Revised Common Lectionary (Semicontinuous)
20 நான் எனது பணியாளாகிய தாவீதைக் கண்டெடுத்தேன்.
விசேஷமான எண்ணெயால் அவனை அபிஷேகம் செய்தேன்.
21 என் வலது கரத்தால் தாவீதைத் தாங்கினேன்.
எனது வல்லமையால், அவனை வலிமையுள்ளவனாக்கினேன்.
22 தேர்ந்தெடுத்த அந்த ராஜாவைப் பகைவன் தோற்கடிக்க முடியாமற்போயிற்று.
தீயோர் அவனைத் தோற்கடிக்க இயலவில்லை.
23 அவனது பகைவர்களை நான் அழித்தேன்.
நான் தேர்ந்தெடுத்த ராஜாவைப் பகைத்தவர்களை நான் தோற்கடித்தேன்.
24 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை எப்போதும் நேசித்து அவனைத் தாங்குவேன்.
அவனை எப்போதும் ஆற்றல் பெறச்செய்வேன்.
25 நான் தேர்ந்தெடுத்த ராஜாவைக் கடலுக்கு அதிகாரியாக வைத்தேன்.
அவன் ஆறுகளைக் கட்டுப்படுத்துவான்.
26 அவன் என்னை நோக்கி, ‘நீரே என் தந்தை.
நீர் என் தேவன், என் பாறை, என் மீட்பர்’ என்பான்.
27 நான் அவனை என் முதற்பேறான குமாரனாக்குவேன்.
அவன் பூமியின் முதன்மையான ராஜாவாக இருப்பான்.
28 நான் தேர்ந்தெடுத்த ராஜாவை என் அன்பு என்றென்றும் பாதுகாக்கும்.
அவனோடு நான் செய்த உடன்படிக்கை ஒருபோதும் மாறாது.
29 அவன் குடும்பம் என்றென்றும் தொடரும்,
அவன் அரசு வானங்களிருக்கும்வரை நிலைக்கும்.
30 “அவனது சந்ததியினர் என் சட்டத்தைப் பின்பற்றாது விலகும்போதும்,
அவர்கள் என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாது மீறும்போதும் நான் அவர்களைத் தண்டிப்பேன்.
31 நான் தேர்ந்தெடுத்த ராஜாவின் சந்ததியினர் எனது சட்டங்களை மீறி,
என் கட்டளைகளை உதாசீனப்படுத்தினால்,
32 அப்போது நான் அவர்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்.
33 ஆனால் அந்த ஜனங்களிடமிருந்து என் அன்பை விலக்கமாட்டேன்.
நான் அவர்களிடம் எப்போதும் நேர்மையாக இருப்பேன்.
34 நான் தாவீதோடு செய்த உடன்படிக்கையை மீறமாட்டேன்.
நான் எனது உடன்படிக்கையை மாற்றமாட்டேன்.
35 எனது பரிசுத்தத்தினால் நான் அவனுக்கு ஒரு வாக்குறுதி அளித்தேன்.
நான் தாவீதிடம் பொய் கூறமாட்டேன்!
36 தாவீதின் குடும்பம் என்றென்றும் நிலைத்திருக்கும்.
சூரியன் இருக்கும்வரை அவன் அரசு நிலைக்கும்.
37 சந்திரன் இருக்கும்வரை என்றென்றும் அது தொடரும்.
வானங்கள் அந்த உடன்படிக்கைக்கு சான்று.
அந்த உடன்படிக்கையை நம்பலாம்” என்றீர்.
தாவீதின் அரசு வளர்ந்தது
14 ஈராம், தீரு எனும் நகரத்தின் ராஜா, ஈராம், தாவீதுக்கு தூதுவனை அனுப்பியிருந்தான். அதோடு கேதுரு மரத்தடிகளையும், கல்தச்சர்களையும், மரவெட்டிகளையும் அனுப்பியிருந்தான். தாவீதிற்கு வீடு கட்டவே ஈராம் இவற்றை அனுப்பினான். 2 உண்மையிலேயே கர்த்தர் தன்னை இஸ்ரவேலின் ராஜாவாக்கியதை தாவீது அறிய முடிந்தது. தாவீதின் அரசாங்கத்தைக் கர்த்தர் பலமுள்ளதாகவும் பெரிதானதாகவும் ஆக்கினார். தேவன், தாவீதையும் இஸ்ரவேல் ஜனங்களையும் நேசித்ததால் இவ்வாறு செய்தார்.
அத்தேனேயில் பவுல்
16 அத்தேனேயில் பவுல் சீலாவுக்காகவும் தீமோத்தேயுவுக்காகவும் காத்துக்கொண்டிருந்தான். நகரம் விக்கிரகங்களால் நிறைந்திருப்பதைக் கண்டு பவுல் மனக்கலக்கமடைந்திருந்தான். 17 ஜெப ஆலயத்தில் பவுல் யூதர்களோடும் உண்மையான தேவனை வழிபட்ட கிரேக்கரோடும் பேசினான். நகரத்தின் சந்தை வெளிகளில் நேரம் போக்கிக்கொண்டிருந்த சில மக்களோடும் பவுல் பேசினான். ஒவ்வொரு நாளும் பவுல் இதைச் செய்தான். 18 எப்பிக்கூரர், ஸ்தோயிக்கர் தத்துவவாதிகளில் சிலர் அவனோடு விவாதித்தார்கள்.
அவர்களில் சிலர், “தான் கூறிக்கொண்டிருப்பதைப் பற்றி இந்த மனிதனுக்கு உண்மையாகவே தெரியாது. அவன் என்ன சொல்ல முயன்றுகொண்டிருக்கிறான்?” என்றார்கள். இயேசு மரணத்திலிருந்து எழுப்பப்பட்ட நற்செய்தியைப் பவுல் அவர்களுக்குக் கூறிக்கொண்டிருந்தான். எனவே அவர்கள், “வேறு ஏதோ சில தேவர்களைக் குறித்து அவன் நமக்குச் சொல்லிக்கொண்டிருப்பதாகப் படுகிறது” என்றனர்.
19 அவர்கள் பவுலைக் கண்டுபிடித்து அரியோபாகஸ்[a] சங்கத்தின் கூட்டத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அவர்கள், “நீங்கள் போதிக்கிற இப்புதிய கருத்தை எங்களுக்கு விளக்குங்கள். 20 நீங்கள் சொல்லுபவை எங்களுக்குப் புதியவை. இவற்றைக் குறித்து நாங்கள் முன்னர் கேள்விப்பட்டதில்லை. இப்போதனையின் பொருள் என்ன என்று நாங்கள் அறிய விரும்புகிறோம்” என்றனர். 21 (அத்தேனேயின் மக்கள் அனைவரும் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த பிற நாட்டு மக்களும் இந்தப் புத்தம்புதிய கருத்துக்களைப் பற்றிப் பேசிப் பேசியே பொழுதைக் கழித்தனர்.)
22 அரியோபாகஸ் சங்கத்தின் கூட்டத்தில் பவுல் எழுந்து நின்றான். பவுல், “அத்தேனேயின் மனிதர்களே, நீங்கள் எல்லாவற்றிலும் பக்தியில் மிக்கவர்களாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. 23 நான் உங்கள் நகரத்தின் வழியாகப் போய்க்கொண்டிருந்தேன். நீங்கள் வழிபடுகின்ற பொருட்களைப் பார்த்தேன். ‘அறியப்படாத தேவனுக்கு’ என்று எழுதப்பட்ட ஒரு பீடத்தையும் கண்டேன். நீங்கள் அறியாத ஒரு தேவனை வழிபடுகின்றீர்கள். நான் உங்களுக்குக் கூறுகின்ற தேவன் அவரே!
24 “அவரே உலகம் முழுவதையும் அதிலுள்ள எல்லாப் பொருட்களையும் உண்டாக்கின தேவன். அவரே வானம் பூமி ஆகியவற்றின் கர்த்தர். மனிதன் கட்டுகிற ஆலயங்களில் அவர் வசிப்பதில்லை. 25 உயிர், மூச்சு, பிற அனைத்தையும் மக்களுக்குக் கொடுப்பவர் இந்த தேவனே, அவருக்கு மக்களிடமிருந்து எந்த உதவியும் தேவையில்லை. தேவனுக்குத் தேவையான எல்லாம் அவரிடம் இருக்கின்றன. 26 ஒரு மனிதனை உருவாக்குவதிலிருந்து தேவன் ஆரம்பித்தார். அவனிலிருந்து தேவன் வெவ்வேறான மக்களை உருவாக்கினார். தேவன் அவர்களை உலகின் எல்லாப் பகுதிகளிலும் வசிக்கச் செய்தார். எப்போது, எங்கு அவர்கள் வசிக்க வேண்டுமென்பதை தேவன் மிகச் சரியாகத் தீர்மானித்தார்.
27 “மக்கள் தன்னைத் தேடவேண்டுமென்று தேவன் விரும்பினார். அவர்கள் எல்லா இடங்களிலும் தேடி அவரைக் கண்டுகொள்ளக்கூடும். ஆனால் அவர் நம் ஒவ்வொருவருக்கும் தொலைவில் இல்லை.
28 “நாம் அவரோடு வாழ்கிறோம். நாம் அவரோடு நடக்கிறோம். நாம் அவரோடு இருக்கிறோம். உங்கள் கவிஞர்கள் சிலர் இதைச் சொல்லியிருக்கிறார்கள். ‘ஏனென்றால் நாம் அவரது பிள்ளைகள்.’
29 “நாம் தேவனின் பிள்ளைகள். மக்கள் கற்பனை செய்கிற அல்லது உண்டாக்குகிற பொருளைப் போன்றவர் தேவன் என்று நாம் நினைக்கக்கூடாது. அவர் பொன், வெள்ளி அல்லது கல்லால் செய்யப்பட்ட பொருளைப் போன்றவர் அல்ல. 30 கடந்த காலத்தில் மக்கள் தேவனைப் புரிந்துகொள்ளவில்லை. தேவனும் அதைப் பொருட்படுத்தவில்லை. ஆனால் இப்போது உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் அவனது இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றும்படியாக எல்லா இடங்களிலும் கூறுகிறார். 31 தேவன் உலகிலுள்ள எல்லா மக்களையும் நியாயம்தீர்ப்பதற்கு ஒரு நாளைக் குறித்து வைத்துள்ளார். அவர் சரியான தீர்ப்பு வழங்குவார். அவர் ஒரு மனிதனைப் பயன்படுத்துவார். தேவன் பல காலத்திற்கு முன்னரேயே இம்மனிதனைத் தேர்ந்தெடுத்தார். அம்மனிதனை மரணத்தினின்று எழுப்பியதன் மூலம் தேவன் இதற்கான உறுதியை அனைவருக்கும் அளித்தார்” என்றான்.
2008 by World Bible Translation Center