Revised Common Lectionary (Complementary)
எழுபது முதிய தலைவர்கள்
4 இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்ந்த அயல் நாட்டுக்காரர்கள் மற்றப் பொருட்களை உண்ண ஆசைப்பட்டார்கள். எனவே, இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் முறையிட ஆரம்பித்தனர். அந்த ஜனங்கள், “நாங்கள் இறைச்சியை உண்ண ஆசைப்படுகிறோம்! 5 நாங்கள் எகிப்தில் உண்ட மீன்களை எண்ணிப் பார்க்கிறோம். அவை எங்களுக்கு விலையில்லாதது. அங்கு எங்களுக்கு வெள்ளரிக்காய், கொம்மட்டிக்காய், கீரை, வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்ற நல்ல காய்கறிகளும் இருந்தன. 6 ஆனால் இப்போது நாங்கள், எங்கள் பலத்தை இழந்துவிட்டோம். இந்த மன்னாவை மட்டுமே உண்கிறோம், வேறு எதையும் புசிப்பதில்லை” என்றனர்.
10 மோசே ஜனங்களின் முறையீட்டைக் கேட்டான். ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களும் தங்கள், தங்கள் கூடார வாசலில் இருந்துகொண்டு முறையிட்டார்கள். இதனால், கர்த்தர் பெருங்கோபம் கொண்டார். மோசேயும் இதனால் சஞ்சலப்பட்டான். 11 மோசே கர்த்தரிடம், “கர்த்தாவே, ஏன் எனக்கு இந்தத் தொல்லையைத் தந்தீர்? நான் உமது ஊழியன். நான் என்ன தவறு செய்தேன்? நான் உமக்கு என்ன பொல்லாப்பு செய்தேன்? இவ்வளவு மிகுதியான ஜனங்களுக்கான பொறுப்பினை ஏன் எனக்குக் கொடுத்தீர்? 12 நான் இவர்களின் தந்தை அல்ல என்பதையும், நான் இவர்களைப் பெற்றெடுக்கவில்லை என்பதையும் நீர் அறிவீர். ஆனால் ஒரு தாதி ஒரு குழந்தையைக் கைகளில் தாங்கிச் செல்வது போன்று நான் தாங்கிச் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஏன் இதனை என்மேல் சுமத்தினீர்? என் முன்னோருக்குத் தருவதாகச் சொன்ன தேசத்திற்கு இவர்களை அழைத்துப் போகும் பொறுப்பை என்மேல் ஏன் சுமத்தினீர்? 13 இவர்கள் அனைவருக்கும் தேவையான இறைச்சி என்னிடம் இல்லை. அவர்கள் தொடர்ந்து முறையிட்டுக்கொண்டு ‘எங்களுக்கு இறைச்சியைத் தாரும்’ என்று கேட்கிறார்கள்! 14 நான் ஒருவனாக இவர்கள் அத்தனை பேரையும் கவனித்துக்கொள்ளமுடியாது. இந்தச் சுமை எனக்கு மிகவும் அதிகமாக உள்ளது. 15 இதுபோல் தொடர்ந்து நீர் எனக்கு அவர்களின் தொல்லைகளைக் கொடுப்பதாக இருந்தால், இப்போது என்னைக் கொன்றுவிடும். உமது ஊழியனாக என்னை ஏற்றுக்கொண்டால், இப்போது எனக்கு மரணத்தைத் தாரும். நான், என் தொல்லைகளிலிருந்து விடுதலை பெறுவேன்” என்றான்!
16 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களில் 70 முதிய தலைவர்களை என்னிடம் அழைத்து வா. இவர்கள் இஸ்ரவேலர்களின் தலைவர்களாயிருக்கிறார்கள். அவர்களை ஆசரிப்புக் கூடாரத்திற்குள் அழைத்து வா. அவர்கள் உன்னோடு நிற்கட்டும்.
24 எனவே, ஜனங்களோடு பேச மோசே வெளியே சென்றான். கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் மோசே ஜனங்களிடம் கூறினான். பின் 70 முதிய இஸ்ரவேல் தலைவர்களைக் கூட்டி அழைத்து வந்தான். ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி நிற்குமாறு அவர்களிடம் கூறினான். 25 பிறகு கர்த்தர் மேகத்தில் இறங்கி வந்து மோசேயோடு பேசினார். மோசேயின் மேல் ஆவியானவர் இருந்தார். அதே ஆவியை 70 முதிய தலைவர்கள் மேலும் கர்த்தர் வைத்தார். அவர்கள்மேல் ஆவி வந்ததும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் அந்த நேரத்தில் மட்டுமே அவ்வாறு நடந்துகொண்டனர்.
26 அப்போது எல்தாத், மேதாத் எனும் இரு முதிய தலைவர்கள் மட்டும் கூடாரத்திற்கு வெளியே போகவில்லை. அவர்களின் பெயர் முதிய தலைவர்களின் பட்டியலில் இருந்தது. எனினும் அவர்கள் கூடாரத்திற்குள்ளேயே இருந்துவிட்டனர். எனினும் அவர்கள் மீதும் ஆவி வந்தது. அவர்கள் கூடாரத்திற்குள்ளிருந்தே தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 27 ஒரு இளைஞன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் கூடாரத்திற்குள் தீர்க்கதரிசனம் கூறுகிறார்கள்” என்றான்.
28 நூனின் குமாரனாகிய யோசுவா மோசேயிடம், “மோசே ஐயா, நீங்கள் அவர்களைத் தடுக்கவேண்டும்” என்றான். (யோசுவா தன் சிறு வயதிலிருந்தே மோசேயிடம் உதவியாளனாக இருந்தான்.)
29 ஆனால் மோசே, “நான் இப்போது தலைவன் இல்லை என்று ஜனங்கள் நினைத்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறாயா? கர்த்தரின் ஜனங்கள் அனைவரும் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் என்று நான் விரும்புகிறேன்! அவர்கள் அனைவர் மேலும் கர்த்தர் தன் பரிசுத்த ஆவியை வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்றான்.
7 கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
8 கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.
9 கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.
12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.
பிரார்த்தனையின் அதிகாரம்
13 உங்களில் எவருக்கேனும் துன்பம் வந்தால் அவர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். உங்களில் யாரேனும் மகிழ்ச்சியுடன் இருந்தால் அவர்கள் பாடவேண்டும். 14 உங்களில் எவருக்கேனும் நோய் வந்தால் ஆலயத்தில் உள்ள மூப்பர்களை அழைக்கவேண்டும். அவர்கள் கர்த்தரின் பெயரால் எண்ணெயைத் தடவிப் பிரார்த்தனை செய்ய வேண்டும். 15 விசுவாசத்தோடு செய்யப்படுகிற எந்தப் பிரார்த்தனையும் பயன் தரும். அது நோயைக் குணமாக்கும்.
16 நீங்கள் செய்த தவறுகளை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுங்கள். பிறகு ஒருவருக்காக ஒருவர் பிரார்த்தனை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் தேவன் குணப்படுத்துவார். நல்லவர்கள் பிரார்த்தனை செய்தால் நன்மைகள் நிகழும். 17 எலியாவும் நம்மைப்போன்ற ஒருவன் தான். மழை பெய்யக் கூடாது என்று பிரார்த்தனை செய்தான். எனவே மூன்றரை வருடங்களாக மழை இல்லாமல் இருந்தது. மழை வேண்டுமென எலியா பிரார்த்தனை செய்தான். 18 எலியாவின் பிரார்த்தனைக்குப்பின் மழை வந்தது. பயிர்கள் செழித்தன.
ஆன்மாவைக் காப்பாற்றுதல்
19 எனது சகோதர சகோதரிகளே, உங்களில் ஒருவன் உண்மையிலிருந்து விலகிப் போகலாம். இன்னொருவன் அவனைத் திரும்பவும் அழைத்து வரலாம். 20 இதை நினைவிலிருத்திக்கொள்ளுங்கள். தவறான வழியிலிருந்து ஒரு பாவியைத் திருப்புகிற ஒருவன் அம்மனிதனின் ஆன்மாவைக் காப்பாற்றிப் பல பாவங்களை அழிக்கிறான்.
இயேசுவைச் சேர்ந்தவன் யார்?
(லூக்கா 9:49-50)
38 பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான்.
39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். 40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். 41 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான்.
பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்
(மத்தேயு 18:6-9; லூக்கா 17:1-2)
42 “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். 43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். 44 [a] 45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. 46 [b] 47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. 48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.
49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.
50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center