Beginning
தீருவைப் பற்றிய தேவனுடைய செய்தி
23 தீருவைப் பற்றிய துயரச் செய்தி:
தர்ஷீஸ் கப்பல்களே, துக்கமாக இருங்கள்.
உங்கள் துறைமுகம் அழிக்கப்பட்டிருக்கிறது.
(இந்தச் செய்தி கப்பலில் வந்த ஜனங்களுக்கு, அவர்கள் கித்தீம் தேசத்திலிருந்து வரும்போதே சொல்லப்பட்டது).
2 கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாய் இருங்கள்.
தீரு “சீதோனின் வியாபாரம்” ஆக இருந்தது.
அக்கடற்கரை நகரம் கடலைத் தாண்டி வணிகர்களை அனுப்பியது.
அவர்கள் உன்னைச் செல்வத்தால் நிரப்பினார்கள்.
3 அந்த மனிதர்கள் கடல்களில் பயணம் செய்து தானியங்களைத் தேடினார்கள்.
தீருவிலிருந்து வந்த ஜனங்கள் நைல் ஆற்றின் கரையில் விளைந்த தானியங்களை வாங்கி, மற்ற நாடுகளில் அவற்றை விற்றனர்.
4 சீதோனே, நீ மிகவும் துக்கமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால், இப்போது கடலும் கடற்கோட்டையும் கூறுகிறது:
எனக்குப் பிள்ளைகள் இல்லை.
நான் பிள்ளைப் பேற்றின் வலியை உணர்ந்திருக்கவில்லை.
நான் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டதில்லை.
இளம் ஆண்களையும், பெண்களையும் நான் வளர்த்திருக்கவில்லை.
5 தீருவைப் பற்றிய செய்திகளை எகிப்து கேட்கும்.
இச்செய்திகள் எகிப்தை துக்கத்தினால் துன்புறச் செய்யும்.
6 கப்பல்களே நீங்கள் தர்ஷீசுக்குத் திரும்புங்கள்.
கடற்கரையில் வாழும் ஜனங்களே, துக்கமாக இருங்கள்.
7 கடந்த காலத்தில், தீரு நகரில் சந்தோஷமாக இருந்தீர்கள்.
அந்நகரம் துவக்க காலம் முதல் வளர்ந்து வந்தது.
அந்நகர ஜனங்கள் தொலை தூரங்களுக்குப் பயணம்செய்து வாழ்ந்திருக்கின்றனர்.
8 தீரு நகரம் பல தலைவர்களை உருவாக்கியிருக்கிறது.
அந்நகர வணிகர்கள் இளவரசர்களைப்போன்றிருக்கின்றனர்.
அதன் வியாபாரிகள் எங்கும் மதிப்பு பெறுகிறார்கள்.
எனவே யார் தீருவுக்கு எதிராக திட்டங்கள் தீட்டினார்கள்?
9 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இருந்தார்.
அவர்களை அவர் முக்கியத்துவம் இல்லாதவர்களாகச் செய்ய முடிவு செய்தார்.
10 தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே!
உங்கள் நாட்டிற்குத் திரும்பிப்போங்கள்.
கடலை ஒரு சிறு ஆறு போன்று கடந்து செல்லுங்கள்.
இப்பொழுது உங்களை எவரும் தடுக்கமாட்டார்கள்.
11 கர்த்தர் அவரது கையைக் கடலுக்கு மேல் நீட்டியிருக்கிறார்.
தீருவுக்கு எதிராகப்போரிட கர்த்தர் அரசுகளைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார்.
தீருவின் அரண்களை அழிக்க
கர்த்தர் கானானுக்குக் கட்டளையிட்டார்.
12 கர்த்தர் கூறுகிறார், “கன்னியாகிய சீதோனின் மகளே, நீ அழிக்கப்படுவாய்.
நீ இனிமேல் மகிழ்ச்சி அடையமாட்டாய்.
ஆனால் தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், நமக்கு சைப்ரஸ் உதவும்!
ஆனால் நீ கடலைக் கடந்து சைப்ரசுக்குச் சென்றால் நீ ஓய்வெடுக்க ஒரு இடத்தைக் கண்டு கொள்ளமாட்டாய்.”
13 எனவே தீரு ஜனங்கள் கூறுகிறார்கள், “நமக்கு பாபிலோன் ஜனங்கள் உதவுவார்கள்!
ஆனால் கல்தேயருடைய நாட்டைப் பார்.
இப்பொழுது பாபிலோன் ஒரு நாடாகவே இல்லை.
அசீரியா பாபிலோனைத் தாக்கியது. அதைச்சுற்றிலும் போர்க் கோபுரங்களைக் கட்டியது.
வீரர்கள், அழகான வீடுகளில் இருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டனர்.
பாபிலோனைக் காட்டு மிருகங்களுக்குரிய இடமாக அசீரியா செய்தது.
பாபிலோனை அழிவுக்கேற்ற இடமாக மாற்றியது.
14 எனவே, துக்கமாயிருங்கள், தர்ஷீஸிலிருந்து வந்த கப்பல்களே,
உங்கள் பாதுகாப்புக்குரிய இடம் (தீரு) அழிக்கப்படும்.”
15 70 ஆண்டுகளுக்கு ஜனங்கள் தீருவை மறப்பார்கள். (இது ஒரு அரசனின் ஆட்சிக்கால அளவு). 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீரு இந்தப் பாடலில் வரும் வேசிக்குச் சமானமாய் இருக்கும்.
16 “ஆண்களால் மறக்கப்பட்ட பெண்ணே,
உன் வீணையை எடுத்துக்கொண்டு நகரைச் சுற்றி நட,
உன் பாடலை நன்றாக வாசி. உன் பாடலை அடிக்கடி பாடு.
பிறகு, ஜனங்கள் உன்னை நினைவில் வைத்திருப்பார்கள்.”
17 70 ஆண்டுகளுக்குப் பிறகு, தீருவின் வழக்கை கர்த்தர் மீண்டும் மதிப்பீடு செய்வார். அவர் அவளுக்கு ஒரு தீர்வைக் கொடுப்பார். மீண்டும் தீரு வணிகத்தைப் பெறும் பூமியின் அனைத்து நாடுகளுக்கும் தீரு வேசியாக விளங்கும்.
18 ஆனால் தீரு தான் சம்பாதிக்கும் பணத்தைத் தனக்கென்று வைக்காது. தனது வணிகத்தால் வரும் லாபத்தை தீரு கர்த்தருக்காகப் பாதுகாக்கும். தீரு அச்செல்வத்தை கர்த்தருக்குச் சேவை செய்யும் ஜனங்களுக்குக் கொடுக்கும். எனவே, கர்த்தருடைய ஊழியக்காரர்கள் முழுமையாக சாப்பிடுவார்கள், அவர்கள் மென்மையான ஆடைகளை அணிந்துகொள்வார்கள்.
தேவன் இஸ்ரவேலைத் தண்டிப்பார்.
24 பார்! கர்த்தர் இந்த நாட்டை அழிப்பார். இந்த நாட்டிலுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் துடைத்துவிடுவார். கர்த்தர் இங்குள்ள ஜனங்களை வெளியே துரத்துவார்.
2 அந்த நேரத்தில், பொது ஜனங்களும், ஆசாரியர்களும் சமமாக இருப்பார்கள். அடிமைகளும், எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். பெண் அடிமைகளும் அவர்களது பெண் எஜமானர்களும் சமமாக இருப்பார்கள். வாங்குபவர்களும், விற்பவர்களும் சமமாக இருப்பார்கள். கடன் வாங்கும் ஜனங்களும், கடன் கொடுக்கும் ஜனங்களும் சமமாக இருப்பார்கள். வட்டி வாங்கினவனும், வட்டி கொடுத்தவனும் சமமாக இருப்பார்கள். 3 ஜனங்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள். அனைத்து செல்வமும் எடுக்கப்படும். இது நிகழும். ஏனென்றால், கர்த்தர் கட்டளையிட்டிருக்கிறார். 4 இந்த நாடு காலியாகவும் துக்கமாகவும் இருக்கும். உலகமே காலியாகவும் பலவீனமாகவும் இருக்கும். இந்நாட்டு பெருந்தலைவர்கள் பலவீனமானவர்கள்.
5 ஜனங்கள் நாட்டைத் தீட்டுப்படுத்தினார்கள். இது எப்படி நிகழ்ந்தது? தேவனுடைய போதனைகளுக்கு எதிராக ஜனங்கள் தவறானவற்றைச் செய்தனர். தேவனுடைய சட்டங்களுக்கு அவர்கள் அடி பணியவில்லை. நீண்ட காலத்துக்கு முன்பு தேவனோடு இந்த ஜனங்கள் ஒரு உடன்படிக்கை செய்துக்கொண்டனர். ஆனால், அந்த ஜனங்கள் தேவனோடுள்ள உடன்படிக்கையை முறித்துவிட்டனர். 6 இந்நாட்டில் வாழும் ஜனங்கள் தீமைகளைச் செய்த குற்றவாளிகள். எனவே, தேவன் இந்நாட்டை அழிப்பதாக உறுதி செய்தார். ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். மிகச்சிலர் மட்டுமே உயிரோடு இருப்பார்கள்.
7 திராட்சைக் கொடிகள் வாடிக்கொண்டிருக்கும். புதிய திராட்சைரசம் மோசமாகும். கடந்த காலத்தில் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால், இப்போது அந்த ஜனங்கள் துக்கமாயுள்ளனர். 8 ஜனங்கள் மகிழ்ச்சியாயிருப்பதை நிறுத்தியுள்ளனர். மகிழ்ச்சிகுரிய ஆரவாரங்கள் நிறுத்தப்பட்டன. வீணை மற்றும் முரசுகளிலிருந்து வரும் மகிழ்ச்சி இசையும் முடிக்கப்பட்டது. 9 ஜனங்கள் தம் திராட்சை ரசத்தை குடிக்கும்போது, மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடமாட்டார்கள். இப்பொழுது மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசப்பாக இருக்கும்.
10 “மொத்த குழப்பம்” என்பது இந்நகரத்திற்கான நல்ல பெயராக உள்ளது. நகரம் அழிக்கப்பட்டிருக்கிறது. ஜனங்கள் வீட்டிற்குள் நுழைய முடியாது. கதவுகள் அடைப்பட்டிருக்கின்றன. 11 ஜனங்கள் இன்னும் சந்தை இடங்களில் திராட்சைரசத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அனைத்து மகிழ்ச்சியும் போய்விட்டன. சந்தோஷம் வெகு தொலைவுக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. 12 நகரத்தில் அழிவு மட்டுமே விடப்பட்டுள்ளது. கதவுகள்கூட நொறுக்கப்பட்டுள்ளன.
13 அறுவடைக் காலத்தில், ஜனங்கள் ஒலிவமரத்திலிருந்து ஒலிவப் பழங்கள் உலுக்குவார்கள்.
ஆனால், சில ஒலிவப் பழங்கள் விடப்பட்டிருக்கும்.
இதுபோலவே, மற்ற தேசங்களால் சூழப்பட்டிருக்கும் இந்நாட்டில் ஜனங்களின் மத்தியிலும் இருக்கும்.
14 விடப்பட்ட ஜனங்கள் சத்தமிடத் தொடங்குவார்கள்.
அவர்கள் கடலின் ஆரவாரத்தைவிட மிகுதியாகச் சத்தமிடுவார்கள்.
கர்த்தர் பெரியவர் என்பதால் அவர்கள் மகிழ்வார்கள்.
15 அந்த ஜனங்கள், “கிழக்கில் உள்ள ஜனங்கள், கர்த்தரைத் துதிக்கிறார்கள்!
தொலை நாட்டு ஜனங்கள் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிக்கின்றனர்” என்று சொல்வார்கள்.
16 பூமியிலுள்ள ஒவ்வொரு இடத்திலிருந்தும் தேவனைத் துதிக்கும் பாடலைக் கேட்போம்.
இப்பாடல்கள் நல்ல தேவனைத் துதிக்கும்.
ஆனால், நான் சொல்கிறேன்:
“போதும்! எனக்கு போதுமானது உள்ளது!
நான் பார்க்கின்றவை பயங்கரமாக உள்ளன.
துரோகிகள் ஜனங்களுக்கு எதிராகத் திரும்பி, அவர்களைக் காயப்படுத்துகிறார்கள்.”
17 அந்தத் தேசத்தில் வாழும் ஜனங்களுக்கு ஆபத்து வருவதைப் பார்க்கிறேன்.
அவர்களுக்கு அச்சம், குழிகள், உலைகள் இருப்பதைப் பார்க்கிறேன்.
18 ஜனங்கள் ஆபத்தைப்பற்றி கேள்விப்படுவார்கள்.
அவர்கள் அச்சப்படுவார்கள்.
சில ஜனங்கள் வெளியே ஓடுவார்கள்.
ஆனால், அவர்கள் குழிக்குள் விழுவார்கள்; வலைக்குள் அகப்படுவார்கள்.
சில ஜனங்கள் குழியிலிருந்து வெளியே ஏறி வருவார்கள்.
ஆனால், அவர்கள் இன்னொரு வலைக்குள் அகப்படுவார்கள்.
வானத்தில் உள்ள வெள்ளத்தின் கதவுகள் திறக்கும்.
வெள்ளம் பெருகத்தொடங்கும். பூமியின் அஸ்திபாரம் அசையும்.
19 நில நடுக்கம் ஏற்படும்.
பூமியானது பிளந்து திறந்துக்கொள்ளும்.
20 உலகத்தின் பாவங்கள் மிகவும் கனமானவை.
எனவே, பாரத்திற்கு அடியில் பூமி விழுந்துவிடும்.
பழைய வீடுபோன்று பூமி நடுங்கும்.
குடிகாரனைப்போன்று பூமி விழுந்துவிடும்.
பூமியானது தொடர்ந்து இருக்கமுடியாமல் போகும்.
21 அந்த நேரத்தில், கர்த்தர் பரலோகத்தின் சேனைகளை பரலோகத்திலும்,
பூமியிலுள்ள அரசர்களைப் பூமியிலும் தீர்ப்பளிப்பார்.
22 பல ஜனங்கள் சேர்ந்து கூடிக்கொள்வார்கள்.
அவர்களில் சிலர் குழியில் அடைக்கப்படுவார்கள்.
அவர்களின் சிலர் சிறைக்குள் இருப்பார்கள்.
ஆனால் இறுதியில், நீண்ட நேரத்திற்குப் பிறகு, அவர்கள் நியாயந்தீர்க்கப்படுவார்கள்.
23 எருசலேமில், சீயோன் மலைமேல் கர்த்தர், அரசனைப்போன்று ஆட்சிசெய்வார்.
அவரது மகிமையானது மூப்பர்களுக்கு முன் இருக்கும்.
அவரது மகிமையானது மிகவும் பிரகாசமாயிருப்பதால்
சூரியன் நாணமடையும், சந்திரன் இக்கட்டான நிலையிலிருக்கும்.
தேவனைத் துதிக்கும் ஒரு பாடல்
25 கர்த்தாவே, நீர் எனது தேவன்.
நான் உம்மை கனம்பண்ணி, உமது நாமத்தைத் துதிக்கிறேன்.
நீர் அதிசயமானவற்றை செய்திருக்கிறீர்.
நீண்ட காலத்துக்கு முன்னால் நீர் சொன்னவை, அனைத்தும் முழுமையாக உண்மையாகியுள்ளது.
இப்படி இருக்கும் என்று நீர் சொன்ன ஒவ்வொன்றும், சரியாக நீர் சொன்னபடியே ஆயிற்று.
2 நீர் நகரத்தை அழித்திருக்கிறீர். அந்த நகரமானது பலமான சுவர்களால் பாதுகாக்கப்பட்டது.
ஆனால் இப்போது அது மண்மேடாயிற்று.
அயல்நாட்டு அரண்மனை அழிக்கப்பட்டிருக்கிறது.
அது மீண்டும் கட்டப்படமாட்டாது.
3 வல்லமை மிக்க தேசங்களிலுள்ள ஜனங்கள் உம்மை மதிப்பார்கள்.
பலமான நகரங்களில் உள்ள வல்லமையுள்ள ஜனங்கள் உமக்குப் பயப்படுவார்கள்.
4 கர்த்தாவே, நீர் பாதுகாப்புத் தேவைபடுகிற ஏழை ஜனங்களுக்குப் பாதுகாப்பான இடம்.
இந்த ஜனங்களைத் தோற்கடிக்க பல பிரச்சனைகள் தொடங்கும்.
ஆனால் நீர் அவர்களைப் பாதுகாப்பீர்.
கர்த்தாவே, நீர் வெள்ளத்திலிருந்தும், வெப்பத்திலிருந்தும் ஜனங்களைக் காப்பாற்றும் வீடுபோல இருக்கிறீர்.
தொல்லைகள் எல்லாம், பயங்கரமான காற்று மற்றும் மழைபோன்று இருக்கும். மழை சுவரைத் தாக்கி கீழே விழச்செய்யும்.
ஆனால் வீட்டிற்குள் உள்ள ஜனங்கள் பாதிக்கப்படமாட்டார்கள்.
5 பகைவன் சத்தமிட்டு ஆரவாரத்தை ஏற்படுத்துவான்.
பயங்கர பகைவன் சத்தமிட்டு சவால்விடுவான்.
ஆனால் தேவனாகிய நீர் அவர்களைத் தடுப்பீர்.
கோடை காலத்தில் வனாந்தரத்தில் செடிகள் வாடி தரையில் விழும்.
அடர்த்தியான மேகங்கள் கோடை வெப்பத்தைத் தடுக்கும்.
அதே வழியில், நீர் பயங்கரமான பகைவர்களின் சத்தங்களை நிறுத்துவீர்.
தேவன் அவரது ஊழியர்களுக்கு அமைத்த விருந்து
6 அந்த நேரத்தில், சர்வ வல்லமையுள்ள கர்த்தர், இந்த மலையில் உள்ள ஜனங்களுக்கு ஒரு விருந்து தருவார். அந்த விருந்தில் சிறந்த உணவும், திராட்சை ரசமும் தரப்படும். மாமிசமானது புதிதாகவும் சிறந்ததாகவும் இருக்கும்.
7 ஆனால் இப்போது, எல்லா தேசங்களின் மேலும் ஜனங்களின் மேலும் ஒரு முக்காடு கவிழ்ந்திருக்கிறது. அந்த முக்காடு “மரணம்” என்று அழைக்கப்படுகிறது. 8 ஆனால் மரணமானது எக்காலத்திற்கும் அழிக்கப்படும். கர்த்தராகிய எனது ஆண்டவர், ஒவ்வொரு முகத்திலும் வடியும் கண்ணீரைத் துடைப்பார். கடந்த காலத்தில், அவரது ஜனங்கள் எல்லாரும் துக்கமாயிருந்தார்கள். ஆனால், பூமியிலிருந்து தேவன் அந்தத் துக்கத்தை எடுத்துவிடுவார். இவையெல்லாம் நிகழும். ஏனென்றால், இவ்வாறு நிகழும் என்று கர்த்தர் கூறினார்.
9 அந்த நேரத்தில், ஜனங்கள்,
“இங்கே எங்கள் தேவன் இருக்கிறார்.
அவர், நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற ஒருவர்,
நம்மைக் காப்பாற்றுவதற்காக அவர் வந்திருக்கிறார்.
நமது கர்த்தருக்காக நாம் காத்துக்கொண்டிருந்தோம்.
கர்த்தர் நம்மைக் காப்பாற்றும்போது, நாம் கொண்டாடுவோம், மகிழ்ச்சி அடைவோம்”.
10 இந்த மலைமீது கர்த்தருடைய வல்லமை உள்ளது,
மோவாப் தோற்கடிக்கப்படும்.
கர்த்தர் பகைவரை மிதித்து நடந்துசெல்வார்.
இது குப்பைகளில் உள்ள சருகுகள் மீது நடப்பது போலிருக்கும்.
11 கர்த்தர் தமது கரங்களை நீச்சலடிக்கும் ஒருவரைப்போல் விரிப்பார்.
பிறகு கர்த்தர் அவர்களது பெருமைக்குரிய அனைத்தையும் சேகரிப்பார்.
கர்த்தர் அவர்களால் செய்யப்பட்ட அழகான அனைத்தையும் சேகரிப்பார்.
அவர் அவற்றைத் தூர எறிந்துப்போடுவார்.
12 கர்த்தர் ஜனங்களின் உயர்ந்த சுவர்களையும், பாதுகாப்பான இடங்களையும் அழிப்பார்.
கர்த்தர் அவற்றைத் தரையின் புழுதியில் எறிந்துவிடுவார்.
தேவனைப்போற்றும் பாடல்
26 அந்த நேரத்தில் யூதாவில் இந்தப் பாடலை ஜனங்கள் பாடுவார்கள்:
கர்த்தரே நமக்கு இரட்சிப்பைத் தருகிறார்.
நமக்குப் பலமான நகரம் உள்ளது.
நமது நகரத்திற்குப் பலமான சுவர்களும், தற்காப்புகளும் உள்ளன.
2 கதவுகளைத் திறவுங்கள். நல்ல ஜனங்கள் நுழைவார்கள்.
தேவனுடைய நல்ல போதனைகளுக்கு அந்த ஜனங்கள் கீழ்ப்படிவார்கள்.
3 கர்த்தாவே, உம்மை அண்டியுள்ள ஜனங்களுக்கும்,
உம்மை நம்புகிற ஜனங்களுக்கும், நீர் உண்மையான சமாதானத்தைக் கொடுக்கிறீர்.
4 எனவே, எப்பொழுதும் கர்த்தரை நம்புங்கள்.
ஏனென்றால், கர்த்தராகிய யேகோவாவில் உங்களுக்கு என்றென்றைக்கும் பாதுகாப்பான இடமுண்டு.
5 ஆனால், கர்த்தர் தற்பெருமை கொண்ட நகரத்தை அழிப்பார்.
அங்கே வாழுகின்ற ஜனங்களை அவர் தண்டிப்பார்.
கர்த்தர் அந்த உயர்வான நகரத்தை தரையில் போடுவார்.
அது புழுதிக்குள் விழும்.
6 பிறகு, ஏழ்மையும் பணிவும் உள்ள ஜனங்களின் கால்கள் அதனை மிதித்துச் செல்லும்.
7 நல்ல ஜனங்களுக்கு நேர்மையே சிறந்த பாதை.
நல்ல ஜனங்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் உள்ள பாதையில் செல்வார்கள்.
தேவனே நீர் அந்தப் பாதையை மென்மையாக்கி
எளிதாக செல்லும்படிச் செய்கிறீர்.
8 ஆனால் கர்த்தாவே, நாங்கள் உமது நீதியின் பாதைக்காகக் காத்திருக்கிறோம்.
எங்கள் ஆத்துமா, உம்மையும் உமது நாமத்தையும் நினைவு கொள்ள விரும்புகின்றது.
9 இரவில் எனது ஆத்துமா உம்மோடு இருக்க விரும்புகிறது.
என்னுள் இருக்கிற ஆவி ஒவ்வொரு புதிய நாளின் அதிகாலையிலும் உம்மோடு இருக்க விரும்புகிறது.
தேசத்திற்கு உமது நீதியின் பாதை வரும்போது,
ஜனங்கள் வாழ்வின் சரியான பாதையைக் கற்றுக்கொள்வார்கள்.
10 தீயவன் நல்லவற்றை செய்ய கற்றுக்கொள்ளமாட்டான்.
அவனிடம் நீர் இரக்கம் மட்டும் காட்டினால், அவன் கெட்டவற்றை மட்டும் செய்வான்.
அவன் நல்லவர்களின் உலகில் வாழ்ந்தாலும் கூட,
கர்த்தருடைய மகத்துவத்தை தீயவன் எப்பொழுதும் கண்டுகொள்ளமாட்டான்.
11 ஆனால் கர்த்தாவே, நீர் அந்த ஜனங்களைத் தண்டித்தால் அவர்கள் அதனைப் பார்ப்பார்கள்.
கர்த்தாவே, தீயவர்களிடம் உமது ஜனங்கள்மேல் நீர் வைத்திருக்கிற பலமான அன்பைக் காட்டும்.
உண்மையாகவே தீய ஜனங்கள் அவமானப்படுவார்கள்,
உமது எதிரிகள் அவர்களது சொந்த நெருப்பிலேயே (தீமை) எரிக்கப்படுவார்கள்.
12 கர்த்தாவே, நீர் நாங்கள் செய்யமுயன்ற காரியங்களை எங்களுக்காகச் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறீர்.
ஆதலால், எங்களுக்குச் சமாதானத்தைத் தாரும்.
தேவன் அவரது ஜனங்களுக்கு புதிய வாழ்க்கையைக் கொடுப்பார்
13 கர்த்தாவே, நீர் எங்களது தேவன்,
ஆனால் கடந்த காலத்தில், நாங்கள் மற்ற தெய்வங்களைப் பின்பற்றினோம்.
நாங்கள் மற்ற எஜமானர்களுக்கு உரியவர்களாய் இருந்தோம்,
ஆனால், இப்பொழுது நாங்கள் ஒரே ஒரு நாமத்தை, அதுவும் உமது நாமத்தை மட்டும் நினைவில் வைக்க விரும்புகிறோம்.
14 அந்தப் பொய்த் தெய்வங்களெல்லாம் உயிரோடு இல்லை.
அந்த ஆவிகள் மரணத்திலிருந்து எழுவதில்லை.
அவற்றை அழித்துவிட நீர் முடிவு செய்தீர்.
அவற்றை நினைவூட்டுகிற அனைத்தையும் நீர் அழித்துவிட்டீர்.
15 நீர் நேசித்த நாட்டிற்கு உதவியிருக்கிறீர்
மற்ற ஜனங்கள் அந்நாட்டை தோற்கடிக்காதபடி நீர் தடுத்தீர்.
16 கர்த்தாவே, ஜனங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நினைப்பார்கள்.
நீர் அவர்களைத் தண்டிக்கும்போது உம்மிடம் அமைதியான பிரார்த்தனைகளை ஜனங்கள் செய்வார்கள்.
17 கர்த்தாவே, நாங்கள் உம்மோடு இல்லாதபோது,
நாங்கள் குழந்தையைப் பெற்றெடுத்தப் பெண்ணைப்போல் இருக்கிறோம்.
அவள் பிரசவ வலியுடன் அழுகிறாள்.
18 அதே வழியில், எங்களுக்கு வலி உள்ளது.
நாங்கள் குழந்தை பெற்றோம். ஆனால் அது காற்றாகியது.
நாங்கள் உலகத்துக்காக புதிய ஜனங்களை உருவாக்கவில்லை.
நாங்கள் தேசத்திற்கு இரட்சிப்பைக் கொண்டுவரவில்லை.
19 ஆனால் கர்த்தர் கூறுகிறார், “உம்முடைய ஜனங்கள் மரித்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் மீண்டும் வாழ்வார்கள்.
எங்கள் ஜனங்களின் உடல்களும்
மரணத்திலிருந்து எழும்.
மரித்த ஜனங்கள் மண்ணிலிருந்து எழுந்து மகிழ்வார்கள்.
உம்முடைய பனி
செடிகொடிகளின் மேல் பெய்யும் பனி போல இருக்கும்.
புதிய நேரம் வந்துகொண்டிருப்பதை இது காட்டும். ஜனங்கள் இப்போது பூமியில் புதைக்கப்படுகிறார்கள்.
ஆனால் பூமியானது மரித்தவர்களை வெளியே அனுப்பும்.”
தீர்ப்பு: பரிசு அல்லது தண்டனை
20 எனது ஜனங்களே! உங்கள் அறைக்குள் போங்கள்.
உங்கள் கதவுகளை மூடுங்கள்.
கொஞ்ச காலத்திற்கு உங்கள் அறைகளில் ஒளிந்திருங்கள்.
தேவனுடைய கோபம் முடியும்வரை ஒளிந்திருங்கள்.
21 கர்த்தர் அவரது இடத்தை விட்டு
உலக ஜனங்களை அவர்கள் செய்த தீமைக்காக நியாயந்தீர்க்க வருவார்.
கொல்லப்பட்ட ஜனங்களின் இரத்தத்தைப் பூமி காட்டும்.
இந்த ஜனங்களை இனி பூமி மூடி வைக்காது.
27 அந்தக் காலத்திலேயே, கர்த்தர் லிவியாதான் என்னும் கோணலான பாம்பை நியாயந்தீர்ப்பார்.
கர்த்தர் தனது கடினமும் வல்லமையும் கொண்ட பெரிய வாளை,
லிவியாதான் என்னும் நீண்ட பாம்பைத் தண்டிக்கப் பயன்படுத்துவார்.
கடலில் உள்ள பெரிய பிராணியை கர்த்தர் கொல்வார்.
2 அந்தக் காலத்திலே,
ஜனங்கள் நல்ல திராட்சைத் தோட்டத்தைப்பற்றிப் பாடுவார்கள்.
3 “கர்த்தராகிய நான், அத்தோட்டத்தைக் கவனித்துக்கொள்வேன்.
சரியான காலத்தில் நான் தோட்டத்திற்கு தண்ணீர் ஊற்றுவேன்.
இரவும் பகலும் நான் தோட்டத்தைக் காவல் செய்வேன்.
எவரும் தோட்டத்தை அழிக்க முடியாது.
4 நான் கோபமாக இல்லை.
ஆனால் போர் இருந்தால், ஒருவர் முள்புதரால் சுவர் எழுப்பினால்,
பிறகு, நான் அதனை நோக்கிப்போய் அதனை எரிப்பேன்.
5 ஆனால், எவராவது பாதுகாப்புக்காக என்னிடம் வந்தால்,
என்னோடு சமாதானமாயிருக்க விரும்பினால் அவர்களை வரவிடுங்கள்.
அவர்கள் என்னோடு சமாதானம் கொள்ளட்டும்.
6 ஜனங்கள் என்னிடம் வருவார்கள்.
அந்த ஜனங்கள் யாக்கோபுக்கு உதவிசெய்து அவனை நல்ல வேர்கள் கொண்ட செடியைப்போல் பலமுள்ளதாக்குவார்கள்.
அந்த ஜனங்கள், இஸ்ரவேலை பூக்க ஆரம்பிக்கும் செடிபோல் வளரச் செய்வார்கள். பிறகு, செடிகளின் பழங்களைப்போல நாடு குழந்தைகளால் நிறைந்திருக்கும்.”
தேவன் இஸ்ரவேலை அனுப்பிவிடுவார்
7 எப்படி கர்த்தர் அவரது ஜனங்களைத் தண்டிப்பார்? கடந்த காலத்தில், பகைவர்கள் ஜனங்களைத் தாக்கினார்கள். அதே வழியில் கர்த்தர் அவர்களைத் தாக்குவாரா? கடந்த காலத்தில் நிறைய ஜனங்கள் கொல்லப்பட்டனர். கர்த்தரும் அதே வழியில் பலரைக் கொல்வாரா?
8 கர்த்தர், இஸ்ரவேலரை வெகுதொலைவிற்கு அனுப்பிவிடுவதன் மூலம் தனது விவாதத்தை முடிக்க விரும்புகிறார். இஸ்ரவேலரிடம் கர்த்தர் கடுமையாகப் பேசுவார். அவரது வார்த்தைகள் சூடான வனாந்திர காற்றைப்போல எரிக்கும்.
9 யாக்கோபின் குற்றம் எப்படி மன்னிக்கப்படும்? அவனது பாவங்கள் விலக்கப்பட என்ன நிகழும்? (இவை நிகழும்) பலிபீடத்திலுள்ள கற்கள் நொறுக்கப்பட்டு புழுதியில் கிடக்கும். சிலைகளும் பலிபீடங்களும் பொய்த் தெய்வங்களின் தொழுதுகொள்ளுதலுக்கு உரியதாய் இருந்தவைகளும் அழிக்கப்படும்.
10 அந்தக் காலத்திலே, பெரு நகரம் காலியாகும். அது வனாந்தரம்போல் ஆகும். எல்லா ஜனங்களும் செல்வார்கள். அவர்கள் வெளியே ஓடுவார்கள். அந்த நகரமானது திறந்த மேய்ச்சல் நிலம்போல் ஆகும். இளம் கன்றுக்குட்டிகள் அங்கே புல் மேயும். திராட்சைக் கொடிகளிலுள்ள இலைகளைக் கன்றுக்குட்டிகள் உண்ணும்.
11 திராட்சைக் கொடிகள் உலர்ந்துபோகும். அவற்றின் இலைகள் ஒடிந்துபோகும். பெண்கள் அக்கிளைகளை விறகாகப் பயன்படுத்துவார்கள்.
ஜனங்கள் புரிந்துகொள்ள மறுப்பார்கள். எனவே, அவர்களை உருவாக்கிய தேவன் ஆறுதல் செய்யமாட்டார். அவர்களை உண்டாக்கியவர் அவர்களிடம் கருணையோடு இருக்கமாட்டார்.
12 அந்தக் காலத்தில், கர்த்தர் தமது ஜனங்களை மற்ற ஜனங்களிடமிருந்து பிரித்து வைப்பார். அவர் ஐபிராத்து ஆற்றிலிருந்து தொடங்குவார். கர்த்தர் தமது ஜனங்களை ஐபிராத்து நதி முதல் எகிப்து நதிவரை திரட்டுவார்.
இஸ்ரவேல் ஜனங்களாகிய நீங்கள் ஒவ்வொருவராகச் சேர்க்கப்படுவீர்கள். 13 எனது ஜனங்களில் சிலர் இப்பொழுது அசீரியாவில் காணாமல் போயிருக்கிறார்கள். எனது ஜனங்களில் சிலர் எகிப்துக்கு ஓடிப்போயிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலே, ஒரு பெரும் எக்காளம் ஊதப்படும். அப்பொழுது அந்த ஜனங்கள் எல்லோரும் எருசலேமிற்குத் திரும்பி வருவார்கள். அந்த ஜனங்கள் அந்தப் பரிசுத்த மலையின்மேல் கர்த்தருக்கு முன்பு பணிவார்கள்.
2008 by World Bible Translation Center