Revised Common Lectionary (Semicontinuous)
கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்.
48 கர்த்தர் மேன்மையானவர்.
தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
2 தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
அதுவே பேரரசரின் நகரமாகும்.
3 அந்நகரத்து அரண்மனைகளில்
தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
4 ஒருமுறை, சில ராஜாக்கள் சந்தித்து,
இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
5 அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
6 அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
7 தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
பெருங்கப்பல்களை உடைத்தீர்.
8 ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.
9 தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.
இஸ்ரவேலுக்கும் யூதாவுக்குமிடையே போர்
3 சவுல், தாவீது ஆகியோரின் குடும்பத்தாருக்கிடையே நீண்டகாலம் யுத்தம் தொடர்ந்தது. தாவீது வலிமை பெற்றுக்கொண்டே இருந்தான். சவுலின் குடும்பத்தார் தளர்ந்துக்கொண்டே வந்தனர்.
தாவீதுக்கு ஆறு குமாரர்கள் எப்ரோனில் பிறந்தனர்
2 எப்ரோன் நகரில் தாவீதுக்கு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
முதல் குமாரன் அம்மோன். அம்மோனின் தாய் யெஸ்ரயேலைச் சேர்ந்த அகினோவாள் ஆவாள்.
3 இரண்டாவது குமாரன் கீலேயாப். கீலேயாபின் தாய் அபிகாயில். அவள் கர்மேலிலுள்ள நாபாலின் விதவையாயிருந்தாள்.
மூன்றாவது குமாரன் அப்சலோம். இவனது தாய், கேசூரின் ராஜாவாகிய தல்மாயின் குமாரத்தி மாக்காள் என்பவள் ஆவாள்.
4 நான்காம் குமாரன் அதோனியா. அதோனியாவின் தாய் ஆகீத்.
ஐந்தாம் குமாரன் செப்பத்தியா. இவனது தாய் அபித்தால்.
5 ஆறாம் குமாரன் இத்ரேயாம். தாவீதின் மனைவி எக்லாள் இத்ரேயாமுக்கு தாய். தாவீதுக்கு எப்ரோனில் இந்த ஆறு குமாரர்களும் பிறந்தனர்.
தாவீதோடு சேர அப்னேரின் தீர்மானம்
6 தாவீது, சவுல் ஆகியோரின் குடும்பங்கள் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டிருந்த போது சவுலின் படையில் அப்னேர் மிகவும் பலமடைந்து வந்தான். 7 சவுலிடம் ஆயாவின் குமாரத்தியான ரிஸ்பாள் என்னும் பெயருள்ள வேலைக்காரி ஒருத்தி இருந்தாள். இஸ்போ சேத் அப்னேரை நோக்கி, “எனது தந்தையின் வேலைக்காரியோடு நீ ஏன் பாலின உறவு கொண்டாய்?” என்று கேட்டான்.
8 இஸ்போசேத் இவ்வாறு கேட்டதால் அப்னேர் கோபமடைந்தான். அப்னேர், “நான் சவுலுக்கும் அவனது குடும்பத்துக்கும் உண்மையுள்ளவனாக இருந்தேன். நான் உன்னைத் தாவீதிடம் ஒப்படைக்கவில்லை. அவன் உன்னைத் தோற்கடிக்க அனுமதிக்கவில்லை. நான் யூதாவுக்காக உழைக்கும் வஞ்சகன் அல்ல. நான் இத்தீயக் காரியத்தைச் செய்ததாக நீ கூறிக்கொண்டிருக்கிறாய். 9-10 நான் இப்போது இந்த வாக்குறுதியை அளிக்கிறேன். தேவன் சொன்ன காரியங்கள் நிறைவேறும் என நான் உறுதியாக நம்புகிறேன். சவுலின் குடும்பத்தாரிடமிருந்து அரசை எடுத்து தாவீதின் குடும்பத்தாருக்குக் கொடுப்பதாக கர்த்தர் கூறினார். கர்த்தர் தாவீதை இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும் ராஜாவாக்குவார். தாணிலிருந்து பெயெர்செபா வரைக்கும்[a] அவன் அரசாளுவான். இது நிகழும்படியாக நான் செய்யாவிட்டால் தேவன் எனக்குத் தீமை செய்வார் என்று நான் எதிர்பார்க்கிறேன்!” என்றான். 11 இஸ்போசேத்தால் அப்னேருக்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. அவனைக் கண்டு இஸ்போசேத் மிகவும் பயந்தான்.
12 அப்னேர் தாவீதிடம் செய்தி சொல்வோரை அனுப்பினான். அப்னேர், “நீ யார் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று நினைக்கிறாய்? என்னோடு ஒப்பந்தம் செய்துக்கொள். இஸ்ரவேலருக்கு ராஜாவாகும்படியாக நான் உனக்கு உதவுவேன்” என்றான்.
7 உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 8 கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. 9 இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். 11 “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
2008 by World Bible Translation Center