Revised Common Lectionary (Complementary)
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்.
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
12 பிறகு எரேமியா, யூதாவின் ஆள்வோர்களிடமும் மற்ற ஜனங்களிடமும் பேசினான். அவன், சொன்னான், “இவ்வாலயம் மற்றும் நகரைப்பற்றி இவற்றைச் சொல்ல என்னை கர்த்தர் அனுப்பினார். நீங்கள் கேட்ட அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தது. 13 ஜனங்களே, உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்! நல்லவற்றைச் செய்யத் தொடங்குங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் அவ்வாறு செய்தால், கர்த்தர் தமது மனதை மாற்றுவார். உங்களுக்குச் சொன்ன தீயச் செயல்களை கர்த்தர் செய்யமாட்டார். 14 என்னைப் பொறுத்தவரை, நான் உங்கள் அதிகாரத்தில் இருக்கிறேன். நீங்கள் உங்களுக்குத் தோன்றினபடி நல்லது என்று எதை எண்ணுகிறீர்களோ அதை எனக்குச் செய்யுங்கள். 15 ஆனால் நீங்கள் என்னைக் கொன்றால், ஒன்றை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அப்பாவி மனிதனைக் கொன்ற குற்றம் உங்களைச் சேரும். நீங்கள் இந்த நகரத்தையும் இதில் வாழும் ஜனங்களையும் குற்றமுடையவர்களாக ஆக்குகிறீர்கள். உண்மையாகவே கர்த்தர் என்னை உங்களிடம் அனுப்பினார். உண்மையாகவே நீங்கள் கேட்ட செய்திகள் எல்லாம் கர்த்தருடையவை.”
16 பிறகு, ஆள்வோர்களும் அனைத்து ஜனங்களும் பேசினார்கள். அந்த ஜனங்கள் ஆசாரியர்களிடமும் தீர்க்கதரிசிகளிடமும் பேசினார்கள். “எரேமியா கொல்லப்படக் கூடாது. எரேமியா சொன்னவை எல்லாம் நமது தேவனாகிய கர்த்தரிடமிருந்து வந்தது.”
17 பிறகு, சில மூப்பர்கள் (தலைவர்கள்) எழுந்து, அனைத்து ஜனங்களிடமும் பேசினார்கள். 18 அவர்கள், “மொரேசா நகரிலிருந்து மீகா என்னும் தீர்க்கதரிசி வந்தான். யூதாவின் ராஜாவாக எசேக்கியா இருந்த காலத்தில், மீகா தீர்க்கதரிசியாக இருந்தான். யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களிடமும் மீகா இச்செய்திகளைக் கூறினான். ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“‘சீயோன் அழிக்கப்படும்.
அது உழப்பட்ட வயல்போன்று ஆகும்.
எருசலேம் பாறைகளின் குவியலாகும்.
ஆலயம் இருக்கிற குன்றானது புதர்கள் மூடின ஒரு காலி குன்றாகும்.’ (A)
19 “எசேக்கியா யூதாவின் ராஜாவாக இருந்தான். எசேக்கியா மீகாவைக் கொல்லவில்லை. யூதாவிலுள்ள எந்த ஜனங்களும் மீகாவைக் கொல்லவில்லை. எசேக்கியா கர்த்தரை மதித்தான் என்பது உங்களுக்குத் தெரியும். அவன் கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்ய விரும்பினான். யூதாவிற்குத் தீமை செய்வேன் என்று கர்த்தர் கூறியிருந்தார். ஆனால் எசேக்கியா கர்த்தரிடம் ஜெபித்தான். கர்த்தர் அவரது மனதை மாற்றிக்கொண்டார். கர்த்தர் அந்தத் தீமைகளைச் செய்யவில்லை. நாம் எரேமியாவைத் தாக்கினால் நமக்கு நாமே பல தொல்லைகளை வரவழைத்துக்கொண்டவர்களாவோம். அத்தொல்லைகளுக்கு நாமே காரணம் ஆவோம்.”
20 கடந்த காலத்தில், கர்த்தருடைய வார்த்தையைப் பிரச்சாரம் செய்ய இன்னொரு மனிதன் இருந்தான். அவனது பெயர் உரியா. அவன் செமாயாவின் குமாரன். உரியா கீரியாத்யாரீம் என்ற ஊரைச் சேர்ந்தவன். எரேமியா செய்ததுபோன்றே அவனும் இந்நகரத்திற்கும் தேசத்திற்கும் எதிராக தீர்க்கதரிசனம் கூறினான். 21 உரியா பிரச்சாரம் செய்வதை யோயாக்கீம் ராஜாவும் அவனது படை அதிகாரிகளும் யூதாவின் தலைவர்களும் கேட்டனர். அவர்கள் கோபம் கொண்டனர். யோயாக்கீம் ராஜா உரியாவைக் கொல்ல விரும்பினான். ஆனால் உரியா யோயாக்கீம் தன்னைக் கொல்ல விரும்புவதைப்பற்றி அறிந்தான். உரியா பயந்தான். எனவே எகிப்து நாட்டிற்குத் தப்பித்து ஓடினான். 22 ஆனால், யோயாக்கீம் ராஜா எகிப்துக்கு எல்நாத்தானையும் இன்னும் சிலரையும் அனுப்பினான். எல்நாத்தான் அக்போர் என்ற பெயர் உள்ளவனின் குமாரன். 23 அவர்கள் உரியாவை எகிப்திலிருந்து கொண்டுவந்தனர். பிறகு, அவர்கள் உரியாவை ராஜா யோயாக்கீமிடம் கொண்டுபோனார்கள். உரியா பட்டயத்தால் கொல்லப்படவேண்டும் என்று யோயாக்கீம் ராஜா கட்டளையிட்டான். உரியாவின் உடல் ஏழை ஜனங்கள் புதைக்கப்படுகிற சுடுகாட்டில் வீசப்பட்டது.
24 ஒரு முக்கியமான மனிதன் அகீக்காம் என்ற பெயருடன் இருந்தான். அவன் சாப்பானுடைய குமாரன். அகீக்காம் எரேமியாவிற்கு உதவியாக இருந்தான். ஆசாரியர்களாலும் தீர்க்கதரிசிகளாலும் எரேமியா கொல்லப்படாமல், அகீக்காம் அவனைக் காப்பாற்றினான்.
11 லேவி பரம்பரை ஆசாரிய முறைமைகளை அடிப்படையாய்க் கொண்ட சட்டத்தை[a] இஸ்ரவேல் மக்கள் பெற்றார்கள். ஆனால் இம்முறைமையினால் மக்கள் ஆன்மீக முதிர்ச்சியை அடைய முடியவில்லை, ஆரோனைப் போல அல்லாமல் மெல்கிசேதேக் போன்ற வேறொரு ஆசாரியன் அவசியமானார். 12 ஆசாரியத்துவம் மாற்றப்பட்டால் நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டிருக்க வேண்டும். 13 எப்போதும் ஒரு ஆசாரியனாக சேவை செய்திராத ஒரு குடும்பக் குழுவினைச் சேர்ந்த ஒரு மனிதரைப் பற்றி இப்பகுதிகள் பேசுகின்றன. 14 நமது கர்த்தர் யூதாவின் குடும்பக் குழுவிலிருந்து வந்தவர் என்பது தெளிவு. மோசேயும் இந்தக் குடும்பக் குழுவிலிருந்து வரும் ஆசாரியர்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.
மெல்கிசேதேக்கைப் போன்று இயேசுவும் ஒரு ஆசாரியர்
15 மெல்கிசேதேக் போன்ற ஒரு வித்தியாசமான ஆசாரியர் வருவார் என்பதால் இது மேலும் தெளிவாகிறது. 16 மாம்சீகமான பரம்பரை பற்றிய சில சட்டங்களினால் ஆசாரியனாகாமல் அழிக்க முடியாத ஜீவனுக்குரிய வல்லமையால் அவர் ஆசாரியனாகிறார். 17 “நீர் மெல்கிசேதேக்கைப் போன்று என்றென்றைக்கும் உரிய ஆசாரியராக இருக்கிறீர்”(A) என்று வேதவாக்கியங்களில் ஏற்கெனவே எழுதப்பட்டிருக்கிறது.
18 ஆகவே அந்தப் பழைய சட்டம் இப்போது மாற்றப்பட்டிருக்கிறது. ஏனெனில் பழைய சட்டம் பலவீனமானதும், பயனற்றதுமாய் இருந்தது. 19 மோசேயின் நியாயப்பிரமாணமானது எதையும் முழுமை ஆக்கவில்லை. எனவே சிறிதளவேனும் நல்ல நம்பிக்கை நமக்கு கொடுக்கப்பட்டது. மேலும் அதன் மூலமாகத்தான் தேவனுக்கு அருகில் வருகிறோம்.
20 இது மிக முக்கியமானது. மற்றவர்களை ஆசாரியர்களாக்கியபோது ஆணை எதுவும் கொடுக்கப்படவில்லை. 21 ஆனால் இயேசுவைப் பிரதான ஆசாரியனாக்கியபோது தேவன் பிரமாணம் கொடுத்தார்.
“‘நீரே என்றென்றைக்கும் ஆசாரியனாக இருக்கிறீர்’
என்று கர்த்தர் ஆணையிட்டுரைத்தார்.
மேலும் அவர் தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்”(B)
என்றும் அவர் சொன்னார்.
22 மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு[b] இயேசுவே ஒரு நிரூபணமாக இருக்கிறார் என்பதே இதன் பொருள் ஆகும்.
2008 by World Bible Translation Center