மத்தேயு 19:16-30
Tamil Bible: Easy-to-Read Version
பணக்காரனும் இயேசுவும்
(மாற்கு 10:17-31; லூக்கா 18:18-30)
16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
17 இயேசு அவனிடம், “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.
18 “எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன்.
அதற்கு இயேசு, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. 19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும்.(A) ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’”(B) என்று பதில் சொன்னார்.
20 அதற்கு அந்த இளைஞன், “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.
21 இயேசு அவனிடம், “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.
22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.
23 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம். 24 ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.
25 இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள், “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.
26 இயேசு தம் சீஷர்களைப் பார்த்து, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.
27 பேதுரு இயேசுவிடம், “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.
28 இயேசு தன் சீஷர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின்[a] பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 29 மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 30 உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.
Read full chapterFootnotes
- மத்தேயு 19:28 இஸ்ரவேல் முதலில் இஸ்ரவேல் யூதர்களின் நாடாய் இருந்தது. ஆனால் இப்பெயர் அனைத்து தேவனுடைய மக்களையும் குறிக்கப் பயன்பட்டது.
2008 by Bible League International