Read the Gospels in 40 Days
ஆடு, வெள்ளிக்காசு உவமை(A)
15 வரி வசூலிப்போர் பலரும், தீயோரும் இயேசு கூறுவதைக் கேட்க வந்தார்கள். 2 உடனே பரிசேயரும் வேதபாரகரும் குறை கூற ஆரம்பித்தவர்களாக, “பாருங்கள்! இந்த மனிதன் (இயேசு) தீயோரை வரவேற்று அவர்களோடு அமர்ந்து உணவு உண்கிறார்” என்றனர்.
3 அப்போது அவர்களுக்கு இயேசு பின்வரும் உவமையைக் கூறினார்: 4 “உங்களில் ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றுள் ஒன்று காணாமல் போகிறது. அப்போது அவன் மற்ற தொண்ணூற்று ஒன்பது ஆடுகளையும் தனியே விட்டுவிட்டுக் காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லமாட்டானா? அந்தக் காணாமல் போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரைக்கும் அவன் அதைத் தேடிக்கொண்டே இருப்பான். 5 அந்த ஆட்டை அவன் கண்டுபிடிக்கிறபோது மிகவும் சந்தோஷம் அடைவான். அந்த மனிதன் அந்த ஆட்டைத் தன் தோள்களில் சுமந்துக்கொண்டு தன் வீட்டை அடைவான். 6 தன் நண்பர்களையும் அக்கம் பக்கத்தவர்களையும் அழைத்து அவர்களிடம் ‘எனது காணாமல் போன ஆட்டைக் கண்டு பிடித்தேன். என்னோடுகூட சந்தோஷப்படுங்கள்’ என்று கூறுவான். 7 அவ்வாறே, ஒரு பாவி மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத் தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும் அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்.
8 “ஒரு பெண்ணிடம் பத்து வெள்ளிக் காசுகள் இருக்கின்றன என்று வைத்துக்கொள்வோம். அவற்றில் ஒன்றை அவள் தொலைத்து விடுகிறாள். அவள் ஒரு விளக்கை எடுத்துக்கொண்டு வீட்டைச் சுத்தம் செய்வாள் அல்லவா? அந்தக் காசு கிடைக்கும் மட்டும் கவனமாகத் தேடுவாள். 9 தொலைந்து போன அந்தக் காசைக் கண்டெடுக்கும்போது அவள் தனது நண்பர்களையும் அக்கம் பக்கத்தாரையும் ஒன்றாக அழைத்து அவர்களை நோக்கி, ‘நான் தொலைத்த காசைக் கண்டெடுத்ததால் நீங்கள் என்னோடு கூட சந்தோஷப்படுங்கள்’ என்பாள். 10 அதைப்போலவே ஒரு பாவி மனந்திருந்தி தன் வாழ்வை மாற்றினால் தேவ தூதருக்கு முன்பாக மிகுந்த மகிழ்ச்சி உண்டாகும்” என்றார்.
காணாமற்போன மகன்
11 அப்போது இயேசு, “ஒரு மனிதனுக்கு இரண்டு பிள்ளைகள் இருந்தனர். 12 இளைய மகன் தந்தையை நோக்கி, ‘நமக்குச் சொந்தமான எல்லாப் பொருட்களிலும் எனது பங்கை எனக்குத் தாருங்கள்’ என்று கூறினான். எனவே தந்தை செல்வத்தை இரண்டு பிள்ளைகளுக்கும் பங்கிட்டுக் கொடுத்தான்.
13 “சில நாட்களுக்குப் பிறகு இளைய மகன் தனக்குரிய எல்லாப் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டுப் போனான். வேறொரு தூர தேசத்துக்கு அவன் பிரயாணம் செய்தான். அங்கு அவன் பணத்தை மூடனைப்போல் வீணாகச் செலவழித்தான். 14 அவன் தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் செலவு செய்தான். அதற்குப் பின்னர், அந்நாட்டில் வறட்சி நிலவியது. மழை பெய்யவில்லை. அந்நாட்டில் எல்லாருக்கும் தேவையான அளவுக்கு உணவு கிடைக்கவில்லை. அந்த மகன் பசியாலும், பணமின்மையாலும் துன்பப்பட்டான். 15 எனவே அந்த நாட்டில் வாழ்ந்த ஒருவனிடம் அவன் வேலைக்கு அமர்ந்தான். பன்றிகளுக்குத் தீவனமிடுமாறு அந்த மகனை அம்மனிதன் அனுப்பினான். 16 அந்த மகன் பசிமிகுதியால் பன்றிகள் சாப்பிட்டுக்கொண்டிருந்த உணவையாகிலும் உண்ண வேண்டுமென விரும்பினான். ஆனால் அவனுக்கு ஒருவரும் எந்த உணவையும் கொடுக்கவில்லை.
17 “இளைஞன் தன் மூடத்தனத்தை உணர்ந்தான். அவன், ‘என் தந்தையின் எல்லா வேலைக்காரர்களுக்கும் மிகுதியான உணவு கிடைக்கும். நானோ உணவின்றி இங்கு இறக்கும் நிலையில் இருக்கிறேன். 18 நான் இங்கிருந்து என் தந்தையிடம் போய்: தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களிடமும் தவறு செய்தேன். 19 உங்கள் மகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு நான் தகுதியுள்ளவன் அல்லன். நான் உங்கள் வேலைக்காரர்களில் ஒருவனாக வாழ அனுமதியுங்கள் என்று சொல்லுவேன்’ என்று எண்ணினான். 20 எனவே அந்த மகன் அங்கிருந்து தன் தந்தையிடம் சென்றான்.
மகன் திரும்பிவருதல்
“அந்த மகன் தொலைவில் வரும்போதே அவனது தந்தை பார்த்துவிட்டார். அந்த மகனின் நிலையைக் கண்டு தந்தை வருந்தினார். எனவே தந்தை மகனிடம் ஓடினார். மகனை அரவணைத்து முத்தமிட்டார். 21 மகன், ‘தந்தையே, நான் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தேன். உங்களுக்கும் தவறு இழைத்தேன். உங்கள் மகன் என்று அழைக்கப்படுவதற்கேற்ற தகுதி எனக்குக் கிடையாது’ என்றான்.
22 “ஆனால் தந்தை வேலைக்காரரை நோக்கி, ‘விரைந்து செல்லுங்கள். விலையுயர்ந்த ஆடைகளைக் கொண்டுவந்து அவனுக்கு உடுத்துங்கள். அவன் விரலுக்கு மோதிரம் அணிவித்துக் காலுக்கு நல்ல பாதரட்சைகளை அணியச் செய்யுங்கள். 23 நம் கொழுத்த கன்றை கொண்டுவாருங்கள். அதைச் சமைத்து திருப்தியாகச் சாப்பிடுவோம். ஒரு விருந்து வைப்போம். 24 என்னுடைய இந்த மகன் இறந்து போயிருந்தான். மீண்டும் உயிரோடு வந்துள்ளான். அவன் காணாமல் போயிருந்தான், இப்போது மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டான்’ என்று கூறினார். எனவே விருந்து ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்கள்.
மூத்த மகன் வருதல்
25 “மூத்த மகன் வயலில் இருந்தான். அவன் வீட்டுக்கு அருகாமையில் திரும்பி வந்து கொண்டிருந்தான். இசை, ஆடல் ஆகியவற்றின் சத்தத்தைக் கேட்டான். 26 எனவே மூத்த மகன் வேலைக்காரச் சிறுவர்களில் ஒருவனை அழைத்து, ‘இவையெல்லாம் எதற்காக நடைபெறுகின்றன?’ என்று கேட்டான். 27 வேலைக்காரன், ‘உங்கள் சகோதரன் திரும்பி வந்துள்ளார். உங்கள் தந்தை கொழுத்த கன்றை உண்பதற்காகக் கொன்றுள்ளார். உங்கள் சகோதரன் பாதுகாப்பாகவும் நல்ல முறையிலும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பி இருப்பதால் உங்கள் தந்தை மகிழ்ச்சியாக இருக்கிறார்’ என்றான்.
28 “மூத்த மகன் கோபமுற்று விருந்துக்குச் செல்லவில்லை. எனவே தந்தை வெளியே வந்து அவனிடம் வற்புறுத்தினார். உள்ளே வருமாறு அழைத்தார். 29 மகன் தந்தையை நோக்கி, ‘நான் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் பல ஆண்டுகள் உழைத்தேன்! உங்கள் கட்டளைக்கு எப்போதும் கீழ்ப்படிந்து நடந்தேன். ஆனால் ஒரு வெள்ளாட்டையாகிலும் நீங்கள் எனக்காகக் கொன்றதில்லை. எனக்கும் என் நண்பர்களுக்கும் நீங்கள் விருந்தளித்ததில்லை. 30 ஆனால் உங்கள் இன்னொரு மகன் பணத்தை எல்லாம் வேசிகளிடம் செலவழித்தான். பின்னர் வீடு திரும்பியதும் அவனுக்காகக் கொழுத்த கன்றுக் குட்டியை கொன்றீர்கள்’ என்றான்.
31 “ஆனால் தந்தை அவனை நோக்கி, ‘மகனே! நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய். எனக்குரியவை அனைத்தும் உனக்கு உரியவை. 32 நாம் சந்தோஷமாக விருந்துண்ண வேண்டும். ஏனெனில் உன் சகோதரன் இறந்து போயிருந்தான், இப்போது உயிரோடு வந்துள்ளான். காணாமல் போயிருந்தான், ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்டான்’ என்றார்” என்று கூறினார்.
உண்மையான செல்வம்
16 இயேசு அவரது சீஷரை நோக்கி, “ஒரு காலத்தில் ஒரு செல்வந்தன் வாழ்ந்து வந்தான். வியாபாரத்தைக் கவனிக்கும்பொருட்டு அவனிடம் ஓர் அதிகாரி இருந்தான். அந்த அதிகாரி ஏமாற்றுவதாக அச்செல்வந்தனுக்குப் புகார்கள் வந்தன. 2 எனவே அந்த அதிகாரியை அழைத்து அவனை நோக்கி, ‘உன்னைக் குறித்துத் தவறான செய்திகளைக் கேள்விப்பட்டேன். எனது பணத்தை எவ்வாறு பயன்படுத்தினாய் என்பதற்கான அறிக்கையைக் கொடு. இப்போது நீ எனக்கு அதிகாரியாக இருக்க முடியாது’ என்றான்.
3 “பின்னர் அந்த அதிகாரி தனக்குள்ளேயே, ‘நான் என்ன செய்வேன். என் எஜமானர் என்னை வேலையில் இருந்து அகற்றிவிட்டார். குழிகளைத் தோண்டுமளவு வலிமை என்னிடம் இல்லை. பிச்சை எடுக்க வெட்கப்படுகிறேன். 4 நான் என்ன செய்யவேண்டுமென எனக்குத் தெரியும். நான் வேலையை இழக்கும்போது பிற மக்கள் தம் வீட்டுக்குள் என்னை வரவேற்கும்படியான ஒரு செயலை நான் செய்ய வேண்டும்’ என்று நினைத்தான்.
5 “எனவே, அந்த அதிகாரி எஜமானனுக்குக் கடன் தர வேண்டியவர்களை அழைத்தான். முதலாமவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ கொடுக்கவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். 6 அவன், ‘நான் நூறு குடம் ஒலிவ எண்ணைய் கடன்பட்டிருக்கிறேன்’ என்றான். அதிகாரி அவனிடம், ‘இதோ உன் பற்றுச் சீட்டு. சீக்கிரம் நீ உட்கார்ந்து உன் பற்றைக் குறைத்து ஐம்பது குடம் என்று எழுது’ என்றான்.
7 “பின் அதிகாரி மற்றொருவனை நோக்கி, ‘எனது எஜமானனுக்கு நீ திருப்பவேண்டிய கடன் எவ்வளவு?’ என்றான். அவன், ‘நான் நூறு மரக்கால் கோதுமை கடன்பட்டிருக்கிறேன்’ என்று பதில் சொன்னான். உடனே அதிகாரி அவனிடம், ‘இதோ உனது பற்றுச் சீட்டு. இதைக் குறைத்து எண்பது மரக்கால் என்று எழுது’ என்றான்.
8 “பின்னர் எஜமானன் நம்பிக்கைக்குத் தகுதியற்ற அந்த அதிகாரியை அவன் திறமையாகச் செய்ததாகப் பாராட்டினான். ஆம், உலகத்திற்குரிய மனிதர் தங்கள் காலத்து மக்களோடு வியாபாரத்தில், ஆவிக்குரிய மனிதர்களைக் காட்டிலும் திறமையானவர்களாகக் காணப்படுகிறார்கள்.
9 “நான் உங்களுக்குச் சொல்கிறேன், தேவனிடம் நட்பைக் காப்பாற்றும்பொருட்டு இந்த உலகத்தில் உனக்குரிய பொருட்களை எல்லாம் பயன்படுத்து. அந்தப் பொருட்கள் எல்லாம் அழிந்த பின்னர் என்றும் நிலைத்திருக்கிற வீட்டில் நீ வரவேற்கப்படுவாய். 10 சிறிய காரியங்களில் நம்பிக்கைக்கு உகந்த மனிதன் பெரிய காரியங்களிலும் நம்பிக்கைக்கு ஏற்றவனாயிருப்பான். சிறிய காரியங்களில் நம்பிக்கைக்குத் தகாதவனாக இருப்பவன் பெரிய காரியங்களிலும் அவ்வாறே இருப்பான். 11 உலகச் செல்வங்களிலும் நீங்கள் நேர்மையற்றவர்ளாக இருக்கும்போது உண்மையான (பரலோக) செல்வத்திலும் நீங்கள் நேர்மையற்றவர்களாகவே இருப்பீர்கள். 12 யாராவது ஒருவருக்குரிய பொருட்களில் உங்களை நம்பமுடியாவிட்டால் உங்களுக்குச் சொந்தமாக எந்தப் பொருளும் கொடுக்கப்படமாட்டாது.
13 “ஒரே நேரத்தில் இரு எஜமானர்களுக்குப் பணிபுரிய எந்த வேலைக்காரனாலும் முடியாது. அந்த வேலைக்காரன் ஒரு எஜமானனை வெறுத்து, மற்ற எஜமானனை நேசிப்பான். அல்லது அவன் ஒருவனுக்கு நம்பிக்கைக்குரியவனாக நடந்துகொண்டு மற்றவனிடம் வேறு முறையில் நடந்து கொள்வான். தேவனுக்கும், பணத்துக்கும் ஒருங்கே சேவை செய்ய உங்களால் இயலாது” என்றார்.
தேவ வாக்கியங்கள் மாறாதவை(B)
14 பரிசேயர்கள் இச்செய்திகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் பணத்தை நேசித்ததால் இயேசுவை விமர்சித்தார்கள். 15 இயேசு பரிசேயர்களை நோக்கி, “மக்களின் முன்பாக நீங்கள் நல்லவர்களாக நடந்துகொள்கிறீர்கள். ஆனால் உங்கள் இதயத்தில் உண்மையாகவே என்ன இருக்கிறதென தேவன் அறிவார். மனிதர் முக்கியமாகக் கருதும் காரியங்கள் தேவனின் வெறுப்புக்கு உரியவை ஆகின்றன.
16 “மோசேயின் சட்டத்திற்கிணங்கவும், தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களுக்கேற்பவும் மக்கள் வாழ்வதை தேவன் விரும்பினார். ஆனால் ஞானஸ்நானம் கொடுத்த யோவான் ஸ்நானகன் காலம் தொடங்கி, தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தி சொல்லப்பட்டு வருகிறது. தேவனுடைய இராஜ்யத்தில் செல்வதற்குப் பலர் மிகவும் முயன்று வருகிறார்கள். 17 வேதவாக்கியங்களில் காணப்படுகிற ஒரு எழுத்தின் ஒரு சிறிய பகுதியைக் கூட மாற்ற முடியாது. அதைக் காட்டிலும் வானமும் பூமியும் அழிந்துபோவதே எளிதாக இருக்கும்.”
விவாகரத்தும் மறுமணமும்
18 “ஒருவன் தனது மனைவியை விவாகரத்து செய்து, இன்னொரு பெண்ணை மணந்துகொண்டால் அவன் விபசாரம் என்னும் பாவத்தைச் செய்தவன் ஆவான். விவாகரத்துக்கு உட்பட்ட ஒரு பெண்ணை மணந்து கொள்பவனும் தீய விபசாரம் என்னும் குற்றத்திற்கு உட்பட்டவன் ஆவான்” என்றார்.
செல்வந்தனும் லாசருவும்
19 “விலையுயர்ந்த ஆடைகளை எப்போதும் அணிந்துகொண்டிருந்த ஒரு செல்வந்தன் இருந்தான். ஒவ்வொரு நாளும் விருந்துண்டு களிக்கும் அளவுக்கு மிகுந்த செல்வந்தனாக இருந்தான். 20 லாசரு என்று அழைக்கப்பட்ட மிகவும் ஏழையான மனிதனும் இருந்தான். லாசருவின் சரீரம் முழுவதும் புண்ணாக இருந்தது. செல்வந்தனின் வீட்டு வாசலருகே லாசரு அடிக்கடி படுத்துக்கிடப்பான். 21 செல்வந்தனின் மேசையில் மீதியாக விடப்பட்ட உணவுத் துணுக்குகளை உண்பதற்கு அவன் விரும்பினான். நாய்கள் வந்து அவனது புண்களை நக்கின.
22 “பின்னர் லாசரு இறந்தான். தேவதூதர்கள் லாசருவை எடுத்துச்சென்று ஆபிரகாமின் மடியில் வைத்தனர். செல்வந்தனும் இறந்து அடக்கம் செய்யப்பட்டான். 23 அவன் பாதாளத்திற்கு அனுப்பப்பட்டு மிகுந்த வேதனையை அனுபவித்தான். தொலைவிலேயே ஆபிரகாம் தன் மடியில் லாசருவை ஏந்திக்கொண்டிருப்பதைச் செல்வந்தன் பார்த்தான். 24 அவன், ‘தந்தை ஆபிரகாமே! என்னிடம் இரக்கம் காட்டுங்கள். அவனது விரலைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிர்விக்குமாறு லாசருவை என்னிடம் அனுப்புங்கள். இந்த நெருப்பில் நான் துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சத்தமிட்டுக் கூறினான்.
25 “ஆனால் ஆபிரகாம், ‘எனது மகனே! நீ உலகில் வாழ்ந்ததை நினைவுகூர்ந்துகொள். வாழ்வின் நல்ல பொருட்கள் அனைத்தும் உனக்கிருந்தன. லாசருவிற்கு எல்லாத் தீமைகளும் நேர்ந்தன. இப்போது அவனுக்கு இங்கு ஆறுதல் கிடைக்கிறது. நீயோ துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறாய். 26 மேலும் உனக்கும், எங்களுக்கும் மத்தியில் ஒரு பெரிய பிளவு உள்ளது. உனக்கு உதவுவதற்காக யாரும் இங்கிருந்து அங்கு கடந்து வரமுடியாது’ என்றான்.
27 “செல்வந்தன், ‘அப்படியானால் தயவுசெய்து பூமியில் இருக்கும் என் தந்தையின் வீட்டுக்கு லாசருவை அனுப்புங்கள். 28 எனக்கு ஐந்து சகோதரர்கள் இருக்கிறார்கள். கொடுமை மிகுந்த இந்த இடத்துக்கு அவர்கள் வராதபடிக்கு லாசரு எனது சகோதரர்களை எச்சரிக்கட்டும்’ என்றான்.
29 “ஆனால் ஆபிரகாம், ‘அவர்கள் படிப்பதற்கு மோசேயின் சட்டங்களும் தீர்க்கதரிசிகளின் நூல்களும் உள்ளன. அவர்கள் அவற்றிலிருந்து கற்றுக்கொள்ளட்டும்’ என்றான்.
30 “ஆனால் செல்வந்தன், ‘இல்லை, தந்தை ஆபிரகாமே! இறந்தோரிலிருந்து ஒருவன் சென்று கூறினால், அவர்கள் நம்பிக்கை கொண்டு தம் மனதையும் வாழ்வையும் மாற்றிக்கொள்வார்கள்’ என்றான்.
31 “ஆனால் ஆபிரகாம் அவனை நோக்கி, ‘இல்லை! உனது சகோதரர்கள் மோசேக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் செவி சாய்க்கவில்லை என்றால், இறந்தோரில் இருந்து வருகின்ற ஒருவன் கூறுவதையும் கேட்கமாட்டார்கள்’ என்றான்” என இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center