Print Page Options
Previous Prev Day Next DayNext

Revised Common Lectionary (Complementary)

Daily Bible readings that follow the church liturgical year, with thematically matched Old and New Testament readings.
Duration: 1245 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
சங்கீதம் 119:169-176

தௌ

169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
    நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
    ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
    கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.
    ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
    ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
    உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
    கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
    நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.

1 இராஜாக்கள் 13:11-25

11 பெத்தேலில் ஒரு முதிய தீர்க்கதரிசி இருந்தான். அவனது குமாரர்கள் அவனிடம் வந்து தேவமனிதன் பெத்தேலில் செய்ததைச் சொன்னார்கள், ராஜாவிடம் சொன்னதையும் சொன்னார்கள். 12 அதற்கு அந்த முதிய தீர்க்கதரிசி, “அவன் எந்தச் சாலை வழியாகத் திரும்பிப் போனான்?” என்று கேட்டான். அவர்களும் அந்தச் சாலையைச் சுட்டிக்காட்டினார்கள். 13 அவன் தனது கோவேறு கழுதைக்குச் சேணத்தை கட்டுமாறு வேண்டினான். அவனது பிள்ளைகளும் அவ்வாறே செய்தனர். அவனும் அக்கழுதையின் மீது ஏறிப்போனான்.

14 முதிய தீர்க்கதரிசி அந்தத் தேவமனிதனைப் பின் தொடர்ந்து போனான். தேவமனிதன் கர்வாலி மரத்தின் கீழ் இருப்பதை அவன் கண்டான், “யூதாவிலிருந்து வந்தத் தேவமனிதன் நீதானா?” என்று கேட்டான்.

அந்த தேவமனிதன், “ஆமாம், நான்தான்” என்றான்

15 முதிய தீர்க்கதரிசி “என்னோடு வீட்டிற்கு வந்து உணவருந்துங்கள்” என்று வேண்டினான்.

16 ஆனால் அந்தத் தேவமனிதன், “என்னால் உங்களோடு வீட்டிற்கு வரமுடியாது. இந்த இடத்தில் உங்களோடு உண்ணவோ குடிக்கவோ கூடாது. 17 கர்த்தர் எனக்கு, ‘இந்த இடத்தில் எதையும் உண்ணவோ குடிக்கவோ கூடாது. நீ சென்ற சாலையின் வழியே மீண்டும் செல்லக்கூடாது’ என்று கட்டளையிட்டுள்ளார்” என்றான்.

18 பிறகு முதிய தீர்க்கதரிசி, “நானும் உங்களைப் போன்று தீர்க்கதரிசிதான்” என்றான். மேலும் அவன் ஒரு பொய்ச் சொன்னான். அவன், “தேவதூதன் ஒருவன் கர்த்தரிடத்திலிருந்து வந்தான். அவன் உங்களை எனது வீட்டிற்கு அழைத்துப்போய் உண்ணவும் குடிக்கவும் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டான்” என்றான்.

19 எனவே தேவமனிதன் முதியவனோடு அவனது வீட்டிற்குப்போய் உண்டான். அவனோடு குடித்தான். 20 அவர்கள் மேஜையின் முன்னால் உட்கார்ந்திருக்கும்போது, கர்த்தர் முதிய தீர்க்கதரிசியிடம் பேசினார். 21 முதியவனும், அந்த தேவமனிதனிடம், “கர்த்தர் உனக்கிட்ட கட்டளையை மீறினாய்! அவருக்குக் கீழ்ப்படியவில்லை. 22 இந்த இடத்தில் எதையும் உண்ணவோ அல்லது குடிக்கவோ கூடாது என்று கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். ஆனால் நீ திரும்பி வந்து உண்டு குடித்தாய். எனவே உனது பிணம் உன் குடும்பக் கல்லறையில் அடக்கம் செய்யப்படாமல் போகும்” என்றான்.

23 தேவமனிதன் உணவருந்தி முடித்தான். முதிய தீர்க்கதரிசி பிறகு கழுதையில் அவனுக்காக சேணத்தை கட்டி அவன் போனான். 24 அவன் பாதையில் பயணம் செய்யும்போது, ஒரு சிங்கம் வந்து அவனைக் கொன்றுபோட்டது. அவனது உடல் பாதையில் கிடக்க அருகில் சிங்கமும் கழுதையும் நின்றுகொண்டிருந்தன. 25 சிலர் அவ்வழியாக வந்தனர். அவர்கள் பிணத்தையும் சிங்கத்தையும் கண்டு முதிய தீர்க்கதரிசியிடம் வந்து தாங்கள் கண்டதைக் கூறினார்கள்.

கொலோசெயர் 3:1-11

கிறிஸ்துவில் புதிய வாழ்க்கை

கிறிஸ்துவோடு நீங்கள் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து விட்டீர்கள். எனவே, பரலோகத்தில் உள்ளவற்றைப் பெற முயற்சி செய்யுங்கள். அங்கே தேவனுடைய வலது பக்கத்தில் கிறிஸ்து வீற்றிருக்கிறார். பூமியில் உள்ளவற்றைப் பற்றி, சிந்திக்காமல் பரலோகில் உள்ளவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள். உங்கள் பழைய பாவ சுபாவமானது இறந்துபோயிற்று. தேவனுக்குள் கிறிஸ்துவோடு உங்கள் புதிய வாழ்க்கை மறைந்திருக்கிறது. கிறிஸ்துவே உங்கள் வாழ்க்கை. அவர் மீண்டும் வரும்போது அவரது மகிமையில் பங்கு கொள்வீர்கள்.

தீமை, பாலியல் குற்றம், பாவ காரியங்களின் ஆளுகைக்கு உள்ளாகுதல், மோகம், தீய ஆசைகள் போன்ற உங்கள் பாவங்களை வாழ்விலிருந்து விலக்குங்கள். போலியான கடவுளுக்குச் சேவை செய்வது என்பதே இவ்விருப்பங்களின் உண்மை அர்த்தம். இவை தேவனைக் கோபப்படுத்தும். இவற்றை நீங்களும் உங்கள் கடந்துபோன பாவ வாழ்க்கையில் செய்தீர்கள்.

ஆனால் இப்பொழுது கோபம், மூர்க்கம், அடுத்தவர் மனம் புண்படும்படி பேசுதல், கெட்ட வார்த்தைகளை உபயோகித்தல் ஆகியவற்றை உங்கள் வாழ்வில் இருந்து விலக்கி வையுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதீர்கள். ஏனென்றால் முன்பு நீங்கள் செய்து வந்த பாவச் செயல்களோடு உங்கள் கடந்தகால பாவ வாழ்க்கையை விட்டிருக்கிறீர்கள். 10 நீங்கள் புதிய வாழ்க்கையை வாழ இருக்கிறீர்கள். உங்கள் புதிய வாழ்க்கையில் நீங்களும் தொடர்ச்சியாக புதியவர் ஆகிறீர்கள். நீங்கள் உங்களைப் படைத்த தேவனைப் போல மாறி வருகிறீர்கள். இப்புதிய வாழ்க்கை உங்களுக்கு தேவனைப் பற்றிய உண்மை அறிவைக் கொடுக்கும். 11 இப்புதிய வாழ்வில் கிரேக்கர்களுக்கும், யூதர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. விருத்தசேதனம் செய்தவர்களுக்கும், செய்யாதவர்களுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை. நாகரீகமுள்ளவனென்றும் நாகரீகமில்லாதவனென்றும் வேறுபாடில்லை. அடிமைகளுக்கும் சுதந்திரமானவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் எதுவும் இல்லை. ஆனால் விசுவாசமுள்ள அனைவரிடமும் கிறிஸ்து இருக்கிறார். எல்லாவற்றையும்விட அவரே அவர்களுக்கு முக்கியமானவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center