Add parallel Print Page Options

பரிசேயரை இயேசு விமர்சித்தல்

(மத்தேயு 23:1-36; மாற்கு 12:38-40; லூக்கா 20:45-47)

37 இயேசு இவற்றையெல்லாம் கூறி முடித்த பின்பு, பரிசேயர்களில் ஒருவன் அவனோடு சாப்பிடுமாறு இயேசுவை அழைத்தான். எனவே இயேசு வந்து மேசையருகே அமர்ந்தார். 38 இயேசு உணவு உண்பதற்கு முன்னே கைகளைக் கழுவாது வந்து அமர்ந்ததைக் கண்ட பரிசேயன் வியப்படைந்தான். 39 இயேசு அவனை நோக்கி, “பரிசேயர்களாகிய நீங்கள் பாத்திரத்தையும், குவளையையும் வெளிப்புறத்தில் சுத்தமாகக் கழுவுகின்றீர்கள். ஆனால் உட்புறத்தில் பிறரை ஏமாற்றித் தீமை செய்யும் காரியங்களால் நிரம்பி இருக்கின்றீர்கள். 40 நீங்கள் மூடர்கள். வெளிப்புறத்தை உண்டாக்கியவரே (தேவனே) உள்புறத்தையும் உண்டாக்கி உள்ளார். 41 உங்கள் பாத்திரங்களிலும் குவளைகளிலும் இருப்பவற்றை தேவைப்படுகின்ற மக்களுக்குக் கொடுங்கள். அப்போது நீங்கள் முற்றிலும் சுத்தமானவர்களாக இருப்பீர்கள்.

42 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். உங்களுக்குச் சொந்தமானவற்றில், உங்கள் தோட்டத்தின் சகல விளை பொருட்களில் புதினா, மரிக்கொழுந்து முதலானவற்றில்கூட பத்தில் ஒரு பாகத்தை தேவனுக்குக் கொடுக்கின்றீர்கள். ஆனால் பிறரிடம் நியாயமாக நடந்துகொள்வதையும் தேவனை நேசிப்பதையும் மறந்துவிடுகின்றீர்கள். இவற்றை நீங்கள் கண்டிப்பாகச் செய்தல் வேண்டும். கூடவே, பத்தில் ஒரு பாகம் கொடுப்பது போன்ற காரியங்களையும் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

43 “பரிசேயரே, உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். ஜெப ஆலயங்களில் மிக முக்கியமான இடத்தில் வீற்றிருப்பதை நீங்கள் விரும்புகிறீர்கள். சந்தை இடங்களில் மக்கள் உங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டுமென விரும்புகிறீர்கள். 44 நீங்கள் மறைக்கப்பட்ட கல்லறைகளைப் போல் இருந்தால் அது உங்களுக்கு மோசமானதாக இருக்கும். அதை அறியாமல் மக்கள் அவற்றின் மீது நடந்து செல்வார்கள்” என்றார்.

45 வேதபாரகர்களில் ஒருவன் இயேசுவை நோக்கி, “போதகரே, பரிசேயரைக் குறித்து இக்காரியங்களை நீங்கள் சொல்லும்போது, எங்களையும் விமர்சிக்கிறீரே” என்றான்.

46 அவனுக்குப் பதிலாக இயேசு, “வேதபாரகரே, உங்கள் நிலைமை மோசமானதாக இருக்கும். மக்கள் கீழ்ப்படிய இயலாத வகையில் கடுமையான விதிகளை விதிக்கிறீர்கள். மற்ற மக்கள் அவ்விதிகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்துகின்றீர்கள். ஆனால் நீங்களோ அவ்விதிகளைப் பின்பற்றுவதற்கு முயன்றுகூடப் பார்ப்பதில்லை. 47 தீர்க்கதரிசிகளுக்கு நினைவுச்சின்னங்களைக் கட்டுவதால் உங்கள் நிலை மோசமானதாக இருக்கும். அதே தீர்க்கதரிசிகளை உங்கள் முன்னோர்கள் கொன்றார்களே. 48 உங்கள் முன்னோர் செய்ததை நீங்கள் ஏற்றுக்கொள்வதாக எல்லா மக்களிடமும் காட்டிக் கொள்கிறீர்கள். அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கொன்றார்கள், அவர்களுக்கு நீங்கள் நினைவுச் சின்னங்களை எழுப்புகின்றீர்கள்! 49 எனவே தேவனின் ஞானமானது, ‘நான் தீர்க்கதரிசிகளையும், சீஷர்களையும், அவர்களிடம் அனுப்புவேன். தீய மனிதரால் தீர்க்கதரிசிகளிலும் சீஷர்களிலும் சிலர் கொல்லப்படுவார்கள். வேறு சிலர் துன்புறுத்தப்படுவார்கள்’” என்று உரைத்தார்.

50 “உலகம் தோன்றிய காலம் தொடங்கி கொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசிகளின் மரணத்திற்காகவும், இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். 51 ஆபேலின் மரணத்திற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். சகரியாவின் கொலைக்காக நீங்கள் தண்டனை பெறுவீர்கள். பலிபீடத்திற்கும் ஆலயத்திற்கும் நடுவில் சகரியா கொல்லப்பட்டான். அவர்கள் எல்லாருக்காகவும் இன்று வாழும் மக்களாகிய நீங்கள் தண்டனை பெறுவீர்கள் என்பதை நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

52 “வேதபாரகரே, உங்களுக்குத் தீமை வரும். தேவனைப்பற்றி அறிவதற்குரிய திறவுகோலை ஒளித்து வைத்திருக்கிறீர்கள். நீங்களும் அறிந்துகொள்வதில்லை. பிறர் அறிந்துகொள்வதையும் தடைசெய்கிறீர்கள்” என்றார்.

53 இயேசு அங்கிருந்து கிளம்பும்போது, வேதபாரகர்களும் பரிசேயர்களும் அவரைத் தொல்லைப்படுத்த ஆரம்பித்தார்கள். பலவற்றைக் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு இயேசுவை வற்புறுத்தினார்கள். 54 இயேசு தவறாக ஏதேனும் சொல்ல நேர்ந்தால் அவரைப் பிடிக்கலாம் என வழிகாண முயன்றுகொண்டிருந்தார்கள்.

Read full chapter