Read the Gospels in 40 Days
இயேசுவின் வருகை(A)
1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய நற்செய்தியின் துவக்கம். 2 ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடி அது நடைபெற்றது. ஏசாயா எழுதினான்:
“கேளுங்கள்! நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்.
அவன் உமக்கு வழியை ஆயத்தம் செய்வான்.” (B)
3 “வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான்.
‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்.
அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’” (C)
4 ஆகையால் யோவான் வந்தான். அவன் வானாந்தரப் பகுதியில் மக்களுக்கு ஞானஸ்நானம் வழங்கினான். அவன் மக்களிடம் மனம் மாறியதைக் காட்டும்படியான ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும்படி சொன்னான். அப்பொழுது அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றான். 5 யூதேயா நாட்டினரும் எருசலேமில் வாழ்கின்ற அனைத்து மக்களும் அவனிடம் வந்தனர். அவர்கள் செய்த பாவங்களை அறிக்கையிட்டனர். யோர்தான் ஆற்றின் கரையில் யோவான் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தான்.
6 ஒட்டக மயிரால் ஆன ஆடையை யோவான் அணிந்திருந்தான். தனது இடுப்பில் தோல் வாரால் ஆன கச்சையைக் கட்டியிருந்தான். அவன் வெட்டுக்கிளியையும். காட்டுத் தேனையும் உண்டு வந்தான்.
7 “என்னைவிட வல்லவர் ஒருவர் எனக்குப் பின்னால் வருகிறார். அவருக்கு முன்னால், நான் குனிந்து அவரது கால் செருப்புகளின் வாரை அவிழ்க்கவும் தகுதி இல்லாதவன். 8 நான் தண்ணீரால் ஞானஸ்நானம் வழங்குகிறேன். அவரோ உங்களுக்குப் பரிசுத்த ஆவியால் ஞானஸ்நானம் வழங்குவார்” என்று யோவான் அவர்களுக்கு உபதேசம் செய்தான்.
இயேசு ஞானஸ்நானம் பெறுதல்(D)
9 கலிலேயாவில் உள்ள நாசரேத் நகரத்திலிருந்து இயேசு அப்பொழுது அங்கே வந்தார். அவர் யோர்தான் ஆற்றில் யோவானால் ஞானஸ்நானம் பெற்றார். 10 அவர் தண்ணீரிலிருந்து வெளியேறியபோது வானம் திறக்கப்பட்டதைக் கண்டார். பரிசுத்த ஆவியானவர் ஒரு புறாவைப் போல அவரிடம் கீழே இறங்கினார். 11 “நீர் என்னுடைய மகன். நான் உம்மிடம் அன்பாய் இருக்கிறேன். நான் உம்மிடம் மிகவும் பிரியமாய் இருக்கிறேன்” என ஓர் அசரீரி வானத்திலிருந்து கேட்டது.
இயேசு சோதிக்கப்படுதல்(E)
12 பிறகு ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்தில் தனியே அனுப்பினார். 13 அந்த வனாந்தரத்தில் இயேசு நாற்பது நாட்கள் இருந்தார். காட்டு மிருகங்களோடு அவர் அங்கே இருந்தார். அவர் அங்கு இருந்தபோது, சாத்தானால் சோதிக்கப்பட்டார். பிறகு தேவதூதர்கள் வந்து அவருக்கு உதவி செய்தார்கள்.
கலிலேயாவில் இயேசுவின் ஊழியம்(F)
14 இதற்குப் பிறகு யோவான் சிறையில் அடைக்கப்பட்டான். இயேசு கலிலேயாவுக்குச் சென்று, தேவனிடமிருந்து பெற்ற நற்செய்தியைப் போதித்தார். 15 “சரியான நேரம் இங்கே இப்பொழுது இருக்கிறது. தேவனுடைய இராஜ்யம் நெருங்கிவிட்டது. உங்கள் மனதையும் வாழ்க்கையையும் மாற்றிக்கொள்ளுங்கள். நற்செய்தி மீது நம்பிக்கை வையுங்கள்” என்று இயேசு சொன்னார்.
சீஷர்களைத் தேர்ந்தெடுத்தல்(G)
16 இயேசு கலிலேயாவின் கடற்கரையின் ஓரமாய் நடந்து சென்றார். சீமோனையும் சீமோனின் சகோதரனான அந்திரேயாவையும் இயேசு கண்டார். அவர்கள் இருவரும் மீன்பிடிப்பவர்கள். அவர்கள் கடலுக்குள் வலையை வீசி மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 17 இயேசு அவர்களிடம், “வாருங்கள். என்னைப் பின் தொடருங்கள். நான் உங்களை வேறுவிதமான மீன் பிடிப்பவர்களாக மாற்றுவேன். நீங்கள் மீனை அல்ல, மனிதர்களைப் பிடிப்பவர்களாவீர்கள்” என்று கூறினார். 18 ஆகையால் சீமோனும், அந்திரேயாவும் வலைகளை விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்து சென்றனர்.
19 இயேசு கலிலேயாவின் கடற்கரையோரமாய் தொடர்ந்து நடந்து சென்றார். அவர் செபெதேயுவின் மகன்களான யாக்கோபு, யோவான் என்னும் சகோதரர்களைக் கண்டார். அவர்களும் படகில் இருந்து கொண்டு மீன்பிடிக்கும் தம் வலைகளைப் பழுது பார்த்துக்கொண்டிருந்தார்கள். 20 அவர்களோடு அவர்களின் தந்தை செபெதேயுவும் அவனோடு வேலைபார்க்கும் சில மீனவர்களும் படகில் இருந்தனர். இயேசு அவர்களைக் கண்டதும் தம்மோடு வரும்படி அழைத்தார். அவர்கள் தம் தந்தையை விட்டுவிட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தனர்.
அசுத்த ஆவியுள்ளவன் குணமாகுதல்(H)
21 இயேசுவும் அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றார்கள். ஓய்வுநாளில் ஜெப ஆலயத்திற்குள் சென்று இயேசு போதனை செய்தார். 22 அங்கே இருந்த மக்கள் இயேசுவின் போதகத்தைக் கேட்டு வியப்படைந்தார்கள். அவர்களின் ஏனைய வேதபாரகரைப்போல இயேசு உபதேசிக்கவில்லை. அவர் எல்லா அதிகாரங்களையும் உடையவராக உபதேசித்தார். 23 ஜெப ஆலயத்திற்குள் இயேசு இருந்தபோது அசுத்த ஆவியால் பிடிக்கப்பட்ட ஒரு மனிதனும் அங்கே இருந்தான். 24 அவன், “நசரேயனாகிய இயேசுவே! எங்களிடம் நீர் என்ன விரும்புகிறீர்? எங்களை அழிக்கவா வந்தீர்? நீர் தேவனின் பரிசுத்தர் என்பது எனக்குத் தெரியும்” என்று சத்தமிட்டான்.
25 இயேசு பலமான குரலில், “அமைதியாக இரு. இவனை விட்டு வெளியே வா” என்று கட்டளையிட்டார். 26 அந்த அசுத்த ஆவி அம்மனிதனை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு அவனை விட்டுப் பெரும் சத்தத்தோடு வெளியேறியது.
27 மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். அவர்கள், “இங்கு என்ன நடக்கிறது? இந்த மனிதர் புதிதாக ஏதோ உபதேசிக்கிறார். இவர் அதிகாரத்துடன் உபதேசம் செய்கிறார். இவர் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளை இடுகிறார். ஆவிகளும் அவருக்கு அடிபணிகின்றன” என்று ஒருவரோடொருவர் பேசிக் கொண்டனர். 28 எனவே, கலிலேயாவின் அனைத்துப் பகுதிகளிலும் இயேசுவைப்பற்றிய செய்தி வேகமாகப் பரவியது.
அநேகரைக் குணமாக்குதல்(I)
29 இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள். 30 சீமோனின் மாமியார் மிகவும் உடல்நலம் இல்லாமல் இருந்தாள். அவள் படுக்கையில் காய்ச்சலோடு கிடந்தாள். மக்கள் அவரிடம் அவளைப்பற்றிக் கூறினர். 31 எனவே இயேசு அவளது படுக்கையருகே சென்றார். அவளது கையைப் பற்றிக்கொண்டு அவள் எழுந்திருக்க உதவி செய்தார். காய்ச்சல் அவளை விட்டு நீங்கி அவள் சுகமடைந்தாள். பிறகு அவள் அவர்களை உபசரிக்கத் தொடங்கினாள்.
32 அந்த இரவில், சூரியன் மறைந்த பிறகு, மக்கள் அனைத்து நோயாளிகளையும் இயேசுவிடம் கொண்டு வந்தனர். அவர்கள் பிசாசு பிடித்தவர்களையும் அவரிடம் கொண்டு வந்தனர். 33 அந்நகரில் உள்ள அனைத்து மக்களும் அந்த வீட்டின் வாசலுக்கு வந்து கூடினர். 34 அநேகருடைய பலவிதமான நோய்களையும் இயேசு குணப்படுத்தினார். பல பிசாசுகளையும் இயேசு துரத்தினார். ஆனால் இயேசு பிசாசுகளைப் பேச அனுமதிக்கவில்லை. ஏனென்றால் அவர் யாரென்று அவைகள் அறிந்திருந்தன.
நற்செய்தியைப் போதிப்பதற்கு ஆயத்தம்(J)
35 மறுநாள் காலையில் இயேசு மிக முன்னதாகவே எழுந்தார். இன்னும் இருட்டாக இருந்தபோதே அவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் தனியாக ஓரிடத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்தார். 36 பிறகு சீமோனும் அவனது நண்பர்களும் இயேசுவைத் தேடிச் சென்றனர். 37 அவரைக் கண்டுபிடித்து, “மக்கள் யாவரும் உமக்காகவே எதிர்பார்த்திருக்கிறார்கள்” என்றனர்.
38 இயேசு, “நாம் வேறு இடத்துக்குப் போக வேண்டும். நாம் சுற்றிலும் உள்ள நகரங்களுக்கும் செல்ல வேண்டும். அந்த இடங்களில் எல்லாம் நான் போதனை செய்யவேண்டும். அதற்காகத்தான் நான் வந்தேன்” என்று பதிலளித்தார். 39 ஆகையால் இயேசு கலிலேயா எங்கும் பிரயாணம் பண்ணினார். அவர் ஜெப ஆலயங்களில் போதனை செய்தார். அவர் பலவந்தமாகப் பிசாசுகளை, மனிதர்களிடமிருந்து விரட்டினார்.
நோயாளியை குணமாக்குதல்(K)
40 தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் இயேசுவிடம் வந்தான். அவன் இயேசுவின் முன்னால் மண்டியிட்டு, “நீர் விரும்பினால் என்னைக் குணப்படுத்தலாம். அதற்குரிய வல்லமை உமக்குண்டு” என்று கெஞ்சினான்.
41 அவனுக்காக இயேசு மனமுருகினார். ஆகையால் அவனைத் தொட்டு, “நான் உன்னைக் குணப்படுத்த விரும்புகிறேன். குணமடைவாயாக!” என்றார். 42 உடனே நோய் அவனை விட்டுவிலகி அவன் குணமானான்.
43 அவனைப் புறப்பட்டுச் செல்லுமாறு இயேசு கூறினார். ஆனால், அவனை அவர் பலமாக எச்சரிக்கையும் செய்தார்: 44 “நான் உனக்காகச் செய்ததை யாரிடமும் சொல்லாதே. ஆனால் நீயாகப் போய் ஆலய ஆசாரியனிடம் காட்டு. தேவனுக்குக் காணிக்கை செலுத்து. ஏனென்றால் நீ குணமடைந்திருக்கிறாய். மோசே ஆணையிட்டபடி காணிக்கை செலுத்து. இதனால் நீ குணமானதை மக்கள் அறிந்து கொள்வார்கள்,” என்று இயேசு கூறினார். 45 அந்த மனிதன் அங்கிருந்து சென்று தான் கண்ட எல்லா மக்களிடமும் இயேசு தன்னைக் குணப்படுத்தியதைப் பற்றிச் சொன்னான். எனவே இயேசுவைப் பற்றிய செய்தி எங்கும் பரவியது. அதனால் இயேசுவால் ஒரு நகரத்துக்குள்ளும் வெளிப்படையாக நுழைய முடியவில்லை. மக்கள் இல்லாத இடங்களில் இயேசு தங்கி இருந்தார். இயேசு எங்கிருந்தாலும் அனைத்து நகரங்களில் இருந்தும் மக்கள் அவரைத் தேடி வந்தனர்.
பக்கவாத வியாதிக்காரன் குணமாகுதல்(L)
2 சில நாட்களுக்குப் பின்னர், இயேசு கப்பர்நகூமுக்கு வந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்ற செய்தி பரவியது. 2 ஏராளமான ஜனங்கள் இயேசுவின் போதனையைக் கேட்கக் கூடினார்கள். அந்த வீடு நிறைந்துவிட்டது. அங்கு நிற்பதற்கும் இடமில்லை. வாசலுக்கு வெளியேயும் இடமில்லை. இயேசு அவர்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். 3 ஒரு பக்கவாதக்காரனைச் சிலர் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். நான்கு பேர் அவனைத் தூக்கிக்கொண்டு வந்தனர். 4 ஆனால் அவர்களால் அவனை இயேசுவின் அருகில் கொண்டுவர முடியவில்லை. ஏனென்றால் மக்கள் கூட்டம் அவ்வீட்டைச் சூழ்ந்திருந்தது. எனவே அவர்கள் கூரைமீது ஏறி இயேசு இருந்த இடத்துக்கு மேல் கூரையில் ஒரு திறப்பை உண்டாக்கினார்கள். பிறகு பக்கவாதக்காரனின் படுக்கையை வீட்டுக்குள் இறக்கினார்கள். 5 அவர்களது அளவுக்கடந்த விசுவாசத்தை இயேசு பார்த்தார். எனவே பக்கவாதக்காரனைப் பார்த்து இயேசு, “இளைஞனே! உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
6 சில வேதபாரகர்கள் அங்கே உட்கார்ந்திருந்தனர். அவர்கள் இயேசு செய்வனவற்றைப் பார்த்து விட்டு தங்களுக்குள், 7 “ஏன் இந்த மனிதர் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார்? இவர் சொல்வதெல்லாம் தேவனுக்கு எதிரானதாகவே உள்ளதே. தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்கத்தக்கவர்” என்று சொல்லிக் கொண்டனர்.
8 வேதபாரகர்கள் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே இயேசு அறிந்துகொண்டார். எனவே, இயேசு அவர்களிடம், “ஏன் இப்படி யோசித்துக்கொண்டிருக்கிறீர்கள்? 9 பக்கவாதக்காரனைப் பார்த்து, ‘உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வது எளிதா? ‘எழுந்து உன் படுக்கையை எடுத்துக் கொண்டு நட’ என்று சொல்வது எளிதா? இரண்டில் எது எளிதாகும்? 10 ஆனால் மனித குமாரனுக்குப் பூமியிலே பாவங்களை மன்னிக்கிற அதிகாரம் உண்டு என்பதை உங்களுக்கு நிரூபிக்கிறேன்” என்று கூறி பிறகு பக்கவாதக்காரனைப் பார்த்து, 11 “நான் உனக்குச் சொல்கிறேன். எழுந்திரு, உனது படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார்.
12 பக்கவாதக்காரன் எழுந்து, அவனது படுக்கையை எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியேறினான். அனைத்து மக்களும் அவனைப் பார்த்தார்கள். அவர்கள் சந்தோஷப்பட்டு தேவனைப் புகழ்ந்தார்கள். அவர்கள், “இதுபோல ஆச்சரியம் மிக்க ஒன்றை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை!” என்றனர்.
லேவி இயேசுவைத் தொடருதல்(M)
13 இயேசு மறுபடியும் கடலருகே சென்றார். ஏராளமான மக்கள் அவரைப் பின்தொடர்ந்து சென்றார்கள். இயேசு அவர்களுக்கு உபதேசித்தார். 14 கடற்கரையையொட்டி நடந்து செல்லும்போது அல்பேயுவின் மகனான லேவி என்னும் வரி வசூலிப்பவனைக் கண்டார். லேவி வரி வசூலிப்பு அலுவலகத்தில் உட்கார்ந்திருந்தான். அவனிடம் இயேசு “என்னைப் பின் தொடர்ந்து வா” என்றார். உடனே லேவி எழுந்து அவரைப் பின் தொடர்ந்தான்.
15 அன்று, அதற்குப் பின் இயேசு லேவியினுடைய வீட்டில் உணவு உண்டார். அங்கே வரி வசூல் செய்பவர்களும், பாவிகளும் இயேசுவோடும் அவரது சீஷர்களோடும் உணவு உண்டனர். இவர்களோடு பலர் இயேசுவைப் பின் தொடர்ந்து வந்திருந்தனர். 16 அவர்களோடு வேதபாரகரும் பரிசேயரும் இருந்தனர். அவர்கள் பாவிகளோடும், வரி வசூல் செய்பவர்களோடும் சேர்ந்து இயேசு உணவு உட்கொள்வதைக் கண்டனர். அவர்கள் இயேசுவின் சீஷரை நோக்கி, “ஏன் இவர் வரிவசூல் செய்பவர்களோடும், பாவிகளுடனும் சேர்ந்து உணவு உண்கின்றார்?” என்று கேட்டனர்.
17 இயேசு இதனைக் கேட்டார். அவர் அவர்களை நோக்கி, “சுகமுள்ளவனுக்கு மருத்துவர் தேவையில்லை. நோயாளிக்கே மருத்துவர் தேவை. நான் நல்லவர்களை அழைக்க வரவில்லை, பாவிகளை அழைக்கவே வந்தேன்” என்றார்.
பிற தலைவர்களைவிட வித்தியாசமானவர்(N)
18 யோவானின் சீஷர்களும், பரிசேயரின் சீஷர்களும் உபவாசம் இருந்தனர். சிலர் இயேசுவிடம் வந்து “யோவானுடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். பரிசேயருடைய சீஷர்களும் உபவாசம் இருக்கின்றனர். உங்களுடைய சீஷர்கள் ஏன் உபவாசம் இருப்பதில்லை?” என்று கேட்டனர்.
19 அதற்கு இயேசு, “ஒரு திருமணத்தில் மணமகன் தம்முடன் இருக்கும்போது மணமகனின் நண்பர்கள் துயரப்படமாட்டார்கள். மணமகன் இன்னும் கூடவே இருக்கிற சந்தர்ப்பத்தில், அவர்களால் உபவாசம் இருக்க முடியாது. 20 ஆனால் மணமகன் பிரிந்து செல்லக்கூடிய ஒரு தருணம் வரும். அப்போது மணமகனைப் பிரிந்த வருத்தத்தில், அவன் நண்பர்கள் துயரமுடன் இருப்பார்கள். அதற்குப் பிறகு அவர்கள் உபவாசம் இருப்பார்கள்.
21 “எவனொருவனும் புதிய துணியோடு பழைய துணியைச் சேர்த்து ஒட்டுப்போட்டு தைக்கமாட்டான். அவன் அவ்வாறு செய்தால் ஒட்டுப்போட்டவை சுருங்கிவிடும். புதியது பழையதை அதிகமாய்க் கிழிக்கும். முன்னதைவிட மோசமாகும். 22 எவனொருவனும் புதிய திராட்சை இரசத்தை பழைய தோல் பையில் ஊற்றி வைக்கமாட்டான். ஊற்றி வைத்தால் புதிய இரசம் பழைய பையைக் கெடுத்துவிடும். அதோடு இரசமும் சிந்திவிடும். புதிய இரசத்தைப் புதிய பைகளிலேதான் மக்கள் ஊற்றி வைப்பார்கள்” என்று சொன்னார்.
யூதர்களின் விமர்சனம்(O)
23 ஒரு ஓய்வுநாளில் இயேசு தானிய வயல்கள் வழியே நடந்துகொண்டிருந்தார். அவரது சீஷர்களும் அவரோடு சென்றார்கள். சீஷர்கள் தானியக்கதிர்களைக் கொய்து தின்னத் தொடங்கினர். 24 பரிசேயர்கள் இதனைப் பார்த்து இயேசுவிடம், “உங்கள் சீஷர்கள் ஏன் இவ்வாறு செய்கிறார்கள்? ஓய்வு நாளில் இவ்வாறு செய்யக்கூடாது என்பது யூதர்களின் சட்டமல்லவா?” என்றனர்.
25 அதற்கு இயேசு, “தனக்கும் தன் சீஷர்களுக்கும் உணவு வேண்டிப் பசித்திருந்த நேரத்தில் 26 தாவீது என்ன செய்தான் என்பதை நீங்கள் படித்திருக்கிறீர்கள். அபியத்தார் என்னும் தலைமை ஆசாரியன் காலத்தில் நடந்த விஷயம் அது. தாவீது தேவனுடைய வீட்டில் நுழைந்து தேவனுக்குப் படைக்கப்பட்ட அப்பத்தை உண்டான். மோசேயின் விதிகளோ ஆசாரியர்கள் மட்டுமே அந்த அப்பத்தைப் புசிக்கலாம் என்று கூறுகின்றன. தாவீது தன்னுடன் இருந்த மற்றவர்களுக்கும் அப்பத்தைக் கொடுத்தான்” என்றார்.
27 மேலும் பரிசேயர்களைப் பார்த்து இயேசு “ஓய்வு நாள் என்பது மக்களுக்கு உதவவே உண்டாக்கப்பட்டது. ஓய்வுநாளுக்காக மக்கள் உண்டாக்கப்படவில்லை. 28 எனவே மனித குமாரன்தான் மற்ற நாட்களுக்கும் மட்டுமல்ல, ஓய்வு நாளுக்கும் எஜமானராக இருக்கிறார்” என்று சொன்னார்.
சூம்பின கை குணமாக்கப்படுதல்(P)
3 மறுமுறையும் ஜெப ஆலயத்திற்குள் இயேசு நுழைந்தார். அங்கே சூம்பின கையை உடைய ஒரு மனிதன் இருந்தான். 2 இயேசு தவறாக ஏதேனும் செய்யும் பட்சத்தில் அவரைக் குற்றம் சாட்டலாம் என்று சில யூதர்கள் கவனித்துக்கொண்டிருந்தனர். ஓய்வு நாளில் அவனைக் குணமாக்குவாரா என்று பார்க்கக் காத்திருந்தனர். 3 இயேசு சூம்பிய கையை உடையவனிடம், “எழுந்து இங்கே நில். அப்போதுதான் உன்னை எல்லாரும் பார்க்க முடியும்” என்றார்.
4 பிறகு இயேசு மக்களிடம், “ஓய்வு நாளில் எது செய்வது சரியாக இருக்கும்? நன்மை செய்வதா, தீமை செய்வதா? ஒரு உயிரைக் காப்பாற்றுவது சரியா? அழிப்பது சரியா?” என்று கேட்டார். மக்கள் பதிலொன்றும் சொல்லவில்லை.
5 இயேசு மக்களைப் பார்த்தார். அவருக்கோ கோபம் வந்தது. அவர்கள் கடின மனம் உடையவர்களாய் இருந்ததால் இயேசுவுக்கு வருத்தம் ஏற்பட்டது. இயேசு அந்த மனிதனிடம், “உன் கையை நீட்டு” என்றார். அவனும் இயேசுவிடம் தன் கையை நீட்டினான். அது குணமாகியது. 6 பிறகு பரிசேயர்கள் அந்த இடத்தை விட்டுப் போய் ஏரோதியரோடு கூடக் கலந்து இயேசுவைக் கொல்வதற்குத் திட்டமிட்டனர்.
இயேசுவின் பின் திரளான கூட்டம்
7 தனது சீஷர்களோடு இயேசு ஏரிப்பக்கம் சென்றார். கலிலேயா மக்களில் பலர் அவரைப் பின் தொடர்ந்தனர். 8 பிறகு யூதேயாவில் இருந்தும், எருசலேமிலிருந்தும், இதுமேயாவில் இருந்தும், யோர்தானுக்கு அக்கரையில் இருந்தும் ஏராளமான மக்கள் வந்தனர். அத்துடன் தீரு, சீதோன் பகுதிகளில் இருந்தும் மக்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு செய்த அற்புதங்களை அறிந்திருந்தனர். ஆகவேதான் அவர்கள் வந்தார்கள்.
9 இயேசு பலரையும் பார்த்தார். அவர் தன் சீஷர்களிடம் ஒரு சிறிய படகு கொண்டுவந்து அதனை அவருக்குத் தயார் செய்யும்படிக் கேட்டுக்கொண்டார். மக்கள் தம்மை நெருக்கித் தள்ளாதபடிக்கு அப்படகில் ஏறிக்கொண்டார். 10 இயேசு ஏற்கெனவே பலரைக் குணமாக்கி இருந்தார். ஆகவே ஏராளமான நோயுற்ற மக்கள் நெருக்கிக்கொண்டு வந்து அவரைத் தொட முயன்றார்கள். 11 சிலர் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தனர். ஆவிகள் இயேசுவைக் கண்டதும் அவருக்கு முன் குனிந்து, “நீர் தான் தேவனுடைய குமாரன்” என்று உரக்கச் சத்தமிட்டன. 12 ஆனால் இயேசு, தாம் யார் என்பதை மக்களுக்குக் கூறாதிருக்கும்படி அவற்றிற்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
அப்போஸ்தலரைத் தேர்ந்தெடுத்தல்(Q)
13 பிறகு, இயேசு குன்றின்மீது ஏறினார். அவர் சிலரை தன்னுடன் வருமாறு சொன்னார். இந்த மனிதரே அவருக்குத் தேவையானவர்களாய் இருந்தனர். அவர்கள் இயேசுவிடம் சென்றனர். 14 அவர்களில் பன்னிரண்டு பேரை இயேசு தேர்ந்தெடுத்துக்கொண்டார். அவர்களை அப்போஸ்தலர் என்று அழைத்தார். அவர்கள் தன்னுடன் இருக்க வேண்டும் என்று இயேசு விரும்பினார். அவர்களைப் பல இடங்களுக்கு அனுப்பி பிரசங்கம் செய்யும்படி விரும்பினார். 15 அத்துடன் பிசாசுகளை விரட்டுவதற்கான அதிகாரத்தை அவர்கள் பெற்றிருக்கவும் இயேசு விரும்பினார். 16 அவர் தேர்ந்தெடுத்த பன்னிரண்டு பேரின் பெயர்களும் பின்வருமாறு:
சீமோன், இயேசு இவனுக்கு பேதுரு என்று பெயரிட்டார்.
17 யாக்கோபு, யோவான் இவர்கள் செபெதேயுவின் மகன்கள்.
(இயேசு இவர்களுக்கு பொவனெர்கேஸ் என்று பெயர் வைத்தார்.
இதற்கு “இடி முழக்கத்தின் மக்கள்” என்று பொருள்)
18 அந்திரேயா,
பிலிப்பு,
பர்த்தலோமேயு,
மத்தேயு,
தோமா,
அல்பேயுவின் மகனான யாக்கோபு,
ததேயு,
கானானியனான சீமோன்,
19 யூதா ஸ்காரியோத்.
இந்த யூதாஸ்தான் இயேசுவை அவரது பகைவர்களிடம் காட்டிக்கொடுத்தவன்.
பிசாசு பிடித்தவர் என பழித்துரைத்தல்(R)
20 பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர். 21 இயேசுவின் குடும்பத்தார் இவற்றைப்பற்றி எல்லாம் கேள்விப்பட்டனர். அவர் மதிமயங்கியுள்ளார் என்று மக்கள் சொன்னதால் அவரது குடும்பத்தார் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள விரும்பினர்.
22 எருசலேமில் இருந்து வந்த வேதபாரகர், “இயேசுவிடம் பெயல்செபூல் (பிசாசு) உள்ளது. பிசாசுகளின் தலைவனது அதிகாரத்தை அவர் பயன்படுத்தி பேய்களை விரட்டுகிறார்” என்றனர்.
23 ஆகையால் இயேசு மக்களை அழைத்தார். அவர்களிடம் அவர் உவமைகள் மூலம் விளக்கிச் சொன்னார். “சாத்தானை சாத்தான் துரத்துவது எப்படி? என்று கேட்டார். 24 ஒரு இராஜ்யம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு தொடர்ந்திருக்க முடியும்? 25 ஒரு குடும்பம் தனக்குத்தானே பகைத்துக் கொண்டால் அது எவ்வாறு அழியாமல் இருக்கும்? 26 இது போல் சாத்தானும் தனக்கு எதிராகத் தானே பிளவுபட்டு இருந்தால் அவன் நிலைத்திருக்க முடியாது. அதுவே அவன் முடிவு.
27 “ஒருவன் பலவானுடைய வீட்டிற்குள் புகுந்து பொருட்களைத் திருட விரும்பினால் முதலில் அவன் அப்பலவானைக் கட்டிப்போட வேண்டும். பிறகு, அவனால் பலவானுடைய வீட்டிலிருந்து அவனது பொருட்களைத் திருடமுடியும்.
28 “உண்மையாகவே நான் உங்களுக்குக் கூறுகிறேன், மக்களால் செய்யப்படுகிற அத்தனைப் பாவங்களும் மன்னிக்கப்படும். அத்துடன் மக்களால் தேவனுக்கு எதிராகச் சொல்லப்படும் பழிகளும் மன்னிக்கப்படும். 29 ஆனால், பரிசுத்தாவியை எவனாவது பழித்து உரைப்பானேயானால் அவனுக்கு என்றென்றைக்கும் மன்னிப்பே இல்லை. அவன் குற்றவாளியாகி என்றென்றைக்கும் குற்ற உணர்வுடையவனாக இருப்பான்” என்றார்.
30 வேதபாரகர் இயேசுவை “அசுத்த ஆவி பிடித்தவர்” என்று சொன்னதால், அவர் இவ்வாறு விளக்கமாகக் கூறினார்.
இயேசுவின் உண்மை உறவினர்கள்(S)
31 பிறகு இயேசுவின் தாயாரும், சகோதரர்களும் வந்தனர். அவர்கள் வெளியே நின்று கொண்டு ஓர் ஆளை அனுப்பி இயேசுவை அழைத்தனர். 32 இயேசுவைச் சுற்றிப் பலர் அமர்ந்திருந்தனர். அப்போது அவன், “உங்கள் தாயும் சகோதரர்களும் வெளியே உங்களுக்காகக் காத்திருக்கின்றனர்” என்றான்.
33 இயேசு அவர்களிடம், “யார் என் தாய்? யார் என் சகோதரர்கள்?” என்று கேட்டார். 34 பிறகு தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களை நோக்கி, “இந்த மக்களே என் தாயாரும், சகோதரருமாய் இருக்கிறார்கள். 35 தேவனின் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்கிறவர்கள் எவர்களோ அவர்களே எனக்குச் சகோதரனும், சகோதரியும், தாயுமாய் இருக்கிறார்கள்” என்று கூறினார்.
2008 by World Bible Translation Center