Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஆமோஸ் 5:6-9

கர்த்தரிடம் போய் வாழுங்கள்.
    நீங்கள் கர்த்தரிடம் போகாவிட்டால் பிறகு யோசேப்பின் வீட்டில் நெருப்பு பற்றும்.
    அந்நெருப்பு யோசேப்பின் வீட்டை அழிக்கும்.
    பெத்தேலில் அந்நெருப்பை எவராலும் நிறுத்தமுடியாது.
7-9 நீங்கள் உதவிக்காகக் கர்த்தரிடம் போக வேண்டும்.
    தேவன் நட்சத்திரக் கூட்டங்களைப் படைத்தார்.
அவர் இருளைக் காலை ஒளியாக மாற்றுகிறார்.
    அவர் பகல் ஒளியை இரவின் இருளாக மாற்றுகிறார்.
அவர் கடலிலுள்ள தண்ணீரை அழைத்து, அதனை பூமியில் ஊற்றுகிறார்.
    அவரது நாமம் யேகோவா.
அவர் ஒரு பலமான நகரைப் பாதுகாப்பாக வைத்து
    இன்னொரு பலமான நகரை அழிய விடுகிறார்.”

இஸ்ரவேலர்கள் செய்த பாவச்செயல்கள்

நீங்கள் நன்மையை விஷமாக மாற்றுகிறீர்கள்.
    நீங்கள் நீதியைக் கொல்லுகிறீர்கள், கொன்று தரையில் விழவிடுகிறீர்கள்.

ஆமோஸ் 5:10-15

10 தீர்க்கதரிசிகளே, பொது இடங்களுக்குச் சென்று ஜனங்கள் செய்கிற தீமைகளுக்கு எதிராகப் பேசுங்கள்.
    அத்தீர்க்கதரிசிகள் நன்மையான எளிய உண்மைகளைப் போதிக்கிறார்கள். ஜனங்கள் அத்தீர்க்கதரிசிகளை வெறுக்கிறார்கள்.
11 நீங்கள் நியாயமற்ற வரிகளை எளிய ஜனங்களிடம் வசூலிக்கிறீர்கள்.
    நீங்கள் கோதுமையைச் சுமைச் சுமையாக அவர்களிடமிருந்து எடுக்கிறீர்கள்.
நீங்கள் செதுக்கப்பட்ட கற்களால் அழகான வீடுகளைக் கட்டுகிறீர்கள்.
    ஆனால் அவ்வீடுகளில் நீங்கள் வாழமாட்டீர்கள்.
நீங்கள் அழகான திராட்சைத் தோட்டங்களைப் பயிர் செய்கிறீர்கள்.
    ஆனால் நீங்கள் அவற்றிலிருந்து மதுவைக் குடிக்கமாட்டீர்கள்.
12 ஏனென்றால் நான் உங்களது அநேகப் பாவங்களை அறிவேன்.
நீங்கள் சில தீயச் செயல்களைச் செய்திருக்கிறீர்கள்.
    நீங்கள் நேர்மையானவர்களைப் புண்படுத்துகிறீர்கள்.
    நீங்கள் தீமை செய்யப் பணம் வாங்குகிறீர்கள்.
    நீங்கள் ஏழைகளுக்கு வழக்கு மன்றங்களில் நீதி வழங்குவதில்லை.
13 அப்போது ஞானமிக்க ஆசிரியர்கள் அமைதியாக இருப்பார்கள்.
    ஏனென்றால் இது கெட்ட நேரம்.
14 நீங்கள் தேவன் உங்களோடு இருப்பதாகச் சொல்கிறீர்கள்.
    எனவே நீங்கள் தீமையையல்ல, நன்மையைச் செய்யவேண்டும்.
அப்போது நீங்கள் வாழ்வீர்கள்.
    சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் உண்மையில் உங்களோடு இருப்பார்.
15 தீமையை வெறுத்து, நன்மையை விரும்புங்கள்.
    வழக்கு மன்றங்களுக்கு நியாயத்தைக் கொண்டு வாருங்கள்.
பிறகு சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர்
    யோசேப்பு குடும்பத்தில் மீதியிருப்பவர்களிடம் இரக்கமாயிருப்பார்.

சங்கீதம் 90:12-17

12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
    எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.

13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
    உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
    நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
    இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
    உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
    நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
    தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.

எபிரேயர் 4:12-16

12 தேவனுடைய வார்த்தையானது எப்பொழுதும் உயிரோடு இருப்பதும், செயல்படுவதுமாகும். அது இரு புறமும் கூரான வாளைவிட மிகவும் கூர்மையானது. அது ஆன்மாவையும், ஆவியையும், எலும்புகளையும், கணுக்களையும் வெட்டிப் பிரிக்கிறது. அது நம் உள்ளான மனதின் எண்ணங்களையும், நம் இதயம் கொண்டுள்ள கருத்துக்களையும் நியாயம் தீர்க்கிறது. 13 தேவனிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை. அனைத்தையும் அவரால் தெளிவாகக் காணமுடியும். அவருக்கு முன் எல்லாமே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாம் வாழ்ந்த முறையை அவரிடம் விவரிக்க வேண்டும்.

தேவனுக்கு முன் வர நமக்கு இயேசு உதவுகிறார்

14 நமக்கென்று ஒரு பெரிய பிரதான ஆசாரியர் உண்டு. அவர் பரலோகத்தில் தேவனோடு இருக்கப் போயிருக்கிறார். அவரே தேவனுடைய குமாரனாகிய இயேசு. எனவே நாம் நமது விசுவாசத்தில் உறுதியுடையவர்களாய் இருப்போமாக. 15 பிரதான ஆசாரியராகிய இயேசுவால் நமது பலவீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். பூமியில் வாழ்ந்தபோது அனைத்து வகைகளிலும், நம்மைப் போலவே அவரும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் பாவமே செய்யவில்லை. 16 எனவே, நமக்குத் தேவைப்படும் சமயத்தில் தேவனுடைய கிருபையும் இரக்கமும் நமக்குக் கிடைக்கும் வகையில் கிருபை உள்ள சிம்மாசனத்தை நாம் அணுகலாம்.

மாற்கு 10:17-31

பணக்காரனும் இயேசுவும்

(மத்தேயு 19:16-30; லூக்கா 18:18-30)

17 இயேசு அவ்விடத்திலிருந்து புறப்பட ஆரம்பித்தார். அப்போது ஒரு மனிதன் ஓடி வந்து அவருக்கு முன்னால் முழங்காலிட்டு வணங்கினான். அவன், “நல்ல போதகரே! நான் நித்திய வாழ்வைப் பெற என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

18 அதற்கு இயேசு, “என்னை நீ நல்லவர் என்று ஏன் அழைக்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். 19 ஆனால் உனது வினாவுக்கு விடையளிக்கிறேன். நீ எவரையும் கொலை செய்யாமல் இருப்பாயாக; விபச்சாரம் செய்யாமல் இருப்பாயாக, களவு செய்யாமல் இருப்பாயாக; பொய்சாட்சி சொல்லாமல் இருப்பாயாக; நீ உன் தந்தையையும் தாயையும் மரியாதை செய்வாயாக(A) என்று கட்டளைகள் சொல்வது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

20 அதற்கு அந்த மனிதன், “போதகரே! நான் குழந்தைப் பருவத்தில் இருந்தே இக்கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து வருகிறேன்” என்றான்.

21 இயேசு அவனைக் கவனித்தார். இயேசுவுக்கு அவன் மீது அன்பு பிறந்தது. இயேசு அவனிடம், “நீ செய்வதற்கு உரிய காரியம் இன்னும் ஒன்று உள்ளது. நீ போய் உனக்கு உரியவற்றையெல்லாம் விற்றுவிடு. அப்பணத்தை ஏழை மக்களுக்குக் கொடு. உனக்குப் பரலோகத்தில் நிச்சயம் பொக்கிஷமிருக்கும். பிறகு என்னைப் பின்பற்றி வா” என்றார்.

22 இயேசு இவற்றைச் சொன்னதும் அந்த மனிதன் மிகவும் வருத்தப்பட்டு அப்புறம் போனான். அவனது வருத்தத்துக்குக் காரணம் அவன் பெருஞ் செல்வந்தனாய் இருந்ததுதான்; அதோடு அச்செல்வத்தைப் பாதுகாக்கவும் நினைத்ததுதான்.

23 பிறகு இயேசு சுற்றிலும் பார்த்து தன் சீஷர்களிடம் “ஒரு பணக்காரன் தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது மிகவும் கடினமான ஒன்று” என்றார்.

24 இயேசு சொன்னதைக் குறித்து சீஷர்கள் அதிசயப்பட்டார்கள். இயேசு மீண்டும், “என் பிள்ளைகளே! தேவனுடைய இராஜ்யத்துக்குள் நுழைவது கடினமானது. 25 அதிலும் தேவனுடைய இராஜ்யத்துக்குள் ஒரு பணக்காரன் நுழைவது மிகவும் கடினமானது. இதைவிட, ஊசியின் காதிற்குள் ஒரு ஒட்டகம் எளிதாக நுழைந்து விடும்” என்றார்.

26 சீஷர்கள் பெரிதும் அதிசயப்பட்டார்கள். அவர்கள் தங்களுக்குள், “பிறகு யார் இரட்சிக்கப்படுவார்?” என்று கேட்டனர்.

27 இயேசு தன் சீஷர்களைப் பார்த்து, “மக்கள் தங்களால் எதுவும் செய்துகொள்ள இயலாது. அது தேவனிடமிருந்துதான் வரவேண்டும். தேவனே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்” என்றார்.

28 பேதுரு இயேசுவைப் பார்த்து, “நாங்கள் எல்லாவற்றையும் விட்டு, விட்டு உங்களைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறோம்” என்றான்.

29 இயேசு “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன். எவன் ஒருவன் தனது வீட்டையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தந்தையையும், தாயையும், குழந்தைகளையும், பண்ணைகளையும் எனக்காகவும், நற்செய்திக்காகவும், தியாகம் செய்கிறானோ 30 அவனுக்கு அவன் விட்டதைவிட நூறு மடங்கு கிடைக்கும். இங்கே இந்த உலகத்தில் அவன் மிகுதியான வீடுகளையும், சகோதரர்களையும், சகோதரிகளையும், தாயார்களையும், குழந்தைகளையும், பண்ணைகளையும், பெறுவான். அதோடு பல துன்பங்களையும் அடைவான். ஆனால் அவன் நித்தியவாழ்வு என்னும் பரிசினை வரப்போகும் உலகில் பெறுவான். 31 இப்போது மிக உயர்ந்த இடத்தில் உள்ள பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த இடத்துக்குச் செல்வர், மிகத் தாழ்ந்த இடத்திலுள்ள பலர் மிக உயர்ந்த இடத்துக்குச் செல்வர்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center