Beginning
எத்தியோப்பியாவிற்கு தேவனுடைய செய்தி
18 எத்தியோப்பியாவை அதன் ஆறுகளோடு பார். அந்த நாடு பூச்சிகளால் நிறைந்திருக்கிறது. அவற்றின் சிறகுகளின் இரைச்சலை உங்களால் கேட்க முடியும். 2 அந்த நாடு ஜனங்களை நாணல் படகுகளில் கடலைக் கடந்து செல்லுமாறு அனுப்பியது.
விரைவாகச் செல்லும் தூதர்களே!
வளர்ச்சியும் பலமும் கொண்ட ஜனங்களிடம் போங்கள்.
(எல்லா இடங்களிலும் உயரமும் பலமும் கொண்ட ஜனங்களிடம் மற்ற ஜனங்கள் பயப்படுவார்கள்.
அவர்கள் வல்லமைமிக்க தேசத்தை உடையவர்கள்.
அவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கிறது.
ஆறுகளால் பிரிக்கப்படுகிற நாட்டில் அவர்கள் இருக்கிறார்கள்).
3 அவர்களுக்குக் கெட்டவை ஏற்படும் என்று அந்த ஜனங்களை எச்சரிக்கை செய்யுங்கள்.
இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இவர்களுக்கு ஏற்படப்போவதைக் காண்பார்கள்.
மலையில் ஏற்றப்பட்டக் கொடியைப்போன்று, ஜனங்கள் இவற்றைத் தெளிவாகப் பார்ப்பார்கள்.
இந்த உலகிலுள்ள அனைத்து ஜனங்களும் இந்த உயர்ந்து வளர்ந்த ஜனங்களுக்கு நிகழப்போவதைப்பற்றிக் கேள்விப்படுவார்கள்.
போருக்கு முன் கேட்கும் எக்காளத்தைப்போன்று தெளிவாக அவர்கள் கேட்பார்கள்.
4 கர்த்தர் என்னிடம், “நான் எனக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில் இருப்பேன். நான் நிகழ்பவற்றை அமைதியாகக் கவனிப்பேன். அழகான ஒரு கோடை நாளில் நடுப்பகலில் ஜனங்கள் ஓய்வாக இருப்பார்கள். (இது வெப்பமுள்ள அறுவடைக்காலமாக இருக்கும். மழை இல்லாதபோது, காலைப்பனிமட்டும் இருக்கும்.) 5 பிறகு ஏதோ பயங்கரமான ஒன்று நிகழும். பூக்கள் மலர்ச்சியடைந்த பிறகுள்ள காலமாக இருக்கும். புதிய திராட்சைகள் மொட்டு விட்டு வளர்ந்துகொண்டிருக்கும். ஆனால் அறுவடைக்கு முன்பு, பகைவர்கள் வந்து செடிகளை வெட்டிப்போடுவார்கள். பகைவர்கள் கொடிகளை வெட்டித் தூர எறிவார்கள். 6 திராட்சைக் கொடிகள் மலைப் பறவைகளுக்கும், காட்டுமிருகங்களுக்கும் உணவாகக் கிடைக்கும். அக்கொடிகளில் பறவைகள் கோடை காலத்தில் தங்கும். மழைக் காலத்தில் காட்டு மிருகங்கள் அக்கொடிகளை உண்ணும்” என்றார்.
7 அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு ஒரு விசேஷ காணிக்கை கொண்டுவரப்படும். இக்காணிக்கை உயரமும், பலமும் கொண்ட ஜனங்களிடமிருந்து வரும். (எல்லா இடங்களிலும் உள்ள ஜனங்கள் இந்த உயரமும் பலமும் கொண்ட ஜனங்களுக்கு அஞ்சுவார்கள். அந்த வல்லமை மிக்க தேசத்தைக் கொண்டவர்களின் தேசம் மற்ற தேசங்களைத் தோற்கடிக்கும். ஆறுகளால் பிரிக்கப்பட்ட நாட்டில் அவர்கள் இருப்பார்கள்). இந்தக் காணிக்கை சீயோன் மலையான, கர்த்தருடைய இடத்திற்குக் கொண்டுவரப்படும்.
எகிப்துக்கு தேவனுடைய செய்தி
19 எகிப்தைப் பற்றியத் துயரமான செய்தி: பார்! விரைவான மேகத்தில் கர்த்தர் வந்து கொண்டிருக்கிறார். கர்த்தர் எகிப்துக்குள் நுழைவார். எகிப்திலுள்ள அனைத்து பொய்த் தெய்வங்களும் பயத்தால் நடுங்கும். எகிப்து தைரியமுடையது. ஆனால், அந்தத் தைரியம் சூடான மெழுகைப்போல உருகிப்போகும்.
2 “எகிப்து ஜனங்கள் தங்களுக்கு எதிராகச் சண்டையிட்டுக்கொள்ள நான் காரணமாக இருப்பேன். ஜனங்கள் தம் சகோதரர்களோடு சண்டையிடுவார்கள். அயலார் தங்கள் அயலாருக்கு எதிராக இருப்பார்கள். பட்டணங்கள் பட்டணங்களுக்கு எதிராக இருக்கும். இராஜ்யங்கள் இராஜ்யங்களுக்கு எதிராக இருக்கும். 3 எகிப்து ஜனங்கள் குழம்பிப்போவார்கள். ஜனங்கள் தமது பொய்த் தெய்வங்களையும், ஞானிகளையும் என்ன செய்யலாம் என்று கேட்பார்கள். ஜனங்கள் குறி சொல்பவர்களையும், மந்திர வாதிகளையும் கேட்பார்கள். ஆனால் அவர்களது ஆலோசனைகள் பயனற்றுப்போகும்” என்று தேவன் சொல்கிறார்.
4 சர்வ வல்லமையுள்ள கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் (தேவன்) எகிப்தை ஒரு கடினமான எஜமானனிடம் கொடுப்பேன். ஜனங்களின்மீது ஒரு வல்லமை வாய்ந்த அரசன் ஆட்சிசெய்வான்.”
5 நைல் நதி வறண்டுபோகும். கடலிலிருந்து தண்ணீர் போய்விடும். 6 அனைத்து ஆறுகளும் மிகக் கெட்ட மணம் வீசும். எகிப்திலுள்ள கால்வாய்கள் வறண்டுபோகும். 7 அதிலுள்ள தண்ணீரும் போய்விடும். எல்லா தண்ணீர் தாவரங்களும் வாடிப்போகும். ஆற்றங்கரைகளில் உள்ள செடிகள் எல்லாம் வாடும். அவை பறக்கடிக்கப்படும். ஆற்றின் அருகே உள்ள அகன்ற இடங்களில் உள்ள செடிகளும் வாடிப்போகும்.
8 நைல் நதியில் மீன் பிடிக்கிற மீனவர்கள் அனைவரும் துயரப்படுவார்கள். அவர்கள் அலறுவார்கள். அவர்கள் தங்கள் உணவிற்காக நைல் நதியை நம்பி இருந்தனர். ஆனால் அது வறண்டுபோகும். 9 ஆடை நெய்கிற அனைத்து ஜனங்களும் மிக மிகத் துன்பப்படுவார்கள். அந்த ஜனங்களுக்கு சல்லா துணிகளை நெய்ய சணல் தேவைப்படும். ஆனால் ஆறு வறண்டுபோகும். எனவே சணல் வளராது. 10 தண்ணீரைத் தேக்கி வைக்க அணை கட்டுகிறவர்களுக்கு வேலை இருக்காது. எனவே அவர்கள் துயரமாக இருப்பார்கள்.
11 சோவான் பட்டணத்திலுள்ள தலைவர்கள் மூடர்கள். “பார்வோனின் ஞானமுள்ள ஆலோசனைக்காரர்கள்” தவறான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். தம்மை ஞானிகள் என்று அந்தத் தலைவர்கள் கூறுகிறார்கள். அரசர்களின் பழைய குடும்பத்திலிருந்து வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தாம் நினைப்பதுபோல அவர்கள் அத்தனை புத்திசாலிகள் அல்ல.
12 எகிப்தே! உனது புத்திசாலிகள் எங்கே? சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்திற்காக என்ன திட்டமிட்டிருக்கிறார் என்று அந்த புத்திசாலிகள் தெரிந்துகொள்ள வேண்டும். என்ன நிகழும் என்பதை உங்களுக்குச் சொல்லும் ஜனங்களாக அவர்கள் இருக்க வேண்டும்.
13 சோவானின் தலைவர்கள் மூடரானார்கள். நோப்பின் தலைவர்கள் பொய்யானவற்றை நம்பினார்கள். எனவே, தலைவர்கள் எகிப்தை தவறான வழியில் நடத்திச்சென்றனர். 14 கர்த்தர் தலைவர்களைக் குழப்பமடைய செய்தார். அவர்கள் அலைந்து திரிந்து எகிப்தை தவறான வழிகளில் நடத்திச் சென்றனர். தலைவர்கள் செய்கிற அனைத்தும் தவறாயின. அவர்கள் குடிகாரர்கள் மயக்கத்தோடு தரையில் உருளுவதுபோலக் கிடந்தனர். 15 அந்தத் தலைவர்களால் செய்ய முடிந்தது எதுவுமில்லை. (இந்தத் தலைவர்கள் “தலைகளாகவும், வால்களாகவும்” இருக்கின்றனர். அவர்கள் “கிளையாகவும் நாணலாகவும்” இருக்கின்றனர்).
16 அந்தக் காலத்தில், எகிப்தியர்கள் அச்சமுள்ள பெண்களைப்போன்றிருப்பார்கள். அவர்கள் சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு பயப்படுவார்கள். ஜனங்களைத் தண்டிக்க கர்த்தர் தம் கையைத் தூக்குவார். அவர்கள் அஞ்சுவார்கள். 17 யூதாவின் தேசம் எகிப்தியார்களுக்குப் பயங்கரமான இடமாக இருந்தது. எகிப்திலுள்ள எவனும் யூதாவின் பெயரைக் கேட்டால் நடுங்குவான். இவை நிகழும், ஏனென்றால், சர்வ வல்லமையுள்ள கர்த்தர் எகிப்திற்கு பயங்கரங்கள் நிகழத் திட்டமிட்டிருக்கிறார். 18 அப்பொழுது, எகிப்தில் ஐந்து நகரங்கள் இருக்கும். அங்குள்ள ஜனங்கள் கானான் மொழியைப் (யூதமொழி) பேசிக்கொண்டிருப்பார்கள். இந்நகரங்களுள் ஒன்று “அழிவின் நகரம்” என்று பெயர் பெறும். சர்வ வல்லமையுள்ள கர்த்தரைப் பின்பற்றுவதாக ஜனங்கள் வாக்களிப்பார்கள். 19 அந்தக் காலத்தில், ஒரு பலிபீடம் எகிப்தின் மத்தியில் கர்த்தருக்காக இருக்கும். எகிப்தின் எல்லையில் கர்த்தருக்கு மகிமை சேர்க்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்று இருக்கும். 20 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் வல்லமை மிக்க செயல்களைச் செய்கிறார் என்பதற்கு இது அடையாளமாக இருக்கும். கர்த்தரிடம் உதவி கேட்டு ஜனங்கள் எந்த நேரத்தில் அலறினாலும் கர்த்தர் உதவியை அனுப்புவார். ஜனங்களைக் காப்பாற்றி பாதுகாக்க கர்த்தர் ஒருவனை அனுப்புவார். அந்த ஆள் இந்த ஜனங்களை அவர்களை ஒடுக்கும் மற்ற ஜனங்களிடமிருந்து காப்பாற்றுவான்.
21 அந்தக் காலத்தில், எகிப்தின் ஜனங்கள் கர்த்தரைப் பற்றி உண்மையாகத் தெரிந்துகொள்வார்கள். எகிப்தின் ஜனங்கள் தேவனை நேசிப்பார்கள். அந்த ஜனங்கள் தேவனுக்குச் சேவை செய்வார்கள். பல பலிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் கர்த்தருக்குப் பல வாக்குறுதிகளைக் கொடுப்பார்கள். அவர்கள் அவ்வாக்குறுதிகளைக் காப்பாற்றுவார்கள்.
22 எகிப்தின் ஜனங்களை கர்த்தர் தண்டிப்பார். பிறகு, கர்த்தர் அவர்களை மன்னிப்பார். (குணப்படுத்துவார்) அவர்கள் கர்த்தரிடம் திரும்பி வருவார்கள். கர்த்தர் அவர்களது ஜெபங்களைக் கேட்டு அவர்களைக் குணப்படுத்துவார். (மன்னிப்பார்)
23 அந்தக் காலத்தில், எகிப்திலிருந்து அசீரியாவிற்கு ஒரு பெரும் பாதை இருக்கும். பிறகு, ஜனங்கள் அசீரியாவிலிருந்து எகிப்திற்குப்போவார்கள். ஜனங்கள் எகிப்திலிருந்து அசீரியாவிற்குப்போவார்கள். எகிப்து அசீரியாவோடு சேர்ந்து வேலை செய்யும்.
24 அந்தக் காலத்தில், இஸ்ரவேல் அசீரியாவுடனும் எகிப்துடனும் சேர்ந்து உடன்பாடு செய்யும். இது நாட்டுக்கான ஆசீர்வாதமாக விளங்கும். 25 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இந்த நாடுகளை ஆசீர்வதிப்பார். “எகிப்தியரே நீங்கள் என் ஜனங்கள். அசீரியாவே நான் உன்னை உருவாக்கினேன். இஸ்ரவேலே நான் உன்னைச் சொந்தமாக்கினேன். நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டீர்கள்!” என்று அவர் சொல்வார்.
எகிப்தையும் எத்தியோப்பியாவையும் அசீரியா தோற்கடிக்கும்
20 அசீரியாவின் அரசனாகச் சர்கோன் இருந்தான். சர்கோன் தர்த்தானை அஸ்தோத்துக்கு எதிராக சண்டையிட அனுப்பினான். தர்த்தான் அங்கே போய் அந்நகரத்தைக் கைப்பற்றினான். 2 அந்த நேரத்தில், கர்த்தர், ஆமோத்சின் மகனான ஏசாயா மூலமாகப் பேசினார். “போ உன் இடுப்பில் இருந்து துயரமாகிய ஆடையை எடு. உன் கால்களில் உள்ள பாதரட்சைகளைக் கழற்று” என்று கர்த்தர் கூறினார். ஏசாயா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். ஏசாயா ஆடைகளும் பாதரட்சைகளும் இல்லாமல் நடந்தான்.
3 பிறகு, “மூன்று ஆண்டு காலமாக ஏசாயா ஆடைகளும் பாதரட்சைகளும் இல்லாமல் நடந்து வந்தான். இது எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது. 4 அசீரியாவின் அரசன் எகிப்து மற்றும் எத்தியோப்பியாவைத் தோற்கடிப்பான். அசீரியா சிறைக் கைதிகளை அவர்களது நாடுகளிலிருந்து அழைத்துச்செல்லும். முதியவர்களும் இளைஞர்களும், ஆடைகளும், பாதரட்சைகளும் இல்லாமல் அழைத்துச்செல்லப்படுவார்கள். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். எகிப்திலுள்ள ஜனங்கள் வெட்கம் அடைவார்கள். 5 அவர்கள் எகிப்தின் மகிமையைப் பார்த்து அதிசயித்தனர். அவர்கள் ஏமாந்து நாணம் அடைவார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
6 கடற்கரையில் வாழ்ந்துகொண்டிருக்கிற ஜனங்கள், “அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று அந்த நாடுகளின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். நாங்கள் அவர்களிடம் ஓடிப்போனோம். ஆதலால், அவர்கள் எங்களை அசீரியா அரசனிடம் இருந்து தப்புமாறு செய்வார்கள். ஆனால் அவர்களைப் பாருங்கள் அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. எனவே எப்படி நாங்கள் தப்பித்துக்கொள்வோம்?” என்று சொல்வார்கள்.
பாபிலோனுக்கு தேவனுடைய செய்தி
21 கடல் வனாந்தரத்தைப் பற்றிய துயரச் செய்தி:
வனாந்தரத்திலிருந்து ஏதோ வந்துகொண்டிருக்கிறது.
இது நெகேவிலிருந்து [a] வந்துகொண்டிருக்கும் காற்று போல் உள்ளது.
இது பயங்கரமான நாட்டிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
2 ஒரு பயங்கரமான நிகழ்ச்சி நடக்கப்போவதை நான் பார்த்திருக்கிறேன்,
துரோகிகள் உனக்கு எதிராகத் திரும்பியதை நான் பார்க்கிறேன்.
ஜனங்கள் உன் செல்வத்தை எடுத்துக்கொள்வதை நான் பார்க்கிறேன்.
ஏலாமே! போய் ஜனங்களுக்கு எதிராகப்போரிடு!
மேதியாவே! நகரத்தை சுற்றி உன் படைகளை நிறுத்தி அதனைத் தோற்கடி!
இந்த நகரத்தில் உள்ள கெட்டவற்றையெல்லாம் முடித்து வைப்பேன்.
3 அந்தப் பயங்கரமானவற்றை நான் பார்த்தேன். இப்பொழுது நான் பயப்படுகிறேன்.
பயத்தால் என் வயிறு பாதிக்கப்பட்டுள்ளது.
அந்த வலியானது பிரசவ வலி போன்றுள்ளது.
நான் கேள்விப்பட்ட செய்திகள் எல்லாம் என்னை அச்சம்கொள்ளச் செய்கிறது.
நான் பார்த்தவை எல்லாம் என்னைப் பயத்தால் நடுங்கச் செய்கிறது.
4 நான் கவலைப்படுகிறேன். நான் பயத்தால் நடுங்கிக்கொண்டிருக்கிறேன்.
என் இன்பமான மாலைப்பொழுது பயமுள்ள இரவாயிற்று.
5 எல்லாம் நன்றாக இருக்கிறது என்று ஜனங்கள் நினைத்தனர்.
“மேசையைத் தயார் செய்யுங்கள்! சாப்பிடுங்கள், குடியுங்கள்!” என்று ஜனங்கள் சொன்னார்கள்.
அதே நேரத்தில் படை வீரர்கள், “காவல்காரரை நிறுத்துங்கள்!
அதிகாரிகளே எழுந்து
உங்கள் கேடயங்களைப் பளபளப்பாக்குங்கள்!” என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
6 எனது ஆண்டவர் என்னிடம், “போய், நகரத்தைக் காவல் செய்ய ஒருவனைக் கண்டுபிடி. அவன் தான் பார்ப்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். 7 காவல்காரன் குதிரைவீரர்கள், கழுதைகள் அல்லது ஒட்டகங்கள் ஆகியவற்றின் வரிசையைப் பார்த்தால் அவன் கவனமாக மிகக்கவனமாக உற்றுக்கேட்க வேண்டும்” என்று சொன்னார்.
8 பிறகு, ஒரு நாள், காவல்காரன் “சிங்கம்” என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தான்.
“அவன், என் ஆண்டவனே! ஒவ்வொரு நாளும் நான் காவல் கோபுரத்தில் காத்துக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு இரவிலும் நான் நின்றுகொண்டு காவல் செய்தேன்.
9 பாருங்கள்! அவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்!
நான் மனிதர்கள் மற்றும் குதிரை வீரர்களின் வரிசைகளைப் பார்க்கிறேன்” என்று காவல்காரன் சொல்லிக்கொண்டிருந்தான்.
பிறகு, ஒரு தூதுவன்,
“பாபிலோன் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
பாபிலோன் தரையில் விழுந்துவிட்டது.
அங்குள்ள பொய்த் தெய்வங்களின் சிலைகள் எல்லாம்
தரையில் வீசப்பட்டு துண்டுகளாக உடைக்கப்பட்டிருக்கின்றன” என்று சொன்னான்.
10 ஏசாயா, “எனது ஜனங்களே! இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து நான் கேட்ட, எல்லாவற்றையும் உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் மாவு எந்திரத்தில் போடப்பட்ட தானியம்போன்று அரைக்கப்படுவீர்கள்.”
தூமா பற்றி தேவனுடைய செய்தி
11 தூமா பற்றி துயரச் செய்தி.
யாரோ ஒருவன் என்னை ஏதோமிலிருந்து அழைத்தான்.
அவன், “காவல்காரனே! இரவு எவ்வளவு போயிற்று?
இரவு முடிய இன்னும் எவ்வளவு நேரமிருக்கிறது?” என்று கேட்டான்.
12 அந்தக் காவல்காரன்,
“விடிற்காலம் வந்துகொண்டிருக்கிறது.
ஆனால் மீண்டும் இரவு வரும்.
கேட்பதற்கு ஏதாவது இருந்தால்,
பிறகு மீண்டும் வந்து கேளுங்கள்” என்றான்.
அரேபியாவிற்கு தேவனுடைய செய்தி
13 அரேபியா பற்றிய துயரமான செய்தி.
அரேபியாவின் வனாந்திரத்தில் திதானிய பயணிகள்
சில மரங்களின் அருகில் இரவில் தங்கினார்கள்.
14 சில தாகமுள்ள பயணிகளுக்கு அவர்கள் தண்ணீரைக் கொடுத்தார்கள்.
தேமாவின் ஜனங்கள் பயணிகளுக்கு உணவு கொடுத்தார்கள்.
15 ஜனங்கள் வாள்களுக்கும், வில்லுகளுக்கும் தப்பி ஓடுகிறார்கள்.
அந்த வாள்கள் அழிக்கத் தயாராயிருந்தன.
அந்த வில்லுகள் எய்யப்பட தயாராயிருந்தன.
கடினமான போரிலிருந்து அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
16 எனது கர்த்தராகிய ஆண்டவர், நடக்கப்போகிறவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார். “ஒரு ஆண்டில் (கூலிக்காரனுடைய கால எண்ணிக்கையைப்போன்று) கேதாருடைய மகிமை எல்லாம் போய்விடும். 17 அந்த நேரத்தில், மிகச் சில வில் வீரர்களும் கேதாரின் சிறந்த படை வீரர்கள் மட்டுமே உயிரோடு விடப்படுவார்கள்” என்று கர்த்தர் சொன்னார். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அவற்றையெல்லாம் எனக்குச் சொன்னார்.
எருசலேமிற்கு தேவனுடைய செய்தி
22 தரிசனப் பள்ளத்தாக்கைப் பற்றிய சோகமான செய்தி:
ஜனங்களே உங்களுக்கு என்ன தவறு ஏற்பட்டது?
உங்கள் வீட்டு மாடிகளில் ஏன் மறைந்துகொண்டிருக்கிறீர்கள்?
2 கடந்த காலத்தில் இந்நகரம் பரபரப்புடைய நகரமாக இருந்தது.
இந்த நகரம் ஆரவாரமும் மகிழ்ச்சியும் உடையதாக இருந்தது.
ஆனால் இப்போது அவை மாறியுள்ளன.
உனது ஜனங்கள் கொல்லப்பட்டிருக்கலாம் ஆனால் வாள்களினால் அல்ல.
ஜனங்கள் மரித்தனர்.
ஆனால் போரிடும்போது அல்ல.
3 உங்கள் தலைவர்கள் எல்லோரும் சேர்ந்து தூரத்துக்கு ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் அனைவரும் வில் இல்லாமல் கைது செய்யப்பட்டார்கள்,
தலைவர்கள் அனைவரும் சேர்ந்து தூர ஓடிப்போனார்கள்.
ஆனால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
4 எனவே, “என்னைப் பார்க்கவேண்டாம்!
என்னை அழ விடுங்கள்!
எருசலேமின் அழிவைப்பற்றி நான் வருந்தும்போது
எனக்கு ஆறுதல் சொல்ல வரவேண்டாம்”.
5 கர்த்தர் ஒரு விசேஷமான நாளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்த நாளில் அமளியும் குழப்பமும் ஏற்படும். தரிசனப் பள்ளத்தாக்கில் ஜனங்கள் ஒருவர் மீது ஒருவர் நடப்பார்கள். நகரச் சுவர்கள் கீழேத் தள்ளப்படும். பள்ளத்தாக்கில் உள்ள ஜனங்கள் நகரத்திலுள்ள மலை மேல் உள்ள ஜனங்களைப் பார்த்து ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். 6 ஏலாமிலிருந்து வந்த குதிரை வீரர்கள் தங்கள் அம்புகள் நிரப்பப்பட்ட பைகளை எடுத்துக்கொண்டு போர் செய்யப்போவார்கள். கீர் நாட்டு ஜனங்கள் தங்கள் கேடயங்களோடு ஆரவாரம் செய்வார்கள். 7 உங்களது சிறப்பான பள்ளத்தாக்கில் படைவீரர்கள் சந்திப்பார்கள். பள்ளத்தாக்கானது இரதங்களால் நிறைந்துவிடும். குதிரை வீரர்களை நகர வாசலுக்கருகில் நிறுத்தி வைப்பார். 8 அந்த நேரத்தில், யூதாவிலுள்ள ஜனங்கள் தம் ஆயுதங்களைப் பயன்படுத்த விரும்புவார்கள். அவர்கள் அவற்றை பெத்-ஹ-யார்ல் [b] வைத்திருக்கிறார்கள். யூதாவைப் பாதுகாக்கும் சுவர்களைப் பகைவர்கள் இடித்துப்போடுவார்கள். 9-11 தாவீதின் நகரச் சுவர்கள் விரிசல்விடத் துவங்கின. அந்த விரிசல்களை நீ பார்ப்பாய். எனவே நீ வீடுகளை எண்ணிக் கணக்கிடுவாய். நீ வீட்டிலுள்ள கற்களைக் கொண்டு சுவர்களை நிலைப்படுத்த பயன்படுத்துவாய். இரண்டு சுவர்களுக்கு இடையில் பழைய ஓடையில் உள்ள தண்ணீரைச் சேமித்து வைக்க இடம்பண்ணுவாய். நீ தண்ணீரைப் பாதுகாப்பாய்.
உன்னைக் காத்துக்கொள்ள நீ இவ்வாறு அனைத்தையும் செய்வாய். ஆனால் நீ இவற்றையெல்லாம் செய்த தேவனை நம்பமாட்டாய். நீண்ட காலத்திற்கு முன்பே இவற்றைச் செய்தவரை (தேவனை) நீ பார்க்கமாட்டாய்.
12 எனவே, சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர், ஜனங்களிடம் அவர்களது மரித்துப்போன நண்பர்களுக்காக அழவும் சோகப்படவும் சொல்வார். ஜனங்கள் தங்கள் தலைகளை மழித்துக்கொண்டு, துக்கத்திற்குரிய ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.
13 ஆனால், பார்! ஜனங்கள் இப்பொழுது மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள்.
அவர்கள் சந்தோஷமாய் கொண்டாடுகிறார்கள்.
ஜனங்கள் சொல்லுகிறதாவது: “ஆடுகளையும் மாடுகளையும் கொல்லுங்கள்.
நாம் கொண்டாடுவோம்.
உங்கள் உணவை உண்ணுங்கள். திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
உண்ணுங்கள் குடியுங்கள்.
ஏனென்றால், நாளை மரித்துவிடுவோம்” என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
14 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் என்னிடம் இவற்றையெல்லாம் சொன்னார். இவற்றை நான் என் காதுகளால் கேட்டேன். “நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள். குற்றம் மன்னிக்கப்படுவதற்கு முன்னால் நீங்கள் மரித்துப்போவீர்கள் என்று நான் உறுதிபடக் கூறுகிறேன்!” சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
செப்னாவிற்கு தேவனுடைய செய்தி
15 சர்வ வல்லமையுள்ள எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: செப்னா என்ற வேலைக்காரனிடம் போ, அந்த வேலைக்காரனே அரண்மனையின் மேலாள்: 16 “நீ இங்கே என்ன செய்துகொண்டிருக்கிறாய்? உன் குடும்பத்திலுள்ள யாராவது இங்கே புதைக்கப்பட்டிருக்கிறார்களா? ஏன் இங்கே ஒரு கல்லறையை உருவாக்கினாய்?” என்று அந்த வேலைக்காரனைக் கேள்.”
அதற்கு ஏசாயா, “இந்த மனிதனைப் பாருங்கள்! இவன் தனது கல்லறையை உயர்ந்த இடத்தில் அமைத்துக்கொண்டிருக்கிறான். இந்த மனிதன் அவனது கல்லறையை அமைக்க பாறைக்குள் வெட்டிக்கொண்டிருக்கிறான்.
17-18 “மனிதனே, கர்த்தர் உன்னை நசுக்கி விடுவார். கர்த்தர் உன்னை உருட்டி சிறு உருண்டையாக்கி வெகு தொலைவிலுள்ள இன்னொரு நாட்டின் திறந்த கைகளில் எறிந்துவிடுவார். அங்கே நீ மரித்துப்போவாய்” என்று கூறினான்.
கர்த்தர்: “நீ உனது இரதங்களைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தொலைதூர நாட்டிலுள்ள உனது புதிய அரசன் உன்னுடையதைவிட சிறந்த இரதங்களை வைத்திருப்பான். அவனது அரண்மனையில் உனது இரதங்கள் முக்கியத்துவம் பெறாது. 19 உன்னை உன் பதவியை விட்டுத் துரத்திவிடுவேன். உனது முக்கியமான வேலையிலிருந்து உன்னைப் புதிய அரசன் எடுத்து விடுவான். 20 அந்த நேரத்தில், எனது வேலைக்காரனான இல்க்கியாவின் மகனான எலியாக்கீமை அழைப்பேன். 21 நான் உனது ஆடையை எடுத்து அந்த வேலைக்காரன் மீது போடுவேன். நான் அவனுக்கு உனது செங்கோலைக் கொடுப்பேன். நான் உனக்குரிய முக்கியமான வேலையை அவனுக்குக் கொடுப்பேன். அந்த வேலைக்காரன் எருசலேம் ஜனங்களுக்கும் யூதாவின் குடும்பத்திற்கும் ஒரு தந்தையைப்போல இருப்பான்.
22 “தாவீதின் வீட்டுச் சாவியை அந்த மனிதனின் கழுத்தைச்சுற்றி நான் போடுவேன். அவன் ஒரு கதவைத் திறந்தால், அக்கதவு திறந்தே இருக்கும். எந்த நபராலும் அதனை அடைக்கமுடியாது. அவன் ஒரு கதவை அடைத்தால், அது மூடியே இருக்கும் எந்த நபராலும் அதனைத் திறக்கவே முடியாது. அந்த வேலையாள், தந்தையின் வீட்டிலுள்ள மதிப்பிற்குரிய நாற்காலியைப்போல இருப்பான். 23 நான் மிகப்பலமான பலகையில் அடிக்கப்பட்ட ஆணியைப்போல அவனைப் பலமுள்ளவனாக்குவேன். 24 அவன் தந்தையின் வீட்டிலுள்ள அனைத்து மதிப்பும், முக்கியத்துவமும் கொண்ட பொருட்களெல்லாம் அவன்மேல் தொங்கும். முதியவர்களும், சிறுவர்களும் அவனைச் சார்ந்து இருப்பார்கள். அந்த ஜனங்கள் சிறு பாத்திரங்களும், தண்ணீர் நிரம்பிய பெரிய பாட்டில்களும் அவனுக்குமேல் தொங்குவதுபோல் இருக்கும்.
25 “அந்த நேரத்தில், பலமான பலகையில் அடிக்கப்பட்டிருந்த ஆணியானது (செப்னா) பலவீனமாகி உடைந்துபோகும். அந்த ஆணி தரையில் விழுந்துவிட அந்த ஆணியில் தொங்கிக்கொண்டிருந்த அனைத்து பொருட்களும் விழுந்து அழிந்துபோகும். பிறகு நான் சொன்ன அனைத்தும் நிகழும் (இவையெல்லாம் நிகழும்.” ஏனென்றால், கர்த்தர் அவற்றைச் சொன்னார்).
2008 by World Bible Translation Center