மனிதனுக்கு அவனது சரீரம் மட்டுமே வாழ்வு அளிப்பது இல்லை. அவனது ஆவியே ஜீவனைத் தருகிறது. நான் உங்களுக்குச் சொன்ன வசனங்கள் யாவும் ஆவியே. இவையே ஜீவனைத் தருவன. 64 ஆனால் உங்களில் சிலர் விசுவாசம் இல்லாமல் இருக்கிறீர்கள்” என்றார். (தன்னை விசுவாசிக்காதவர்களை இயேசு புரிந்துகொண்டார். இதனை அவர் துவக்கம் முதலே புரிந்துகொண்டார். தனக்கு எதிராகத் திரும்புகிறவனையும் இயேசு அறிந்திருந்தார்.) 65 அதனால்தான், “நான், ‘பிதா அனுமதித்தால் ஒழிய ஒருவனும் என்னிடம் வரமாட்டான்’ என்று சொன்னேன்” என்றார் இயேசு.

66 இயேசு இவ்வாறு சொன்னபிறகு அவரது சீஷர்களில் அநேகர் அவரை விட்டுப் போயினர். அவர்கள் இயேசுவைப் பின்தொடர்ந்து செல்வதை நிறுத்தினர்.

67 பிறகு இயேசு தனது பன்னிரண்டு அப்போஸ்தலர்களையும் பார்த்து, “நீங்களும் விட்டுவிட்டு விலகிச் செல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டார்.

68 சீமோன் பேதுரு இயேசுவைப் பார்த்து, “ஆண்டவரே, நாங்கள் எங்கே போவோம்? நித்திய ஜீவனுக்குரிய வார்த்தைகளை நீரே வைத்திருக்கிறீர். 69 நாங்கள் உம்மை நம்புகிறோம். நீரே தேவனிடமிருந்து வந்த பரிசுத்தமானவர் என்பதை நாங்கள் அறிவோம்” என்றார்.

70 பிறகு இயேசு அவர்களிடம், “என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட பன்னிருவர் நீங்கள். ஆனால் உங்களில் ஒருவன் பிசாசு” என்றார். 71 இயேசு யூதாஸைப்பற்றியே இவ்வாறு கூறினார். அவன் சீமோன் ஸ்காரியோத்தின் மகன். பன்னிருவரில் ஒருவன். ஆனால் பிற்காலத்தில் யூதாஸ் இயேசுவிற்கு எதிராகத் திரும்பிவிட்டான்.

நீதிமொழிகள் 3

என் மகனே! என் போதனைகளை மறவாதே. நான் செய்யச் சொல்பவற்றை நினைத்துக்கொள். நான் போதிக்கும் பாடங்கள் உனக்கு நீண்ட, மகிழ்ச்சியான, அதிக சமாதானமுள்ள வாழ்வைத் தரும்.

அன்பு செலுத்துவதை விட்டுவிடாதே. எப்பொழுதும் உண்மையுள்ளவனாகவும், நம்பிக்கைக்குரியவனாகவும் இரு. நீ இவற்றை உன்னில் ஒரு பகுதியாக வைத்துக்கொள். இவற்றை உன் கழுத்தைச் சுற்றி அணிந்துகொள். இதனை உன் இதயத்தில் எழுதிக்கொள். தேவனும், ஜனங்களும் உன்னை ஞானவான் என்று எண்ணுவார்கள். தேவனுக்கும், மனிதருக்கும் நீ நல்லவனாக இருப்பாய்.

கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். உன் சொந்த ஞானத்தைச் சார்ந்து இருக்காதே. ஆனால் கர்த்தரை மதித்து தீயவற்றில் இருந்து விலகியிரு. நீ இதனைச் செய்தால், இது உன் உடலுக்கு மருந்தைப் போன்றது. இது உன்னை பலப்படுத்தும் புத்துணர்ச்சியான பானத்தைப் போன்றது.

உனது செல்வத்தால் கர்த்தரை மகிமைப்படுத்து. உன்னிடம் இருப்பதில் சிறப்பானதை அவருக்குக்கொடு. 10 அப்போது உனக்குத் தேவையான அனைத்தையும் நீ பெறுவாய் உனது களஞ்சியங்கள் தானியங்களால் நிரம்பும். உனது பாத்திரங்கள் திராட்சைரசத்தால் நிரம்பும்.

11 என் மகனே! சில நேரங்களில் நீ தவறு செய்துவிட்டதாக கர்த்தர் அறிவுறுத்தலாம். ஆனால் இந்தத் தண்டனைகளுக்காகக் கோபப்படாதே. அதிலிருந்து கற்றுக்கொள்ள முயற்சிசெய். 12 ஏனென்றால் கர்த்தர் தான் நேசிக்கிற ஜனங்களைச் செம்மைப்படுத்துகிறார். ஆம் தேவன் ஒரு தந்தையைப் போன்று தாம் நேசிக்கும் மகனைத் தண்டிக்கிறார்.

13 ஞானத்தை அடைகிற மனிதன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பான். அவன் புரிந்துக்கொள்ளத் தொடங்கும்போது ஆசீர்வதிக்கப்படுகிறான். 14 ஞானத்தால் வருகிற இலாபமானது வெள்ளியைவிட உயர்வானது. ஞானத்தால் வருகிற இலாபமானது சுத்தத் தங்கத்தைவிட உயர்வானது. 15 ஞானமானது நகைகளைவிட மதிப்புமிக்கது. ஞானத்தைப்போன்று விலைமதிப்புடையது வேறொன்றும் உனக்குத் தேவையாகாது.

16 ஞானமானது உனக்கு நீண்ட வாழ்நாளையும் செல்வத்தையும் மதிப்பையும் தரும். 17 ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். 18 ஞானமானது வாழ்வளிக்கும் மரம் போன்றது. அதனை ஏற்றுக்கொள்பவர்களுக்கு முழு வாழ்க்கையையும் தருகின்றது. ஞானத்தைப் பெற்றவர்கள் உண்மையில் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.

19 இப்பூமியை உருவாக்க கர்த்தர் ஞானத்தைப் பயன்படுத்தினார். வானத்தை உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். 20 கடலையும் மழையைக்கொடுக்கும் மேகத்தையும் உருவாக்க கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். ஞானத்தின் மூலம் வானம் மழையைப் பொழிந்தது.

21 என் மகனே, எப்போதும் உனது ஞானத்தையும், புரிந்துகொள்ளும் சக்தியையும் பாதுகாத்துக்கொள். உனது சிந்தனையையும், ஆற்றலையும், அறிவுப்பூர்வமாகத் திட்டமிடும் திறமையையும் காத்துக்கொள். 22 ஞானமும், அறிவும் உனக்கு வாழ்க்கையைக்கொடுத்து அதனை அழகுள்ளதாக்கும்.

23 அதனால் நீ பாதுகாப்பாக வாழலாம். நீ விழாமல் இருக்கலாம். 24 நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும். 25-26 திடீரென உனக்கு ஏற்படுகின்ற அழிவுக்கு பயப்படாதே. தீய ஜனங்கள் என்ன செய்வார்களோ என்று பயப்படாதே. ஏனென்றால் கர்த்தர் உனக்குப் பெலன் தந்து கண்ணியிலிருந்து உன்னை விலக்கிக் காப்பார்.

27 உன்னால் முடிந்த எல்லா நேரத்திலும், உன் உதவியைத் தேவையானவர்களுக்குச் செய். 28 உன் அயலான் உன்னிடம் இருப்பதில் ஏதாவது கேட்டால் அவனுக்கு அதனை உடனேயே கொடுத்துவிடு; “நாளை மீண்டும் வா” என்று சொல்லாதே.

29 உன் அண்டைவீட்டானுக்கு எதிராக எந்தத் திட்டங்களையும் போடாதே. பாதுகாப்புக்காக நீங்கள் ஒருவருக்கொருவர் நெருங்கி வாழுங்கள்.

30 சரியான காரணமின்றி ஒருவனை நீ நீதிமன்றத்துக்கு இழுக்காதே. அவன் உனக்குத் தீமை செய்யாத பட்சத்தில் நீ அவ்வாறு செய்யாதே.

31 சில ஜனங்கள் விரைவிலே கோபங்கொண்டு உடனே தீமை செய்வார்கள். நீ அவ்வாறு இராதே. 32 ஏனென்றால் கெட்டவர்களை கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார்.

33 தீயவர்களின் குடும்பங்களுக்கு கர்த்தர் எதிராக உள்ளார். ஆனால் நல்லவர்களின் குடும்பத்தை அவர் ஆசீர்வதிக்கிறார்.

34 ஒருவன் பெருமைக்கொண்டு மற்றவர்களை இகழ்ச்சி செய்தால் கர்த்தர் அவனைத் தண்டிப்பார். அதோடு அவனைக் கேலிக்குள்ளாக்குவார். தாழ்மையுள்ளவர்களிடம் கர்த்தர் தயவோடு இருக்கிறார்.

35 ஞானமுள்ள ஜனங்கள் வாழும் வாழ்க்கை பெருமையைக்கொண்டுவரும். மூடர் வாழும் வாழ்க்கை அவமானத்தைக்கொண்டுவரும்.

கலாத்தியர் 2

பிற அப்போஸ்தலர்களும் பவுலை ஏற்றுக்கொண்டனர்

பதினான்கு ஆண்டுகளுக்குப் பின்பு எருசலேமுக்கு நான் மீண்டும் சென்றேன். பர்னபாவோடு நான் சென்றேன். கூடவே தீத்துவையும் அழைத்துச் சென்றேன். தேவன் எனக்குக் கட்டளை இட்டபடியும் வழி காட்டியபடியும் நான் விசுவாசிகளின் தலைவர்களைக் காணப் போனேன். நாங்கள் தனிமையில் இருக்கும்போது யூதர் அல்லாதவர்களிடம் நான் போதிக்கும் நற்செய்தியை அவர்களிடம் சொன்னேன். எனது பணியை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினேன். இதனால் நான் ஏற்கெனவே செய்தவையும் இப்பொழுது செய்துகொண்டிருப்பதுவும் வீணாகாமல் இருக்கும்.

3-4 என்னுடன் தீத்து இருந்தான். அவன் ஒரு கிரேக்கன். ஆயினும் அந்தத் தலைவர்கள், தீத்துவை விருத்தசேதனம் செய்துகொள்ளும்படி கட்டாயப்படுத்தவில்லை. இது போன்ற சிக்கல்களைப் பற்றிப் பேசவேண்டிய தேவை எங்களுக்கு ஏற்பட்டது. ஏனென்றால் சில போலிச் சகோதரர்கள் இரகசியமாய் எங்கள் குழுவில் சேர்ந்திருந்தனர். அவர்கள் ஒற்றர்களைப்போல இருந்தனர். இயேசு கிறிஸ்துவுக்குள் நமக்கு உண்டான சுதந்தரத்தை அவர்கள் அறிய விரும்பினர். ஆனால் அந்த போலிச் சகோதரர்கள் விருப்பப்படி நாங்கள் எதையும் ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து நற்செய்தியின் முழு உண்மை உங்களோடு இருப்பதையே நாங்கள் விரும்பினோம்.

மிக முக்கியமாய்க் கருதப்பட்ட அந்த மனிதர்கள் நான் பிரசங்கம் செய்த நற்செய்தியில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அவர்கள் “முக்கியமானவர்களா” இல்லையா என்பது பற்றி நான் கவலைப் படவில்லை. தேவனுக்கு முன்னால் அனைவரும் சமம்தானே. அதற்கு மாறாக அத்தலைவர்கள் பேதுருவைப் போன்றே எனக்கும் தேவன் சிறப்புப் பணிகளைக் கொடுத்திருப்பதாக உணர்ந்தனர். தேவன் பேதுருவிடம், யூதர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி ஆணையிட்டிருந்தார். ஆனால் எனக்கோ, யூதர் அல்லாதவர்களுக்குப் போதிக்கும்படி தேவன் ஆணையிட்டிருந்தார். ஒரு அப்போஸ்தலனைப்போலப் பணியாற்றும்படி பேதுருவுக்கு தேவன் அதிகாரத்தைத் தந்தார். யூதர்களுக்குப் பேதுருவும் ஒரு அப்போஸ்தலனாகவே இருந்தான். நானும் ஒரு அப்போஸ்தலனைப்போல பணியாற்ற தேவன் எனக்கு அதிகாரம் கொடுத்திருந்தார். ஆனால் நானோ யூதர் அல்லாதவர்களுக்காக அப்போஸ்தலனாக இருக்கிறேன். யாக்கோபு, பேதுரு, யோவான் ஆகியோர் தலைவர்களாக இருந்தனர். தேவன் எனக்குச் சிறப்பு வரத்தைக் கொடுத்திருப்பதாக அவர்கள் எண்ணினர். அதனால் அவர்கள் என்னையும், பர்னபாவையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் எங்களிடம், “நாங்கள் உங்களை ஏற்றுக்கொள்கிறோம். நாங்கள் யூதர்களுக்குப் போதனை செய்கிறோம். யூதர் அல்லாதவர்களிடம் நீங்கள் செல்லுங்கள்” என்றார்கள். 10 ஏழை மக்களை நினைத்துக்கொள்ளும்படி மட்டும் அவர்கள் எனக்குச் சொன்னார்கள். இதுதான் நான் சிறப்பாக என்னை அர்ப்பணித்த ஒன்றாக இருந்தது.

பேதுருவின் தவறைப் பவுல் வெளிப்படுத்துதல்

11 அந்தியோகியாவுக்குப் பேதுரு வந்தார். அவர் செய்தவற்றுள் சில சரியானவை அல்ல. அவர் தவறு செய்தார். அதனால் அவரோடு நேருக்கு நேராக எதிர்த்தேன். 12 அந்தியோகியாவுக்கு அவர் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு அவர் சேர்ந்தார். அவர்களோடு உணவு உட்கொண்டார். ஆனால் யாக்கோபிடமிருந்து அனுப்பியிருந்த சில யூதர்கள் வந்தபோது, யூதர் அல்லாதவர்களோடு சேர்ந்து உணவு உண்ணப் பேதுரு மறுத்துவிட்டார். அவர்களிடமிருந்து விலகிக்கொண்டார். அவர் யூதர்களுக்குப் பயந்துவிட்டார். ஏனென்றால் யூதர்கள், யூதர் அல்லாதவர்களும் விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டும் என்று நம்புகின்றவர்கள். 13 ஆகையால் பேதுரு பொய் முகக்காரராக இருந்தார். ஏனைய யூதர்களும் அவரோடு சேர்ந்துகொண்டனர். எனவே அவர்களும் பொய்முகக்காரர்கள். இதனால் பர்னபாவும் பாதிக்கப்பட்டான். 14 யூதர்கள் செய்வதை நான் பார்த்தேன். அவர்கள் நற்செய்தியின் முழு உண்மையைப் பின்பற்றவில்லை. எனவே எல்லாரும் கேட்கும்படியே நேரடியாய்ப் பேதுருவிடம் சென்று நான் கண்டித்தேன். “பேதுரு நீங்கள் ஒரு யூதர். ஆனால் நீங்கள் ஒரு யூதரைப்போல வாழவில்லை. நீங்கள் யூதர் அல்லாதவரைப்போல வாழ்கிறீர்கள். இவ்வாறு இருக்க நீங்கள் எப்படி யூதர் அல்லாதவர்களை யூதர்கள்போல வாழ வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியும்?” என்று கேட்டேன்.

15 யூதர் அல்லாதவர்களைப் போன்றும், பாவிகளைப் போன்றும் யூதர்களாகிய நாம் பிறக்கவில்லை. நாம் யூதர்களைப் போலப் பிறந்தோம். 16 சட்டங்களின் விதி முறைகளை ஒருவன் பின்பற்றுவதினாலேயே தேவனுக்கு வேண்டியவனாக முடியாது என்பது எங்களுக்குத் தெரியும். இயேசு கிறிஸ்துவின் மீது எவன் நம்பிக்கை வைக்கிறானோ அவனே தேவனுக்கு வேண்டியவனாகிறான். எனவே, நாம் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை வைத்திருக்கிறோம். ஏனென்றால் நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். நாம் சட்டங்களைப் பின்பற்றுவதால் அல்ல, இயேசுவின் மீது விசுவாசம் வைப்பதாலேயே தேவனுக்கு வேண்டியவர்களாக இருக்கிறோம். இது உண்மை. ஏனென்றால் சட்டங்களைப் பின்பற்றுவதன் மூலம் எவரொருவரும் தேவனுக்கு வேண்டியவராக முடியாது.

17 யூதர்களாகிய நாம் கிறிஸ்துவிடம் வந்துள்ளோம். காரணம், நாம் தேவனுக்கு வேண்டியவர்களாக வேண்டும். எனவே, நாம் பாவிகள் என்பது தெளிவாகிறது. இதற்குக் கிறிஸ்து காரணம் ஆவாரா? இல்லை. 18 ஆனால், நான் விட்டுவிட்டவற்றை மீண்டும் போதிக்கத் தொடங்கினால் நானும் தவறானவன் என்று கருதப்படுவேன். 19 சட்டங்களுக்காக வாழ்வது என்பதை நான் விட்டுவிட்டேன். அச்சட்டங்களோ என்னைக் கொன்றுவிட்டது. நான் விதிமுறையின்படி இறந்து போனேன். எனினும் தேவனுக்காக வாழ்ந்துகொண்டிருக்கிறேன். எனது கடந்தகால வாழ்வு கிறிஸ்துவோடு சிலுவையில் இறந்தது. 20 நான் இப்போது வாழ்ந்துகொண்டிருக்கிற வாழ்வு எனக்கானது அல்ல. இயேசு கிறிஸ்து இப்போது என்னில் வாழ்ந்துகொண்டிருக்கிறார். இப்போது இந்த சரீரத்திலே நான் வாழ்ந்தாலும் தேவனுடைய குமாரன் மீதுள்ள விசுவாசத்தால் வாழ்கிறேன். இயேசு ஒருவரே என்மீது அன்பு கொண்டவர். என்னை இரட்சிப்பதற்காக அவர் தன்னையே தந்தவர். 21 இந்தக் கிருபை தேவனிடமிருந்து வந்தது. இது எனக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் சட்டத்தின் மூலம் மனிதன் திருந்தி நீதிமானாக முடியுமென்றால் இயேசு கிறிஸ்துவின் மரணம் தேவையில்லாமல் போயிருக்கும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center