Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 9-12

பின்னர் தேவன், தண்டனைக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்களிடம் சத்தமிட்டார். ஒவ்வொரு தலைவரும் தமது கையில் கொலைக்குரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். பிறகு உயர்ந்த வாசலிலிருந்து ஆறு மனிதர்கள் சாலையில் நடந்து வருவதை நான் பார்த்தேன். அவ்வாசல் வடபகுதியில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது கையில் வெட்டுகிற ஆயுதத்தை வைத்திருந்தனர். ஒரு மனிதன் சணல் நூல் ஆடை அணிந்திருந்தான். அவன் தன் இடுப்பில் நகலரின் எழுது கோலையும் மைக்கூட்டையும் வைத்திருந்தான். அம்மனிதர்கள் ஆலயத்தில் உள்ள வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றனர். பிறகு இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன் மேலிருந்து எழும்பியது. பிறகு அந்த மகிமை ஆலயத்தின் வாசலுக்குச் சென்றது. அங்கே நின்று, அம்மகிமை சணல் நூலாடை அணிந்து மைக்கூடும் எழுதுகோலும் வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டது.

பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”

5-6 பிறகு தேவன் மற்றவர்களிடம் கூறுகிறதைக் கேட்டேன்: “நீங்கள் முதல் மனிதனைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தன் நெற்றியில் அடையாளம் இல்லாத ஒவ்வொருவரையும் நீங்கள் கொல்லவேண்டும். நீங்கள் யார் மேலும் பரிதாபப்படவேண்டாம். நெற்றியில் அடையாளம் இல்லாத மூப்பர்கள் (தலைவர்கள்) இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பிள்ளைகள் தாய்மார்கள் உள்பட எல்லோரையும் கொல்லுங்கள். உங்கள் ஆயுதங்களால் அவர்களைக் கொல்லவேண்டும். அவர்களிடம் இரக்கம் காட்டவேண்டாம். எவருக்காகவும் வருத்தப்படவேண்டாம். எனது ஆலயத்திலிருந்தே தொடங்குங்கள்.” எனவே, ஆலயத்தின் முன்னாலிருந்து மூப்பர்களோடு ஆரம்பித்தார்கள்.

தேவன் அவர்களிடம் சொன்னார்: “இந்த ஆலயத்தை தீட்டுப்படுத்துங்கள். இப்பிரகாரங்களை மரித்த உடல்களால் நிரப்புங்கள்! இப்பொழுது போங்கள்!” எனவே, அவர்கள் நகருக்குள் போய் ஜனங்களைக் கொன்றார்கள்.

அம்மனிதர்கள் போய் ஜனங்களைக் கொல்லும்போது நான் அங்கே தங்கினேன். நான் என் முகம் தரையில் படும்படிக் குனிந்து வணங்கிச் சொன்னேன். “எனது கர்த்தராகிய ஆண்டவரே, எருசலேமின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறவரே, இஸ்ரவேலில் தப்பிப் பிழைத்த அனைவரையும் கொல்லப் போகிறீரா?”

தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்திருக்கின்றனர்! நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நகரம் குற்றங்களால் நிறைந்திருக்கின்றது. ஏனென்றால், ஜனங்கள் தங்களுக்குள் ‘கர்த்தர் நாட்டை விட்டு விலகினார். நாம் செய்கின்றவற்றை அவரால் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றனர். 10 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் இந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டேன். அவர்கள் இதனைத் தாமாகவே கொண்டுவந்தனர். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுக்கிறேன்!”

11 பிறகு சணல் நூலாடை அணிந்து நகலரின் எழுது கோலும் மைக்கூடும் வைத்திருந்தவன் பேசினான். அவன், “நீர் கட்டளையிட்டபடி நான் செய்திருக்கிறேன்” என்றான்.

10 பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது. பிறகு சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் சணல் நூலாடை அணிந்த மனிதனிடம் சொன்னார்; “சக்கரங்களுக்கு இடையில் வா, கேருபீனின் கீழ் உள்ள பகுதிக்கு வா, கேருபீன்களின் நடுவிலே எரிந்துகொண்டிருந்த நெருப்புத் தழலைக் கை நிறைய எடு. அவற்றை எருசலேம் நகரத்தின் மேல் ஏறி.”

அந்த மனிதன் என்னைக் கடந்து போனான். அந்த மனிதன் மேகங்களுக்குள் நடந்துப் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன. அந்த மேகம் உட்பிரகாரத்தை நிரப்பியது. பிறகு பிரகாரத்திலும் ஆலயத்தின் வாசலிலும் நின்றுகொண்டிருந்த கேருபீன்களின் மேலிருந்து கர்த்தருடைய மகிமை எழும்பியது. பிறகு மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் ஆலயப் பிரகாரம் நிரம்பியது. பின்னர் நான் கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தமானது, சர்வ வல்லமையுள்ள தேவன் பேசும்போது ஏற்படும் இடியோசை போன்றிருந்தது. சிறகுகளின் சத்தத்தை வெளிப்பிரகாரம்வரை கேட்கமுடிந்தது.

தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான். அப்போது ஒரு கேருபீன் தன் கையை கேருபீன்களுக்கிடையில் உள்ள நெருப்புவரை நீட்டி எடுத்தது. அம்மனிதனின் கைகளில் நெருப்புத் துண்டுகளை இட்டது. அம்மனிதன் போனான். (கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)

பிறகு நான் நான்கு சக்கரங்கள் இருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு கேருபீனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒளிமிக்க மஞ்சள் நிற இரத்தினக்கல் போலிருந்தது. 10 அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது. 11 அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை. 12 அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. 13 சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என்று அழைக்கப்படுவதை நான் கேட்டேன்.

14-15 ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதல் முகம் கேருபீன் முகமாக இருந்தது. இரண்டாவது முகம் மனிதமுகமாக இருந்தது. மூன்றாவது முகம் சிங்கமுகமாக இருந்தது. நான்காவது முகம் கழுகின் முகமாக இருந்தது. நான் கேபார் ஆற்றருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்கள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.

கேருபீன்கள் மேலே எழும்பின. 16 அவற்றோடு சக்கரங்களும் எழும்பின. கேருபீன்கள் மேலே எழும்பிக் காற்றில் பறந்தபோது சக்கரங்கள் திசை மாறவில்லை. 17 கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.

18 பிறகு கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியில் இருந்து கேருபீன்களின் மேலிருந்த இடத்திற்குச் சென்று நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தம் சிறகுகளை விரித்துக் காற்றில் பறந்தன. அவை ஆலயத்தை விட்டுப் போவதைப் பார்த்தேன். சக்கரங்கள் அவற்றோடு சென்றன. பின்னர் அவை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலில் நின்றன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமையானது அவற்றின்மேல் காற்றில் இருந்தது.

20 பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன். 21 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் சிறகுகளுக்கடியில் மனித கரங்களைப்போன்று மறைந்தும் இருந்தன. 22 கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.

11 பிறகு ஆவியானவர் என்னை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலுக்குத் தூக்கிச் சென்றார். இந்த வாசல் சூரியன் உதிக்கிற கிழக்கு நோக்கி இருந்தது. நுழை வாசலில் 25 பேர் இருப்பதை நான் பார்த்தேன். அம்மனிதர்களோடு ஆசூரின் மகனான பெலத்தியாவும் இருந்தான். பெலத்தியா ஜனங்களின் தலைவனாயிருந்தான்.

பிறகு, தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, இவர்கள்தான் நகரத்திற்குக் கேடான திட்டங்களைத் தீட்டுகிறவர்கள். இம்மனிதர்கள் எப்பொழுதும் ஜனங்களிடம் கெட்டவற்றைச் செய்யும்படிக் கூறுகிறார்கள். இம்மனிதர்கள், ‘நாங்கள் விரைவில் எங்களது வீடுகளை கட்டப்போகிறோம். நாங்கள் இந்நகரத்தில் பாத்திரத்திற்குள் இருக்கிற இறைச்சிபோன்று பத்திரமாக இருக்கிறோம்’ என்கின்றனர். அவர்கள் இப்பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, எனக்காக நீ ஜனங்களிடம் பேசவேண்டும். மனுபுத்திரனே, ஜனங்களுக்கு தீர்க்கதரிசனம் சொல்லப் போ.”

பிறகு கர்த்தருடைய ஆவி என்மேல் வந்தார். அவர் என்னிடம் சொன்னார்: “கர்த்தர் இவற்றைச் சொன்னார் என்று அவர்களிடம் கூறு: இஸ்ரவேல் குடும்பமே, நீ பெரியவற்றைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாய். ஆனால் நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய் என்பதை நான் அறிவேன்! நீ இந்நகரத்தில் பலரைக் கொன்றிருக்கிறாய். நீ தெருக்களைப் பிணங்களால் நிறைத்திருக்கிறாய். இப்போது நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: ‘மரித்த உடல்களே இறைச்சியாகும். நகரமே பானையாகும். ஆனால் அவன் (நேபுகாத்நேச்சார்) வந்து உன்னைப் பாதுகாப்பான பானையிலே இருந்து வெளியே எடுப்பான்! நீ வாளுக்குப் பயப்படுகிறாய். ஆனால் நான் உனக்கு எதிராக வாளைக் கொண்டு வருகிறேன்!’” நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார். எனவே அவை நிகழும்!

தேவன் மேலும் சொன்னார்: “நான் ஜனங்களாகிய உங்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவேன். நான் அந்நியர்களிடம் உங்களைக் கொடுப்பேன் உங்களைக் கடுமையாகத் தண்டிப்பேன்! 10 நீங்கள் வாளால் மரணம் அடைவீர்கள். நான் உங்களை இங்கே இஸ்ரவேலில் தண்டிப்பேன். எனவே, உங்களைத் தண்டிக்கிறவர் நானே என்பதை நீங்கள் அறிவீர்கள். நானே கர்த்தர். 11 ஆம், இந்த இடம் சமையல் பானையாக இருக்கும். அதற்குள் வேகும் இறைச்சி நீங்களே! நான் உங்களை இஸ்ரவேலில் தண்டிப்பேன். 12 பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் மீறியது எனது சட்டம்! நீங்கள் எனது ஆணைகளுக்கு அடிபணியவில்லை. உங்களைச் சுற்றிலும் உள்ள நாட்டினரைப்போன்று நீங்கள் வாழ முடிவுசெய்தீர்கள்.”

13 நான் தீர்க்கதரிசனம் சொல்லி முடிக்கும்போது, பெனாயாவின் மகனான பெலத்தியா மரித்தான்! நான் தரையில் விழுந்தேன். என் முகம் தரையில் படும்படி குனிந்து, “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, இஸ்ரவேலில் வாழ்கிற மீதியான உயிர் தப்பியோர் அனைவரையும் நீர் அழித்துக்கொண்டிருக்கிறீர்!” என்று உரத்த குரலெழுப்பினேன்.

எருசலேமில் உள்ள மீதி தப்பிப்பிழைத்தவர்களுக்கு எதிரான தீர்க்கதரிசனம்

14 ஆனால், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 15 “மனுபுத்திரனே, உனது சகோதரர்களை நினைத்துப்பார். இஸ்ரவேல் குடும்பத்தாரையும் இந்நகரை விட்டு வெளியேற்றப்பட்டவர்களையும் நினைத்துப்பார்! அந்த ஜனங்கள் இந்நாட்டிலிருந்து தொலை தூரத்தில் வாழ்கிறார்கள். ஆனால் எருசலேமில் வாழ்கிற ஜனங்களே அவர்களிடம் கூறுகிறார்கள்: ‘கர்த்தரிடமிருந்து விலகி தூரத்தில் இருங்கள். இந்த நிலம் எங்களுக்குக் கொடுக்கப்பட்டது, இது எங்களுடையது!’

16 “எனவே, ஜனங்களிடம் இவற்றைப்பற்றிச் சொல்; எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; ‘இது உண்மை. நான் எனது ஜனங்களை அந்நிய நாடுகளுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். பல நாடுகளில் அவர்களைச் சிதறும்படிச் செய்தேன். அவர்கள் அங்குத் தங்கும்பொழுது, குறுகிய காலத்திற்கு நான் அவர்களுடைய ஆலயமாயிருப்பேன். 17 எனவே நீ அந்த ஜனங்களிடம் அவர்களது கர்த்தராகிய ஆண்டவர், அவர்களைத் திரும்ப கொண்டு வருவார் என்று சொல்லவேண்டும். உங்களைப் பல நாடுகளில் சிதறடித்திருந்தேன். ஆனால் நான் உங்களைச் சேர்த்து அந்நாடுகளில் இருந்து திரும்ப அழைப்பேன். நான் இஸ்ரவேல் நாட்டை உங்களுக்கு திரும்பத் தருவேன்! 18 எனது ஜனங்கள் திரும்பி வரும்போது அவர்களுடைய வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளை அழிப்பார்கள். 19 நான் அவர்களை ஒன்று சேர்த்து ஒரே ஆள்போன்று செய்வேன். நான் அவர்களுக்குப் புதிய ஆவியைக் கொடுப்பேன். நான் அவர்களிடமுள்ள கல்போன்ற இருதயத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் உண்மையான இருதயத்தை வைப்பேன். 20 பின்னர் அவர்கள் எனது சட்டங்களுக்குப் பணிவார்கள். நான் அவர்களிடம் சொல்வதைச் செய்வார்கள். அவர்கள் எனது உண்மையான ஜனங்களாக இருப்பார்கள். நான் அவர்களின் தேவனாக இருப்பேன்.’”

கர்த்தருடைய மகிமை எருசலேமை விட்டு வெளியேறுதல்

21 பிறகு தேவன் சொன்னார்: “ஆனால், இப்போது அவர்கள் இருதயம் அந்த வெறுக்கத்தக்க அருவருக்கத்தக்கச் சிலைகளுக்குரியதாக இருக்கிறது. நான், அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக தண்டிப்பேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார். 22 பிறகு கேருபீன்கள் தம் சிறகை விரித்து காற்றில் பறக்க ஆரம்பித்தன, சக்கரங்களும் அவற்றோடு இருந்தன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமை அதற்கு மேல் இருந்தது. 23 கர்த்தருடைய மகிமை காற்றில் எழுந்து எருசலேமை விட்டு வெளியேறியது. அது நகரத்துக்குக் கிழக்கே இருக்கிற மலையின் மேல் நின்றது. 24 பிறகு ஆவியானவர் என்னை மேலே தூக்கி பாபிலோனியாவிற்கு இஸ்ரவேலை விட்டுக் கட்டாயமாக வெளியே அனுப்பப்பட்ட ஜனங்களிடம் திரும்பக் கொண்டுவந்தார். நான் அதையெல்லாம் தேவ தரிசனத்தில் கண்டேன். பின்னர் நான் தரிசனத்தில் கண்ட அவர் காற்றில் எழுந்து என்னைவிட்டுப் போனார். 25 பிறகு நான் நாடுகடத்தப்பட்ட ஜனங்களிடம் பேசினேன். கர்த்தர் எனக்குக் காட்டிய எல்லாவற்றையும் நான் சொன்னேன்.

12 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ கலகக்காரர்களின் மத்தியில் வாழ்கிறாய். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். நான் அவர்களுக்காகச் செய்ததைப் பார்க்க அவர்களிடம் கண்கள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அவற்றைப் பார்க்கவில்லை. நான் அவர்களிடம் செய்யச் சொல்வதைக் கேட்க அவர்களிடம் காதுகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் எனது ஆணைகளைக் கேட்கவில்லை. ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள். எனவே, மனுபுத்திரனே, உனது பைகளைக்கட்டு, நீ தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நடி. இவ்வாறு செய். இதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். அவர்கள் உன்னைப் பார்க்கலாம், ஆனால் அவர்கள் கலகக்காரர்கள்.

“பகல் நேரத்தில், உனது பைகளை வெளியே வை, அதனால் உன்னை ஜனங்கள் பார்க்கமுடியும். பிறகு மாலையில், ஒரு கைதி தொலைதூர நாட்டிற்குப் போவதுபோன்று நீ புறப்படு. ஜனங்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போது சுவற்றில் ஒரு துவாரமிட்டு, அத்துவாரத்தின் வழியாக வெளியே போ. இரவில், உனது பைகளைத் தோளில் போட்டுக்கொண்டு விலகிப்போ. உன் முகத்தை மூடிக்கொள். அதனால் நீ போகும்போது உன்னால் பார்க்க முடியாமல்போகும். நீ இவற்றையெல்லாம் செய்யவேண்டும். எனவே ஜனங்கள் உன்னைப் பார்க்கமுடியும். ஏனென்றால், இஸ்ரவேல் குடும்பத்துக்கு உன்னை ஒரு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்துவேன்.”

எனவே நான் (எசேக்கியேல்) கட்டளையிடப்பட்டபடி செய்தேன். பகல் பொழுதில், எனது பைகளை எடுத்துகொண்டு தூரநாடுகளுக்குப் போவதுபோன்று புறப்பட்டேன். அன்று மாலையில் நான் என் கையால் சுவரில் துவாரமிட்டேன். இரவில் நான் என் தோளில் பைகளைப் போட்டுக்கொண்டு விலகினேன். நான் இதனைச் செய்தேன். எனவே ஜனங்களால் என்னைப் பார்க்கமுடிந்தது.

மறுநாள் காலையில், கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய் என்று இஸ்ரவேலின் கலகக்காரர்கள் உன்னைப் பார்த்துக் கேட்டார்கள் அல்லவா? 10 அவர்களது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார் என்று அவர்களிடம் கூறு. இந்தத் துயரச் செய்தியானது எருசலேமின் தலைவரையும் இஸ்ரவேலில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும் பற்றியது. 11 அவர்களிடம், ‘நான் (எசேக்கியேல்) ஜனங்களாகிய உங்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கிறேன். நான் செய்திருக்கின்றவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கு ஏற்படும்’ என்று சொல். நீங்கள் சிறைக் கைதிகளாகத் தூர நாடுகளுக்குப் பலவந்தமாக அனுப்பப்படுவீர்கள். 12 உங்கள் தலைவன் சுவற்றில் துவாரமிட்டு அவற்றின் வழியாக நழுவிப் போய்விடுவான். அவன் தனது முகத்தை மூடுவான். எனவே, ஜனங்களால் அவனை அடையாளம் காணமுடியாது. அவன் எங்கே போகிறான் என்பதை அவனது கண்களால் கண்டுகொள்ள முடியாது. 13 அவன் தப்பித்துக்கொள்ள முயல்வான். ஆனால் நான் (தேவன்) அவனைப் பிடித்துக்கொள்வேன்! அவன் என் வலைக்குள் பிடிக்கப்படுவான். நான் அவனை கல்தேயர் வாழும் பாபிலோனுக்கு கொண்டு போவேன். ஆனாலும் அவன் பாபிலோனைப் பார்க்கமுடியாது. பகைவர்கள் அவனது கண்களைக் குத்திக் குருடாக்குவார்கள். பிறகு அவன் அங்கு மரிப்பான். 14 இஸ்ரவேலைச் சுற்றியுள்ள நாடுகளில் வாழும்படி நான் அரசனின் ஜனங்களைப் பலவந்தப்படுத்துவேன். நான் அவனது படையைக் காற்றில் சிதறடிப்பேன். பகைவரின் படைவீரர்கள் அவர்களைத் துரத்துவார்கள். 15 பிறகு அந்த ஜனங்கள், நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள். நான் அவர்களைப் பல நாடுகளில் சிதறடித்தேன் என்பதையும் அறிவார்கள். அவர்களை வேறு நாடுகளுக்குச் செல்லும்படி நான் கட்டாயப்படுத்தினேன் என்பதையும் அவர்கள் அறிவார்கள்.

16 “ஆனால், கொஞ்சம் ஜனங்களை நான் வாழும்படி அனுமதித்தேன். அவர்கள் நோயாலும் பசியாலும் போராலும் மரிக்கமாட்டார்கள். நான் அந்த ஜனங்களை வாழவிடுவேன், அதனால் அவர்கள் எனக்கு எதிராகச் செய்த பயங்கரமான காரியங்களைப்பற்றிப் பிற ஜனங்களுக்குச் சொல்ல முடியும், பிறகு, நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”

பயத்தோடு நடுங்கு

17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 18 “மனுபுத்திரனே, நீ பயந்தவனைப்போன்று நடக்கவேண்டும். நீ உணவை உண்ணும்போது நடுங்கவேண்டும். நீ உனது தண்ணீரைக் குடிக்கும்போது கவலையும் அச்சமும் கொண்டவனைப்போன்று நடந்துகொள்ள வேண்டும். 19 நீ இதனைப் பொது ஜனங்களுக்குச் சொல்லவேண்டும். நீ, இவ்வாறு சொல்லவேண்டும். எருசலேமிலும் இஸ்ரவேலின் மற்றப் பகுதிகளிலும் வாழ்கிற ஜனங்களுக்கு, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். உங்கள் உணவை நீங்கள் உண்ணும்போது ஜனங்களாகிய நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள், நீங்கள் உங்கள் தண்ணீரைக் குடிக்கும்போது திகிலடைவீர்கள். ஏனென்றால், உங்கள் நாட்டிலுள்ள அனைத்துப் பொருட்களும் அழிக்கப்படும்! அங்கே வாழ்ந்துகொண்டிருக்கும் ஜனங்களிடம் பகைவர்கள் கொடூரமாக நடந்துகொள்வார்கள். 20 இப்பொழுது உங்கள் நகரங்களில் ஏராளமான ஜனங்கள் வாழ்கிறார்கள். ஆனால் அந்நகரங்கள் அழிக்கப்படும். உங்கள் நாடு முழுவதும் பாழாக்கப்படும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”

துன்பம் வரும்

21 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 22 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் நாட்டைப்பற்றி ஜனங்கள் இந்தப் பாடலை ஏன் பாடுகின்றனர்?

“‘துன்பம் விரைவில் வராது,
    தரிசனம் நிகழாது.’

23 “அவர்களின் கர்த்தராகிய ஆண்டவர் இப்பாடலை நிறுத்துவார் என்று அந்த ஜனங்களிடம் சொல். இனிமேல் அவர்கள் இஸ்ரவேலைப்பற்றி அவற்றைச் சொல்லமாட்டார்கள். இப்பொழுது அவர்கள் இப்பாடலைச் சொல்லுவார்கள்:

“‘துன்பம் விரைவில் வரும்,
    தரிசனம் நிகழும்.’

24 “இது உண்மை. இனிமேல் பொய்யான தரிசனங்கள் இஸ்ரவேலில் இராது. மந்திரவாதிகளின் நிறைவேறாத குறிகளும் இனிமேல் இராது. 25 ஏனென்றால், நானே கர்த்தர். என்ன சொல்ல விரும்புகிறேனோ அதையே சொல்வேன். அவை நிகழும்! நான் அதன் காலத்தை நீடிக்கச் செய்யமாட்டேன். அத்துன்பங்கள் உன் சொந்த வாழ்நாளிலேயே விரைவில் வரும்! கலகக்காரர்களே, நான் எதையாவது சொல்லும்போது அது நடக்கும்படிச் செய்வேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

26 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 27 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் நான் உனக்குக் கொடுக்கும் தரிசனங்கள் நிகழ அநேக நாட்கள் ஆகும் என்று எண்ணுகிறார்கள். பல, வருஷங்கள் கழித்து நடக்கப்போகும் காரியங்களைப்பற்றி நீ பேசுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். 28 எனவே நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: நான் இனி தாமதிக்கமாட்டேன். ஏதாவது நிகழும் என்று நான் சொன்னால் அது நிகழும்!’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center