Add parallel Print Page Options

இயேசு ஆலயத்திற்குள் செல்லுதல்

(மாற்கு 11:15-19; லூக்கா 19:45-48; யோவான் 2:13-22)

12 இயேசு ஆலயத்திற்குள் நுழைந்தார். அங்கு பொருட்களை விற்றுக்கொண்டும் வாங்கிக்கொண்டுமிருந்த அனைவரையும் வெளியேற்றினார். பலவகையான நாணயங்களை மாற்றிக் கொண்டிருந்தவர்களின் மேஜைகளைக் கவிழ்த்தார். புறாக்களை வியாபாரம் செய்துகொண்டிருந்தவர்களின் மேஜைகளையும் கவிழ்த்தார். 13 அங்கிருந்த மக்கள் அனைவரிடமும் இயேசு, “ஏற்கெனவே வேத வாக்கியங்களில் ‘பிரார்த்தனை செய்வதற்கான இடம் என்னுடைய வீடு!’(A) என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் நீங்களோ தேவனுடைய வீட்டைக் கொள்ளைக்காரர்கள் பதுங்கும் இடமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள்”(B) என்று கூறினார்.

14 சில குருடர்களும் முடவர்களும் தேவாலயத்திலிருந்த இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் இயேசு குணப்படுத்தினார். 15 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவின் செயலைக் கண்டார்கள். இயேசு பெரும் செயல்களைச் செய்வதையும் பிள்ளைகள் அவரைப் புகழ்வதையும் கண்டார்கள். சிறுபிள்ளைகள் எல்லாரும், “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவை அனைத்தும் ஆசாரியர்களையும் வேதபாரகர்களையும் கோபம்கொள்ளச் செய்தன.

16 தலைமை ஆசாரியர்களும் வேதபாரகர்களும் இயேசுவிடம், “இப்பிள்ளைகள் சொல்வதைக் கேட்டீரா?” என்று வினவினார்கள்.

இயேசு அவர்களிடம், “ஆம், வேதவாக்கியம் கூறுகிறது, ‘நீரே (தேவன்) குழந்தைகளுக்கும், சிறு குழந்தைகளுக்கும் புகழ்பாடக் கற்பித்தீர்.’ நீங்கள் அந்த வேதவாக்கியங்களைப் படிக்கவில்லையா?” என்று பதிலுரைத்தார்.

17 பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டு விலகி பெத்தானியா நகருக்குச் சென்றார். அன்றைய இரவு இயேசு அங்கேயே தங்கினார்.

Read full chapter