Revised Common Lectionary (Semicontinuous)
தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல்.
14 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.
கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள்.
அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.
2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.
4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.
அத்தீயோர் தேவனை அறியார்கள்.
தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு.
கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
5-6 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள்.
ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான்.
தேவன் நல்லவர்களோடு இருப்பார்.
எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.
7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.
கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்!
கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர்.
ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார்.
அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
அம்மோனியருக்கு எதிராகப் போர்
6 அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா ராஜாவையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.
7 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான். 8 அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.
9 அம்மோனியர் முன்னணியிலும் பின் பகுதியிலும் தனக்கு எதிரே நிற்பதை யோவாப் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலரில் திறமை மிகுந்த வீரர்களைத் தெரிந்துக்கொண்டான். ஆராமியருக்கு எதிராகப் போர் செய்வதற்காக இவர்களை அனுப்பினான். 10 பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான். 11 யோவாப் அபிசாயியை நோக்கி, “ஆராமியர் மிகுந்த பலசாலிகளாக இருந்தால் நீ எனக்கு உதவுவாய். அம்மோனியர்களின் பலம் மிகுந்திருந்தால் நான் உனக்கு உதவுவேன். 12 துணிவாயிரு. நமது ஜனங்களுக்காகவும் நமது தேவனுடைய நகரங்களுக்காகவும் நாம் வீரத்தோடு போரிடுவோம். கர்த்தர் தாம் சரியெனக் கண்டதைச் செய்வார்” என்றான்.
12 தேவன் உங்களைத் தேர்ந்தெடுத்து, தன் பரிசுத்த மக்களாக்கினார். அவர் உங்களை நேசிக்கிறார். ஆகவே எப்பொழுதும் நல்லவற்றையே செய்யுங்கள். இரக்கத்தோடும் அருளுணர்வோடும் பிறரிடம் மனவுருக்கம், பணிவு, சாந்தம், பொறுமை ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள். 13 ஒருவர்மேல் ஒருவர் கோபப்படாதீர்கள். மன்னித்துவிடுங்கள். மற்றொருவன் உங்களுக்கு எதிராகத் தவறு செய்தால் அதை மன்னியுங்கள். நீங்கள் மற்றவர்களை மன்னிக்கவேண்டும். ஏனென்றால் கர்த்தர் உங்களை மன்னித்தார். 14 இவை அனைத்தையும் செய்யுங்கள், ஆனால் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவதுதான் மிக முக்கியமானது. அன்பு ஒன்றுதான் உங்கள் அனைவரையும் முழு ஒருமையுடன் ஒற்றுமையாகச் சேர்க்க வல்லது. 15 கிறிஸ்துவின் சமாதானம் உங்கள் சிந்தனைகளை ஆள்வதாக. இதற்காக நீங்கள் ஒரே சரீரமாக அழைக்கப்பட்டீர்கள். எப்போதும் நன்றியுள்ளவர்களாய் இருங்கள்.
16 கிறிஸ்துவின் போதனைகள் உங்களுக்குள் சிறந்த செல்வமாக இருக்கட்டும். ஒருவருக்கொருவர் போதிக்கவும், பலப்படுத்தவும் உங்கள் முழு ஞானத்தையும் பயன்படுத்துங்கள். உங்கள் இதயத்தில் தேவனுக்கு நன்றி செலுத்தும் வகையில் சங்கீதம், கீர்த்தனைகள், ஞானப்பாட்டு போன்றவற்றை தேவனைக் குறித்து உங்கள் இதயங்களில் சுரக்கும் நன்றியுணர்வோடு பாடுங்கள். 17 நீங்கள் சொல்கின்றவற்றையும் செய்கின்றவற்றையும் உங்கள் கர்த்தராகிய இயேசுவின் பெயரிலேயே செய்யுங்கள். பிதாவாகிய தேவனுக்கு இயேசுவின் மூலம் நன்றி செலுத்துங்கள்.
2008 by World Bible Translation Center