லூக்கா 3:1-9
Tamil Bible: Easy-to-Read Version
யோவானின் போதனை
(மத்தேயு 3:1-12; மாற்கு 1:1-8; யோவான் 1:19-28)
3 அது திபேரியு இராயன் அரசாண்ட பதினைந்தாவது வருஷமாயிருந்தது. சீசருக்குக் கீழான மனிதர்களின் விவரமாவது;
பொந்தியு பிலாத்து யூதேயாவை ஆண்டான்.
ஏரோது கலிலேயாவை ஆண்டான்.
ஏரோதுவின் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயாவையும்
திராகொனித்தி நாட்டையும் ஆண்டான்.
2 அன்னாவும், காய்பாவும் தலைமை ஆசாரியராக இருந்தனர். அப்போது சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனிடமிருந்து ஒரு கட்டளை வந்தது. யோவான் வனாந்தரத்தில் வாழ்ந்து வந்தான். 3 யோர்தான் நதியைச் சுற்றிலுமுள்ள எல்லாப் பிரதேசங்களுக்கும் யோவான் சென்றான். அவன் மக்களுக்குப் போதித்தான். அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும்படியாக, இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுமாறு யோவான் மக்களுக்குக் கூறினான். 4 இது ஏசாயா என்னும் தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதிய வார்த்தைகளின் நிறைவேறுதலாக அமைந்தது:
“வனாந்தரத்தில் யாரோ ஒரு மனிதன் கூவிக்கொண்டிருக்கிறான்:
‘கர்த்தருக்கு வழியைத் தயார் செய்யுங்கள்.
அவருக்குப் பாதையை நேராக்குங்கள்.
5 பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்.
ஒவ்வொரு மலையும் குன்றும் மட்டமாக்கப்படும்.
திருப்பம் மிக்க பாதைகள் நேராக்கப்படும்.
கரடுமுரடான பாதைகள் மென்மையாகும்.
6 ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய இரட்சிப்பை அறிவான்.’”(A)
7 யோவான் மூலமாக ஞானஸ்நானம் பெறும்பொருட்டு மக்கள் வந்தனர். யோவான் அவர்களை நோக்கி, “நீங்கள் விஷம் பொருந்திய பாம்புகளைப் போன்றவர்கள். வரவிருக்கும் தேவனுடைய கோபத்தினின்று ஓடிப் போக யார் உங்களுக்கு எச்சரிக்கை செய்தனர்? 8 உங்கள் இதயங்களில் மாற்றம் ஏற்பட்டுள்ளதைக் காட்டவல்ல செயல்களை நீங்கள் செய்தல் வேண்டும். ‘ஆபிரகாம் எங்கள் தந்தை’ என்று பெருமை பாராட்டிக் கூறாதீர்கள். தேவன் இந்தப் பாறைகளில் இருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உருவாக்கக்கூடும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன். 9 மரங்களை வெட்டும்படிக்குக் கோடாரி வைக்கப்பட்டுள்ளது. நல்ல பழங்களைத் தராத மரங்கள் வெட்டப்பட்டு நெருப்பில் வீசப்படும்” என்றான்.
Read full chapter2008 by Bible League International