Beginning
37 ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது,
நிகழச் செய்யவும் முடியாது.
38 உன்னதமான தேவனே
நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
39 ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது
உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.
40 நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம்.
பிறகு கர்த்தரிடம் திரும்புவோம்.
41 பரலோகத்தின் தேவனிடம்
நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.
42 நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம்.
இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43 நீர் கோபத்தால் மூடப்பட்டு
எங்களைத் துரத்தினீர்.
நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
44 ஜெபம் எதுவும் வந்து சேராதபடி
நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45 மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும்
அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
46 எங்களது பகைவர்கள் எல்லாம்
எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள்.
47 நாங்கள் பயந்திருக்கிறோம்.
நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம்.
நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.
48 எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது!
எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
49 எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன!
நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
50 கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை,
நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை
நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
51 எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது
என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
52 அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள்.
ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.
53 நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள்.
அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.
54 என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது.
“நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன்.
நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
56 நீர் எனது சத்தத்தைக் கேட்டீர்.
நீர் உமது காதுகளை மூடவில்லை.
நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை.
57 நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர்.
“பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர்.
58 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர்.
நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
59 கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர்.
இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.
60 எனது பகைவர்கள் எவ்வாறு
என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர்.
அவர்கள் எனக்கு எதிராகச் செய்த
அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.
61 கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர்.
அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.
62 எல்லா நேரத்திலும்
எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.
63 கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும்,
என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!
64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்!
அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
65 அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்!
பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
66 அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்!
கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!
எருசலேம் மீதான தாக்குதலின் பயங்கரங்கள்
4 தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார்.
நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார்.
எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன.
ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன.
2 சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள்.
அவர்கள் தங்கத்தின் எடைக்குச் சமமான எடையுள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் இப்பொழுது பகைவர்கள் அந்த ஜனங்களை பழைய மண்பாத்திரங்களைப்போன்று கருதுகின்றனர்.
பகைவர்கள், குயவனால் செய்யப்பட்ட மண்பாத்திரங்களைப்போன்று இவர்களைக் கருதுகிறார்கள்.
3 காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன.
ஓநாய் கூடத் தன் குட்டிகள் மார்பில் பால் குடிக்கும்படிவிடும்.
ஆனால் எனது ஜனங்களின் குமாரத்தியோ கொடூரமானவள்.
அவள் வனாந்தரத்தில் வாழும் நெருப்புக் கோழியைப் போன்றவள்.
4 சிறு குழந்தைகளின் நாக்கானது,
தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது.
சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை.
5 ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது,
வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர்.
மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள்
இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள்.
6 எனது ஜனங்களின் மகள் [a]
செய்த பாவம் மிகப்பெரியது.
அவளின் பாவம் சோதோமும் கொமோராவும் [b]
செய்த பாவத்தை விடப் பெரியது.
சோதோமும் கொமோராவும் திடீரென அழிக்கப்பட்டது.
எந்த மனிதனின் கையும் அழிவுக்கு காரணமாயிருக்க முடியவில்லை.
7 யூதாவிலுள்ள சில புருஷர்கள்
விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர்.
அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள்.
அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள்.
அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள்.
அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை.
அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன.
8 ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின.
வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது.
அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது.
9 வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள்.
பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள்.
அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர்.
10 அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத்
தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர்.
அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று.
என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.
11 கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார்.
அவர் தனது கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார்.
அவர் சீயோனில் ஒரு நெருப்பை உண்டாக்கினார்.
அந்த நெருப்பு சீயோனை அதன் அஸ்திபாரம்வரைக்கும் எரித்துபோட்டது.
12 பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது
என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை.
உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை
நம்ப முடியவில்லை.
பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக
நுழைய முடியும் என்பதை அவர்களால்
நம்ப முடியவில்லை.
13 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த
பாவத்தால் இது நிகழ்ந்தது.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த
தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது.
எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள்.
நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள்.
14 தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில்
குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள்.
அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர்.
15 “வெளியே போ! வெளியே போ!
எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர்.
அவர்களுக்கு வீடு இல்லை.
மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
16 கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார்.
அதற்குப் பிறகு அவர்களை அவர் பாதுகாக்கவில்லை.
அவர் ஆசாரியர்களை மதிக்கவில்லை.
யூதாவிலுள்ள மூப்பர்களுடன் அவர் சிநேகம் வைக்கவில்லை.
17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று.
ஆனால் எந்த உதவியும் வரவில்லை.
எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.
நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.
18 எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள்.
எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை.
எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது.
எங்கள் முடிவு வந்தது!
19 எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர்.
அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள்.
எங்களைப் பிடிப்பதற்காக
அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர்.
20 அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான்.
எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான்.
ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான்.
இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம்.
அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம்.
21 ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும்.
நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய்.
உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய்.
22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது.
நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய்.
ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார்.
அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.
கர்த்தருக்கு ஒரு ஜெபம்
5 கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும்.
எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
2 எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று.
எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
3 நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம்.
எங்களுக்குத் தந்தை இல்லை.
எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
4 நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது.
நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
5 எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம்.
நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
6 நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
7 எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர்.
இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள்.
இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
8 அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
9 நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
10 எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது.
எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
11 பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர்.
யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
12 பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர்.
எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
13 பகைவர்கள் எங்கள் இளைஞர்களை
எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர்.
எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால்
கீழே இடறி விழுந்தார்கள்.
14 மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை.
இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
15 எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை.
எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது.
எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
17 இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது.
எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
18 சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது.
சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
19 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர்,
உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
20 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர்.
எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
21 கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும்.
நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம்.
எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
22 நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே.
எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?
2008 by World Bible Translation Center