Revised Common Lectionary (Complementary)
இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.
54 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும்.
உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும்.
2 தேவன், என் ஜெபத்தைக்கேளும்.
நான் கூறும் காரியங்களைக் கேளும்.
3 தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.
அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
4 பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார்.
என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
5 எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார்.
தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார்.
அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.
6 தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன்.
கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
7 என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன்.
எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.
5 பிறகு அசீரிய ராஜா இஸ்ரவேல் முழுவதும் பயணம் செய்தான். அவன் சமாரியாவிற்கு வந்தான். அவன் அதனை மூன்று ஆண்டுகள் முற்றுகையிட்டான். 6 இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் அசீரிய ராஜா சமாரியாவைப் பிடித்தான். இஸ்ரவேலர்களைச் சிறை பிடித்து அசீரியாவுக்குக் கொண்டு போனான். அவன் அவர்களை கோசான் ஆற்று ஓரமான ஆலாகிலும் ஆபோரிலும் மேதியரின் நகரங்களிலும் குடிவைத்தான்.
7 இஸ்ரவேலர்கள் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்ததால் அவர்களுக்கு இவ்வாறு நடந்தது. கர்த்தர் தாமே இஸ்ரவேலர்களை எகிப்தின் பார்வோனிடமிருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தார்! ஆனால் அவர்கள் வேறு தெய்வங்களை தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். 8 அவர்களுக்கு முன்பு (அந்நிலப்பகுதியில்) அங்கிருந்து கர்த்தர் துரத்தியிருந்த நாட்டினரின் பழக்கங்களை அவர்கள் பின்பற்றினார்கள். அவர்களும் தங்கள் ராஜாக்கள் செய்து கொண்டிருந்தவற்றையே (தீமை) செய்தனர். 9 இஸ்ரவேலர்கள் இரகசியமாக தங்கள் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகக் காரியங்களைச் செய்தனர். அந்தக் காரியங்கள் தவறாயின.
இஸ்ரவேலர்கள் தங்களது சிறிய நகரங்கள் முதல் பெரிய கோட்டையமைந்த நகரங்கள் வரை அவர்களின் எல்லா நகரங்களிலும் மேடைகளை பொய்த் தெய்வங்களின் ஆலயங்களைக் கட்டினார்கள். 10 இவர்கள் ஞாபகக் கற்களையும் அசெரியா தூண்களையும் ஒவ்வொரு மலையின் உச்சியிலும் ஒவ்வொரு பச்சைமரத்தடிகளிலும் உருவாக்கினார்கள். 11 இஸ்ரவேலர்கள் அங்கு நறுமணப் பொருட்களை எரித்து தொழுதுகொண்டனர். ஏற்கெனவே கர்த்தரால் அந்நாட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்ட நாட்டினரைப்போன்றே இவர்களும் செய்து வந்தனர். இஸ்ரவேலர்கள் தீயச் செயல்களைச் செய்துக்கொண்டிருந்தனர். அது கர்த்தரைக் கோபங்கொள்ள செய்தது. 12 கர்த்தர், “நீங்கள் இதனைச் செய்யக்கூடாது” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தாலும் அவர்கள் விக்கிரகங்களுக்கு சேவைச் செய்தனர்.
13 இஸ்ரவேலர்களையும் யூத ஜனங்களையும் ஒவ்வொரு தீர்க்கதரிசிகள் மூலமும் ஞானதிருஷ்டிக்காரர்கள் மூலமும் கர்த்தர் எச்சரித்து வந்தார். கர்த்தர், “நீங்கள் செய்யும் கெட்ட செயல்களில் இருந்து திரும்புங்கள். எனது கட்டளைகளுக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்கள் முற்பிதாக்களுக்கு நான் கொடுத்த சட்டங்களைப் பின்பற்றுங்கள். இச்சட்டங்களை நான் உங்களுக்கு எனது ஊழியக்காரராகிய தீர்க்கதரிசிகள் மூலம் கொடுத்து வந்தேன்” என்றார்.
14 ஆனால் ஜனங்கள் அதனைக் கவனிக்கவில்லை. அவர்கள் தம் முற்பிதாக்களைப் போலவே பிடிவாதமுள்ளவர்களாய் இருந்தனர். அவர்களின் முற்பிதாக்களும் தமது தேவனாகிய கர்த்தரை நம்பவில்லை. 15 ஜனங்கள் கர்த்தருடைய சட்டங்களை மறுத்தனர். தமது முற்பிதாக்களோடு கர்த்தர் செய்து கொண்ட உடன்படிக்கையும் மறுத்தனர். கர்த்தருடைய எச்சரிக்கைகளையும் அவர்கள் கவனிக்க மறுத்தனர். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களை தொழுதுக் கொண்டு பயனற்றுப்போனார்கள். அவர்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களைப் போன்று வாழ்ந்தனர். ஆனால் அது கர்த்தரால் விலக்கப்பட்ட வாழ்க்கையாய் இருந்தது.
16 ஜனங்கள் அவர்களது தேவனாகிய கர்த்தருடைய கற்பனைகளைப் பின்பற்றுவதை நிறுத்தினார்கள். அவர்கள் இரண்டு பொற்கன்றுக்குட்டிகளையும் உருவத் தூண்களை நாட்டி வானத்தில் உள்ள நட்சத்திரங்களையெல்லாம் தொழுதுகொண்டனர். பாகாலுக்கு சேவை செய்தனர். 17 நெருப்பில் தங்கள் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவர்கள் பலியாகக் கொடுத்தனர். எதிர்காலத்தை அறிந்துக் கொள்ள மந்திரங்களையும் சூனியங்களையும் பயன்படுத்தினார்கள். பாவம் என்று கர்த்தர் சொன்னவற்றுக்கு அவர்கள் தம்மைத்தாமே பலியாக்கிக்கொண்டு கர்த்தருடைய கோபத்துக்கு ஆளானார்கள். 18 எனவே இஸ்ரவேலில் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு அவர்களைத் தம் பார்வையிலிருந்து அப்புறப்படுத்தினார். யூதாவின் கோத்திரத்தைத் தவிர, வேறு எந்த இஸ்ரவேலர்களையும் கர்த்தர் அங்கு விட்டுவைக்கவில்லை.
29 “வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.
33 “நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.
35 “ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் குமாரனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.
எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு
(லூக்கா 13:34-35)
37 “எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’(A) என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center