Beginning
5 “மனுபுத்திரனே, நகரத்தின்மேல் உனது தாக்குதலுக்குப் பிறகு, நீ இவற்றைச் செய்ய வேண்டும். நீ கூர்மையான ஒரு வாளை எடுத்துக்கொள். அதனை சவரகனின் கத்தியைப்போன்று பயன்படுத்தி உனது முடியையும் தாடியையும் மழித்துவிடு. மழித்த முடியைத் தராசில்போட்டு நிறுத்துப்பார். உனது முடியை சமமான மூன்று பாகங்களாகப் பிரி, அதில் மூன்றில் ஒரு பாகத்தை நகரத்தின் (செங்கல்) மேல் வை, அந்நகரத்தில் முடியை எரி. சில ஜனங்கள் நகரத்திற்குள் மரிப்பார்கள் என்பதை இது காட்டும். பிறகு வாளைப் பயன்படுத்தி மூன்றில் ஒரு பாகமுள்ள முடியைச் சிறு துண்டுகளாக வெட்டு. அவற்றை நகரைச் (செங்கல்) சுற்றிலும் போடு. இது, சில ஜனங்கள் நகரத்திற்கு வெளியே மரிப்பார்கள் என்பதைக் காட்டும். பிறகு மூன்றில் ஒரு பங்கு முடியைக் காற்றில் தூவு. காற்று அவற்றைப் பரவலாக்கட்டும். நான் என் வாளை வெளியிலெடுத்து அந்த ஜனங்களுள் சிலரைப் பிற தூர நாடுகளுக்குத் துரத்துவேன் என்பதை இது காட்டும். 3 ஆனால் பிறகு, நீ போய் சில முடிகளை எடுத்து வரவேண்டும். அவற்றை உன்மேல் சட்டையில் சுற்றிவைத்துப் பாதுகாக்கவேண்டும். நான் என் ஜனங்கள் சிலரைக் காப்பாற்றுவேன் என்பதை இது காட்டும். 4 பிறகு பறந்துபோன இன்னும் கொஞ்சம் முடியை எடுத்து வரவேண்டும். அவற்றை நெருப்பில் போடவேண்டும். அங்கு நெருப்பொன்று எரிய ஆரம்பித்து இஸ்ரவேல் வீடு முழுவதையும் அழிக்கும் என்பதை இது காட்டுகிறது.”
5 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்; “அந்தச் செங்கல் எருசலேமைக் குறிக்கிறது. நான் எருசலேமை மற்ற தேசங்களுக்கு நடுவில் இருக்கச் செய்தேன். அவளைச் சுற்றிலும் மற்ற நாடுகள் உள்ளன. 6 எருசலேம் ஜனங்கள் எனது கட்டளைகளுக்கு எதிராகக் கலகம் செய்தனர். அவர்கள் மற்ற நாடுகளைவிட மோசமாக இருக்கின்றனர்! அவர்களைச் சுற்றியுள்ள நாட்டிலுள்ளவர்களைவிட அவர்கள் எனது பெரும்பாலான சட்டங்களை மீறிவிட்டனர். எனது கட்டளைகளைக் கேட்கவும், சட்டங்களுக்கு அடிபணியவும் மறுத்துவிட்டனர்.”
7 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “நான் உனக்குப் பயங்கரமானவற்றைச் செய்வேன்; ஏனென்றால், நீ எனது சட்டங்களுக்கு அடிபணியவில்லை. நீ எனது கட்டளைகளுக்கு அடிபணியவில்லை. உன்னைச் சுற்றியுள்ள ஜனங்களை விட நீ எனது சட்டங்களை அதிகமாக மீறினாய்! உன்னைச் சுற்றியிருக்கும் நாடுகள் தவறு என கருதும் குற்றங்களையும் கூட நீ செய்தாய்!” 8 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எனவே இப்பொழுது, நானும்கூட உனக்கு எதிரானேன்! மற்ற ஜனங்கள் பார்க்கும்படி நான் உன்னைத் தண்டிப்பேன். 9 நான் இதற்கு முன்னால் செய்யாதவற்றை உனக்குச் செய்வேன். நான் பயங்கரமானவற்றை மீண்டும் செய்யமாட்டேன்! ஏனென்றால், நீ ஏராளமான கொடூரமானச் செயல்களைச் செய்தாய். 10 பெற்றோர் தம் குழந்தைகளைத் தின்பார்கள். அத்தகைய பசியில் எருசலேம் ஜனங்கள் இருப்பார்கள். பிள்ளைகளும் தம் சொந்த பெற்றோர்களைத் தின்பார்கள். நான் உன்னைப் பல வழிகளில் தண்டிப்பேன்! மீதி வாழ்கிற ஜனங்களை நான் காற்றிலே தூவுவேன்.”
11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; “எருசலேமே, நான் உன்னைத் தண்டிப்பேன் என்று என் உயிரின்மேல் சத்தியம் செய்கிறேன். ஏனென்றால், எனது பரிசுத்தமான இடத்தில் நீ கொடூரமான செயலைச் செய்தாய். அதனைத் தீட்டுப்படுத்துமாறு நீ அருவருப்பான செயல்களைச் செய்தாய்! நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னிடம் இரக்கம்கொள்ளமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். 12 உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்குள் பசியாலும், கொள்ளைநோயாலும் மரிப்பார்கள். உனது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கினர் நகரத்திற்கு வெளியில் போரில் மரிப்பார்கள். உனது ஜனங்களில் பங்கினரை எனது வாளை வெளியிலெடுத்து அவர்களை தூரதேசங்களுக்கு விரட்டுவேன். 13 அதற்குப் பிறகுதான் நான் உங்கள் மீதுள்ள கோபத்தை நிறுத்துவேன். அவர்கள் எனக்குச் செய்த தீமைகளுக்காகத் தண்டிக்கப்பட்டனர் என்று அறிவேன். நான் கர்த்தர், அவர்கள் மேலுள்ள ஆழ்ந்த அன்பினால் நான் அவர்களிடம் பேசினேன் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
14 கர்த்தர் கூறினார்; “எருசலேமே, நான் உன்னை அழிப்பேன். நீ ஒன்றுமில்லாமல் வெறும் கற்களின் குவியலாவாய். உன்னைக் கடந்து செல்லும் ஜனங்கள் கேலிசெய்வார்கள். 15 உன்னைச் சுற்றிலும் உள்ளவர்கள் உன்னைக் கேலிசெய்வார்கள். ஆனால் அவர்களுக்கு நீ ஒரு பாடமாக இருப்பாய். நான் கோபங்கொண்டு உன்னைத் தண்டித்துவிட்டதை அவர்கள் காண்பார்கள். நான் மிகவும் கோபமாக இருந்தேன் உன்னை எச்சரித்தேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று கர்த்தராகிய நான் சொன்னேன்! 16 உனக்கு பயங்கரமான பஞ்சத்தை அனுப்புவேன் என்று சொன்னேன். உன்னை அழிக்கக் கூடியவற்றை அனுப்புவேன் என்று நான் சொன்னேன். அப்பஞ்ச காலம் மீண்டும் மீண்டும் வரும். நான் உனக்குக் கொடுக்கப்படும் உணவுப் பொருள்களை நிறுத்திவிடுவேன் என்று சொன்னேன். 17 நான் பஞ்சகாலத்தின்போது உங்கள் குழந்தைகளைக் கொல்லும் காட்டு மிருகங்களை உங்களுக்கு எதிராக அனுப்புவேன் என்று சொன்னேன். நகரம் முழுவதும் நோயும் சாவுமாக இருக்கும். அந்தப் பகை படை வீரர்களை உங்களோடு சண்டையிட அழைப்பேன். கர்த்தராகிய நான் உனக்கு இவையெல்லாம் நிகழும் என்று சொன்னேன், அவையெல்லாம் நடக்கும்!”
6 பின்னர் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார், “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மலைகளை நோக்கித் திரும்பு! எனக்காக அவற்றுக்கு எதிராகப் பேசு. 3 அம்மலைகளிடம் இவற்றைக் கூறு: ‘இஸ்ரவேலின் மலைகளே, எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இந்த மலைகளிடமும், குன்றுகளிடமும் மலைச்சந்துகளிடமும் பள்ளதாக்கிடமும் கூறுவது இதுதான். பாருங்கள்! தேவனாகிய நான், உனக்கு எதிராகச் சண்டையிட பகைவரைக் கொண்டுவருகிறேன். நான் உனது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். 4 உனது பலிபீடங்கள் துண்டு துண்டாக உடைக்கப்படும்! உனது நறுமணப் பீடங்கள் நொறுக்கப்படும்! நான் உனது மரித்த உடல்களை நரகலான சிலைகளுக்கு முன்னால் எறிவேன். 5 நான் இஸ்ரவேல் ஜனங்களின் மரித்த உடல்களை உங்களது நரகலான சிலைகளுக்கு முன்னால் போடுவேன். உங்களது பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைப் போடுவேன். 6 உங்களது ஜனங்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீமை ஏற்படும். அவர்களது நகரங்கள் கற்களின் குவியலாகும். அவர்களது மேடைகள் அழிக்கப்படும். ஏனென்றால், வழிபாட்டிற்குரிய அவ்விடங்கள் மீண்டும் பயன்படக் கூடாது. அப்பலிபீடங்கள் எல்லாம் அழிக்கப்படும். ஜனங்கள் நரகலான அச்சிலைகளை மீண்டும் வழிபடமாட்டார்கள். அச்சிலைகள் தகர்க்கப்படும். நீ செய்த அனைத்தும் அழிக்கப்படும்! 7 உங்கள் ஜனங்கள் கொல்லப்படுவார்கள். பிறகு, நான் கர்த்தர் என்று நீ அறிவாய்!’”
8 தேவன் கூறினார்: “ஆனால் நான் உங்கள் ஜனங்களில் சிலரைத் தப்பிக்க வைப்பேன், அவர்கள் கொஞ்சக் காலத்திற்கு வெளிநாட்டில் வாழ்வார்கள். அவர்களை வேறுநாடுகளில் சிதறி வாழும்படி நான் வற்புறுத்துவேன். 9 பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர். 10 ஆனால் நான்தான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! நான் சொன்னால் சொன்னபடி செய்வேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாத் தீமைகளுக்கும் நானே காரணம் என்பதை அறிவார்கள்.”
11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார், “உங்கள் கைகளைத் தட்டுங்கள், கால்களை உதையுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த கொடூரமான காரியங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்கள் நோயாலும் பசியாலும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய். அவர்கள் போரில் கொல்லப்படுவார்கள் என்று சொல். 12 தொலை தூரங்களில் ஜனங்கள் நோயால் மரிப்பார்கள். இந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். இந்நகரத்தில் மீதியாக தங்கும் ஜனங்கள் பட்டினியால் மரிப்பார்கள். பிறகுதான் நான் என் கோபத்தை நிறுத்துவேன். 13 பிறகுதான், நான் கர்த்தர் என்பதை நீ அறிவாய். உங்களது மரித்த உடல்கள் நரகலான சிலைகளுக்கு முன்னாலும் பலிபீடங்களுக்கு அருகிலும் கிடக்கும்போது நீ அறிவாய். அந்த உடல்கள், உங்களது ஒவ்வொரு வழிபாட்டு இடங்களிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும், ஒவ்வொரு பச்சை மரங்கள் மற்றும் இலைகளுடனுள்ள ஓக் மரங்களின் அடியிலும், கிடக்கும். அந்த இடங்களில் எல்லாம் நீ பலிகளைச் செலுத்தினாய். அங்கே, அவை உன்னுடைய, நரகலான சிலைகளுக்கு இனிய வாசனையை வெளிப்படுத்தியது. 14 ஆனால் ஜனங்களாகிய உங்கள்மேல் என் கரத்தை உயர்த்தி நீங்கள் எங்கு குடியிருந்தாலும் தண்டிப்பேன்! உங்கள் நாட்டை அழிப்பேன்! அது திப்லாத் வனாந்தரத்தைவிட மிகவும் வெறுமையாக இருக்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”
7 பின்னர் கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார்: “இப்பொழுது, மனுபுத்திரனே, இதைச் சொல்: எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து ஒரு செய்தி வந்திருக்கிறது. இச்செய்தி இஸ்ரவேல் நாட்டுக்குரியது!
“முடிவு வந்திருக்கிறது.
நாடு முழுவதும் அழிக்கப்படுகிறது.
3 இப்பொழுது உன் முடிவு வந்துகொண்டிருக்கிறது!
நான் உன் மீது எவ்வளவு கோபத்தோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுவேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.
நீ செய்த பயங்கரமானவற்றுக்கெல்லாம் உன்னை விலை கொடுக்கும்படிச் செய்வேன்.
4 நான் உன்னிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்.
நான் உனக்காக வருத்தப்படமாட்டேன்.
நீ செய்த தீமைகளுக்காக நான் உன்னைத் தண்டிக்கிறேன்.
நீ அத்தகைய பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறாய்.
இப்பொழுது நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
5 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “ஒரு கேட்டிற்குப் பின் இன்னொரு கேடு ஏற்படும்! 6 முடிவு வருகிறது, அது விரைவில் நிகழும்! 7 இஸ்ரவேலில் குடியிருக்கும் ஜனங்களே மகிழ்ச்சியின் குரலைக் கேட்டிருக்கிறீர்களா? பகைவன் வருகிறான், தண்டனைக் காலம் மிக விரைவில் வருகிறது! பகைவரின் சத்தம் மலைகளில் மேலும் மேலும் அதிகரிக்கிறது. 8 இப்பொழுது மிக விரைவில் நான் எனது கோபத்தைக் காட்டுவேன். உனக்கு எதிரான எனது கோபம் முழுவதையும் நான் காட்டுவேன். நீ செய்த தீயவற்றுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன். நீ செய்த பயங்கர செயலுக்காக விலை கொடுக்கச் செய்வேன். 9 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் உனக்காக வருத்தப்படமாட்டேன். நீங்கள் அத்தகைய பயங்கரங்களைச் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை அடிக்கும், நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
10 “ஒரு செடி துளிர்த்து, மொட்டுவிட்டு, பூப்பதுபோல், தண்டனைக் காலம் வந்திருக்கிறது. தேவன் அடையாளம் கொடுத்துவிட்டார். பகைவன் தயாராகிவிட்டான். பெருமைகொண்ட அரசனான நேபுகாத்நேச்சார் ஏற்கெனவே வல்லமை வாய்ந்தவனாகிக்கொண்டிருக்கிறான். 11 மூர்க்கத்தனமான மனிதன் கெட்ட ஜனங்களைத் தண்டிக்கத் தயாராகி இருக்கிறான். இஸ்ரவேலில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவன் அவர்களில் ஒருவன் அல்ல. அந்தக் கூட்டத்தில் ஒருவனாக அவன் இல்லை. அவன் அந்த ஜனங்களில் உள்ள முக்கிய தலைவர்களில் ஒருவன் அல்ல.
12 “அந்தத் தண்டனைக் காலம் வந்திருக்கிறது, அந்த நாள் இதோ இருக்கிறது. பொருட்களை வாங்குகிறவன் மகிழ்ச்சியாக இருக்கமாட்டான். பொருட்களை விற்பவனும் விற்பதைப்பற்றி துக்கப்படமாட்டான். ஏனென்றால், அப்பயங்கரமான தண்டனை ஒவ்வொருவருக்கும் கிடைக்கும். 13 தம் சொத்தை விற்கிற ஜனங்கள் திரும்பவும் அங்கே வருவதில்லை. ஒருவன் உயிர் தப்பிப் பிழைத்தாலும் அவன் தன் சொத்தைப் பெற திரும்பப் போகமாட்டான். ஏனென்றால், இந்த தரிசனம் ஜனங்கள் கூட்டம் முழுவதற்குரியதாகும். எனவே, ஒருவன் தப்பி உயிர் பிழைத்தாலும் ஜனங்கள் பலமிருப்பதாக உணரமாட்டார்கள்.
14 “அவர்கள் ஜனங்களை எச்சரிக்க எக்காளத்தை ஊதுவார்கள். ஜனங்கள் போருக்குத் தயாராவார்கள். ஆனால் அவர்கள் போர் செய்யமாட்டார்கள். ஏனென்றால், அந்தக் கூட்டத்தின் மேல் நான் எவ்வளவு கோபங்கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுவேன். 15 பகைவன் தனது வாளோடு நகரத்திற்கு வெளியே இருக்கிறான். நோயும் பசியும் நகரத்திற்குள்ளே இருக்கின்றன. ஒருவன் நகரத்திற்கு வெளியே போனால் பகைவரின் போர்வீரன் கொல்வான். அவன் நகரில் தங்கினால் பசியும் நோயும் அவனை அழிக்கும்.
16 “ஆனால் சில ஜனங்கள் தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் மலைகளுக்கு ஓடுவார்கள். ஆனால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கமாட்டார்கள். அவர்கள் தமது அனைத்து பாவங்களுக்காகவும் வருந்துவார்கள். அவர்கள் அழுவார்கள். புறாக்களைப் போன்ற துயர ஒலிகளை எழுப்புவார்கள். 17 ஜனங்கள் தம் கைகளை உயர்த்துவதற்குச் சோர்வும் துக்கமும் அடைவார்கள். அவர்களது கால்கள் தண்ணீரைப் போன்றிருக்கும். 18 அவர்கள் துக்கத்திற்குரிய ஆடைகளை அணிவார்கள். பயத்தால் மூடப்படுவார்கள். ஒவ்வொரு முகத்திலும் நீ அவமானத்தைக் காண்பாய். அவர்கள் தம் துயரத்தைக் காட்ட தலையை மழித்துக்கொள்வார்கள். 19 அவர்கள் தமது தங்கத்தாலும் வெள்ளியாலுமான சிலைகளை வீதிகளில் எறிவார்கள். ஏனென்றால், கர்த்தர் அவர்கள் மீது தன் கோபத்தைக் காட்டும்போது அச்சிலைகளால் அவர்களுக்கு உதவமுடியாமல் இருக்கும். அச்சிலைகள் அவர்களைப் பாவத்தில் விழச்செய்கிற வலையல்லாமல் வேறு எதுவுமில்லை. அச்சிலைகள் ஜனங்களுக்கு உணவைக் கொடுப்பது இல்லை. அச்சிலைகள் அவர்கள் வயிற்றில் உணவை வைப்பதுமில்லை.
20 “அந்த ஜனங்கள் தம் அழகான நகைகளைப் பயன்படுத்தி ஒரு சிலையைச் செய்தனர். அவர்கள் அச்சிலைக்காகப் பெருமைப்பட்டனர். அவர்கள் தமது வெறுக்கத் தக்க சிலைகளைச் செய்தனர்! அவர்கள் நரகலான அவற்றைச் செய்தனர். எனவே நான் (தேவன்) அவர்களை அழுக்கு நிறைந்த கந்தையைப்போல் வெளியே எறிவேன். 21 அவர்களை அந்நியர்கள் எடுத்துச் செல்லும்படி அனுமதிப்பேன். அந்நியர்கள் அவர்களைக் கேலி செய்வார்கள். அந்த அந்நியர்கள் சில ஜனங்களைக் கொன்று மற்றவர்களைக் கைதிகளாகச் சிறைபிடிப்பார்கள். 22 அவர்களிடமிருந்து நான் என் தலையைத் திருப்புவேன். நான் அவர்களைப் பார்க்கமாட்டேன். அந்த அந்நியர்கள் என் ஆலயத்தை அழிப்பார்கள். அவர்கள் அப்பரிசுத்தமான கட்டிடத்தின் மறைக்கப்பட்ட பகுதிகளுக்குள் சென்று அவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்வார்கள்.
23 “சிறைக் கைதிகளுக்காகச் சங்கிலிகளைச் செய்யுங்கள்! ஏனென்றால், மற்றவர்களைக் கொல்லுகிற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள். நகரத்தின் ஒவ்வொரு இடத்திலும் வன்முறை நிகழும். 24 நான் மற்ற நாடுகளில் உள்ள கெட்ட ஜனங்களை அழைத்து வருவேன். அக்கெட்ட ஜனங்கள் இஸ்ரவேலில் உள்ள அனைத்து வீடுகளையும் அபகரித்துக்கொள்வார்கள். நான் உங்களது பலம் வாய்ந்த ஜனங்கள் பெருமைப்படுவதை நிறுத்துவேன். வெளிநாடுகளிலுள்ள அந்த ஜனங்கள் நீங்கள் தொழுகை செய்யும் இடங்களை எல்லாம் அபகரிப்பார்கள்.
25 “ஜனங்களாகிய நீங்கள் அச்சத்தால் நடுங்குவீர்கள். நீங்கள் சமாதானத்தைத் தேடுவீர்கள், ஆனாலும் அது இருக்காது. 26 நீங்கள் ஒன்றுக்குப்பின் ஒன்றாகத் துன்பக் கதைகளைக் கேட்பீர்கள். நீங்கள் கெட்ட செய்திகளைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டீர்கள். நீங்கள் தீர்க்கதரிசியைத் தேடி அவனிடம் தரிசனம் பற்றி கேட்பீர்கள், ஆனால் அது கிடைக்காது. ஆசாரியர்களிடம் உங்களுக்குக் கற்றுத்தர எதுவும் இருக்காது. மூப்பர்களிடம் உங்களுக்கு ஆலோசனை சொல்ல எதுவும் இருக்காது. 27 உங்கள் அரசன் மரித்துப்போன ஜனங்களுக்காக அழுதுகொண்டிருப்பான். தலைவர் துக்கத்திற்குரிய ஆடையை அணிந்திருப்பார்கள். பொது ஜனங்கள் மிகவும் பயந்து போயிருப்பார்கள். ஏனென்றால், நான் அவர்களுடைய தீயசெயல்களுக்கு ஏற்றவண்ணம் திருப்பிக்கொடுப்பேன். அவர்களுக்குரிய தண்டனையை நான் தீர்மானிப்பேன். நான் அவர்களைத் தண்டிப்பேன். பிறகு அந்த ஜனங்கள் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வார்கள்.”
8 ஒரு நாள் நான் (எசேக்கியேல்) என் வீட்டில் உட்கார்ந்துக்கொண்டிருந்தேன். யூதாவின் மூப்பர்கள் (தலைவர்கள்) எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்தார்கள். இது நாடுகடத்தப்பட்ட ஆறாம் ஆண்டின் ஆறாம் மாதத்தின் ஐந்தாம் நாளாக இருந்தது. திடீரென்று எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வல்லமை என்மேல் வந்தது. 2 நெருப்புபோன்ற ஒன்றை நான் பார்த்தேன். அது மனித உடலைப்போன்றும் இருந்தது. இடுப்புக்குக் கீழே அது நெருப்பைப் போன்றிருந்தது. இடுப்புக்கு மேலே நெருப்பிலே பழுத்த உலோகம்போன்று மின்னிக்கொண்டிருந்தது. 3 பிறகு நான் கையைப்போன்று தோன்றிய ஒன்றைப் பார்த்தேன். அவர் தன் கையை நீட்டி என் தலைமயிரைப் பிடித்துத் தூக்கினார். பின்னர் ஆவியானவர் என்னைத் தூக்கிக்கொண்டு, தேவதரிசனத்திலே என்னை எருசலேமிற்குக் கொண்டுபோனார். அவர் வடதிசைக்கு எதிரான உள்வாசலின் நடையில்விட்டார். தேவனுக்கு எரிச்சலுண்டாக்குகிற சிலையும் அங்கே இருந்தது. 4 ஆனால் இஸ்ரவேலின் தேவனுடைய மகிமையும் அங்கே இருந்தது. அம்மகிமையானது நான் பள்ளத்தாக்கிலே கண்டிருந்த தரிசனத்திற்கு ஒத்ததாக இருந்தது.
கேபார் பள்ளத்தாக்கினில்
5 தேவன் என்னிடம் பேசினார். அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, வடக்கை நோக்கிப் பார்.” எனவே, நான் வடக்கு நோக்கிப் பார்த்தேன்! அங்கே, பலிபீடத்தின் வாசலுக்கு வடக்கே, நடையிலே தேவனுக்கு எரிச்சலை உண்டாக்குகிற சிலை இருந்தது.
6 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேல் ஜனங்கள் செய்கிற வெறுக்கத்தக்க காரியங்களை நீ காண்கிறாயா? அவர்கள் இங்கே எனது ஆலயத்தை அடுத்து அந்த பயங்கரமான சிலையைக் வைத்திருகிறார்கள்! நீ என்னோடு வந்தால், இதைவிடப் பயங்கரமானவற்றையெல்லாம் நீ பார்க்கலாம்!”
7 எனவே, நான் பிரகாரத்தின் வாசலுக்குப் போனேன். நான் சுவற்றில் ஒரு துவாரத்தைப் பார்த்தேன். 8 தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, சுவற்றில் ஒரு துவாரம் செய்” என்றார். எனவே, நான் சுவற்றில் ஒரு துவாரம் செய்தேன். அங்கே நான் ஒரு கதவைப் பார்த்தேன்.
9 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “உள்ளே போய் ஜனங்கள் செய்யும் வெறுக்கத்தக்கதும் கெட்டதுமானவற்றையெல்லாம் பார்.” 10 எனவே, நான் உள்ளே போய் பார்த்தேன். நீங்கள் நினைத்துப் பார்க்கவே வெறுக்கின்ற ஊர்கின்ற மற்றும் ஓடுகின்ற மிருகங்களின் சிலைகள் இருந்தன. அவை இஸ்ரவேல் ஜனங்களால் வழிபடப்படுகிற அருவருப்பான சிலைகள். அந்த நரகலான சிலைகள் சுவற்றில் செதுக்கப்பட்டிருந்தன!
11 பின்னர், நான் இஸ்ரவேல் வம்சத்தாரின் மூப்பரில் (தலைவர்கள்) எழுபது பேரும் அவர்களின் நடுவிலே சாப்பானுடைய மகனாகிய யசனியாவும் தொழுதுகொண்டு இருப்பதைக்கவனித்தேன். அவர்கள் ஜனங்களுக்கு முன்னால் இருந்தனர்! ஒவ்வொரு தலைவரும் தன் கையிலே தூப கலசத்தை வைத்திருந்தனர். அவற்றிலிருந்து வெளிவந்த புகை காற்றில் எழும்பியது: 12 பிறகு தேவன் என்னிடம் சொன்னார். “மனுபுத்திரனே, இருளிலே இஸ்ரவேலின் மூப்பர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்த்தாயா? ஒவ்வொருவனும் தமது பொய்த் தெய்வத்துக்கு ஒரு சிறப்பான அறை வைத்திருக்கிறான். அம்மனிதர்கள் தங்களுக்குள், ‘கர்த்தரால் நம்மைப் பார்க்கமுடியாது. கர்த்தர் இந்நாட்டை விட்டு விலகிப்போய்விட்டார்’ என்கின்றனர்.” 13 பிறகு தேவன் என்னிடம்: “நீ என்னோடு வந்தால், அம்மனிதர்கள் இதைவிடப் பயங்கரமானவற்றைச் செய்வதை நீ காணலாம்” என்றார்.
14 பிறகு தேவன், கர்த்தருடைய ஆலய வாசலுக்கு அழைத்துச் சென்றார். இந்த வாசல் வடப் பக்கத்தில் இருந்தது. அங்கே பெண்கள் அமர்ந்து அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன். அவர்கள் பொய்த் தெய்வமான தம்மூஸுக்காகத் துக்கப்பட்டுக்கொண்டிருந்தனர்.
15 தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, இப்பயங்கரமானவற்றைப் பார்த்தாயா? என்னோடு வா. இதைவிட மிக மோசமானவற்றை நீ பார்ப்பாய்!” என்றார். 16 பிறகு கர்த்தருடைய ஆலயத்திலுள்ள உட்பிரகாரத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடத்தில் 25 பேர் குனிந்து தொழுதுகொண்டிருந்ததைப் பார்த்தேன். அவர்கள் கர்த்தருடைய ஆலயத்தின் வாசல் நடையிலே மண்டபத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவிலே தவறான திசை நோக்கி இருந்தனர்! அவர்களின் முதுகுகள் பரிசுத்த இடத்தின் பக்கம் திரும்பியிருக்க அவர்கள் சூரியனைப் பார்த்து குனிந்து வணங்கிக்கொண்டிருந்தார்கள்!
17 பிறகு தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இதனைப் பார்த்தாயா? யூதா ஜனங்கள் எனது ஆலயத்தை முக்கியமானதாகக் கருதாமல், என் ஆலயத்தில் இவ்வாறு பயங்கரமான காரியங்களைச் செய்கின்றனர்! இந்நாடு வன்முறையால் நிறைந்துள்ளது. என்னைக் கோபப்படுத்தும்படியான காரியங்களை எப்பொழுதும் செய்கின்றனர். பார்! தம் மூக்கில் வளையங்களை சந்திரன் எனும் பொய்த் தெய்வத்தை கௌரவப்படுத்துவதற்காக அணிந்துள்ளனர்! 18 நான் எனது கோபத்தைக் காட்டுவேன். நான் அவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன்! நான் அவர்களுக்காக வருத்தப்படமாட்டேன்! அவர்கள் அழுது, சத்தமானக் குரலில் என்னைக் கூப்பிடுவார்கள்! ஆனால் நான் அவற்றைக் கவனிக்க மறுக்கிறேன்!”
2008 by World Bible Translation Center