Revised Common Lectionary (Semicontinuous)
இசைத் தலைவனுக்கு கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது எழுதிய பாடல். சவுலிடமிருந்தும் பிற பகைவர்களிடமிருந்தும் கர்த்தர் அவனைத் தப்புவித்தப்போது இப்பாடலை எழுதினான்.
18 “எனது பெலனாகிய கர்த்தாவே,
நான் உம்மை நேசிக்கிறேன்!”
2 கர்த்தர் என் பாறையாகவும், கோட்டையாகவும், எனக்குப் பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறார்.
பாதுகாப்பிற்காக ஓடும் பாறையாக என் தேவன் இருக்கிறார்.
தேவன் எனக்குக் கேடகம். அவரது வல்லமை என்னைக் காப்பாற்றும்.
உயர்ந்த மலைகளில் மறைவிடமாக கர்த்தர் எனக்கு விளங்குகிறார்.
3 எனது விரோதிகள் என்னை காயப்படுத்த முயன்றனர்.
ஆனால் நான் கர்த்தருடைய உதவியை நாடினேன், நான் என் பகைவரிடமிருந்து காப்பாற்றப்பட்டேன்.
4 என் பகைவர்கள் என்னைக் கொல்ல முயன்றுகொண்டிருந்தார்கள்!
மரணத்தின் கயிறுகள் என்னைச் சூழ்ந்திருந்தன.
மரணத்தின் இடங்களுக்கு என்னைக் கொண்டு செல்லும் பெருவெள்ளத்தில் நான் அகப்பட்டேன்.
5 கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன.
மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.
6 நெருக்கத்தில் கர்த்தருடைய உதவியை நாடினேன்.
ஆம், என் தேவனை நான் கூப்பிட்டேன்.
தேவன் அவரது ஆலயத்தில் இருந்தார்.
என் குரலைக் கேட்டார். என் அபயக் குரல் அவர் காதில் விழுந்தது.
43 என்னிடம் போர் செய்கிற ஜனங்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
என்னை அத்தேசங்களின் தலைவனாக்கும்.
எனக்குத் தெரியாத ஜனங்களும் என்னைச் சேவிப்பார்கள்.
44 அந்த ஜனங்கள் என்னைக் குறித்துக் கேள்விப்படுவார்கள். எனக்கு உடனே கீழ்ப்படிவார்கள்.
அந்த அயலார்கள் என்னைக் கண்டு அஞ்சுவார்கள். அந்த அயலார் நடுங்கி வீழ்வார்கள்.
45 அவர்கள் தைரியமிழந்து
தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.
46 கர்த்தர் உயிரோடிருக்கிறார்!
நான் என் பாறையை (தேவனை) துதிப்பேன்!
தேவன் என்னைக் காப்பாற்றுகிறார்.
அவர் மேன்மையானவர்.
47 தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார்.
என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார்.
48 கர்த்தாவே, நீர் என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றினீர்.
எனக்கு எதிரான ஜனங்களைத் தோற்கடிக்க உதவினீர்.
கொடியோரிடமிருந்து என்னை மீட்டீர்.
49 கர்த்தாவே, தேசங்களுக்கு முன்பாக உம்மைத் துதிப்பேன்.
உமது நாமத்தைக் குறித்துப் பாடல்கள் இசைப்பேன்.
50 தான் ஏற்படுத்தின ராஜா யுத்தங்கள் பலவற்றில் வெல்ல கர்த்தர் உதவுகிறார்!
தான் தேர்ந்தெடுத்த ராஜாவுக்குத் தன் உண்மையான அன்பை உணர்த்துகிறார்.
அவர் தாவீதுக்கும் அவன் சந்ததியினருக்கும் என்றென்றும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
சவுலின் மரணம்
31 பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில்போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர். 2 சவுலுக்கும் அவனது குமாரர்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் குமாரர்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.
3 சவுலுக்கு எதிராக போரானது மேலும், மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான். 4 தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், “உனது பட்டயத்தை எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்” என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். 5 சவுல் மரித்துப்போனதை, ஆயுதங்களை எடுத்து வரும் அவனது உதவியாளன் அறிந்து, தனது வாளால் தானும் மடிந்தான். 6 எனவே சவுலும் அவனது மூன்று குமாரர்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.
சவுலின் மரணத்தால் பெலிஸ்தியர் மகிழ்ச்சியடைகின்றனர்
7 பள்ளத்தாக்கின் மறு பக்கத்தில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் சேனை பயந்து ஓடுவதைக் கண்டனர். சவுலும் அவனது குமாரர்களும் மரித்துப்போனதை அறிந்தனர். எனவே அவர்கள் தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். பெலிஸ்தியர் அந்நகரங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.
8 மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று குமாரர்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர். 9 அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர். 10 சவுலின் ஆயுதங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.
11 இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர். 12 எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது குமாரர்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர். 13 பின்பு சவுல் மற்றும் அவனது குமாரர்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.
உடன் கிறிஸ்தவர்களுக்கு உதவுதல்
9 தேவனுடைய மக்களுக்கு செய்ய வேண்டிய இந்த உதவி பற்றி உங்களுக்கு நான் அதிகமாக எழுத வேண்டிய தேவையில்லை. 2 நீங்கள் உதவ விரும்புவதை நான் அறிவேன். மக்கதோனியா மக்களிடம் நான் இதைப்பற்றிப் பெருமையாகப் பேசி இருக்கிறேன். அகாயாவிலுள்ள நீங்கள் உதவி செய்ய ஓராண்டாகத் தயாராய் உள்ளீர்கள் என்பதைக் கூறி இருக்கிறேன். உங்களது உற்சாகம் இங்குள்ள பலரையும் தூண்டியது. 3 ஆனால் நான் சகோதரர்களை உங்களிடம் அனுப்புகிறேன். இக்காரியத்தில் உங்களைப் பற்றி நாங்கள் சொன்ன பாராட்டுகள் பொய்யாகப் போகாமல் நான் சொன்னபடி நீங்கள் ஆயத்தமாக இருங்கள். 4 நான் சில மக்கதோனியர்களோடு அங்கே வரும்போது நீங்கள் தயாராய் இல்லாமல் இருந்தீர்களெனில் அதனால் எனக்கு மிகவும் வெட்கம் உண்டாகும். ஏனென்றால் உங்களைப் பற்றி அவ்வளவு உறுதியாகக் கூறியிருக்கிறேன். (அது உங்களுக்கும் அவமானத்தைத் தரும்.) 5 ஆகையால் நாங்கள் வருவதற்கு முன்னரே எங்கள் சகோதரர்களை உங்களிடம் அனுப்பி வைப்பது அவசியம் என்று நினைத்தேன். நீங்கள் ஏற்கெனவே சொன்னபடி விருப்பமுடன் பொருட்களைக் கொடுத்து உதவுங்கள். அச்சகோதரர்கள் அவற்றைச் சேர்த்துத் தயாராக வைத்திருப்பர்.
2008 by World Bible Translation Center