Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது எழுதிய பாடல். பத்சேபாளோடு தாவீது செய்த பாவத்திற்குப் பிறகு தீர்க்கதரிசியாகிய நாத்தான் தாவீதிடம் சென்ற காலத்தில் இது பாடப்பட்டது.
51 தேவனே உமது மிகுந்த அன்பான தயவினாலும் மிகுந்த இரக்கத்தினாலும் என்னிடம் இரக்கமாயிரும்.
என் பாவங்களை அழித்துவிடும்.
2 தேவனே, எனது குற்றத்தைத் துடைத்துவிடும்.
என் பாவங்களைக் கழுவிவிடும்.
என்னை மீண்டும் தூய்மைப்படுத்தும்!
3 நான் பாவம் செய்தேனென அறிவேன்.
அப்பாவங்களை எப்போதும் நான் காண்கிறேன்.
4 நீர் தவறெனக்கூறும் காரியங்களைச் செய்தேன்.
தேவனே, நான் உமக்கு விரோதமாக பாவம் செய்தேன்.
நான் தவறு செய்தவன் என்பதையும், நீர் நியாயமானவர் என்பதையும், ஜனங்கள் அறியும் பொருட்டு இவற்றை அறிக்கையிடுகிறேன்.
உமது முடிவுகள் நியாயமானவை.
5 நான் பாவத்தில் பிறந்தேன்.
என் தாய் என்னைப் பாவத்தில் கருவுற்றாள்.
6 தேவனே! நான் உண்மையும் நேர்மையும் உள்ளவனாக விரும்பினால்
உண்மையான ஞானத்தை என்னுள்ளே வையும்.
7 ஈசோப்பு செடியால் என்னைத் தூய்மையாக்கும்.
பனியைக் காட்டிலும் நான் வெண்மையாகும் வரை என்னைக் கழுவும்!
8 என்னை மகிழ்ச்சியாக்கும். மீண்டும் மகிழ்ச்சியாக இருக்கும் வகையைக் கூறும்.
நீர் நொறுக்கின என் எலும்புகள் மீண்டும் மகிழ்ச்சியடையட்டும்.
9 எனது பாவங்களைப் பாராதேயும்!
அவற்றை யெல்லாம் நீக்கிவிடும்
10 தேவனே, எனக்குள் ஒரு பரிசுத்த இருதயத்தைச் சிருஷ்டியும்!
எனது ஆவியை மீண்டும் பலமாக்கும்.
11 என்னைத் தூரத் தள்ளாதேயும்!
என்னிடமிருந்து உமது பரிசுத்த ஆவியை எடுத்துவிடாதேயும்!
12 உமது உதவி என்னை மகிழ்விக்கிறது!
மீண்டும் அந்தச் சந்தோஷத்தை எனக்குக் கொடும்.
எனது ஆவியைப் பலப்படுத்தி உமக்குக் கீழ்ப்படிவதற்குத் தயாராக இருக்கச்செய்யும்.
13 நீர் கூறும் வாழ்க்கை நெறியைப் பாவிகளுக்குப் போதிப்பேன்,
அவர்கள் உம்மிடம் திரும்புவார்கள்.
14 தேவனே, என்னைக் கொலைக் குற்றவாளியாக்காதேயும்.
என் தேவனே, நீரே எனது மீட்பர்.
நீர் எவ்வளவு நல்லவர் என்பதை நான் பாடச் செய்யும்.
15 என் ஆண்டவரே, நான் என் வாயைத் திறந்து உம்மைத் துதித்துப் பாடுவேன்!
16 நீர் பலிகளை விரும்பவில்லை.
நீர் விரும்பாத பலிகளை நான் கொடுக்கத் தேவையில்லை!
17 தேவன் விரும்பும் பலி பணிவான ஆவியே.
தேவனே, உடைந்து நொறுங்கிப்போன இருதயத்தோடு உம்மிடம் வருபவரை நீர் தள்ளிவிடமாட்டீர்.
18 தேவனே, சீயோனிடம் நல்லவராகவும் இரக்கமுடையவராகவும் இரும்.
எருசலேமின் சுவர்களை எழுப்பும்.
19 அப்போது நீர் நல்ல பலிகளையும் தகன பலி முழுவதையும் ஏற்று மகிழமுடியும்.
ஜனங்கள் மீண்டும் உமது பலிபீடத்தில் காளைகளைப் பலியிடுவார்கள்.
கர்த்தருடைய முறையீடு
6 இப்பொழுது கர்த்தர் என்ன சொல்கிறார் எனக் கேளுங்கள்.
உனது வழக்கை மலைகளுக்கு முன் சொல்.
அம்மலைகள் உங்களது வழக்கைக் கேட்க்கட்டும்.
2 கர்த்தர் தமது ஜனங்களுக்கு எதிராக முறையிடுகிறார்.
மலைகளே, கர்த்தருடைய முறையீட்டைக் கேளுங்கள்
பூமியின் அஸ்திபாரங்களே, கர்த்தர் சொல்கிறதைக் கேளுங்கள்.
இஸ்ரவேல் தவறானது என்று அவர் நிரூபிப்பார்.
3 கர்த்தர் கூறுகிறார், “என் ஜனங்களே, நான் செய்தவற்றைச் சொல்லுங்கள்.
நான் உங்களுக்கு எதிராக ஏதாவது செய்தேனா?
நான் உங்களது வாழ்வைக் கடினமானதாக்கினேனா?
4 நான் செய்தவற்றை உங்களிடம் சொல்லுவேன்.
நான் உங்களிடம் மோசே, ஆரோன், மீரியாம் ஆகியோரை அனுப்பினேன்.
நான் உங்களை எகிப்து தேசத்திலிருந்து கொண்டு வந்தேன்,
நான் உங்களை அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை செய்தேன்.
5 என் ஜனங்களே, மோவாபின் ராஜாவாகிய பாலாக்கினுடைய தீயத் திட்டங்களை நினைத்துப் பாருங்கள்.
பேயோரின் குமாரனான பிலேயம் பாலாக்கிடம் சொன்னவற்றை நினைத்துப்பாருங்கள்.
அகாசியாவிலிருந்து கில்கால்வரை நடந்தவற்றை நினைத்துப் பாருங்கள்.
அவற்றை நினைத்துப் பாருங்கள். கர்த்தர் சரியானவர் என்று அறிவீர்கள்.”
நம்மிடமிருந்து தேவன் என்ன விரும்புகிறார்
6 நான் கர்த்தரை சந்திக்க வரும்போது என்ன கொண்டு வரவேண்டும்.
நான் தேவனைப் பணியும்போது என்ன செய்ய வேண்டும்.
நான் கர்த்தருக்கு,
தகன பலியும் ஓராண்டு நிறைந்தக் கன்றுக்குட்டியையும் கொண்டு வரவேண்டுமா?
7 கர்த்தர் 1,000 ஆட்டுக்குட்டிகளாலும்
10,000 ஆறுகளில் ஓடும் எண்ணெயாலும் திருப்தி அடைவாரா?
நான் எனது முதல் குழந்தையை என் பாவங்களுக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
என் சரீரத்திலிருந்து வந்த குழந்தையை நான் பாவத்துக்குப் பரிகாரமாகத் தரட்டுமா?
8 மனிதனே, நன்மை எதுவென்று கர்த்தர் உன்னிடம் சொல்லியிருக்கிறார்.
கர்த்தர் உன்னிடமிருந்து இதைத்தான் விரும்புகிறார்.
மற்றவர்களிடம் நியாயமாய் இரு.
கருணையோடும் நம்பிக்கையோடும் நேசி. உனது தேவனோடு தாழ்மையாய் இரு.
நீ அவரை பொக்கிஷத்தினால் கவர முயலாதே.
தம் மரணத்தைப்பற்றி முன்னறிவிப்பு
31 யூதாஸ் போனபிறகு இயேசு, “இப்பொழுது மனித குமாரன் தன் மகிமையை அடைகிறார். தேவன் தன் குமாரன் மூலமாக மகிமையைப் பெறுகிறார். 32 அவர் மூலம் தேவன் மகிமையை அடைந்தால், பிறகு தேவன் தன் குமாரனுக்கு அவர் மூலமாகவே மகிமை அளிப்பார். தேவன் விரைவில் அவருக்கு மகிமை தருவார்.
33 “எனது பிள்ளைகளே, நான் இன்னும் கொஞ்சக் காலம் மட்டும்தான் உங்களோடு இருப்பேன். என்னை நீங்கள் தேடுவீர்கள். நான் யூதர்களுக்கு சொன்னவற்றையே இப்பொழுது உங்களுக்கும் சொல்கிறேன். நான் போகிற இடத்துக்கு நீங்கள் வரமுடியாது.
34 “நான் உங்களுக்கு ஒரு புதிய கட்டளையைத் தருகிறேன். நீங்கள் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். நான் உங்களை நேசித்ததுபோன்று நீங்களும் ஒருவரை ஒருவர் நேசியுங்கள். 35 நீங்கள் ஒருவரை ஒருவர் நேசித்தால் அனைத்து மக்களும் உங்களை என் சீஷர்களென அறிந்துகொள்வர்” என்றார்.
2008 by World Bible Translation Center