Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 13

இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்.

13 கர்த்தாவே, எத்தனை காலம் என்னை மறப்பீர்?
    என்றென்றும் மறந்திருப்பீரோ? என்னை ஏற்க எத்தனைக் காலம் மறுப்பீர்?
எவ்வளவு காலத்துக்கு நீர் என்னை மறந்திருப்பீர்.
    என் இருதயத்தில் எத்தனைக் காலம் துக்கம் அனுபவிக்கட்டும்?
    எத்தனைக் காலம் என் பகைவன் என்னை வெற்றி கொள்வான்?

எனது தேவனாகிய கர்த்தாவே, என்னைப் பாரும்!
    எனக்குப் பதில் தாரும்! என் பதிலை நான் அறியட்டும்!
    இல்லையெனில் நான் மடிவேன்.
அது நடந்தால் என் பகைவன், “நான் அவனை வென்றேன்” என்பான்.
    என்னைத் தோற்கடித்தால் என் பகைவன் மகிழ்வான்.

கர்த்தாவே, எனக்கு உதவும் உம் அன்பில் நான் நம்பிக்கை வைத்தேன்.
    நீர் என்னைக் காத்து என்னை மகிழச் செய்தீர்.
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.

சகரியா 12:1-13

யூதாவைச் சுற்றியுள்ள நாடுகளைப் பற்றிய தரிசனங்கள்

12 இஸ்ரவேலைப்பற்றி கர்த்தரிடமிருந்து வந்த துக்கச் செய்தி. கர்த்தர் வானத்தையும், பூமியையும் படைத்தார். அவர் மனிதனின் ஆவியை அவனுக்குள் வைத்தார். கர்த்தர், “பார், நான் சுற்றியுள்ள நாடுகளுக்கு எருசலேமை நச்சு கிண்ணமாகச் செய்வேன். நாடுகள் வந்து அந்நகரத்தைத் தாக்கும். யூதா முழுவதும் வலைக்குள் அகப்படும். ஆனால் நான் எருசலேமைக் கனமான பாறையாக்குவேன். அதனைத் எடுக்க முயல்பவன் சிதைக்கப்படுவான். அந்த ஜனங்கள் உண்மையாகவே சிதைக்கப்பட்டு சிதறடிக்கப்படுவார்கள். ஆனால், பூமியிலுள்ள அனைத்து நாடுகளும் எருசலேமிற்கு எதிராகச் சண்டையிடக் கூடுவார்கள். ஆனால் அந்நேரத்தில் நான் குதிரைகளையும், அதன் மேல் வீரர்களையும் மயக்கமுறச் செய்வேன். நான் பகைவர்களின் குதிரைகளையும், குதிரை வீரர்களையும் பயத்தினால் பேதலிக்கச் செய்வேன். ஆனால் என் கண்கள் திறக்கும். நான் யூதாவின் குடும்பத்தைக் கவனித்துக்கொண்டிருப்பேன். யூதாவில் உள்ள குடும்பத் தலைவர்கள் ஜனங்களை உற்சாகப்படுத்துவார்கள். அவர்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே உங்களது தேவன். அவர் நம்மை பலமுள்ளவர்களாக்குகிறார்’ என்றார்கள். அந்நேரத்தில், நான் யூதாவிலுள்ள குடும்பத் தலைவர்களை காட்டில் எரியும் நெருப்பாக்குவேன். அவர்கள் தம் பகைவரை வைக்கோலை எரிக்கும் நெருப்புப்போல அழிப்பார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள பகைவர்களை எல்லாம் அழிப்பார்கள். எருசலேம் ஜனங்கள் திரும்பவும் தம் இடமாகிய எருசலேமில் ஓய்ந்திருந்து குடியிருப்பார்கள்” என்றார்.

கர்த்தர் முதலில் யூதா ஜனங்களைக் காப்பாற்றுவார். எனவே, எருசலேம் ஜனங்கள் அதிகமாகத் தற்பெருமை கொள்ள முடியாது. எருசலேமிலுள்ள தாவீதின் குடும்பமும், மற்ற ஜனங்களும் யூதாவின் ஜனங்களைவிடத் தம்மைப் பெரியவர்களாகப் புகழ்ந்துக்கொள்ள முடியாது. ஆனால், கர்த்தர் எருசலேமில் உள்ள ஜனங்களைக் காப்பார். அங்குள்ள தள்ளாடுகின்ற மனிதனும் கூடத் தாவீதைப்போன்று பெரும் வீரனாவான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஜனங்கள் இரதங்களைப் போன்றும், ஜனங்களை வழிநடத்தும் கர்த்தருடைய சொந்தத் தூதர்களைப் போன்றும் இருப்பார்கள்.

கர்த்தர் கூறுகிறார்: “அந்நேரத்தில், எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும் நாடுகளை நான் அழிப்பேன். 10 நான் எருசலேமில் உள்ள தாவீதின் குடும்பத்தாரையும் மற்ற ஜனங்களையும் கருணையின் ஆவியாலும், இரக்கத்தின் ஆவியாலும் நிரப்புவேன். அவர்கள் தாங்கள் குத்தின ஒருவரான என்னைப் பார்ப்பார்கள். அவர்கள் மிகவும் துக்கமாக இருப்பார்கள். அவர்கள், ஒருவன் தன் ஒரே குமாரனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும், ஒருவன் தன் மூத்த குமாரனின் மரணத்துக்காக அழுகிறவனைப் போன்றும் துக்கம் கொள்வார்கள். 11 எருசலேமில் பெருந்துக்கத்துக்கும், அழுகைக்கும் உரியகாலம் இருக்கும். இது மெகிதோன் பட்டணத்து பள்ளத்தாக்கின் ஊராகிய ஆதாத் ரிம்மோனின் புலம்பலைப் போன்றிருக்கும். 12 அங்குள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் தங்களுக்குள் அழுவார்கள். தாவீதின் குடும்பத்திலுள்ள ஆடவர்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். நாத்தானின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சீமேயின் குடும்பத்து ஆண்களும் தங்களுக்குள் அழுவார்கள். அவர் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். 13 லேவியின் குடும்பத்திலுள்ள ஆண்கள் தங்களுக்குள் அழுவார்கள். அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். சிமியோன் குடும்பத்திலுள்ள ஆண்களும், அவர்களின் மனைவியரும் தங்களுக்குள் அழுவார்கள். 14 அங்குள்ள மற்ற கோத்திரங்களிலும் இது போல் நிகழும். ஆண்களும் பெண்களும் தங்களுக்குள் அழுவார்கள்.”

13 ஆனால் அந்நேரத்தில், தாவீதின் குடும்பத்தாருக்கும், எருசலேமின் குடிமக்களுக்கும் ஒரு புதிய நீரூற்று திறக்கப்படும். அந்த ஊற்று அவர்களின் பாவத்தைக் கழுவி அந்த ஜனங்களைச் சுத்தப்படுத்தும்.

மாற்கு 13:9-23

“நீங்கள் கவனமாயிருங்கள். மக்கள் உங்களைக் கைது செய்து நியாயம் வழங்குவார்கள். தங்கள் ஜெப ஆலயங்களில் உங்களை அடிப்பார்கள். நீங்கள் ஆளுநர்கள் முன்பும், மன்னர்களின் முன்பும், கட்டாயமாக நிறுத்தப்படுவீர்கள். என்னைப் பற்றி அவர்களிடம் நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் இவை உங்களுக்கு ஏற்படும். 10 இவை நடைபெறுவதற்கு முன்னால் நற்செய்தியானது எல்லா மக்களுக்கும் பரப்பப்படும். 11 நீங்கள் சொல்லப்போவதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம். அந்த நேரத்தில் தேவன் பேசக் கொடுத்தவற்றை நீங்கள் பேசுங்கள். உண்மையில் அவற்றை நீங்கள் பேசுவதில்லை. உங்கள் மூலம் பரிசுத்த ஆவியானவரே பேசுவார்.

12 “சகோதரர்கள் ஒருவருக்கொருவர் எதிராகிச் சாவுக்கு ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு எதிராகி அவர்களை மரணத்துக்கு ஒப்புக்கொடுப்பார்கள். பிள்ளைகள் தம் பெற்றோருக்கு எதிராகச் சண்டையிட்டு அவர்களைக் கொலை செய்ய வழி தேடுவார்கள். 13 நீங்கள் என்னைப் பின்பற்றுவதால் மக்கள் அனைவரும் உங்களை வெறுப்பார்கள். இறுதிவரை உறுதியாக யார் இருக்கிறார்களோ அவர்களே இரட்சிக்கப்படுவார்கள்.

14 “பேரழிவிற்கு காரணமான மோசமான காரியத்தை நிற்கத்தகாத இடத்தில் நிற்க நீங்கள் காண்பீர்கள்.[a] (இதை வாசிக்கிறவன் இதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.) அப்போது யூதேயாவில் உள்ள மக்கள் அதை விட்டு மலைகளுக்கு ஓடிப் போவார்கள். 15 மக்கள் தம் நேரத்தை வீணாக்காமல் எதற்காகவும் நிற்காமல் ஓடிப்போக வேண்டும். எவனாவது வீட்டின் கூரைமேல் இருந்தால் அவன் பொருள்களை எடுக்கக் கீழே இறங்காமலும் வீட்டிற்குள் நுழையாமலும் இருப்பானாக. 16 எவனாவது வயலில் இருந்தால் அவன் தன் மேல் சட்டையை எடுக்கத் திரும்பிப் போகாமல் இருப்பானாக.

17 “அந்தக் காலம் கருவுற்ற பெண்களுக்கும், கைக் குழந்தையுள்ள பெண்களுக்கும் மிகக் கொடுமையானதாக இருக்கும். 18 மழைக் காலத்தில் இவை நிகழாதிருக்கும்படி பிரார்த்தனை செய்யுங்கள். 19 ஏன்? அந்த நாட்களில் அதிக அளவு வேதனை இருக்கும். தொடக்கக் காலம் முதல் இன்று வரை இது போன்ற வேதனைகள் ஏற்பட்டிருக்காது. இது போன்ற கேடுகள் இனிமேல் நடக்காது. 20 அக்கேடு காலம் குறுகியதாக இருக்கட்டும் என்று தேவன் தீர்மானித்திருக்கிறார். அக்கேடு காலம் குறுகியதாக இல்லாமல் இருந்தால் பின்னர் உலகில் ஒருவரும் உயிரோடு இருக்க முடியாது. அவர் தேர்ந்தெடுத்த சிறப்புக்குரிய மக்களுக்கு உதவும்பொருட்டு தேவன் அக்கேடு காலத்தினைக் குறுகியதாக ஆக்குவார்.

21 “அக்காலத்தில் சிலர் ‘அதோ பாருங்கள் கிறிஸ்து, இதோ இவர்தான் கிறிஸ்து’ என்று கூறுவார்கள். அவர்களை நம்பாதீர்கள். 22 கள்ளக் கிறிஸ்துக்களும், கள்ளத் தீர்க்கதரிசிகளும் வந்து அநேக அற்புதங்களையும், அரிய செயல்களையும் செய்வார்கள். அவர்கள் இவற்றை தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களிடமே செய்வார்கள். அப்படிச் செய்து அவர்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள். 23 எனவே கவனமாய் இருங்கள். இவை நடைபெறும் முன்னரே நான் உங்களை எச்சரிக்கை செய்துவிட்டேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center