Revised Common Lectionary (Complementary)
ஆலெப
119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
2 கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
3 அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
4 கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
5 கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
6 நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
7 உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
8 கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!
9 பிறகு கர்த்தர் மோசேயிடம், 10 “எல்லா இஸ்ரவேல் ஜனங்களிடமும் இவற்றைக் கூறு. இந்த விதியானது உனக்கும் உனது எல்லாச் சந்ததிக்கும் உரியதாகும். சரியான நேரத்தில் ஒருவனால் பஸ்காவைக் கொண்டாட முடியாமல் போகலாம். அவன் பிணத்தைத் தொட்டதால் தீட்டுள்ளவனாக இருக்கலாம், அல்லது அவன் பயணத்தின் பொருட்டு வெளியே போயிருக்கலாம். 11 ஆனாலும் அவன் இரண்டாவது மாதத்தில் 14ஆம் தேதி மாலை வேளையில் பஸ்காவைக் கொண்டாடலாம். அப்போது அவன் ஆட்டுக்குட்டியின் இறைச்சியையும், புளிப்பில்லாத அப்பத்தையும், கசப்பான கீரையையும் உண்ண வேண்டும். 12 அவன் மறுநாள் விடியும்வரை அதில் எதையும் மீதி வைக்காமல் உண்ண வேண்டும். அவன் ஆட்டுக்குட்டியின் எலும்புகள் எதையும் உடைக்கக் கூடாது. அவன் பஸ்காவின் அனைத்து விதிகளையும் பின்பற்ற வேண்டும். 13 ஆனால் இயன்றவர்கள் குறிப்பிட்ட காலத்திலேயே பஸ்காவைக் கொண்டாட வேண்டும். ஆனால் அவன் தீட்டில்லாமல் இருந்து, பயணம் போகாமல் இருந்தால் அவனுக்கு மன்னிப்பு இல்லை. அவன் சரியான காலத்தில் பஸ்காவைக் கொண்டாடாவிட்டால், அவன் மற்ற ஜனங்களிடமிருந்து பிரிக்கப்படவேண்டும். அவன் குற்றவாளியாகி அதனால் தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் சரியான நேரத்தில் தன் அன்பளிப்பை கர்த்தருக்குச் செலுத்தவில்லை.
14 “உங்களோடு வாழ்கின்ற அயல் நாட்டுக்காரன், கர்த்தரின் பஸ்காப் பண்டிகையை பகிர்ந்துகொள்ள விரும்பலாம், இதனை அனுமதிக்கலாம். ஆனால், அவன் பஸ்காவின் விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவ்விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரிதான்” என்றார்.
நல்ல சமாரியன்
25 நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்து நின்றான். அவன் இயேசுவைச் சோதிக்க முயன்று கொண்டிருந்தான். அவன், “போதகரே, நித்தியமான வாழ்வு பெற நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
26 அவனை நோக்கி இயேசு, “சட்டத்தில் என்ன எழுதப்பட்டுள்ளது? அங்கு எதை நீ வாசிக்கிறாய்?” என்றார்.
27 அம்மனிதன், “‘உனது தேவனாகிய கர்த்தரை நேசிப்பாயாக. உன் முழு நெஞ்சத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு வல்லமையோடும் உன் முழு மனதோடும் அவரை நேசிக்க வேண்டும்’(A) என்றும், மேலும், ‘நீ உன்னை நேசிப்பது போலவே பிறரிடமும், அன்பு காட்ட வேண்டும்’(B) என்றும் எழுதப்பட்டுள்ளது” எனப் பதிலுரைத்தான்.
28 இயேசு அவனை நோக்கி, “உன் பதில் சரியானது. இதைச் செய்தால் நித்திய வாழ்வைப் பெறுவாய்” என்றார்.
29 அம்மனிதன் தான் வாழ்ந்து வரும் முறையே சரியானது என நிரூபிக்க விரும்பினான். எனவே அவன் இயேசுவிடம், “நான் நேசிக்க வேண்டிய பிற மக்கள் யார்?” என்று கேட்டான்.
30 அக்கேள்விக்குப் பதிலாக இயேசு: “ஒரு மனிதன் எருசலேமில் இருந்து எரிகோவிற்குப் பாதை வழியாகப் பயணம் செய்து கொண்டிருந்தான். சில திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் அவனது ஆடையைக் கிழித்து அவனை அடித்தார்கள். அம்மனிதனைத் தரையில் வீழ்த்திவிட்டு அத்திருடர்கள் அங்கிருந்து சென்றார்கள். அவன் இறக்கும் தருவாயில் கிடந்தான்.
31 “ஒரு யூத ஆசாரியன் அவ்வழியாகச் சென்று கொண்டிருந்தான். அவன் அம்மனிதனைக் கண்டபோதும் அவனுக்கு உதவும்பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான். 32 அடுத்ததாக, ஒரு லேவியன் அவ்வழியாக வந்தான். லேவியன் காயமுற்ற மனிதனைக் கண்டான். அவன் பக்கமாய் கடந்து சென்றான். ஆனால் அவனும் அவனுக்கு உதவும் பொருட்டு நிற்கவில்லை. அங்கிருந்து போய்விட்டான்.
33 “பின்னர் ஒரு சமாரியன் அவ்வழியாகப் பயணம் செய்தான். காயப்பட்ட மனிதன் கிடந்த இடத்துக்கு வந்தான். சமாரியன் அம்மனிதனைப் பார்த்தான். காயமுற்ற மனிதனுக்காகக் கருணைகொண்டான். 34 சமாரியன் அவனிடம் சென்று ஒலிவ எண்ணெயையும் திராட்சை இரசத்தையும் காயங்களில் ஊற்றினான். அம்மனிதனின் காயங்களைத் துணியால் சுற்றினான். சமாரியனிடம் ஒரு கழுதை இருந்தது. அவன் காயமுற்ற மனிதனை அக்கழுதையின் மேல் ஏற்றி, ஒரு விடுதிக்கு அழைத்து வந்தான். அங்கு சமாரியன் அம்மனிதனைக் கவனித்தான். 35 மறுநாள் இரண்டு வெள்ளிப் பணத்தை எடுத்து விடுதியில் வேலைசெய்த மனிதனிடம் கொடுத்தான். சமாரியன் அவனிடம், ‘காயமுற்ற இம்மனிதனைக் கவனித்துக்கொள். அதிகப் பணம் செலவானால் நான் திரும்ப வரும்போது அதனை உனக்குக் கொடுப்பேன்’” என்றான்.
36 பின்பு இயேசு, “இந்த மூன்று பேரிலும் கள்வரால் காயமுற்ற மனிதனுக்கு அன்பு காட்டியவன் யார் என்று நீ எண்ணுகிறாய்?” என்றார்.
37 நியாயசாஸ்திரி, “அவனுக்கு உதவியவன்தான்” என்று பதில் சொன்னான்.
இயேசு அவனிடம், “நீயும் சென்று பிறருக்கு அவ்வாறே செய்” என்றார்.
2008 by World Bible Translation Center