Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
ஏசாயா 50:4-9

தேவனுடைய தாசன் உண்மையில் தேவனைச் சார்ந்திருப்பான்

எனது கர்த்தராகிய ஆண்டவர் போதிக்கும் திறமையை எனக்குத் தந்தார். எனவே, இப்பொழுது நான் இந்தச் சோகமான ஜனங்களுக்குப்போதிக்கிறேன். ஒவ்வொரு காலையிலும் என்னை அவர் எழுப்பி ஒரு மாணவனுக்கு போதிப்பதைப்போன்று போதிக்கிறார். எனது கர்த்தராகிய ஆண்டவர் நான் கற்றுக்கொள்ள உதவினார். நான் அவருக்கு எதிராகத் திரும்பவில்லை. நான் அவரைப் பின்பற்றுவதை விடவில்லை. அந்த ஜனங்கள் என்னை அடிக்கும்படிவிடுவேன். எனது தாடியில் உள்ள மயிரைப் பிடித்து அவர்கள் இழுக்கும்படிவிடுவேன். அவர்கள் என்னைப்பற்றி கெட்டதாகப் பேசி என் மீது துப்பும்போது நான் எனது முகத்தை மறைக்கமாட்டேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுவார். அவர்கள் சொல்லும் கெட்டவை என்னைப் பாதிக்காது. நான் பலமுள்ளவனாக இருப்பேன். நான் ஏமாறமாட்டேன் என்று எனக்குத் தெரியும்.

கர்த்தர் என்னோடு இருக்கிறார். நான் கபடமற்றவன் என்று அவர் காட்டுகிறார். எனவே, எவராலும் என்னைக் குற்றவாளி எனக் காட்ட முடியாது. நான் தவறானவன் என்று எவராவது காட்ட விரும்பினால் அவன் என்னிடம் வரட்டும், நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சோதித்துக்கொள்ளாலம். ஆனால் பார்! எனது கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு உதவுகிறார். எனவே, எவரும் நான் கெட்டவன் என்று காட்டமுடியாது. அவர்கள் அனைவரும் பயனற்ற பழைய ஆடைகளைப்போன்று ஆவார்கள். பொட்டுப்பூச்சி அவர்களை அரிக்கும்.

சங்கீதம் 116:1-9

116 கர்த்தர் எனது ஜெபங்களைக் கேட்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் உதவிக்காகக் கூப்பிடும்போது அவர் எனக்குச் செவிகொடுப்பதை
    நான் நேசிக்கிறேன்.
நான் மரித்தவன் போலானேன்!
    மரணக் கயிறுகள் என்னைச் சூழ்ந்துக்கொண்டன, கல்லறை என்னை மூடிற்று.
    நான் அஞ்சிக் கலங்கினேன்.
அப்போது நான் கர்த்தருடைய நாமத்தைக் கூப்பிட்டேன்.
    நான்: “கர்த்தாவே, என்னைக் காப்பாற்றும்!” என்று கூறினேன்.

கர்த்தர் நல்லவரும், இரக்கம் நிறைந்தவருமாவார்.
    தேவன் தயவுள்ளவர்.
கர்த்தர் திக்கற்ற ஜனங்களைக் கவனித்துக்கொள்கிறார்.
    நான் உதவியற்றவனானேன், கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
என் ஆத்துமாவே, நீ இளைப்பாறு!
    கர்த்தர் உன்னைக் கவனித்துக்கொள்கிறார்.
தேவனே, நீர் என் ஆத்துமாவை மரணத்திலிருந்து காப்பாற்றினீர்.
    நீர் என் கண்ணீரை நிறுத்தினீர்.
    நான் விழாதபடி பார்த்துக்கொண்டீர்.
நான் உயிருள்ளோரின் தேசத்தில்
    தொடர்ந்து கர்த்தருக்குச் சேவைசெய்வேன்.

யாக்கோபு 3:1-12

நாம் சொல்வதைக் கட்டுப்படுத்துதல்

எனது சகோதர சகோதரிகளே, உங்களில் பலர் போதகர்களாகக் கூடாது. ஏனென்றால் போதிப்பவர்களாகிய நாம் மற்றவர்ளைவிட அதிகமாக நியாயந்தீர்க்கப்படுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

நாமெல்லோரும் பல தவறுகளைச் செய்கிறோம். ஒருவன் எப்பொழுதும் தவறாகப் பேசாதவனாக இருந்தால் அவன் முழுமையானவனாகிறான். அவன் தனது முழு சரீரத்தையும் கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றவனாகிறான். நாம் குதிரைகளை அடக்கவேண்டுமானால் அவற்றின் வாயிலே கடிவாளத்தைப் போடுகிறோம். அதன் மூலம் அதன் முழு சரீரத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறோம். இது போலத் தான் கப்பலிலும். ஒரு கப்பல் மிகப் பெரியது; அது பெருங்காற்றால் தள்ளப்படுவது. ஆனால் சிறு சுக்கான் அந்த முழு கப்பலையும் இயக்கப் பயன்படுகின்றது. சுக்கானை இயக்குபவனுக்குக் கப்பலை எங்கே கொண்டு போவது என்று தெரியும். அவன் விரும்புகிற இடத்துக்கே கப்பல் போகும். நமது நாக்கும் அப்படித்தான். அது சரீரத்தின் ஒரு சிறிய உறுப்பு. ஆனால் அது பெரிய காரியங்களைச் செய்வதைப்பற்றிப் பெருமை பேசுகிறது.

மேலும் சிறிய ஒரு நெருப்புப் பொறி எப்படி ஒரு முழுக் காட்டையே எரித்துவிட முடியும் என்பதைப் பற்றி எண்ணுங்கள். மேலும் நாக்கு உண்மையில் நெருப்புப் பொறியாக இருக்கிறது. நம் சரீர உறுப்புகளின் நடுவில் தீமைகளை மூட்டிவிடுகிறது. நாக்கு தன் தீமையை சரீரம் முழுக்கப் பரப்பி நம் முழு வாழ்வையும் சிக்கலாக்கி வைக்கிறது. நரகத்திலுள்ள நெருப்பால் நாக்கு கொழுத்தப்படுகிறது.

மக்கள் எல்லாவகையான மிருகங்கள், பறவைகள், ஊர்வன, நீர்வாழ்வன ஆகியவற்றையெல்லாம் அடக்கும் வலிமை பெற்றவர்கள். ஆனால் நாவானது அடங்காததும் சாவுக்கேதுவான விஷம் நிறைந்ததுமாக இருக்கிறது. அந்த நாவால் தான் நம் பிதாவாகிய கர்த்தரைத் துதிக்கிறோம். அவர் சாயலில் உருவாக்கப்பட்ட மனிதர்களையும் பழிக்கிறோம். 10 துதித்தலும் பழித்தலும் ஒரே வாயில் இருந்துதான் வருகின்றன. என் சகோதர சகோதரிகளே, அப்படி நடக்கக் கூடாது. 11 ஒரே ஊற்றுக்கண்ணிலிருந்து இனிப்பும், கசப்புமான நீர் சுரக்க முடியாது. 12 என் சகோதர சகோதரிகளே, அத்திமரம் ஒலிவப் பழங்களையும், திராட்சைச்செடி அத்திப்பழங்களையும் கொடுக்குமா? அவ்வாறே உவர்ப்பான நீரூற்று இனிப்பான நீரைக் கொடுக்காது.

மாற்கு 8:27-38

இயேசுதான் கிறிஸ்து என்று அறிக்கை

(மத்தேயு 16:13-20; லூக்கா 9:18-21)

27 இயேசுவும், அவரது சீஷர்களும் பிலிப்பு செசரியா நகரத்தைச் சார்ந்த ஊர்களுக்குச் சென்றனர். அவர்களின் பயணத்தின்போது “மக்கள் என்னை யார் என்று சொல்கிறர்கள்?” என்று இயேசு கேட்டார்.

28 அதற்குச் சீஷர்கள், “சிலர் உம்மை யோவான் ஸ்நானகன் என்கின்றனர். சிலர் உம்மைத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்கின்றனர்” என்று சொன்னார்கள். 29 பிறகு இயேசு அவர்களிடம், “நீங்கள் என்னை யார் என்று சொல்கின்றீர்கள்?” என்று கேட்டார் அதற்கு பேதுரு, “நீர்தான் கிறிஸ்து” என்று பதில் கூறினான்.

30 இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்.

இயேசு தம் மரணத்தைக் குறித்துக் கூறுதல்

(மத்தேயு 16:21-28; லூக்கா 9:22-27)

31 பிறகு இயேசு தன் சீஷர்களுக்கு உபதேசிக்கத் தொடங்கினார். மனிதகுமாரன் பல வகையில் கஷ்டப்படவேண்டும். அவர் யூதத் தலைவர்களால் ஒப்புக்கொள்ளப்படமாட்டார். தலைமை ஆசாரியர்களும், வேதபாரகர்களும் அவரை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். மனித குமாரன் அவர்களால் கொல்லப்பட வேண்டும். இறந்த மூன்றாம் நாளில் உயிர்த்தெழுவார். 32 இவ்வாறு இயேசு நடக்கப்போவதையெல்லாம் எடுத்துக் கூறினார். எதையும் அவர் இரகசியமாய் வைக்கவில்லை.

பேதுரு இயேசுவிடம் தனியே பேசினான். அவர் இவ்வாறு கூறுவது குறித்து பேதுரு கண்டித்துக் கூறினான். 33 ஆனால் இயேசு மறுபக்கம் திரும்பி தன் சீஷர்களைப் பார்த்தார். பிறகு அவர் பேதுருவைக் கண்டித்தார். “சாத்தானே என்னை விட்டு விலகிப்போ! நீ தேவனுடைய காரியங்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருக்கிறாய். நீ மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்களைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருக்கிறாய்” என்றார்.

34 இயேசு மக்களைத் தம்மிடம் அழைத்தார். அவரது சீஷர்களும் அவரோடு இருந்தனர். பிறகு இயேசு “யாராவது என்னைப் பின்பற்ற விரும்பினால், அவனது விருப்பங்களையெல்லாம் வெறுத்து ஒதுக்க வேண்டும். அவனது சிலுவையைச் சுமந்து என்னைப் பின்தொடர வேண்டும். 35 எவனொருவன் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள விரும்புகிறானோ அவன் அதனை இழப்பவனாகிறான். எவன் ஒருவன் எனக்காகவும் நற்செய்திக்காகவும் தன்னை இழக்கிறானோ அவனது வாழ்க்கை பாதுகாக்கப்படுகிறது. 36 ஒருவனுக்கு உலகம் முழுவதும் கிடைத்தாலும் நரகத்தில் ஒருவன் தன் ஆத்துமாவை இழந்து போவானேயானால் அதனால் அவனுக்கு என்ன லாபம்? 37 ஒருவன் தன் ஆன்மாவைத் திரும்பப் பெற்றுக்கொள்ள எந்த விலையையும் கொடுக்க முடியாது. 38 இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் கேடுகளிலும், பாவங்களிலும் வாழ்கிறார்கள். எவனாவது என்னைக் குறித்தும், என் போதனையைக் குறித்தும் வெட்கப்படுவானேயானால், நானும் அவனைக் குறித்து வெட்கப்படுவேன். நான் என் பிதாவின் மகிமையோடும், தேவ தூதர்களோடும் வரும்போது அவனைக் குறித்து வெட்கப்படுவேன்” என்றார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center