Add parallel Print Page Options

பக்கவாதக்காரன் குணமடைதல்

(மத்தேயு 9:1-8; மாற்கு 2:1-12)

17 ஒருநாள் இயேசு மக்களுக்குப் போதித்துக்கொண்டிருந்தார். பரிசேயர்களும் வேதபாரகரும் கூட அங்கே உட்கார்ந்துகொண்டிருந்தனர். கலிலேயா, யூதேயா, எருசலேம் ஆகிய நகரங்களில் இருந்து அவர்கள் வந்திருந்தனர். தேவன் குணமாக்கும் வல்லமையை இயேசுவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார். 18 பக்கவாதக்காரன் ஒருவன் அங்கிருந்தான். சில மனிதர்கள் அவனை ஒரு சிறுபடுக்கையில் சுமந்து வந்தனர். அவர்கள் அவனைக் கொண்டுவந்து இயேசுவின் முன் வைக்க முயன்றனர். 19 ஆனால் மக்கள் திராளாகக் கூடியிருந்ததால் அவர்களால் இயேசுவினருகே வர வழி கண்டு பிடிக்க முடியவில்லை. எனவே அந்த மனிதர்கள் கூரையின் மேலேறி, கூரையில் உள்ள ஒரு துவாரத்தின் வழியாகப் படுக்கையோடு பக்கவாதக்காரனைக் கீழே இறக்கினர். அவர்கள் இயேசுவின் முன்னே பக்கவாதக்காரன் படுத்திருக்கும்படியாக அந்த அறைக்குள்ளேயே அவனை இறக்கினர். 20 அவர்கள் விசுவாசமுள்ளவர்கள் என்பதை இயேசு கண்டார். நோயாளியிடம் இயேசு, “நண்பனே, உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.

21 வேதபாரகரும், பரிசேயரும் தமக்குள்ளேயே, “இந்த மனிதன் யார்? தேவனுக்கு எதிரான காரியங்களை இவன் பேசுகிறான். தேவன் மட்டுமே பாவங்களை மன்னிக்க முடியும்” என்று எண்ணிக் கொண்டனர்.

22 அவர்களின் எண்ணத்தை இயேசு அறிந்திருந்தார். அவர், “நீங்கள் மனதில் இவ்வாறு எண்ணுவது ஏன்? 23 பக்கவாதக்காரனிடம், ‘உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்று சொல்வதோ, அல்லது ‘எழுந்து நட’ என்று சொல்வதோ, எது எளிது? 24 ஆனால் பூமியில் பாவங்களை மன்னிக்க தேவனுடைய குமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நான் நிரூபிப்பேன்” என்றார். ஆகவே இயேசு பக்கவாதக்காரனை நோக்கி, “எழுந்து நில், உனது படுக்கையை எடுத்துக்கொண்டு வீட்டுக்குப் போ” என்றார்.

25 அப்போது அம்மனிதன் அங்கு கூடியிருந்த மக்களுக்கு முன்பாக எழுந்திருந்தான். அவன் தனது படுக்கையை எடுத்துக்கொண்டு தேவனை வாழ்த்திக்கொண்டே வீட்டிற்கு நடந்து போனான். 26 எல்லா மக்களும் மிகுந்த ஆச்சரியமுற்றனர். அவர்கள் தேவனை வாழ்த்த ஆரம்பித்தனர். தேவனுடைய வல்லமையைக் குறித்து மிகுந்த பயபக்தியுள்ளவர்களாகி, “இன்று ஆச்சரியமான காரியங்களைக் கண்டோம்” என்றார்கள்.

Read full chapter