Read the Gospels in 40 Days
சகேயு
19 எரிகோ பட்டணத்தின் வழியாக இயேசு சென்றுகொண்டிருந்தார். 2 எரிகோவில் சகேயு என்னும் பெயருடைய மனிதன் இருந்தான். அவன் செல்வந்தனும், முக்கியமானவனுமான ஒரு வரி வசூலிப்பவனாவான். 3 அவன் இயேசுவைக் காண விரும்பினான். இயேசுவைக் காண விரும்பிய இன்னும் பலரும் அங்கு இருந்தார்கள். மக்களுக்குப் பின்னே நின்றபடி இயேசுவைப் பார்க்க முடியாதபடி சகேயு குள்ளனாக இருந்தான். 4 எனவே, அவன் இயேசு கடந்து செல்லும் இடத்தையடைய வேகமாக ஓடிச் சென்றான். இயேசுவைப் பார்க்கும்பொருட்டு ஓர் அத்தி மரத்தின்மீது சகேயு ஏறினான்.
5 இயேசு அவ்விடத்துக்கு வந்தபோது, மேலே ஏறிட்டுப் பார்த்து சகேயு மரத்தின்மீது இருப்பதைக் கண்டார். இயேசு அவனை நோக்கி, “சகேயுவே, விரைந்து வா. கீழே இறங்கு. இன்றைக்கு நான் உன் வீட்டில் தங்கவேண்டும்” என்றார்.
6 சகேயு விரைந்து கீழே இறங்கினான். தன் வீட்டில் இயேசுவை வரவேற்பதில் அவன் மிகவும் மகிழ்ந்தான். 7 எல்லா மக்களும் இதைக் கண்டனர். அவர்கள், “எத்தகைய மனிதனோடு இயேசு தங்குகிறார் என்பதைப் பாருங்கள். சகேயு ஒரு பாவி” என்று புகார் கூறினார்கள்.
8 சகேயு கர்த்தரை நோக்கி, “நான் நல்லதைச் செய்ய விரும்புகிறேன். என் பணத்தில் பாதியை ஏழைகளுக்குக் கொடுப்பேன். நான் யாரையாவது ஏமாற்றி இருந்தால் அவனுக்கு நான்கு மடங்கு பணத்தைத் திரும்பக் கொடுப்பேன்” என்றான்.
9 இயேசு, “இந்த மனிதன் நல்லவன். உண்மையில் ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவன். இன்றைக்கு சகேயு அவனது பாவங்களில் இருந்து மீட்கப்பட்டான். 10 மனித குமாரன் இழந்துபோன மனிதர்களைக் கண்டு அவர்களை மீட்கவே வந்தார்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துங்கள்(A)
11 எருசலேமை நெருங்கி இயேசு பயணம் செய்துகொண்டிருந்தார். தேவனின் இராஜ்யம் சீக்கிரம் வருமென்று சில மக்கள் எண்ணினார்கள். 12 மக்களின் எண்ணத்தை இயேசு அறிந்தார். எனவே அவர்களுக்குப் பின்வரும் உவமையைச் சொன்னார்: “ஒரு உயர்ந்த கௌரவம்மிக்க மனிதன், மன்னனாக நியமனம் பெறும்படியாகத் தூர தேசப் பயணத்திற்காக ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தான். பின்னர் திரும்பி வந்து அவனது மக்களை அரசாள வேண்டுமென்று அவன் திட்டமிட்டான். 13 எனவே அவன் தனது வேலைக்காரர்களில் பத்து பேரை அழைத்தான். அவன் ஒவ்வொரு வேலைக்காரனுக்கும் ஒரு பை நிறைய பணத்தைக் கொடுத்தான். ‘இந்தப் பணத்தைக்கொண்டு நான் வரும் வரைக்கும் வியாபாரம் செய்யுங்கள்’ என்றான். 14 அந்த இராஜ்யத்தின் மக்கள் அம்மனிதனை வெறுத்தார்கள். எனவே அம்மக்கள் அவன் போகும் தேசத்துக்கெல்லாம் அவனைப் பின் தொடர்ந்து செல்லுமாறு ஒரு கூட்டத்தினரை அனுப்பினர். மற்ற தேசத்துக்கு அக்கூட்டத்தினர் சென்று ‘இந்த மனிதன் எங்களுக்கு அரசன் ஆவதை நாங்கள் விரும்பவில்லை’ என்றார்கள்.
15 “ஆனால் அம்மனிதன் அரசனானான். அவன் தன் நாட்டுக்குத் திரும்பிய பின்பு, ‘நான் பணம் கொடுத்துள்ள அந்த வேலைக்காரரை அழையுங்கள். அதைக்கொண்டு அவர்கள் இன்னும் அதிகமாக எவ்வளவு பணம் சம்பாதித்திருக்கிறார்கள் என்று அறிய நான் விரும்புகிறேன்’ என்றான். 16 முதல் வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் பத்து பை நிரம்பும் அளவுக்குப் பணம் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 17 அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘நல்லது, நீ ஒரு நல்ல வேலைக்காரன். சிறிய காரியங்களில் உன்னை நம்பக் கூடும் என்று காண்கிறேன். ஆகவே இப்போது எனது பட்டணங்களில் பத்து பட்டணங்களை ஆளும்படியாக உன்னை நியமிப்பேன்’ என்றான்.
18 “இரண்டாவது வேலைக்காரன் வந்து, ‘ஐயா, நீங்கள் கொடுத்த ஒரு பை பணத்தைக் கொண்டு நான் ஐந்து பைகள் சம்பாதித்திருக்கிறேன்’ என்றான். 19 மன்னன் வேலைக்காரனை நோக்கி, ‘நீ ஐந்து பட்டணங்கள் மேல் ஆட்சி செய்யலாம்’ என்றான்.
20 “பின்பு மூன்றாவது வேலைக்காரன் வந்தான் அந்த வேலைக்காரன் அரசனை நோக்கி, ‘ஐயா, இதோ உங்களுடைய பணப் பை இருக்கிறது. நான் அதை ஒரு துணியில் பொதிந்து மறைத்து வைத்தேன். 21 உங்கள் வலிமையைக் கண்டு நான் பயந்து போய் இருந்தேன். நீங்கள் கடினமான மனிதர் என்பதை அறிவேன். உங்களால் சம்பாதிக்கப்படாத பணத்தைக் கூட நீங்கள் எடுத்துக்கொள்கிறீர்கள். உங்களால் பயிரிடப்படாத தானியத்தைக் கூட நீங்களே சேர்த்துக் கொள்கிறீர்கள்’ என்றான்.
22 “அரசன் அந்த வேலைக்காரனை நோக்கி, ‘தீய வேலைக்காரனே, உனது சொந்த வார்த்தையாலேயே உன்னை நிராகரிப்பேன். நான் ஒரு கடினமான மனிதன் என்றாய். நான் சம்பாதிக்காத பணத்தை எடுத்துக்கொள்பவன் என்றும், நான் பயிரிடாத தானியத்தைச் சேர்த்துக்கொள்பவன் என்றும் கூறினாய். 23 அது உண்மையென்றால் நீ என் பணத்தை வங்கியில் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அப்போது நான் திரும்பி வந்தபோது என் பணத்துக்கு வட்டியாவது கிடைத்திருக்கும்’ என்றான். 24 பின் அங்கு நின்றுகொண்டிருந்த மனிதரை நோக்கி, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து பையை எடுத்து பத்து பைகள் நிரம்ப பணம் சம்பாதித்தவனுக்குக் கொடுங்கள்’ என்றான்.
25 “அந்த மனிதர்கள் அரசனிடம், ‘ஐயா, அந்த வேலைக்காரனிடம் ஏற்கெனவே பத்துப் பைகள் பணம் இருக்கின்றனவே,’ என்றார்கள்.
26 “அரசன், ‘தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்துகிறவனுக்கு இன்னும் அதிகமாகக் கிடைக்கும். தன்னிடம் இருப்பவற்றைப் பயன்படுத்தாத மனிதனிடம் இருப்பவையும் எடுத்துக்கொள்ளப்படும். 27 இப்போது எனது பகைவர்கள் எங்கே? தமக்கு அரசனாக நான் ஆவதை விரும்பாத மக்கள் எங்கே? என் பகைவர்களை அழைத்து வந்து அவர்களைக் கொல்லுங்கள். அவர்கள் மடிவதை நான் பார்ப்பேன்’ என்றான்.”
எருசலேமுக்குள் இயேசு(B)
28 இவற்றையெல்லாம் கூறியபின்பு இயேசு, எருசலேமை நோக்கிப் பயணத்தைத் தொடர்ந்தார். 29 ஒலிவ மலையருகே காணப்பட்ட பெத்பகே, பெத்தானியா ஆகிய ஊர்களருகே இயேசு வந்தபோது, அவர் இரண்டு சீஷர்களை அனுப்பினார். 30 அவர், “நீங்கள் பார்க்கிற அந்த ஊருக்குள் செல்லுங்கள். ஊருக்குள் நுழையும்போதே அங்கு ஒரு கழுதைக் குட்டி கட்டப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். எந்த மனிதனும் அதன்மீது ஏறியதில்லை. அக்கழுதையை அவிழ்த்து என்னிடம் கொண்டு வாருங்கள். 31 எந்த மனிதனாவது அக்கழுதையை ஏன் ஓட்டிக்கொண்டு போகிறீர்கள் என்று கேட்டால் நீங்கள், ‘எங்கள் எஜமானருக்கு இக்கழுதை வேண்டும்’ என்று சொல்லுங்கள்” என்றார்.
32 இரண்டு சீஷர்களும் ஊருக்குள் சென்றார்கள். இயேசு கூறியபடியே கழுதைக்குட்டியைக் கண்டார்கள். 33 சீஷர்கள் கட்டப்பட்டிருந்த அக்கழுதையை அவிழ்த்தார்கள். கழுதையின் சொந்தக்காரர்கள் வந்தார்கள். அவர்கள் சீஷரை நோக்கி, “எதற்காகக் கழுதையை அவிழ்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றார்கள்.
34 சீஷர்கள், “ஆண்டவருக்குத் தேவையாக இருக்கிறது” என்று பதில் அளித்தார்கள். 35 சீஷர்கள் கழுதைக் குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து தம் மேலங்கியை அதன்மேல் போட்டார்கள். பின்பு இயேசுவைக் கழுதையின் மேல் அமர்த்தினார்கள். 36 இயேசு எருசலேமுக்குச் செல்லும் பாதை வழியாகக் கழுதையின் மேல் ஏறிச் சென்றார். இயேசுவுக்கு முன்பாக சீஷர்கள் தம் அங்கிகளைப் பாதையில் விரித்தார்கள்.
37 எருசலேமுக்கு அருகில் இயேசு வந்துகொண்டிருந்தார். அவர் ஒலிவமலை அடி நகரத்திற்கருகே வந்திருந்தார். அவரது சீஷர்கள் அனைவரும் மகிழ்வோடு இருந்தார்கள். அவர்கள் உரத்த குரலில் களிப்புடன் தேவனை வாழ்த்தினார்கள். அவர்கள் தாம் பார்த்த எல்லா வல்லமையான செயல்களுக்கும் தேவனுக்கு நன்றி தெரிவித்தார்கள். 38 அவர்கள்,
“கர்த்தரின் பெயரில் வருகின்ற அரசரை தேவன் ஆசீர்வதிப்பாராக!” [a]
“பரலோகத்தில் அமைதியும் தேவனுக்கு மகிமையும் உண்டாவதாக!”
என்றனர்.
39 கூட்டத்தில் இருந்த பரிசேயரில் சிலர் இயேசுவிடம், “போதகரே, இவற்றைக் கூறாதபடிக்கு சீஷருக்குச் சொல்லுங்கள்” என்றார்கள்.
40 ஆனால் இயேசு, “நான் உங்களுக்குச் சொல்கிறேன். இக்காரியங்கள் சொல்லப்பட வேண்டியவை. என் சீஷர்கள் இவற்றைக் கூறாவிட்டால், இக்கற்கள் அவற்றைக் கூறும்” என்று பதிலுரைத்தார்.
எருசலேமுக்காக அழுதல்
41 இயேசு எருசலேமுக்கு அருகே வந்தார். அவர் அப்பட்டணத்தைப் பார்த்து, அதற்காக அழ ஆரம்பித்தார். 42 இயேசு எருசலேமைப் பார்த்துப் பேசினார். அவர், “உனக்கு சமாதானத்தை எது வரவழைக்கும் என்று இன்றைக்கு நீ தெரிந்துகொண்டிருந்தால் நன்றாக இருக்கும். ஆனால் உனக்கு அது மறைக்கப்பட்டிருப்பதால் உன்னால் அதை அறிந்துகொள்ளமுடியாது. 43 உன் பகைவர்கள் உன்னைச் சுற்றிலும் ஒரு மதிலை எழுப்பும் காலம் வந்து கொண்டிருக்கிறது. உன் பகைவர்கள் உன்னை எல்லாப் பக்கங்களிலிருந்தும் வளைத்துக் கொள்வார்கள். 44 அவர்கள் உன்னையும் உன்னிலுள்ள எல்லா மக்களையும் அழித்து விடுவார்கள். உன் கட்டிடங்களில் உள்ள கற்களில் ஒன்றும் ஒன்றின் மேல் ஒன்று நிலைத்திருப்பதில்லை. தேவன் உன்னை மீட்பதற்காக வந்த காலத்தை நீ அறியாததால் இவையெல்லாம் நடக்கும்” என்றார்.
தேவாலயத்திற்குச் செல்லுதல்(C)
45 இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார். 46 அவர்களிடம் இயேசு, “‘என் வீடு பிரார்த்தனைக் குரிய வீடாக இருக்கும்’ [b] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் அதைத் திருடர்கள் ஒளிந்திருக்கிற இடமாக [c] நீங்கள் மாற்றி இருக்கிறீர்கள்” என்றார்.
47 ஒவ்வொரு நாளும் இயேசு தேவாலயத்தில் மக்களுக்குப் போதித்தார். ஆசாரியரும், வேதபாரகரும் மக்களின் அதிகாரிகளும் இயேசுவைக் கொல்ல விரும்பினார்கள். 48 ஆனால் எல்லா மக்களும் இயேசுவைக் கவனமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். இயேசு கூறிய விஷயங்களை மிகவும் உற்சாகமாகக் கவனித்தார்கள். எனவே தலைமை ஆசாரியருக்கும், வேதபாரகருக்கும், அதிகாரிகளுக்கும் இயேசுவை எவ்வாறு கொல்ல முடியும் என்பது தெரியவில்லை.
யூத அதிகாரிகளின் கேள்வி(D)
20 ஒரு நாள் இயேசு தேவாலயத்தில் இருந்தார். அவர் மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். தேவனுடைய இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை இயேசு மக்களுக்குக் கூறினார். தலைமை ஆசாரியரும், வேதபாரகரும், முதிய யூத அதிகாரிகளும் இயேசுவிடம் பேசுவதற்கு வந்தனர். 2 அவர்கள், “இக்காரியங்களைச் செய்வதற்கு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது? எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த அதிகாரத்தை உங்களுக்குக் கொடுத்தவர் யார்?” என்றார்கள்.
3 இயேசு பதிலாக, “நானும் உங்களை ஒரு கேள்வி கேட்பேன். 4 மக்களுக்கு யோவான் ஞானஸ்நானம் கொடுத்தபோது அது தேவனிடமிருந்து வந்ததா? அல்லது மனிதனிடமிருந்து வந்ததா? எனக்குச் சொல்லுங்கள்” என்றார்.
5 ஆசாரியரும், வேதபாரகரும், யூத அதிகாரிகளும் இதைக் குறித்துப் பேசினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர், “‘யோவானின் ஞானஸ்நானம் தேவனிடமிருந்து வந்தது’ என்று நாம் பதில் சொன்னால் அவர், ‘அப்படியானால் நீங்கள் யோவானை ஏன் நம்பவில்லை?’ என்பார். 6 ஆனால் நாம், ‘யோவானின் ஞானஸ்நானம் மனிதரிடம் இருந்து வந்தது’ என்றுக் கூறினால் எல்லா மக்களும் நம்மைக் கல்லெறிந்து கொல்வார்கள். யோவான் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் ஒத்துக்கொண்டிருப்பதால் நம்மைக் கொல்வார்கள்” என்று பேசிக்கொண்டனர். 7 எனவே அவர்கள், “எங்களுக்கு விடை தெரியவில்லை” என்று பதில் சொன்னார்கள்.
8 எனவே இயேசு அவர்களை நோக்கி, “இக்காரியங்களை எந்த அதிகாரத்தால் செய்கிறேன் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லமாட்டேன்” என்றார்.
திராட்சைத்தோட்ட உவமை(E)
9 பின்னர் இயேசு மக்களுக்கு இவ்வுவமையைச் சொன்னார்: “ஒரு மனிதன் தன் வயலில் திராட்சைச் செடிகளை பயிரிட்டான். சில உழவர்களுக்கு அந்த நிலத்தைக் குத்தகையாகக் கொடுத்தான். பின்னர் நீண்டகாலம் அங்கிருந்து சென்றுவிட்டான். 10 திராட்சைப் பழங்களைப் பறிக்கும் காலம் நெருங்கியது. அம்மனிதன் உழவர்களிடம் அவனது வேலைக்காரனைத் தனக்குரிய பாகமான திராட்சை பழங்களைப் பெற்றுவருமாறு அனுப்பினான். ஆனால் உழவர்கள் அந்த வேலைக்காரனை அடித்து ஒன்றுமே தராமல் அனுப்பிவிட்டார்கள். 11 எனவே அம்மனிதன் இன்னொரு வேலைக்காரனை அனுப்பினான். அந்த உழவர்கள் இந்த வேலைக்காரனையும் கூட அடித்தார்கள். அவனைக் கொஞ்சமும் மதிக்கவில்லை. அவனுக்கு எதுவும் கொடுக்காமல் அவனை அனுப்பிவிட்டார்கள். 12 எனவே அம்மனிதன் உழவர்களிடம் மூன்றாவது வேலைக்காரனை அனுப்பினான். உழவர்கள் அவனை அடித்துக் காயப்படுத்தித் துரத்திவிட்டார்கள்.
13 “வயலின் சொந்தக்காரன். ‘நான் இப்போது என்ன செய்வேன்? நான் எனது மகனை அனுப்புவேன். நான் என் மகனை மிகவும் நேசிக்கிறேன். உழவர்கள் என் மகனை மதிக்கக்கூடும்’ என்று எண்ணினான். 14 உழவர்கள் மகனைப் பார்த்ததும் தமக்குள், ‘இவன் நிலச் சொந்தக்காரனின் மகன். இவ்வயல் இவனுக்கே சேரும். இவனைக் கொன்றுவிட்டால் இவ்வயல் நமக்குச் சொந்தமாகும்’ என்று பேசிக்கொண்டனர். 15 எனவே, மகனை வயலுக்கு வெளியே தூக்கி எறிந்து அவனைக் கொன்றுவிட்டனர்.
“வயலின் சொந்தக்காரன் என்ன செய்வான்? 16 அவன் வந்து அந்த உழவர்களைக் கொன்றுபோடுவான். பிற்பாடு அந்த வயலை வேறு உழவர்கள் கையில் ஒப்படைப்பான்” என்றார். மக்கள் இவ்வுவமையைக் கேட்டனர்.
அவர்கள், “இல்லை, இவ்வாறு நடக்க அனுமதிக்கலாகாது” என்றனர். 17 ஆனால் இயேசு அவர்கள் கண்களைக் கூர்ந்து நோக்கியவாறு “அப்படியானால் இந்த வசனம் எதைக் கூறுகிறது:
“‘வீடு கட்டுகிறவர்கள் வேண்டாம் எனக் கருதிய கல்லே மூலைக்குத் தலைக் கல்லாயிற்று’ (F)
18 அந்தக் கல்லின்மீது விழுகிற ஒவ்வொரு மனிதனும் நொறுங்கிப்போவான். அந்தக் கல் உங்கள் மீது விழுந்தால் அது உங்களை நசுக்கிப்போடும்!” என்றார்.
19 யூத அதிகாரிகள் இயேசு கூறிய இவ்வுவமையைக் கேட்டனர். இது அவர்களைப் பற்றியே கூறப்பட்டது என்பது அவர்களுக்குத் தெரிந்தது. அதே சமயத்தில் அவர்கள் இயேசுவைச் சிறைப்பிடிக்க விரும்பினார்கள். ஆனால் மக்கள் என்ன செய்வார்களோ என்று நினைத்து அவர்கள் அஞ்சினர்.
யூத அதிகாரிகளின் தந்திரம்(G)
20 எனவே வேதபாரகரும், தலைமை ஆசாரியரும் இயேசுவைப் பிடிப்பதற்கு ஏற்ற தருணத்தை எதிர்பார்த்திருந்தார்கள். அவர்கள் சில மனிதர்களை இயேசுவிடம் அனுப்பினார்கள். அவர்களை நல்ல மனிதர்களாக நடிக்கும்படியாகக் கூறியிருந்தார்கள். இயேசு கூறியவற்றில் குற்றம் காணும்படியாக அவர்கள் விரும்பினார்கள். (ஏதேனும் தவறு கண்டுபிடித்தால் அவர்கள் அதிகாரமும் ஆற்றலும் வாய்ந்த ஆளுநரிடம் இயேசுவை ஒப்படைக்க முடியும்.) 21 எனவே, அந்த மனிதர்கள் இயேசுவை நோக்கி, “போதகரே, நீர் சொல்வதும் போதிப்பதும் உண்மை என்று எங்களுக்குத் தெரியும். எல்லா மக்களுக்கும் அவற்றைப் போதிக்கிறீர். தேவனின் வழியைக் குறித்த உண்மையையே எப்போதும் கற்பிக்கிறீர். 22 இராயனுக்கு நாங்கள் வரி கட்டுவது சரியா இல்லையா என்பதை எங்களுக்குக் கூறுங்கள்?” என்றார்கள்.
23 இயேசுவை வஞ்சிக்க அம்மனிதர்கள் முயற்சி செய்கிறார்கள் என்பது அவருக்குத் தெரியும். இயேசு அவர்களை நோக்கி, 24 “ஒரு காசை எனக்குக் காட்டுங்கள். யாருடைய பெயர் அதில் இருக்கிறது? யாருடைய படம் அதில் உள்ளது?”
என்று கேட்டார். அவர்கள், “இராயனுடையது” என்றார்கள்.
25 இயேசு அவர்களை நோக்கி “இராயனுடையதை இராயனுக்குக் கொடுங்கள். தேவனுடையவற்றை தேவனுக்குக் கொடுங்கள்” என்றார்.
26 அவரது ஞானம்மிக்க பதிலைக் கேட்டு அம்மனிதர்கள் ஆச்சரியமுற்றனர். அவர்களால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தம் தந்திரங்களில் அவர்கள் தோல்வியடைந்தார்கள். மக்களின் முன்பாக அவர்களால் இயேசுவை ஏமாற்ற முடியவில்லை. அவர்கள் இயேசுவுக்கு எதிராகப் பயன்படுத்தக்கூடிய எதையும் இயேசு சொல்லவில்லை.
சதுசேயர்களின் தந்திரம்(H)
27 சில சதுசேயர்கள் இயேசுவிடம் வந்தனர். (மக்கள் மரணத்தினின்று உயிர் பெறுவதில்லை என்று சதுசேயர்கள் நம்புகிறார்கள்) அவர்கள் இயேசுவை நோக்கி, 28 “போதகரே, திருமணமான மனிதன் குழந்தைகளின்றி இறந்துபோனால், அவனது சகோதரன் அவன் மனைவியைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று மோசே எழுதி இருந்தார். அப்படியானால் இறந்த சகோதரனுக்காகக் குழந்தைகள் அவர்களுக்குப் பிறக்கும். 29 ஓரிடத்தில் ஏழு சகோதரர்கள் வாழ்ந்தனர். முதல் சகோதரன் ஒருத்தியை மணந்து குழந்தைகள் இல்லாமல் இறந்தான். 30 பிறகு இரண்டாம் சகோதரன் அந்தப் பெண்ணை மணந்து இறந்து போனான். 31 மூன்றாமவனும் அவளை மணந்து பின்னர் இறந்தான். ஏழு சகோதரர்களுக்கும் இதுவே நடந்தது. அவர்கள் எல்லோரும் குழந்தைகளின்றி இறந்தார்கள். 32 அவர்கள் அனைவரும் இறந்த பிறகு அவளும் இறந்தாள். 33 எல்லா ஏழு சகோதரர்களும் அவளை மணந்தனர். மரணத்தினின்று மக்கள் எழும்போது, அந்தப் பெண் யாருக்கு மனைவியாவாள்?” என்று கேட்டார்கள்.
34 இயேசு சதுசேயரை நோக்கி, “பூமியில் மக்கள் ஒருவரையொருவர் மணந்துகொள்கின்றனர். 35 சிலர் மரணத்தினின்று எழும்பி அடுத்த உலகத்தில் பங்கு பெறும் தகுதியைப் பெறுவர். அந்த வாழ்வில் அவர்கள் மணம் செய்துகொள்ளமாட்டார்கள். 36 அந்த வாழ்வில் அவர்கள் தேவதூதர்களைப் போல் இருப்பார்கள். அவர்களால் சாகமுடியாது. அவர்கள் மரணத்தினின்று எழுந்ததால் தேவனின் மக்களாவர். 37 மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவர் என்பதை மோசே தெளிவாகக் காட்டினான். எரியும் புதரைப் பற்றி மோசே எழுதியபோது, அவன் கர்த்தராகிய தேவனை ஆபிரகாமின் தேவன் என்றும், ஈசாக்கின் தேவன் என்றும், யாக்கோபின் தேவன் [d] என்றும் கூறினான். 38 அவர்களின் தேவன் தானே என தேவன் கூறியதால் அந்த மனிதர்கள் உண்மையாக இறக்கவில்லை. வாழும் மக்களின் தேவன் அவரே. தேவனுக்கு உரியவர்கள் வாழ்பவர்களே ஆவர்” என்றார்.
39 வேதபாரகரில் சிலர், “போதகரே, உங்கள் பதில் நன்றாக இருந்தது” என்றனர். 40 அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.
கிறிஸ்து தாவீதின் குமாரனா?(I)
41 பின்பு இயேசு, “தாவீதின் குமாரன் என்று கிறிஸ்துவை மக்கள் எதற்காகச் சொல்கிறார்கள்? 42 சங்கீதம் என்னும் புத்தகத்தில் தாவீதே சொல்கிறார்.
“‘கர்த்தர் (தேவன்) என் ஆண்டவரிடம் (கிறிஸ்து) சொன்னார்,
43 உங்கள் பகைவர்கள் உங்கள் ஆற்றலுக்கு அடங்கும்வரை என் வலப்பக்கத்தில் அமருங்கள்’ (J)
44 தாவீது கிறிஸ்துவை ‘ஆண்டவர்’ என்கிறான். ஆனால் கிறிஸ்து தாவீதின் குமாரனுமாவார். எப்படி இவை இரண்டும் உண்மையாகும்?” என்றார்.
வேதபாரகருக்கு எச்சரிக்கை(K)
45 தம்மைப் பின்பற்றுபவர்களிடம் இயேசு பேசினார். எல்லா மக்களும் இயேசு கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். 46 “வேதபாரகரைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். தங்களை முக்கியமானவர்களாகக் காட்டுகிற அவர்கள் அங்கிகளை அணிந்துகொண்டு அவர்கள் அங்குமிங்கும் அலைகிறார்கள். மக்கள் அவர்களைச் சந்தையிடங்களில் மதிப்பதையும் விரும்புகிறார்கள். ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கையில் அமர ஆசைப்படுகிறார்கள். 47 ஆனால் விதவைகள் தம் வீட்டில் வைத்திருக்கிற பொருட்களையெல்லாம் கொள்ளையிடுகிறவர்கள் அவர்களே ஆவார்கள். நீண்ட பிரார்த்தனைகளைச் சொல்லித் தங்களை நல்லவர்களாகக் காட்டிக்கொள்ள முயல்கிறார்கள். தேவன் இவர்களை மிகுதியாகத் தண்டிப்பார்” என்றார்.
2008 by World Bible Translation Center