Revised Common Lectionary (Semicontinuous)
தாவீது இராகத் தலைவனுக்கு அளித்த பாடல்.
14 “தேவன் இல்லை” என்று மூடன் தன் உள்ளத்தில் சொல்லிக்கொள்வான்.
கொடிய, சீர்கெட்ட காரியங்களை மூடர்கள் செய்வார்கள்.
அவர்களுள் ஒருவனும் நல்லதைச் செய்வதில்லை.
2 கர்த்தர் பரலோகத்திலிருந்து கீழே ஜனங்களைப் பார்ப்பார்.
ஞானவானைப் பார்க்க கர்த்தர் முயன்றார்.
(ஞானமுள்ளவன் தேவனிடம் உதவி கேட்பான்.)
3 ஆனால் எல்லோரும் தேவனைவிட்டு விலகிப் போனார்கள்.
எல்லா ஜனங்களும் தீயோராய் மாறினார்கள். ஒருவன் கூட நல்லதைச் செய்யவில்லை.
4 தீயோர் என் ஜனங்களை அழித்தனர்.
அத்தீயோர் தேவனை அறியார்கள்.
தீயோருக்கு மிகுதியாய் உணவு உண்டு.
கர்த்தரை அவர்கள் ஆராதிப்பதில்லை.
5-6 ஏழையின் அறிவுரையை அத்தீயோர் கேளார்கள்.
ஏனெனில் ஏழை தேவனை நம்பி வாழ்வான்.
தேவன் நல்லவர்களோடு இருப்பார்.
எனவே தீயோர் மிகவும் அச்சம் கொள்வார்கள்.
7 சீயோன் (மலை) மேல் உள்ளவரே இஸ்ரவேலைக் காப்பாற்ற முடியும்.
கர்த்தர் தாமே இஸ்ரவேலைக் காப்பவர்!
கர்த்தருடைய ஜனங்கள் அழைத்துச் செல்லப்பட்டுச் சிறைக் கைதிகளாக்கப்பட்டனர்.
ஆனால் கர்த்தரோ தம் ஜனங்களைத் திரும்ப அழைத்து வருவார்.
அப்போது யாக்கோபுக்கு (இஸ்ரவேல்) மிகவும் மகிழ்ச்சியுண்டாகும்.
தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம்
10 அதற்குப் பிறகு அம்மோன் ராஜாவாகிய நாகாஸ் மரித்தான். அவனது குமாரனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு ராஜாவானான். 2 தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது குமாரன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான்.
தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள். 3 ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.
4 எனவே ஆனூன் தாவீதின் அதிகாரிகளைப் பிடித்து அவர்கள் தாடியின் ஒரு பகுதி மயிரைச் சிரைத்தான். அவர்கள் ஆடைகளை இடுப்புப் பகுதி வரைக்கும் நடுவே கிழித்துவிட்டப் பின் அவர்களை அனுப்பிவிட்டான்.
5 இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது ராஜா செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.
9 உங்களைப் பற்றிய இந்தச் செய்திகளைக் கேட்ட நாள் முதலாக உங்களுக்காக நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறோம். உங்களுக்காக நாங்கள் செய்யும் பிரார்த்தனையாவது:
தேவன் விரும்பும் அனைத்தையும் நீங்கள் அறிந்துகொள்ளவும், நீங்கள் பெரும் ஞானத்தையும், ஆவிக்குரியவற்றைப் பற்றிய தெளிவையும் பெறவும், 10 இத்தகைய உங்களது வாழ்க்கை முறையானது கர்த்தருக்கு மகிமையைத் தரவும், எல்லாவகையிலும் அவரைத் திருப்திப்படுத்தவும் நீங்கள் எல்லா வகையான நற்செயல்களையும் செய்யவும், தேவனைப் பற்றிய அறிவில் வளரவும், 11 தேவன் தனது சொந்த வல்லமையால் உங்களைப் பலப்படுத்தவும், அதனால் துன்பங்கள் வரும்போது அவரை விட்டு நீங்கள் விலகாமல் இருக்கவும் அதற்கான பொறுமையோடும்,
மகிழ்ச்சியோடும் இருக்கவும் வேண்டுமென்பதே. 12 பிறகு நீங்கள் நம் பிதாவுக்கு நன்றி சொல்லலாம். அவர் தான் ஏற்பாடு செய்த காரியங்களில் பங்குகொள்ளும் பொருட்டு உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கினார். அவர் வெளிச்சத்தில் வாழ்கிற அவரது மக்கள் அனைவருக்காகவும் இதை ஆயத்தம் செய்கிறார். 13 இருளின் அதிகாரங்களிலிருந்து நம்மை அவர் விடுதலை செய்திருக்கிறார். நம்மை அவரது அன்பு குமாரனான இயேசு கிறிஸ்துவின் இராஜ்யத்துக்குள் கொண்டு வந்தார். 14 நமது பாவங்களுக்குரிய விலையை அவர் கொடுத்தார். அவருக்குள் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன.
2008 by World Bible Translation Center