Print Page Options
Previous Prev Day Next DayNext

Read the Gospels in 40 Days

Read through the four Gospels--Matthew, Mark, Luke, and John--in 40 days.
Duration: 40 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
மத்தேயு 1-3

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு(A)

இயேசு கிறிஸ்துவின் குடும்ப வரலாறு பின்வருமாறு: தாவீதின் வழி வந்த வர் இயேசு. தாவீது ஆபிரகாமின் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

ஆபிரகாமின் மகன் ஈசாக்கு.

ஈசாக்கின் மகன் யாக்கோபு.

யாக்கோபின் பிள்ளைகள் யூதாவும்

அவன் சகோதரர்களும்.

யூதாவின் மக்கள் பாரேசும்

சாராவும்

(அவர்களின் தாய் தாமார்.)

பாரேசின் மகன் எஸ்ரோம்.

எஸ்ரோமின் மகன் ஆராம்.

ஆராமின் மகன் அம்மினதாப்.

அம்மினதாபின் மகன் நகசோன்.

நகசோனின் மகன் சல்மோன்.

சல்மோனின் மகன் போவாஸ்.

(போவாசின் தாய் ராகாப்.)

போவாசின் மகன் ஓபேத்.

(ஓபேத்தின் தாய் ரூத்.)

ஓபேத்தின் மகன் ஈசாய்.

ஈசாயின் மகன் அரசனான தாவீது.

தாவீதின் மகன் சாலமோன்.

(சாலமோனின் தாய் உரியாவின் மனைவி.)

சாலமோனின் மகன் ரெகொபெயாம்.

ரெகொபெயாமின் மகன் அபியா.

அபியாவின் மகன் ஆசா.

ஆசாவின் மகன் யோசபாத்.

யோசபாத்தின் மகன் யோராம்.

யோராமின் மகன் உசியா.

உசியாவின் மகன் யோதாம்.

யோதாமின் மகன் ஆகாஸ்.

ஆகாஸின் மகன் எசேக்கியா.

10 எசேக்கியாவின் மகன் மனாசே.

மனாசேயின் மகன் ஆமோன்.

ஆமோனின் மகன் யோசியா.

11 யோசியாவின் மக்கள் எகொனியாவும்

அவன் சகோதரர்களும்.

(இக்காலத்தில்தான் யூதர்கள்

பாபிலோனுக்கு அடிமைகளாகக்

கொண்டு செல்லப்பட்டனர்.)

12 அவர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்:

எகொனியாவின் மகன் சலாத்தியேல்.

சலாத்தியேலின் மகன் சொரொபாபேல்.

13 சொரொபாபேலின் மகன் அபியூத்.

அபியூத்தின் மகன் எலியாக்கீம்.

எலியாக்கீமின் மகன் ஆசோர்.

14 ஆசோரின் மகன் சாதோக்.

சாதோக்கின் மகன் ஆகீம்.

ஆகீமின் மகன் எலியூத்.

15 எலியூத்தின் மகன் எலியாசார்.

எலியாசாரின் மகன் மாத்தான்.

மாத்தானின் மகன் யாக்கோபு.

16 யாக்கோபின் மகன் யோசேப்பு.

யோசேப்பின் மனைவி மரியாள்.

மரியாளின் மகன் இயேசு. கிறிஸ்து என

அழைக்கப்பட்டவர் இயேசுவே.

17 எனவே ஆபிரகாம் முதல் தாவீதுவரை பதினான்கு தலைமுறைகள். தாவீது முதல் யூதர்கள் அடிமைப்பட்டு பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதுவரைக்கும் பதினான்கு தலைமுறைகள். யூதர்கள் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்பட்டதிலிருந்து கிறிஸ்து பிறக்கும்வரை பதினான்கு தலைமுறைகள்.

இயேசு கிறிஸ்துவின் பிறப்பு(B)

18 இயேசு கிறிஸ்துவின் தாய் மரியாள். இயேசுவின் பிறப்பு இப்படி நிகழ்ந்தது. மரியாள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவர்கள் திருமணத்திற்கு முன்பே மரியாள் தான் கருவுற்றிருப்பதை அறிந்தாள். பரிசுத்த ஆவியின் வல்லமையால் மரியாள் கருவுற்றிருந்தாள். 19 மரியாளின் கணவனாகிய யோசேப்பு மிகவும் நல்லவன். மக்களின் முன்னிலையில் மரியாளை அவன் அவமதிக்க விரும்பவில்லை. எனவே யோசேப்பு மரியாளை இரகசியமாகத் தள்ளிவிட நினைத்தான்.

20 யோசேப்பு இந்த சிந்தையாயிருக்கும்பொழுது, கர்த்தருடைய தூதன் யோசேப்பின் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, மரியாளை உன் மனைவியாக ஏற்றுக்கொள்ளத் தயங்காதே. அவள் கருவிலிருக்கும் குழந்தை பரிசுத்த ஆவியானவரால் உண்டானது. 21 அவள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அக்குழந்தைக்கு இயேசு [a] எனப் பெயரிடு. அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பார்” என்றான்.

22 இவையெல்லாம் தீர்க்கதரிசியின் மூலமாகத் தேவன் சொன்னவைகளின் நிறைவேறுதல்களாக நடந்தன. தீர்க்கதரிசி சொன்னது இதுவே: 23 “கன்னிப் பெண் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்.” [b] (இம்மானுவேல் என்பதற்கு, “தேவன் நம்முடன் இருக்கிறார்” என்று பொருள்.)

24 விழித்தெழுந்த யோசேப்பு, கர்த்தருடைய தூதன் சொன்னபடியே மரியாளை மணந்தான். 25 ஆனால் மரியாள் தன் மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளை அறியவில்லை. யோசேப்பு அவருக்கு, “இயேசு” எனப் பெயரிட்டான்.

ஞானிகளின் வருகை

யூதேயாவிலுள்ள பெத்லகேம் நகரில் இயேசு பிறந்தார். அவர் ஏரோது மன்னன் காலத்தில் பிறந்தார். அதன் பின்பு இயேசு பிறந்தவுடன், சில ஞானிகள் எருசலேமுக்குக் கிழக்கிலிருந்து வந்தனர். அவர்கள் மக்களைப் பார்த்து, “புதிதாகப் பிறந்த யூதர்களின் அரசரான குழந்தை எங்கே? அவர் பிறந்துள்ளதை அறிவிக்கும் நட்சத்திரத்தைக் கண்டோம். கிழக்கு திசையில் அந்நட்சத்திரம் மேலெழுவதைக் கண்டோம். நாங்கள் அவரை வணங்க வந்துள்ளோம்” என்று சொன்னார்கள்.

ஏரோது மன்னன் யூதர்களின் இப்புதிய அரசரைப்பற்றிக் கேள்வியுற்றான். அதைக் கேட்டு ஏரோது மன்னனும் எருசலேம் மக்கள் அனைவரும் கலக்கம் அடைந்தனர். ஏரோது தலைமை ஆசாரியர் மற்றும் வேதபாரகரின் கூட்டத்தைக் கூட்டினான். கிறிஸ்து எங்கே பிறந்திருப்பார் என அவர்களைக் கேட்டான். அதற்கு அவர்கள், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் பிறப்பார். ஏனெனில்,

“‘யூதேயாவிலுள்ள பெத்லகேமே,
    உனக்கு யூதேயாவின் ஆட்சியாளர்களுக்கிடையில் முக்கியத்துவம் உண்டு.
ஆம், உன்னிலிருந்து ஒரு பிரபு தோன்றுவார்.
    அவர் இஸ்ரவேல் என்னும் என் மக்களை வழி நடத்துவார்’ (C)

என்று தீர்க்கதரிசி வேத வாக்கியங்களில் எழுதியுள்ளார்” என்று கூறினார்கள்.

பின், கிழக்கிலிருந்து வந்த ஞானிகளுடன் ஏரோது இரகசியமாகப் பேசி அவர்கள் முதன் முதலில் நட்சத்திரத்தைக் கண்ட காலத்தை அவர்களிடமிருந்து அறிந்தான். ஏரோது அந்த ஞானிகளிடம், “நீங்கள் சென்று அந்தக் குழந்தையைக் கவனமாகத் தேடுங்கள். நீங்கள் அக்குழந்தையைக் கண்டதும் என்னிடம் வந்து சொல்லுங்கள். பின் நானும் சென்று அக்குழந்தையை வணங்க இயலும்” என்று கூறி அவர்களை பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான்.

மன்னன் இவ்வாறு கூறியதைக் கேட்ட ஞானிகள் அங்கிருந்து செல்லும்போது அவர்கள் கிழக்கில் தாங்கள் கண்ட அதே நட்சத்திரத்தை மீண்டும் பார்த்தனர். ஞானிகள் அந்த நட்சத்திரத்தைப் பின்தொடர்ந்தனர். நட்சத்திரம் அவர்களுக்கு முன்னாலேயே சென்று குழந்தை பிறந்த இடத்திற்கு மேலாக வந்து நின்றது. 10 நட்சத்திரத்தைக் கண்ட ஞானிகள் மிகவும் மகிழ்ந்தனர்.

11 குழந்தை இருந்த வீட்டிற்கு ஞானிகள் வந்தனர். அவர்கள் குழந்தையை அதன் தாய் மரியாளுடன் பார்த்தனர். ஞானிகள் குழந்தையைத் தாழவிழுந்து வணங்கினர். குழந்தைக்காகத் தாங்கள் கொண்டு வந்த பரிசுப் பொருட்களை எடுத்து வைத்தனர். அவர்கள் தங்கத்தாலான பொருட்களையும் தூபவர்க்கத்தையும் வெள்ளைப்போளம் முதலான வாசனைப் பொருட்களையும் கொடுத்தனர். 12 அதன் பின்னர் தேவன் ஞானிகளின் கனவில் தோன்றி அவர்களை ஏரோது மன்னனிடம் திரும்பிச் செல்ல வேண்டாம் என எச்சரித்தார். எனவே, ஞானிகள் வேறு வழியாகத் தங்கள் நாட்டிற்குத் திரும்பினர்.

எகிப்திற்குத் தப்பிச் செல்லுதல்

13 ஞானிகள் சென்றபின், யோசேப்பின் கனவில் ஒரு தேவதூதன் தோன்றி, “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்குத் தப்பிச்செல். ஏரோது குழந்தையைத் தேடத் தொடங்குவான். ஏரோது குழந்தையைக் கொல்ல விரும்புகிறான். எனவே, நான் சொல்லுகிறவரைக்கும் எகிப்தில் தங்கியிரு” என்று சொன்னான்.

14 எனவே யோசேப்பு விழித்தெழுந்து குழந்தையுடனும் அதன் தாயுடனும் இரவிலே எகிப்துக்குப் புறப்பட்டான். 15 ஏரோது மரிக்கும்வரையில் அவர்கள் எகிப்தில் தங்கியிருந்தனர். “எகிப்திலிருந்து என் மகனை வெளியே வரவழைத்தேன்” [c] என்று தீர்க்கதரிசியின் வழியாக தேவன் சொல்லியதின் நிறைவேறுதலாக இது நடந்தேறியது.

பெத்லகேமின் ஆண் குழந்தைகளைக் கொல்லுதல்

16 ஞானிகள் தன்னைச் சந்திக்காமல் சென்றுவிட்டதை அறிந்த ஏரோது மிகுந்த கோபமுற்றான். குழந்தை பிறந்த காலத்தை ஏரோது ஞானிகளிடமிருந்து அறிந்திருந்தான். இதற்குள் இரண்டு வருடங்களாகி இருந்தன. எனவே, பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள எல்லா ஆண் குழந்தைகளையும் கொல்ல ஏரோது ஆணையிட்டான். ஆகவே, இரண்டும் அதற்குக் குறைவான வயதுடையதுமாகிய எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றுவிட ஆணையிட்டான். 17 தீர்க்கதரிசி எரேமியாவின் மூலமாக தேவன் கீழ்க்கண்டவாறு சொன்னது நடந்தேறியது.

18 “ராமாவிலே ஒரு குரல் கேட்டது.
    துக்கத்தின் மிகுதியில் வந்த கதறல் அது.
தன் குழந்தைகளுக்காக அழுகிறாள், ராகேல்.
    அவளைத் தேற்ற முடியாது,
    ஏனெனில் அவளது குழந்தைகள் இறந்துவிட்டன.” (D)

எகிப்தில் இருந்து திரும்புதல்

19 ஏரோது இறந்தபின், யோசேப்பின் கனவில் கர்த்தருடைய தூதன் ஒருவன் தோன்றினான். இது யோசேப்பு எகிப்தில் இருக்கும்போது நடந்தது. 20 தூதன் அவனிடம், “எழுந்திரு! குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு இஸ்ரவேலுக்குச் செல். ஏனெனில் குழந்தையைக் கொல்ல முயன்றவர்கள் இப்பொழுது இறந்துவிட்டனர்” என்றான்.

21 ஆகவே, யோசேப்பு குழந்தையையும் அதன் தாயையும் அழைத்துக்கொண்டு இஸ்ரவேல் சென்றான். 22 அப்பொழுது யூதேயாவின் மன்னனாக அர்கெலாயு இருந்தான் என்பதை யோசேப்பு கேள்வியுற்றான். தன் தந்தை ஏரோது இறந்தபின் அர்கெலாயு யூதேயாவின் மன்னனானான். இவ்வாறு, யூதேயாவுக்குச் செல்ல யோசேப்பு தயங்கினான். யோசேப்பு கனவில் எச்சரிப்படைந்து அங்கிருந்து கலிலேயா பகுதிக்குச் சென்றான். 23 யோசேப்பு நாசரேத் என்னும் நகருக்குச் சென்று அங்கு வசித்தான். எனவே தேவன் தீர்க்கதரிசிகள் வாயிலாக “கிறிஸ்து நசரேயன் [d] என்று அழைக்கப்படுவார்” என சொன்னது நடந்தேறியது.

ஸ்நானகன் யோவானின் திருப்பணி(E)

அந்நாட்களில் யோவான் ஸ்நானகன் யூதேயாவின் வனாந்தரத்தில் வருகை புரிந்து, ,“உங்கள் மனதையும் வாழ்வையும் சீர்ப்படுத்துங்கள். ஏனென்றால் பரலோக இராஜ்யம் சமீபித்திருக்கிறது” என்று போதனை செய்தான்.

,“‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள்;
அவரது பாதையை சீர்ப்படுத்துங்கள்’
    என்று வனாந்தரத்தில் ஒருவன் சத்தமிடுகிறான்” (F)

என தீர்க்கதரிசியாகிய ஏசாயா குறிப்பிட்டது இந்த யோவான் ஸ்நானகனைப் பற்றிதான்.

ஒட்டக உரோமத்தால் ஆன ஆடையை அணிந்து தோல் கச்சையொன்றைத் தன் இடுப்பில் இவன் கட்டியிருந்தான். வெட்டுக்கிளியும் காட்டுத்தேனும் அவன் உணவாயிருந்தன. யோவானின் போதனையைக் கேட்க எருசலேமிலிருந்தும் யூதேயா முழுவதிலிருந்தும் யோர்தான் நதிக்கரை முழுவதிலிருந்தும் மக்கள் வந்தனர். அம்மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கைச் செய்தனர். யோவான் அவர்களுக்கு யோர்தான் நதியில் ஞானஸ்நானம் கொடுத்தான்.

ஞானஸ்நானம் கொடுத்துக்கொண்டிருந்த இடத்திற்கு பரிசேயர் மற்றும் சதுசேயரில் பலரும் வந்தனர். அவர்களைக் கண்டதும் யோவான்,, “நீங்களெல்லோரும் பாம்பின் குட்டிகள். வரப்போகும் தேவனின் கோபத்திலிருந்து தப்பிச்செல்ல உங்களை எச்சரித்தது யார்? உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதை நிரூபிக்கக் கூடிய செயலை நீங்கள் செய்யவேண்டும். நாம் ஆபிரகாமின் பிள்ளைகள் எனப் பெருமை பேசித் திரியலாம் என எண்ணாதீர்கள். நான் சொல்கிறேன், ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை இங்குள்ள கற்களிலிருந்தும் உண்டாக்க தேவன் வல்லவர். 10 மரங்களை வெட்டக் கோடரி தயாராக இருக்கிறது. நற்கனிகளைத் தராத எல்லா மரங்களும் வெட்டப்பட்டுத் தீயிலிடப்படும்.

11 ,“உங்கள் மனமும் வாழ்வும் திருந்திவிட்டன என்பதைக் காட்ட நான் உங்களுக்குத் தண்ணீரால் ஞானஸ்நானம் தருகிறேன். ஆனால், என்னிலும் பெரியவர் ஒருவர் வரப்போகிறார். அவர் காலணிகளை அவிழ்க்கவும் நான் தகுதியற்றவன். அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார். 12 அவர் தானியங்களைச் சுத்தம் செய்யத் தயாராக வருவார். அவர் பதரிலிருந்து நல்ல தானிய மணிகளைப் பிரித்தெடுத்துத் தன் களஞ்சியத்தில் சேர்ப்பார். பதரையோ அணைந்து போகாத தீயிலிட்டு எரிப்பார்” என்றான்.

இயேசுவின் ஞானஸ்நானம்(G)

13 அப்பொழுது இயேசு கலிலேயாவிலிருந்து யோர்தான் நதிக்கரைக்கு வந்தார். இயேசு யோவானிடம் சென்று தனக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படிக் கேட்டார். 14 ஆனால் யோவானோ இயேசுவுக்குத் தான் ஞானஸ்நானம் கொடுக்குமளவுக்கு மேன்மையானவன் அல்ல என்று அவரைத் தடுக்க முயன்றான். எனவே யோவான் இயேசுவிடம்,, “நீர் என்னிடம் ஞானஸ்நானம் பெறலாகுமோ? நான்தான் உம்மிடம் ஞானஸ்நானம் பெறவேண்டும்” என்றான்.

15 அதற்கு இயேசு,, “தற்பொழுது நான் சொல்லுகிறபடியே செய். தேவன் எதிர்பார்க்கும் நீதியான செயல்கள் அனைத்தையும் நான் செய்ய வேண்டும்” என்று பதில் சொன்னார். ஆகவே, யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கச் சம்மதித்தான்.

16 இயேசு ஞானஸ்நானம் பெற்று, நீரிலிருந்து மேலெழுந்து வந்தபோது, வானம் திறந்து, தேவ ஆவியானவர் ஒரு புறாவைப் போலக் கீழிறங்கி அவரிடம் வருவதைக் கண்டார். 17 வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது. அக்குரல்,, “இவர் (இயேசு) என் குமாரன். நான் இவரை நேசிக்கிறேன். நான் இவரிடத்தில் பிரியமாயிருக்கிறேன்” எனக் கூறியது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center