Revised Common Lectionary (Complementary)
23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
25 நான் இளைஞனாக இருந்தேன்.
இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
என்றென்றும் நீ வாழ்வாய்.
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.
35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.
37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.
இஸ்ரவேலர் ஒரு ராஜா வேண்டும் என்று கேட்கிறார்கள்
8 சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். 2 அவனது மூத்த குமாரனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். 3 ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது குமாரர்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். 4 எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். 5 மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் குமாரர்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு ராஜாவைத் தாருங்கள்” என்று கேட்டனர்.
6 எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு ராஜாவை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். 7 கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய ராஜாவாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! 8 அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். 9 எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு ராஜா அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு ராஜா எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.
10 அவர்கள் சாமுவேலிடம் ஒரு ராஜா வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். 11 அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு ராஜா வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் குமாரர்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி ராஜாவின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும்.
12 “ராஜா உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள்.
“ராஜா உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!
13 “ராஜா உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.
14 “ராஜா உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். 15 உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான்.
16 “ராஜா உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். 17 உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.
“நீங்களோ ராஜாக்களுக்கு அடிமையாவீர்கள், 18 காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த ராஜாவால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.
6 ஆகையால் நாம் கிறிஸ்துவைப் பற்றிய அடிப்படைப் போதனைகளிலிருந்து முன்னேறிச்சென்று பூரணமடைய வேண்டும். செத்த செயல்களிலிருந்து விலகுதல் பற்றியும், தேவனில் விசுவாசம் வைப்பது பற்றியும் உள்ள அடிப்படை போதனைகளையே மீண்டும், மீண்டும் நாம் போதிக்க வேண்டாம். 2 ஞானஸ்நானம் பற்றியும், கைகளைத் தலை மேல் வைப்பதுபற்றியும், மரணத்திலிருந்து உயிர்த்தெழுதல் பற்றியும், என்றென்றைக்குமான நியாயத்தீர்ப்பு பற்றியும் ஏற்கெனவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. இப்போது, இதற்கு மேலும் தெரிந்துகொள்ளும் ஆர்வம்கொண்டவர்களாக நாம் முன்னேற வேண்டும். 3 தேவன் விரும்பினால் நாம் இதைச் செய்வோம்.
4-6 கிறிஸ்துவின் வழியிலிருந்து விலகிய மக்களை மீண்டும் அவ்வாழ்க்கைக்குக் கொண்டுவர முடியுமா? உண்மையைக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றி நான் பேசுகிறேன். அவர்கள் தேவனுடைய நன்மைகளைப் பெற்றுக்கொண்டனர். பரிசுத்த ஆவியானவரில் பங்குபெற்று தேவனுடைய செய்தியையும் வர இருக்கிற காலத்தின் வல்லமையையும் அவர்கள் ருசித்திருக்கிறார்கள். மேலும் அவை மிக நல்லவை என அவர்கள் தமக்குத்தாமே கண்டுகொண்டனர். ஆனால் பிறகு அவர்கள் கிறிஸ்துவின் வழியை விட்டு விலகினார்கள். மீண்டும் அவர்கள் கிறிஸ்துவுக்குள் வருவது கடினம். ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை மீண்டும் ஒருமுறை சிலுவையில் அறைந்து விட்டனர். அவர்கள் கிறிஸ்துவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிட்டனர்.
7 அவர்கள் ஒரு வயலைப் போன்றவர்கள். அந்நிலம் மழை நீரை உறிஞ்சி தன்னை உழுகிறவர்களுக்கு நல்விளைச்சலைக் கொடுத்தால், பிறகு அதைப் பற்றி மக்கள் நல்ல வார்த்தைகளைச் சொல்கிறார்கள். ஆனால் முள்செடிகளையும் களைகளையும் தவிர வேறு எதையும் கொடுக்காத நிலத்தை மக்கள் சபிப்பார்கள். மேலும், பிறகு அது எரியூட்டப்படும். 8 ஆனால் அந்த நிலம் முட்களையும் பூண்டுகளையும் வளர்த்தால் அது பயனற்றதாகும். அந்நிலம் அபாயகரமானது. தேவன் அதனை சபிப்பார். அது நெருப்பால் அழிக்கப்படும்.
9 அன்பான நண்பர்களே, நாங்கள் இவற்றையெல்லாம் உங்களுக்குக் கூறுகிறோம். ஆனால் உண்மையில் உங்களிடமிருந்து சிறப்பானவற்றை எதிர்பார்க்கிறோம். இரட்சிப்பிற்குரியதை நீங்கள் செய்வீர்கள் என்று உறுதியாக நம்புகிறோம். 10 தேவன் நீதியுள்ளவர். தேவன் நீங்கள் செய்த காரியங்களையும் நீங்கள் அவருடைய மக்களுக்கு உதவி செய்தபோதும், தொடர்ந்து உதவி செய்கிறபோதும் உங்கள் அன்பையும் உங்கள் செயல்களையும் அவர் மறக்கமாட்டார். 11 நீங்கள் நம்பிக்கொண்டிருக்கிற இரட்சிப்பை அடையும் பொருட்டு உங்கள் வாழ்க்கை முழுதும் தொடர்ந்து உழைத்துக்கொண்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் ஆகும். 12 நீங்கள் சோம்பேறியாவதை நாங்கள் விரும்பவில்லை. தேவனால் வாக்குறுதி அளிக்கப்பட்டதைப் பெறப்போகிற மக்களைப் போன்று நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அவர்களிடம் பொறுமையும் விடாமுயற்சியும் இருப்பதால் அவர்கள் தேவனுடைய வாக்குறுதியைப் பெறுவார்கள்.
2008 by World Bible Translation Center