Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:1-8

ஆலெப

119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
    அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
    அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
    கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
    நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
    உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!

யாத்திராகமம் 22:1-15

22 “ஒரு மாட்டையோ, ஆட்டையோ திருடுகிற மனிதனை நீ எவ்வாறு தண்டிக்க வேண்டும்? அம்மனிதன் அந்த மிருகத்தைக் கொன்றாலோ அல்லது விற்றாலோ, அதனைத் திரும்பக் கொடுக்க முடியாது. எனவே, அவன் திருடிய மாட்டுக்குப் பதிலாக ஐந்து மாடுகளைக் கொடுக்க வேண்டும். அல்லது திருடிய ஒரு ஆட்டிற்காக நான்கு ஆடுகளைக் கொடுக்க வேண்டும். திருட்டுக்காக பணம் கொடுக்க வேண்டும். 2-4 அவனுக்கு கொடுக்க எதுவும் சொந்தமில்லையென்றால், அவன் அடிமையாக விற்கப்பட வேண்டும். ஆனால் அந்த மனிதன் தான் திருடிய மிருகத்தை வைத்திருந்தானாகில், தான் திருடிய ஒவ்வொரு மிருகத்திற்காகவும் இரண்டு மிருகங்களைக் கொடுக்க வேண்டும். அது மாடா, கழுதையா, அல்லது ஆடா என்பது ஒரு பொருட்டல்ல.

“இரவில் திருடும்படி ஒருவன் ஒரு வீட்டுக்குள் நுழைய முயற்சி செய்யும்போது திருடன் கொல்லப்பட்டால், அவன் கொலைக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. ஆனால் அது பகலில் நடந்தால், அவனைக் கொன்றவன் கொலைக் குற்றவாளியாவான்.

“ஒருவன் தன் வயலில் அல்லது திராட்சைத் தோட்டத்தில் நெருப்பு மூட்டக் கூடும். அந்த நெருப்பு பரவி, அடுத்த வயலிலோ அல்லது திராட்சைத் தோட்டத்திலோ பற்றிக்கொள்ள நேர்ந்தால் அயலானின் நஷ்டத்திற்கு ஈடாக அவன் விளைச்சலின் சிறந்த பலனுக்கு ஈடான பணத்தைக் கொடுக்க வேண்டும்.

“ஒருவன் வயலின் முட்புதர்களை எரிக்கும்படி நெருப்பு வைக்கக்கூடும். அது பரவி அடுத்தவனின் வயலிலுள்ள பயிர்களையோ, தானியத்தையோ அழித்தால், அழிந்து போனவற்றின் விலையை அழிவுக்குக் காரணமாக இருந்தவன் கொடுக்க வேண்டும்.

“ஒரு மனிதன் தனக்குத் தேவையான பணத்தையோ அல்லது பொருட்களையோ அடுத்த வீட்டுக்காரனிடம் கொடுத்து வைக்கச் சொல்லலாம். அவ்வீட்டிலிருந்து அப்பணமோ அல்லது பொருளோ திருடப்பட்டுவிட்டால் திருடனைக் கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும். திருடன் அகப்பட்டால் அவன் திருடிய பொருளின் இரண்டு மடங்கு விலையைக் கொடுக்க வேண்டும். ஆனால் திருடன் அகப்படாமல் வீட்டின் எஜமான் குற்றவாளியாக இருந்தால் தேவன் நியாயந்தீர்ப்பார். வீட்டின் எஜமானன் தேவனுக்கு முன்னே செல்லும்போது, அவன் திருடனாக இருந்தால் தேவன் அவனைத் தண்டிப்பார்.

“காணாமற்போன மாடு, கழுதை, ஆடு அல்லது துணிகளைக் குறித்து இருவர் முரண்பட்டால் நீ என்ன செய்ய வேண்டும்? ஒருவன், ‘இது என்னுடையது’ என்றும் இன்னொருவன், ‘இல்லை, அது எனக்குரியது’ என்றும் கூறுகிறான். இருவரும் தேவனுக்கு முன்னே போக வேண்டும். யார் குற்றவாளி என்பதை தேவன் தீர்மானிப்பார். குற்றவாளியான மனிதன் அப்பொருளின் இருமடங்கு விலையை மற்றவனுக்குக் கொடுக்கவேண்டும்.

10 “ஒருவன் அடுத்தவனிடம் தனது மிருகத்தைச் சில காலம் கவனித்துக்கொள்ளும்படியாக விடலாம். அது கழுதை அல்லது மாடு அல்லது ஆடாக இருக்கலாம். யாரும் பார்க்காதபோது ஒருவன் அதனைக் காயப்படுத்தவோ, கொல்லவோ, திருடவோ செய்தால் நீ என்ன செய்ய வேண்டும்? 11 அதைப் பெற்றுகொண்டவன் அம்மிருகத்தைத் தான் திருடவில்லை என்பதை விளக்க வேண்டும். அது உண்மையானால் கர்த்தரின் சந்நிதியில் சென்று நான் திருடவில்லை என்று ஆணையிட வேண்டும். மிருகத்தின் உரிமையாளனும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அண்டை வீட்டுக்காரன் அந்த மிருகத்திற்காக எந்தப் பணமும் செலுத்த தேவையில்லை. 12 ஆனால் அண்டை வீட்டுக்காரன் மிருகத்தைத் திருடியிருந்தால், அவன் அதற்கான விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். 13 காட்டு மிருகங்கள் அதனைக் கொன்றிருந்தால் அதன் உடலைச் சாட்சியாக அண்டை வீட்டுக்காரன் எடுத்துவர வேண்டும். கொல்லப்பட்ட மிருகத்துக்காக அவன் விலை கொடுக்க வேண்டாம்.

14 “அண்டை வீட்டுக்காரனிடமிருந்து ஒருவன் எதையேனும் இரவல் பெற்றுக்கொண்டால், அவனே அப்பொருளுக்குப் பொறுப்பாளியாவான். ஒரு மிருகம் காயமுற்றாலோ அல்லது மரித்தாலோ அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தின் விலையை உரிமையாளனுக்குக் கொடுக்க வேண்டும். அப்பொருளின் உரிமையாளன் அங்கு இல்லாதிருந்தால், அண்டை வீட்டுக்காரன் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும். 15 ஆனால் உரிமையாளனே அங்கிருந்தால் அயலான் அதற்கு பொறுப்பேற்க அவசியமில்லை. அண்டை வீட்டுக்காரன் அம்மிருகத்தை வேலைக்குப் பயன்படுத்தும்போது அதற்குக் குத்தகை செலுத்தும் பட்சத்தில் அம்மிருகம் மரித்தாலோ அல்லது காயப்பட்டாலோ அதற்குரிய பணத்தைச் செலுத்த வேண்டியதில்லை. மிருகத்தைப் பயன்படுத்தியதற்காக அவன் ஏற்கெனவே கொடுத்த பணமே போதுமானது.

எபிரேயர் 9:1-12

பழைய உடன்படிக்கையின்படி வழிபாடு

முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது. இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன. இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது. அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும்[a] இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன. அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)

இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள். ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.

முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார். எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை. 10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.

புதிய உடன்படிக்கையின்படி வழிபாடு

11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல. 12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center