Revised Common Lectionary (Complementary)
இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.
54 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும்.
உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும்.
2 தேவன், என் ஜெபத்தைக்கேளும்.
நான் கூறும் காரியங்களைக் கேளும்.
3 தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.
அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
4 பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார்.
என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
5 எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார்.
தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார்.
அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
6 தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன்.
கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
7 என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன்.
எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.
மீதியானியர் இஸ்ரவேலரிடம் போரிடுதல்
6 தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்.
2 மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர். 3 மீதியானியரும், கிழக்கிலுள்ள அமலேக்கியரும் வந்து அவர்கள் பயிர்களை அழித்ததால் இஸ்ரவேலர் அவ்வாறு செய்தனர். 4 அவர்கள் தேசத்தில் முகாமிட்டுத் தங்கி, இஸ்ரவேலர் பயிரிட்ட தானியங்களை அழித்தனர். காசா நகரம் வரைக்கும் உள்ள நிலங்களில் இஸ்ரவேலர் பயிரிட்ட பயிர்களை அந்த ஜனங்கள் பாழாக்கினர். இஸ்ரவேலர் உண்பதற்கு அவர்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவர்களது ஆடுகள், பசுக்கள், கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. 5 மீதியானின் ஜனங்கள் வந்து தேசத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அழைத்து வந்தனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல் அவர்கள் மிகுதியாக வந்தனர். எண்ணக் கூடாத அளவிற்கு ஜனங்களையும் ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஜனங்கள் எல்லோரும் தேசத்திற்குள் நுழைந்து அதனைப் பாழாக்கினர். 6 மீதியானியரின் வருகையால் இஸ்ரவேலர் மிக ஏழைகளாயினர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள்.
7 மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். 8 எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன். 9 நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’ 10 பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார்.
சிலுவையைப் பற்றிய செய்தி
2 அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களிடம் வந்தபோது தேவனுடைய உண்மையை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் அதிகமான ஞானத்தையோ, அழகிய வார்த்தைகளையோ நான் உபயோகிக்கவில்லை. 2 உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன். 3 நான் உங்களிடம் வந்தபோது மிகவும் சோர்வாகவும், பயத்தால் நடுங்கிக்கொண்டும் இருந்தேன். 4 எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும். 5 உங்கள் விசுவாசம் தேவனுடைய வல்லமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதனின் ஞானத்தில் இருக்கக் கூடாதென்பதற்காகவும் நான் இவ்வாறு செய்தேன்.
2008 by World Bible Translation Center