Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு
9 தீர்க்கதரிசிகளுக்கான ஒரு செய்தி:
நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்.
என் இருதயம் உடைந்திருக்கிறது.
எனது அனைத்து எலும்புகளும் அசைகின்றன.
நான் (எரேமியா) குடிக்காரன் போல் இருக்கிறேன்.
கர்த்தரினிமித்தமும் அவரது பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும்.
10 யூதா நாடு முழுவதும் வேசித்தனம் என்னும் பாவம் செய்த ஜனங்களால் நிறைந்துள்ளது.
அவர்கள் பல வழிகளில் விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள்.
கர்த்தர் அந்த நாட்டை சபித்தார்.
அது மிகவும் வறண்டுபோயிற்று.
செடிகள் வாடி மேய்ச்சல் நிலங்கள் செத்துப்போயின.
வயல்கள் வனாந்தரங்களைப்போன்று ஆயின.
தீர்க்கதரிசிகள் எல்லாம் தீயவர்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான வழிகளில் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் கூடத் தீயவர்கள் ஆனார்கள்.
அவர்கள் எனது சொந்த ஆலயத்தில் தீயவற்றைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
12 “எனது செய்தியை அவர்களுக்கு கொடுப்பதை நான் நிறுத்துவேன்.
இது அவர்கள் இருட்டில் நடப்பதைப்போன்றது.
இது அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வழுக்குகின்ற சாலையைப்போன்றது.
அவர்கள் அந்த இருளில் விழுவார்கள்.
அவர்களுக்கு நான் துரதிர்ஷ்டம் கொண்டு வருவேன்.
நான் அந்தத் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் தண்டிப்பேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “சமாரியா தீர்க்கதரிசிகள் தவறுகள் செய்வதை நான் பார்த்தேன்.
பொய்த் தெய்வமாகிய பாகாலின் பெயரால் அத்தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தேன்.
அத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தரைவிட்டு வெளியே வழிநடத்திச் சென்றனர்.
14 இப்போது நான் யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள்
எருசலேமில் பயங்கரமான செயல்கள் செய்வதைப் பார்க்கிறேன்.
இத்தீர்க்கதரிசிகள் வேசித்தனம் என்னும் பாவத்தைச் செய்கின்றனர்.
அவர்கள் பொய்களைக் கேட்கின்றனர்.
அவர்கள் பொய்யான போதனைகளுக்கு அடிபணிகிறார்கள்.
அவர்கள் தீயவர்கள் தொடர்ந்து
தீயச் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள்.
எனவே, ஜனங்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை.
அவர்கள் சோதோமின் ஜனங்களைப்போன்று இருக்கிறார்கள்.
இப்போது எருசலேம் எனக்கு கொமோராபோன்று உள்ளது.”
15 எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்:
“நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன்.
தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும்.
தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது.
அந்நோய் நாடு முழுவதும் பரவியது.
எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.
அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது.”
ஆசாரியன் மெல்கிசேதேக்
7 மெல்கிசேதேக் சாலேமின் ராஜா. அவன் மிக உயர்ந்த தேவனுடைய ஆசாரியனுமாகவும் இருந்தான். ராஜாக்களை வென்றுவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமை மெல்கிசேதேக் சந்தித்து ஆசிவழங்கினான். 2 அதன் பிறகு, பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் அவனுக்குக் கொடுத்தான்.
(சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக் என்ற பெயருக்கு இரு பொருள் உண்டு. மெல்கிசேதேக் என்பதற்கு “நன்மையின் ராஜா” என்ற பொருளும் “சலேமின் ராஜா” என்பதற்கு “சமாதானத்தின் ராஜா” என்ற பொருளும் உண்டு.) 3 இவனது தாய் தந்தையரைப் பற்றி எவருக்கும் தெரியாது. எங்கிருந்து வந்தான் என்றும் தெரியாது. எங்கே பிறந்தான், எப்போது இறந்தான் என்றும் ஒருவருக்கும் தெரியாது. இவன் தேவனுடைய குமாரனைப் போன்றவன். அவன் என்றென்றைக்கும் ஆசாரியனாகவே இருக்கிறான்.
4 போரில் கைப்பற்றிய பொருள்களில் பத்தில் ஒரு பங்கை ஆபிரகாம் இவனுக்குக் கொடுத்ததின் மூலம் இவன் எவ்வளவு முக்கியமானவன் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். 5 இப்போது லேவியின் வாரிசுதாரர்களாக உள்ள ஆசாரியர்கள் இஸ்ரவேலைச் சேர்ந்த மக்களிடமிருந்து பத்தில் ஒருபாகத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென சட்டம் கூறுகிறது. அதாவது ஆபிரகாமின் குடும்பத்தைச் சார்ந்தவர்களாக இருப்பினும் கூட மக்களிடமிருந்து இந்த பத்தில் ஒரு பங்கை அவர்கள் வசூலிக்கிறார்கள். 6 இப்பொழுது மெல்கிசேதேக் ஆபிரகாமிடமிருந்து பத்தில் ஒன்றைப் பெற்றுக்கொண்டு தேவனுடைய விசேஷ வாக்குறுதிகளை பெற்ற ஆபிரகாமை ஆசீர்வதித்தான். 7 மிகப் பெரிய மனிதர்களே சிறியவர்களை ஆசீர்வாதம் செய்வார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
8 ஒரு புறத்தில் வாழ்ந்து மடிகிற ஆசாரியர்களால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. இன்னொரு புறத்தில் இன்னும் உயிருடன் இருப்பதாகச் சொல்லப்படுகிற மெல்கிசேதேக்கால் பத்தில் ஒரு பாகம் வசூலிக்கப்படுகிறது. 9 உண்மையில், ஆபிரகாமின் மூலமாக லேவியே பத்தில் ஒரு பாகத்தை மெல்கிசேதேக்குக்கு கொடுத்தான் என்று கூட நீங்கள் சொல்லக் கூடும். 10 ஏன்? ஏனெனில் மெல்கிசேதேக் ஆபிரகாமைச் சந்தித்தபோது லேவி இன்னும் பிறந்திருக்கவில்லை. தன் முன்னோரான ஆபிரகாமின் சரீரத்திலேயே இன்னும் அவன் இருந்தான்.
2008 by World Bible Translation Center