Revised Common Lectionary (Complementary)
தௌ
169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.
ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.
12 எனது ஆண்டவர், எருசலேமில் சீயோன் மலையிலும் செய்யவேண்டுமென்று திட்டமிட்டவற்றைச் செய்து முடிப்பார். பிறகு கர்த்தர் அசீரியாவைத் தண்டிப்பார். அசீரியாவின் ராஜா வீண் பெருமைகொண்டவன். அவனது பெருமை அவனைப் பல தீய செயல்களைச் செய்ய வைத்தது. எனவே, தேவன் அவனைத் தண்டிப்பார்.
13 அசீரியாவின் ராஜா, “நான் ஞானமுள்ளவன். எனது சொந்த ஞானத்தாலும் பெலத்தாலும் நான் பல பெரியக் காரியங்களைச் செய்திருக்கிறேன். நான் பல நாடுகளைத் தோற்கடித்துள்ளேன். நான் அவற்றின் செல்வங்களைப் பறித்துள்ளேன். அங்குள்ள ஜனங்களை நான் அடிமைகளாக எடுத்துள்ளேன். நான் மிகவும் பெலமுள்ளவன். 14 எனது சொந்தக் கைகளால் அனைத்து ஜனங்களின் செல்வங்களையும் ஒருவன் ஒரு பறவையின் முட்டைகளையெல்லாம், எடுத்துக்கொள்வதுபோல் எடுத்துக்கொண்டேன். பறவை தன் கூட்டையும் முட்டைகளையும் விட்டுவிட்டுப்போகும். அக்கூட்டைக் காப்பாற்ற எதுவுமில்லை. எந்தப் பறவையும் தன் அலகாலும் இறக்கைகளாலும் எதிர்த்துப்போரிடாது. எனவே, ஜனங்கள் முட்டைகளை எடுத்துக்கொள்கிறார்கள். அதைப்போலவே, பூமியில் உள்ள ஜனங்களையெல்லாம் நான் எடுத்துக்கொள்வதை, எவரும் தடுக்க முடியாது” என்றார்.
15 ஒரு கோடரி அதைப் பயன்படுத்தி வெட்டுகிற வனைவிடச் சிறந்ததல்ல. அரிவாளானது அதை வைத்திருப்பவனைவிடச் சிறந்ததல்ல. ஆனால் அசீரியாவோ தன்னை தேவனைவிட முக்கியமானதாகவும் பெலமுடையதாகவும் நினைக்கிறது. தடியானது தன்னைப் பயன்படுத்தி தண்டிப்பவனைவிட பெலமுள்ளதாகவும், முக்கியமானதாகவும் நினைப்பது போன்றதாகும். 16 அசீரியா தன்னைப் பெரிதாக நினைத்துகொள்ளும். ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தர் அசீரியாவிற்கு எதிராக மிகப் பயங்கரமான நோயை அனுப்புவார். நோயுற்றவன் தன் எடையை இழப்பது போன்று அசீரியா தனது செல்வத்தையும் பெலத்தையும் இழக்கும். பிறகு அசீரியாவின் மகிமையும் அழியும். எல்லாம் அழியும்வரை நெருப்பு எரிவதுபோல் அது இருக்கும். 17 இஸ்ரவேலின் வெளிச்சமானவர் (தேவன்) ஒரு நெருப்பைப்போன்றவர். பரிசுத்தமானவர் ஜுவாலையைப்போன்றவர். அது ஒரு நெருப்பைப்போன்று முதலில் முட்களையும் நெருஞ்சிகளையும் எரிக்கும். 18 பிறகு, அது பெரிய மரங்களையும், திராட்சைச் தோட்டங்களையும் எரிக்கும், இறுதியாக, ஜனங்கள் உட்பட எல்லாமே அழிக்கப்படும். தேவன் அசீரியாவை அழிக்கும்போது அப்படி இருக்கும். அசீரியா அழுகிய தடியைபோன்றிருக்கும். 19 காட்டில் சில மரங்கள் மட்டும் அவனுக்காக விடப்பட்டிருக்கும். ஒரு சிறுபிள்ளைகூட அவற்றை எண்ண முடியும்.
20 அப்போது, இஸ்ரவேலில் மீதியுள்ள ஜனங்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும் தம்மை அடித்தவர்களைச் சார்ந்திருக்கமாட்டார்கள். அவர்கள் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தரை உண்மையாகவே சார்ந்திருக்கக் கற்றுக்கொள்வார்கள்.
இயேசுதான் கிறிஸ்துவா?
25 எருசலேமில் உள்ள மக்களில் சிலர் “அவர்கள் கொலை செய்ய முயல்கிற மனிதர் இவர்தான். 26 ஆனால் இவரோ எல்லோரும் காணும்படியும் கேட்கும்படியும் உபதேசம் செய்துகொண்டிருக்கிறார். ஒருவரும் அவர் உபதேசிப்பதை நிறுத்திவிட முயற்சி செய்யவில்லை. ஒருவேளை, யூதத் தலைவர்கள் இவர்தான் உண்மையான கிறிஸ்து என்று முடிவு செய்துவிட்டார்கள் போலும். 27 ஆனால் இந்த மனிதர் எங்கிருந்து வருகிறாரென்று நாம் அறிவோம். ஆனால் உண்மையான கிறிஸ்து வரும்போது அவர் எங்கிருந்து வந்தார் என்பது எவருக்கும் தெரியாமல் இருக்கும்” என்றனர்.
28 இயேசு தேவாலயத்தில் தொடர்ந்து உபதேசம் செய்துகொண்டிருந்தார். “ஆம், நான் யார் என்பதையும் எங்கிருந்து வந்தேன் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் நான் என் சொந்த அதிகாரத்தின் பேரில் வரவில்லை. உண்மையான ஒருவரால் நான் அனுப்பப்பட்டேன். நீங்கள் அவரை அறியமாட்டீர்கள். 29 ஆனால் அவரை நான் அறிவேன். நான் அவரிடமிருந்தே வந்தேன். அவர் என்னை அனுப்பினார்” என்றார் இயேசு.
30 இயேசு இவ்வாறு சொன்னபிறகு மக்கள் அவரைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் ஒருவராலும் இயேசுவைத் தொடமுடியவில்லை. இயேசு கொல்லப்படுவதற்கான சரியான நேரம் இன்னும் வரவில்லை.
31 ஆனால் ஏராளமான மக்கள் இயேசுவிடம் நம்பிக்கை வைத்தார்கள். “நாங்கள் கிறிஸ்துவின் வருகைக்காகக் காத்திருக்கிறோம். கிறிஸ்து வந்தால், அவர் இந்த மனிதரைவிட அதிகமான அற்புதங்களைச் செய்வாரோ? இல்லை. எனவே, இந்த மனிதரே கிறிஸ்துவாக இருக்க வேண்டும்” என்றனர்.
இயேசுவைக் கைது செய்ய முயற்சி
32 இயேசுவைப்பற்றி மக்கள் பேசிக்கொள்வதைப் பரிசேயர்கள் அறிந்தனர். தலைமை ஆசாரியரும், பரிசேயரும் தேவாலயச் சேவகர்களை இயேசுவைக் கைதுசெய்ய அனுப்பினர். 33 இயேசு மக்களிடம், “இன்னும் கொஞ்சக் காலம் நான் உங்களோடு இருப்பேன். பிறகு நான் என்னை அனுப்பியவரிடம் திரும்பிப்போவேன். 34 அப்போது என்னை நீங்கள் தேடுவீர்கள். ஆனால் உங்களால் கண்டுபிடிக்க முடியாது. நான் இருக்கும் இடத்துக்கும் உங்களால் வர முடியாது” என்றார்.
35 “நாம் கண்டுபிடிக்க முடியாதபடி இவன் எந்த இடத்திற்குப் போகப்போகிறான்? இவன் நமது மக்கள் வாழ்கிற கிரேக்க நகரங்களுக்குப் போகப் போகிறானா? அல்லது அங்கேயுள்ள கிரேக்க மக்களுக்கு உபதேசிக்கப் போகிறானா? 36 ‘நீங்கள் என்னைத் தேடுவீர்கள், ஆனால் உங்களால் என்னைக் கண்டுபிடிக்க முடியாது’ என்று கூறுகிறானே. ‘நான் இருக்கும் இடத்திற்கு உங்களால் வரமுடியாது’ என்றும் கூறுகிறானே, அதற்கு என்ன பொருள்?” என்று யூதர்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center