Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எசேக்கியேல் 13-15

13 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை.

“‘இஸ்ரவேலே, உங்கள் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்!

“‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மை கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள்.

“‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’”

எனவே இப்போது, எனது கர்த்தராகிய ஆண்டவர் உண்மையிலேயே பேசுவார்! அவர் கூறுகிறார்: “நீங்கள் பொய்களைச் சொன்னீர்கள். நீங்கள் உண்மையற்ற தரிசனங்களைப் பார்த்தீர்கள். எனவே நான் (தேவன்) இப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைச் சொன்னார். கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!

10 “மீண்டும் மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள். 11 நான் கல்மழையையும் பெருமழையையும் (பகைவர் படை) அனுப்புவேன் என்று அம்மனிதர்களிடம் சொல். காற்று கடுமையாக அடிக்கும். புயல் காற்றும் வரும். 12 பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.” 13 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்! 14 நீங்கள் அவற்றில் பூச்சு பூசினீர்கள். ஆனால் நான் முழுச் சுவற்றையும் அழித்துவிட்டேன். அதைத் தரையிலே விழப்பண்ணுவேன். அச்சுவர் உன்மீது விழும். பிறகு, நான்தான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 15 நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’

16 “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

17 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும். 18 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: பெண்களாகிய உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நீங்கள், ஜனங்கள் தம் கையில் அணிந்துகொள்ளத் தாயத்துகளைச் செய்கிறீர்கள். ஜனங்கள், தம் தலையில் அணிந்துக்கொள்ள சிறப்பான முக்காட்டுச் சேலைகளை உண்டாக்குகிறீர்கள். ஜனங்களது வாழ்வை அடக்கி ஆள மந்திரசக்தி இவற்றில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களது வாழ்வுக்காக அந்த ஜனங்களை நீங்கள் வேட்டையாடுகிறீர்கள்! 19 நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள். 20 எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்! 21 நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

22 “‘தீர்க்கதரிசிகளாகிய நீங்கள் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்களது பொய்கள் நல்ல ஜனங்களைப் புண்படுத்துகின்றன. அந்த நல்ல ஜனங்கள் புண்படுவதை நான் விரும்புவதில்லை. நீங்கள் கெட்ட ஜனங்களை ஆதரிக்கிறீர்கள், உற்சாகப்படுத்துகிறீர்கள். அவர்களின் வாழ்வை மாற்றும்படி நீங்கள் அவர்களிடம் சொல்வதில்லை. அவர்களின் வாழ்வைக் காப்பாற்ற நீங்கள் முயல்வதில்லை! 23 எனவே இனி நீங்கள் பயனற்ற தரிசனங்களைக் காண்பதில்லை. இனிமேல் நீங்கள் எவ்வித மந்திரமும் செய்யப் போவதில்லை. நான் எனது ஜனங்களை உங்களது சக்திகளிலிருந்து காப்பாற்றுவேன். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.’”

14 இஸ்ரவேலின் மூப்பார்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் என்னோடு பேச உட்கார்ந்தார்கள். கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்; “மனுபுத்திரனே, இம்மனிதர்கள் உன்னோடு பேச வந்திருக்கிறார்கள். என்னிடம் ஆலோசனை கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அம்மனிதர்கள் இன்னும் தங்கள் அசுத்தமான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பாவத்தை உண்டுபண்ணுபவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை இன்னும் வழிபடுகிறார்கள். எனவே, என்னிடம் ஆலோசனை கேட்க எதற்காக அவர்கள் வரவேண்டும்? அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேனா? இல்லை! ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன். ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’

“எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள். இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான். நான் அவனுக்கு எதிராகத் திரும்புவேன். நான் அவனை அழிப்பேன். அவன் மற்ற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பான். ஜனங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பார்கள். நான் அவனை எனது ஜனங்களிலிருந்து விலக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்! ஒரு தீர்க்கதரிசி முட்டாளைப்போன்று தன் சொந்தமாக ஒரு பதிலைச் சொன்னால், அப்பொழுது நான் அவன் எவ்வளவு மதியீனன் என்பதை அவனுக்குக் காட்டுவேன். நான் அவனுக்கு எதிராக எனது வல்லமையைக் காட்டுவேன்! நான் அவனை அழித்து எனது இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து விலக்குவேன். 10 எனவே, ஆலோசனைக்கு வருபவன் பதில் சொல்லும் தீர்க்கதரிசி, என இருவரும் ஒரே தண்டனையைப் பெறுவார்கள். 11 ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

எருசலேம் தண்டிக்கப்படும்

12 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 13 “மனுபுத்திரனே, என்னை விட்டு விலகி எனக்கு எதிராகப் பாவம் செய்யும் எந்த நாட்டையும் நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுவதை நிறுத்துவேன். நான் பசி காலத்திற்குக் காரணம் ஆவேன். அந்நாட்டை விட்டு மனிதர்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 14 நான் அந்நாட்டை அங்கு நோவா, தானியேல், யோபு போன்றவர்கள் வாழ்ந்தாலும் கூடத் தண்டிப்பேன். தங்கள் நற்குணத்தினால் அம்மனிதர்கள் தம் சொந்த உயிரைக் காப்பாற்றமுடியும். ஆனால் அவர்களால் முழு நாட்டையும் காப்பாற்ற முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

15 தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது. 16 நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த மகன்கள் அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

17 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டுக்கு எதிராகப் போரிட ஒரு பகைப்படையை அனுப்பலாம். அவ்வீரர்கள் அந்நாட்டை அழிக்கலாம். நான் அந்நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 18 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாக அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

19 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டிற்கு எதிராக நான் கொள்ளை நோயை அனுப்பலாம். நான் என் கடுங்கோபத்தை அதன் மீது இரத்தச் சிந்துதலுடன் ஊற்றுவேன். நான் அந்நாட்டிலுள்ள எல்லா ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 20 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.

21 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் மேலும் சொன்னார். “எனவே எருசலேமிற்கு இது எவ்வளவு கேடானது என்று எண்ணிப்பார். நான் இந்த நகரத்திற்கு எதிராக இந்நான்கு தண்டனைகளையும் அனுப்புவேன். நான் பகைவரின் படை, பசி, நோய், காட்டுமிருகங்கள் ஆகியவற்றை நகருக்கெதிராக அனுப்புவேன். நான் அந்நாட்டிலுள்ள ஜனங்களையும் விலங்குளையும் வெளியே அனுப்புவேன்! 22 ஜனங்களில் சிலர் அந்நாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் உதவிக்காகத் தம் மகன்களையும் மகள்களையும் உன்னிடம் அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் உண்மையில் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நீ அறிவாய். நான் எருசலேமிற்குக் கொடுத்த துன்பங்கள் எல்லாம் பரவாயில்லை என்று நீ உணர்வாய். 23 அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

எருசலேம் என்னும் திராட்சைக்கொடி எரிக்கப்படும்

15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது, அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, காட்டிலுள்ள மரங்களிலிருந்து வெட்டப்பட்டக் கிளைகளை விட திராட்சைக் கிளைகளின் குச்சி சிறந்ததா? இல்லை! திராட்சைக் கொடியிலிருக்கும் மரத்துண்டை நீ எதற்காவது பயன்படுத்த முடியுமா? இல்லை! அந்த மரத்தைக் கொண்டு பாத்திரங்களைத் தொங்கவிடும் முளைகளைச் செய்யமுடியுமா? இல்லை! ஜனங்கள் அவற்றை தீயில்தான் போடுவார்கள். சில குச்சிகள் முனைகளில் எரியத்தொடங்கும். நடுப்பகுதி நெருப்பால் கறுப்பாகும். அக்குச்சிகள் முழுவதும் எரியாது. அக்குச்சிகளை நீ வேறு எதற்கும் பயன்படுத்த முடியுமா? அவை எரிவதற்கு முன்னமே அவற்றைப் பயன்படுத்த முடியாது என்றால், பிறகு அவை எரிந்தபின் அவற்றைப் பயன்படுத்தவேமுடியாது! எனவே திராட்சைக் கொடியிலுள்ள குச்சிகளும் காட்டிலுள்ள மற்ற மரங்களின் குச்சிகளைப் போன்றவைதான். ஜனங்கள் அம்மரத்துண்டுகளை நெருப்பில் எறிவார்கள்.” நெருப்பு அவற்றை எரிக்கும்! அதுபோலவே, நானும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நெருப்பில் எறிவேன். எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைச் சொன்னார். “நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். ஆனால் ஜனங்களில் சிலர் முழுவதும் எரியாத குச்சிகளைப்போன்றுள்ளனர். அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் முழுவதுமாக அழிக்கப்படவில்லை. அந்த ஜனங்களை நான் தண்டித்தேன் என்பதை நீ பார்ப்பாய். நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்! நான் அந்த நாட்டை அழிப்பேன். ஏனென்றால் ஜனங்கள் பொய்த் தெய்வங்களை வணங்க என்னைவிட்டு விலகினார்கள்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center