Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Semicontinuous)

Daily Bible readings that follow the church liturgical year, with sequential stories told across multiple weeks.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 68:24-35

24 வெற்றி ஊர்வலத்தை தேவன் நடத்திச் செல்வதை பாருங்கள்.
    என் ராஜாவாகிய பரிசுத்த தேவன் வெற்றி ஊர்வலத்தை நடத்திச் செல்வதை ஜனங்கள் காண்பார்கள்.
25 பாடகர் முன்னால் வீர நடையிட்டுச் செல்வார்கள்.
    பின்னர் தம்புரு மீட்டும் இளம் பெண்கள் வருவார்கள்.
    இசைக் கலைஞர்கள் பின்னே வீர நடையிடுவார்கள்.
26 சபைக்கூடும் கூட்டத்தில் தேவனைத் துதியுங்கள்!
    இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
27 சின்ன பென்யமீன் அவர்களை வழிநடத்திச் செல்கிறான்.
    அங்கு யூதாவின் பெரிய குடும்பமும் இருக்கிறது.
அங்கு செபுலோன், நப்தலியின் தலைவர்களும் உள்ளனர்.

28 தேவனே, எங்களுக்கு உமது வல்லமையைக் காட்டும்!
    கடந்த காலத்தில் எங்களுக்காய் பயன்படுத்தின உமது வல்லமையைக் காட்டும்.
29 எருசலேமிலுள்ள உமது அரண்மனைக்கு,
    ராஜாக்கள் தங்கள் செல்வத்தை உமக்காகக் கொண்டு வருவார்கள்.
30 நீர் விரும்புவதை அந்த “மிருகங்கள்” செய்யும்படி உமது கோலைப் பயன்படுத்தும்.
    அத்தேசங்களின் “காளைகளும்” “பசுக்களும்” உமக்குக் கீழ்ப்படியச் செய்யும்.
போரில் அத்தேசங்களை நீர் வென்றீர்.
    இப்போது அவர்கள் வெள்ளியை உம்மிடம் கொண்டுவரச்செய்யும்.
31 எகிப்திலிருந்து அவர்கள் செல்வத்தைக் கொண்டுவரச் செய்யும்.
    தேவனே, எத்தியோப்பியர்கள் அவர்களது செல்வத்தை உம்மிடம் கொண்டு வரச்செய்யும்.

32 பூமியிலுள்ள ராஜாக்களே, தேவனைப் பாடுங்கள்!
    நமது ஆண்டவருக்கு துதிப் பாடல்களைப் பாடுங்கள்!

33 தேவனைப் பாடுங்கள்! பழைய வானங்களினூடே அவர் தமது இரதத்தைச் செலுத்துகிறார்.
    அவரது வல்லமையான குரலுக்குச் செவிக்கொடுங்கள்!
34 உங்கள் தெய்வங்களைப் பார்க்கிலும் தேவன் மிகவும் வல்லமையுள்ளவர்.
    இஸ்ரவேலரின் தேவன் தமது ஜனங்களை பெலமும், வல்லமையும் உள்ளோராக்குகிறார்.
35 தேவன் அவரது ஆலயத்தில் அதிசயமானவர்.
    இஸ்ரவேலரின் தேவன் அவரது ஜனங்களுக்கு பெலத்தையும், வல்லமையையும் கொடுக்கிறார்.

தேவனைத் துதியுங்கள்!

2 சாமுவேல் 6:16-23

16 சவுலின் குமாரத்தி மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறைவாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள்.

17 தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான்.

18 தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான். 19 தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

மீகாள் தாவீதை திட்டுதல்

20 தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் குமாரத்தியாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் ராஜா தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள்.

21 அதற்கு தாவீது மீகாளை நோக்கி, “உனது தந்தையையோ, அவரது குடும்பத்தின் எந்த மனிதனையோ தேர்ந்தெடுக்காமல் கர்த்தர், என்னைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தலைவனாக கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்தார். எனவே நான் கர்த்தருக்கு முன்பாக தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவேன்! 22 இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!” என்றான்.

23 சவுலின் குமாரத்தியான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.

லூக்கா 7:31-35

31 “இக்காலத்து மக்களைப்பற்றி நான் என்ன கூறட்டும்? அவர்களை எதனோடு ஒப்பிடட்டும்? அவர்கள் எதைப் போன்றவர்கள்? 32 இக்காலத்து மக்கள் சந்தையில் அமர்ந்திருக்கும் சிறுவர்களைப் போன்றவர்கள். ஒரு கூட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் பிற சிறுவர்களை அழைத்து,

“‘நாங்கள் உங்களுக்காக இசை இசைத்தும்
    நீங்கள் ஆடவில்லை.
நாங்கள் சோகப்பாடல் பாடியும்
    நீங்கள் துக்கம் அடையவில்லை’

என்று கூறுவதுபோல் உள்ளனர்.

33 யோவான் ஸ்நானகன் பிறரைப் போன்று உண்ணவோ, திராட்சை இரசம் பருகவோ செய்யவில்லை. நீங்கள், ‘அவனுக்குள்ளே பிசாசின் அசுத்த ஆவி இருக்கிறது’ என்கிறீர்கள். 34 மனித குமாரன் பிறரைப் போன்று உண்பவராகவும், திராட்சை இரசம் பருகுபவராகவும் வந்தார். நீங்கள், ‘அவரைப் பாருங்கள். அவர் தேவைக்கும் மிகுதியாக உண்டு, மிகுதியாக திராட்சை இரசம் பருகுகிறார். அவர் வரிவசூலிப்பவர்களுக்கும் தீயோருக்கும் நண்பராக இருக்கிறார்’ என்கிறீர்கள். 35 ஆனால் ஞானமானது அதன் செய்கைகளால் சரியானதென விளங்கும்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center