Revised Common Lectionary (Semicontinuous)
தேவனுடைய பரிசுத்தப்பெட்டி எருசலேமுக்கு வருதல்
6 இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர். 2 தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார். 3 மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் குமாரர்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள்.
4 மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான். 5 கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர்.
12 பின்னர், ஜனங்கள் தாவீதிடம், “ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். 13 கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான். 14 பின்பு தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடு நடனமாடினான். தாவீது மெல்லிய பஞ்சாலாகிய ஏபோத்தை அணிந்திருந்தான்.
15 தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள். 16 சவுலின் குமாரத்தி மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறைவாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள்.
17 தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான்.
18 தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான். 19 தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
தாவீதின் பாடல்.
24 பூமியும் அதிலுள்ள எல்லாப் பொருள்களும் கர்த்தருடையவை.
உலகமும் அதன் ஜனங்களும் அவருக்கே உரிமையாம்.
2 கர்த்தர் பூமியை தண்ணீரின் மேல் உண்டாக்கினார்.
ஆறுகளின் மீது அதை உண்டாக்கினார்.
3 கர்த்தருடைய மலைகளின் மேல் யார் ஏறக்கூடும்?
கர்த்தருடைய பரிசுத்த ஆலயத்தில் யார் நிற்கக்கூடும்?
யார் அங்கு வழிபட முடியும்?
4 தீயவை செய்யாத ஜனங்களும்,
பரிசுத்த இருதயம் உடையோரும்,
பொய்யை உண்மையெனக் கூறுவதற்கு என் பெயரைப்[a] பயன்படுத்தாதோரும், பொய்யும்,
பொய்யான வாக்குறுதிகளும் அளிக்காதோரும், மட்டுமே அங்கு தொழுதுகொள்ள முடியும்.
5 நல்ல ஜனங்கள் கர்த்தரிடம் மற்ற ஜனங்களை ஆசீர்வதிக்கச் சொல்வார்கள்.
அந்த நல்ல ஜனங்கள் தங்கள் இரட்சகராகிய தேவனை நல்லக் காரியங்களைச் செய்யச் சொல்வார்கள்.
6 அந்த நல்லோர் தேவனைப் பின்பற்ற முயல்வார்கள்.
யாக்கோபின் தேவனிடம் உதவி வேண்டி அவர்கள் செல்வார்கள்.
7 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே! திறவுங்கள்!
மகிமை வாய்ந்த ராஜா உள்ளே வருவார்.
8 யார் இந்த மகிமைமிக்க ராஜா?
கர்த்தரே அந்த ராஜா. அவரே வல்லமையுள்ள வீரர்.
கர்த்தரே அந்த ராஜா. அவரே போரின் நாயகன்.
9 வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்!
பழைமையான கதவுகளே, திறவுங்கள்!
மகிமை மிக்க ராஜா உள்ளே வருவார்.
10 யார் அந்த மகிமை மிக்க ராஜா?
சர்வ வல்லமையுள்ள கர்த்தரே அந்த ராஜா.
அவரே மகிமை மிக்க ராஜா.
கிறிஸ்துவில் ஆவியானவரின் ஆசீர்வாதம்
3 நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம். பரலோகத்தில் அவர் கிறிஸ்துவுக்குள் ஆவிக்குரிய சகல ஆசிகளையும் நமக்குத் தந்துள்ளார். 4 உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே தேவன் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்தெடுத்து உள்ளார். தமக்கு முன்பாக நாம் அன்பில் தூய்மையானவர்களும், குற்றமில்லாதவர்களுமாய் இருப்பதற்காகவே நம்மை அவர் தேர்ந்தெடுத்தார். 5 உலகம் படைக்கப்படுவதற்கு முன்னரே, நம்மைத் தம் பிள்ளைகளாய் கிறிஸ்து மூலமாகத் தேர்ந்தெடுக்க தேவன் முடிவு செய்துவிட்டார். தேவன் செய்ய விரும்பியதும் அதுவே ஆகும். அதுவே அவருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 6 அவரது வியக்கத்தக்க கருணை அவருக்கு மகிமை உண்டாக்கியது. அவர் தன் கிருபையால் நமக்கு இலவசமாய் அதைத் தான் நேசிக்கிற குமாரனான இயேசு மூலமாக நமக்குத் தந்தார்.
7 கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் விடுதலை பெற்றோம். தேவனின் வளமான இரக்கத்தால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட்டன. 8 தேவன் அவரது இரக்கத்தை முழுமையாகவும் இலவசமாகவும் தந்தார். 9 தேவன் முழு ஞானத்தோடும், பலத்தோடும் அவரது இரகசியத் திட்டத்தை நாம் அறியச் செய்தார். 10 சரியான நேரம் வரும்போது தனது திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தேவன் ஏற்கெனவே செய்த முடிவு. பரலோகத்திலும், பூமியிலும் உள்ள அனைத்து பொருள்களும் ஒன்று கூடி கிறிஸ்துவின் கீழ் இருக்க வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம்.
11 நாம் கிறிஸ்துவுக்குள் தேவனின் மக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டோம். தேவன் நம்மைத் தேர்ந்தெடுப்பது பற்றி ஏற்கெனவே திட்டமிட்டிருந்தார். ஏனென்றால் அதுதான் அவர் விருப்பம். அவரது விருப்பத்திற்கும், முடிவுக்கும் ஏற்றவாறு அவர் எல்லாவற்றையும் சரிசெய்துகொள்வார். 12 கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வைத்தவர்களில் நாமே முதல் மக்கள். நாம் தேவனின் மகிமைக்குப் புகழ் சேர்ப்போம் என்பதனால் தேர்ந்தெடுக்கப்பட்டோம். 13 இந்தப் பெருமை உங்களையும் சேரும். நீங்களும் உங்கள் இரட்சிப்புக்காக உண்மையான நற்செய்தியைக் கேட்டீர்கள். நீங்கள் நற்செய்தியைக் கேட்டதால் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்தீர்கள். தேவன் தந்த அவரது வாக்குறுதிப்படி பரிசுத்த ஆவியால் கிறிஸ்துவில் உங்களுக்கு அடையாளக் குறியிடப்பட்டீர்கள். 14 தேவன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி நாம் பெறுவோம் என்பதற்கு பரிசுத்த ஆவியானவரே உத்தரவாதமாய் உள்ளார். தேவனைச் சேர்ந்தவர்களுக்கு இது முழு விடுதலை தரும். தேவனின் மகிமைக்குப் புகழ்ச்சியைத் தேடித் தருவது தான் இவை எல்லாவற்றின் நோக்கமாக இருக்கும்.
ஏரோதுவின் தவறான கணிப்பு
(மத்தேயு 14:1-12; லூக்கா 9:7-9)
14 இயேசு பிரபலமானபடியால் ஏரோது மன்னன் இயேசுவைப்பற்றிக் கேள்விப்பட்டான். சில மக்கள், “இயேசுதான் யோவான் ஸ்நானகன். அவன் மரணத்தில் இருந்து எழுந்திருக்கிறான். அதனால்தான் அவரால் இது போன்ற அற்புதங்களைச் செய்ய முடிகிறது” என்றனர்.
15 இன்னும் சிலர், “இவர்தான் எலியா” என்றனர். மேலும் சிலரோ, “இயேசு ஒரு தீர்க்கதரிசி. இதற்கு முன்னால் வாழ்ந்த பல தீர்க்கதரிசிகளைப்போன்று இவரும் ஒருவர்” என்று சொல்லிக்கொண்டனர்.
16 இயேசுவைப் பற்றிய இது போன்ற பல செய்திகளை ஏரோது அறிந்து கொண்டான். அவன், “நான் யோவானின் தலையை வெட்டிக் கொன்றுவிட்டேன். இப்போது யோவான் மரணத்தில் இருந்து எழுந்துவிட்டான்” என்று சொன்னான்.
யோவான் ஸ்நானகனின் மரணம்
17 ஏரோது தன் வீரர்களுக்கு யோவானைக் கைது செய்யுமாறு ஆணையிட்டான். அவனைச் சிறையில் அடைத்தான். தன் மனைவியைச் சந்தோஷப்படுத்துவதற்காகவே அவன் இவ்வாறு செய்தான். அவள் பெயரே ஏரோதியாள். இவள் முதலில் ஏரோதுவின் சகோதரனான பிலிப்புவின் மனைவியாக இருந்தாள். ஆனால் அவளைப் பின்னர் ஏரோது மணந்துகொண்டான். 18 ஏரோதிடம் இவ்வாறு சகோதரனின் மனைவியை மணந்துகொள்வது சரியன்று என யோவான் எடுத்துக் கூறினான். 19 எனவே ஏரோதியாள் யோவானை வெறுத்தாள். அவள் அவனைக் கொல்ல விரும்பினாள். ஆனால் அவளால் யோவானைக் கொன்றுவிடுமாறு ஏரோதுவைத் தூண்டிவிட முடியவில்லை 20 யோவானை கொல்ல ஏரோது பயந்தான். யோவான் ஒரு நல்ல பரிசுத்தமான மனிதன் என்று மக்கள் நம்புவதை அவன் அறிந்திருந்தான். ஆகையால் ஏரோது யோவானைக் காப்பாற்றி வந்தான். யோவானின் போதகத்தைக் கேட்பதில் ஏரோது பெருமகிழ்ச்சி அடைந்தான். ஆனால் அவனது போதகம் ஏரோதை உறுத்தியது.
21 பிறகு யோவானைக் கொல்வதற்குப் பொருத்தமான வாய்ப்பு ஒன்று ஏரோதியாளுக்குக் கிடைத்தது. இது ஏரோதின் பிறந்த நாளன்று நிகழ்ந்தது. தன் பிறந்த நாளன்று ஏரோது மிக முக்கியமான அரசு அதிகாரிகளுக்கும், மிக முக்கியமான இராணுவ அதிகாரிகளுக்கும், கலிலேயாவின் பெரிய மனிதருக்கும் விருந்து கொடுத்தான். 22 ஏரோதியாளின் குமாரத்தி அந்த விருந்திற்கு வந்து நடனமாடினாள். அவள் ஆடும்போது, ஏரோதும் அவனைச் சார்ந்தவர்களும் மகிழ்ச்சியோடு உண்டனர்.
ஆகையால் ஏரோது மன்னன் அவளிடம், “நீ விரும்பும் எதையும் உனக்குத் தருவேன்” என்று உறுதி கூறினான். 23 “நீ எதைக் கேட்டாலும் தருவேன், எனது இராஜ்யத்தில் பாதியைக் கேட்டாலும் தருவேன்” என்று சத்தியம் செய்தான்.
24 அந்தப் பெண் தன் தாயிடம் சென்று, “நான் ஏரோது மன்னனிடம் எனக்கு என்ன வேண்டும் என்று கேட்பது?” எனக் கேட்டாள். அவளது தாயோ, “யோவான் ஸ்நானகனின் தலையைக் கேள்” என பதிலளித்தாள்.
25 உடனே விரைவாக அவள் மன்னனிடம் திரும்பி வந்தாள். அவள் மன்னனிடம், “யோவான் ஸ்நானகனின் தலையை எனக்குத் தாருங்கள். உடனே எனக்கு அதனைத் தட்டில் வைத்துத் தர வேண்டும்” என்று கேட்டாள்.
26 ஏரோது மன்னன் இதைக்கேட்டு வருத்தப்பட்டான். ஆனால் அவள் விரும்பும் எதையும் தந்துவிடுவதாக ஏற்கெனவே அவளிடம் ஆணையிட்டு சத்தியம் செய்துவிட்டான். மன்னனோடு உணவருந்திக் கொண்டிருந்த பெரிய மனிதர்களும் அவனது ஆணையை அறிந்திருந்தனர். ஆகையால் அவனால் அப்பெண்ணின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. 27 உடனே யோவானின் தலையை வெட்டிக் கொண்டு வருமாறு ஒரு வீரனிடம் மன்னன் கட்டளையிட்டான். ஆகையால் அந்த வீரன் போய் சிறைக்குள் இருந்த யோவானின் தலையை வெட்டினான். 28 பிறகு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து எடுத்துக்கொண்டுவந்தான். அவன் அந்தத் தலையை அப்பெண்ணிடம் கொடுத்தான். அப்பெண் அதனைத் தன் தாயிடம் கொடுத்தாள். 29 அங்கு நடந்ததைப்பற்றி யோவானின் சீஷர்கள் அறிந்துகொண்டு, வந்து யோவானின் சரீரத்தைப் பெற்றுச் சென்றனர். அவர்கள் அதனை ஒரு கல்லறையில் அடக்கம் செய்தனர்.
2008 by World Bible Translation Center