Revised Common Lectionary (Complementary)
கிமெல்
17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.
தேவனுடைய வாக்குறுதி
33 கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான். 2 “கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்: 3 ‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’ 4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள ராஜாக்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள்.
5 “‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும்.
6 “‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். 7 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன். 8 அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன். 9 எருசலேம் ஒரு அற்புதமான இடமாகும். ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களும் அதனைப் புகழுவார்கள். அந்த ஜனங்கள் அங்கே நல்லவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்படும்போது இது நிகழும். எருசலேமிற்காக நான் செய்துக்கொண்டிருக்கும் நல்லவற்றைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.’
10 “‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும். 11 அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
இரண்டு குருடர்களை இயேசு குணமாகுதல்
(மாற்கு 10:46-52; லூக்கா 18:35-43)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். 30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று உரக்கக் கூவினார்கள்.
31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும், மேலும் சத்தமாக, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.
32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.
33 அதற்குக் குருடர்கள், “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.
34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.
2008 by World Bible Translation Center