Revised Common Lectionary (Complementary)
இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த துதிப் பாடல்களுள் ஒன்று.
139 கர்த்தாவே, நீர் என்னை சோதித்தீர்.
என்னைப் பற்றிய எல்லாவற்றையும் நீர் அறிகிறீர்.
2 நான் உட்காரும்பொழுதும் எழும்பொழுதும் நீர் அறிகிறீர்.
வெகுதூரத்திலிருந்தே எனது எண்ணங்களை நீர் அறிகிறீர்.
3 கர்த்தாவே, நான் போகுமிடத்தையும் நான் படுக்கும் இடத்தையும் நீர் அறிகிறீர்.
நான் செய்யும் ஒவ்வொன்றையும் நீர் அறிகிறீர்.
4 கர்த்தாவே, நான் சொல்ல விரும்பும் வார்த்தைகள்
என் வாயிலிருந்து வெளிவரும் முன்பே நீர் அறிகிறீர்.
5 கர்த்தாவே, என்னைச் சுற்றிலும், எனக்கு முன்புறமும் பின்புறமும் நீர் இருக்கிறீர்.
நீர் உமது கைகளை என் மீது மென்மையாக வைக்கிறீர்.
6 நீர் அறிகின்றவற்றைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன்.
நான் புரிந்துக்கொள்வதற்கு மிகவும் அதிகமானதாக அது உள்ளது.
7 நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது.
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.
8 கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர்.
மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.
9 கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர்.
நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
10 அங்கும் உமது வலது கை என்னைத் தாங்கும்,
என் கைகளைப் பிடித்து நீர் வழிநடத்துகிறீர்.
11 கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும்,
பகல் இரவாக மாறிப்போயிற்று.
“இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
12 ஆனால் கர்த்தாவே,
இருளும் கூட உமக்கு இருளாக இருப்பதில்லை.
இரவும் பகலைப்போல உமக்கு வெளிச்சமாயிருக்கும்.
13 கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர்.
என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.
14 கர்த்தாவே, நான் உம்மைத் துதிக்கிறேன்!
நீர் என்னை வியக்கத்தக்க, அற்புதமான வகையில் உண்டாக்கியிருக்கிறீர்.
நீர் செய்தவை அற்புதமானவை என்பதை நான் நன்கு அறிவேன்!
15 நீர் என்னைப்பற்றிய எல்லாவற்றையும் அறிகிறீர்.
என் தாயின் கருவில் மறைந்திருந்து என் சரீரம் உருவெடுக்கும்போது என் எலும்புகள் வளர்வதை நீர் கவனித்திருக்கிறீர்.
16 என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர்.
உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர்.
நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
17 உமது எண்ணங்கள் எனக்கு
முக்கியமானவை.
தேவனே, உமக்கு மிகுதியாகத் தெரியும்.
18 நான் அவற்றை எண்ண ஆரம்பித்தால் அவை மணலைக்காட்டிலும் அதிகமாயிருக்கும்.
நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடுகூட இருக்கிறேன்.
தேவன் எரேமியாவை அழைக்கிறார்
4 கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,
5 “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
6 பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.
7 ஆனால் கர்த்தர் என்னிடம்,
“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
8 “எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
9 பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,
“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10 இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
அழிக்கவும், கவிழ்க்கவும்,
கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.
யூதர்களின் அறியாமை
21 மீண்டும் இயேசு மக்களிடம், “நான் உங்களை விட்டுப் போகிறேன். நீங்கள் என்னைத் தேடுவீர்கள். நீங்கள் உங்கள் பாவங்களோடு சாவீர்கள். நான் போகிற இடத்துக்கு உங்களால் வரமுடியாது” என்றார்.
22 எனவே யூதர்கள் தங்களுக்குள், “இயேசு தன்னைத்தானே கொன்றுகொள்வாரா? அதனால்தான் நான் போகிற இடத்துக்கு உங்களால் வர முடியாது என்று கூறினாரா?” என்று கேட்டுக்கொண்டனர்.
23 அந்த யூதர்களைப் பார்த்து இயேசு, “நீங்கள் கீழே இருந்து வந்தவர்கள். ஆனால் நான் மேலே இருந்து வந்தவன். நீங்கள் இந்த உலகத்துக்கு உரியவர்கள். ஆனால் நான் இந்த உலகத்தைச் சார்ந்தவன் அல்லன். 24 நீங்கள் உங்கள் பாவங்களிலேயே மரிப்பீர்கள் என்று நான் சொல்லியிருக்கிறேன். ஆம். நானே[a] அவர் என்பதை நம்பாவிட்டால் உங்கள் பாவங்களோடேயே நீங்கள் மரணமடைவீர்கள்.”
25 அதற்கு யூதர்கள், “நீங்கள் யார்?” என்று கேட்டார்கள்.
இயேசுவோ அவர்களிடம், “நான் ஆரம்பத்திலேயே உங்களுக்குச் சொல்லியவர்தான். 26 உங்களைப்பற்றிச் சொல்ல என்னிடம் நிறைய செய்திகள் உள்ளன. நான் உங்களை நியாயம் தீர்க்கவும் முடியும். என்னை அனுப்பினவரிடமிருந்து கேட்டவற்றையே நான் மக்களுக்குச் சொல்கிறேன். அவர் உண்மையைப் பேசுகிறவர்” என்றார்.
27 இயேசு யாரைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறார் என்று யூதர்கள் அறிந்துகொள்ள முடியாமல் இருந்தனர். இயேசு அவர்களிடம் பிதாவைப்பற்றி கூறிக்கொண்டிருந்தார். 28 எனவே இயேசு மக்களிடம், “நீங்கள் மனித குமாரனைக் கொல்லும்போது நான்தான் என்று அறிந்துகொள்வீர்கள். அத்துடன் நான் இதுவரை செய்த செயல்களை என் சொந்த அதிகாரத்தில் செய்யவில்லை என்பதையும் அறிவீர்கள். பிதா எனக்குச் சொன்னவற்றையே நான் உங்களுக்குச் சொன்னேன் என்பதையும் அறிந்துகொள்வீர்கள். 29 என்னை அனுப்பிய ஒருவர் எப்போதும் என்னோடேயே இருக்கிறார். அவருக்கு விருப்பமானவற்றையே நான் எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன். எனவே, அவர் என்னைத் தனியாக விட்டுவிடவில்லை” என்றார். 30 இவ்வாறு இயேசு சொல்லிக்கொண்டிருந்தபோது ஏராளமான மக்கள் அவரிடம் விசுவாசம் வைத்தனர்.
பாவத்திலிருந்து விடுதலை
31 இயேசு தன்மீது நம்பிக்கை வைத்த யூதர்களைப் பார்த்து, “நீங்கள் என் உபதேசத்தைக் கைக்கொண்டு வந்தால், நீங்கள் உண்மையில் எனது சீஷர்களாக இருப்பீர்கள். 32 பின்னர் நீங்கள் உண்மையை அறிந்துகொள்வீர்கள். அந்த உண்மை உங்களுக்கு விடுதலையைத் தரும்” என்றார்.
33 “நாங்கள் ஆபிரகாமின் மக்கள். நாங்கள் ஒருபோதும் அடிமைகளாய் இருந்ததில்லை. ஆகவே நாங்கள் விடுதலை பெறுவோம் என்று ஏன் சொல்கிறீர்?” என்று யூதர்கள் கேட்டனர்.
34 அதற்குப் பதிலாக, “நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், பாவம் செய்கிற ஒவ்வொருவனும் அடிமைதான். பாவமே அவனது எஜமானன். 35 ஓர் அடிமை எப்பொழுதும் ஒரு குடும்பத்தில் நிலையாக இருக்கமாட்டான். குமாரன் என்றென்றும் குடும்பத்தில் நிலைத்திருக்கிறார். 36 எனவே குமாரன் உங்களை விடுதலை செய்தால் நீங்கள் உண்மையான விடுதலையைப் பெறுவீர்கள். 37 நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் நீங்கள் என்னைக் கொல்ல விரும்புகிறீர்கள். ஏனென்றால் நீங்கள் என் உபதேசத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. 38 என் பிதா எனக்குக் காட்டியவற்றையே நான் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால் உங்கள் பிதா உங்களுக்குச் சொன்னபடியே செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center