Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 35-36

லேவியரின் நகரங்கள்

35 யோர்தான் நதிக்கருகில் மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் கர்த்தர், மோசேயிடம் பேசினார். கர்த்தர், “இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் பங்குகளில் உள்ள நகரங்களின் சில இடங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும் என்று கூறு, இஸ்ரவேல் ஜனங்கள் அந்நகரப் பகுதிகளிலும் அதைச் சுற்றிலும் உள்ள வெளி நிலங்களையும் லேவியருக்குத் தந்துவிட வேண்டும். லேவியர்கள் இந்த நகரங்களில் குடியேறுவார்கள். அவர்களின் பசுக்களும், மற்ற மிருகங்களும் வெளி நிலங்களில் மேய்ந்துகொள்ளும். உங்கள் நிலங்களில் லேவியர்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பாகமாவது: நகரச் சுவர்களில் 1,500 அடி தூரமும் அதற்கிடையில் உள்ள நிலங்களும் நகரத்தின் மேற்கேயுள்ள 3,000 அடி தூரமும், கிழக்கேயுள்ள 3,000 அடி துரமும், வடக்கேயுள்ள 3,000 அடி தூரமும், தெற்கேயுள்ள 3,000 அடி தூரமும், லேவியர்களுக்கு உரியதாகும். (அனைத்து நிலங்களுக்கும் நடுவில் நகரம் இருக்கும்.) இத்தகைய ஆறு நகரங்களும் பாதுகாப்பின் நகரங்களாகும். விபத்தாக எவராவது ஒருவரைக் கொன்றுவிட்டால், உடனே அவன் இந்த நகரத்திற்குள் ஓடிப்போனால் இது அவர்களுக்குப் பாதுகாப்பைத் தரும். இந்த ஆறு நகரங்களோடும் மேலும் 42 நகரங்களை லேவியர்களுக்குத் தரவேண்டும். எனவே மொத்தமாக நீங்கள் லேவியர்களுக்கு 48 நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள நிலங்களையும் தரவேண்டும். பெரிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் பெரிய பங்கைப் பெறுவார்கள். சிறிய குடும்பத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் சிறிய பங்கைப் பெறுவார்கள். எனவே பெரிய கோத்திரத்தினர் தங்கள் பங்கில் அதிக நகரங்களை லேவியர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். சிறிய கோத்திரத்தினர் சில நகரங்களை லேவியர்களுக்கு கொடுத்துவிட வேண்டும்” என்றார்.

மேலும் கர்த்தர் மோசேயிடம்: 10 “ஜனங்களிடம் இவற்றையும் கூறு: நீங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து கானான் நாட்டிற்குள் போனபின்பு 11 நீங்கள் அடைக்கல பட்டணங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எவனாவது ஒருவன் தற்செயலாய் யாரையாவது கொன்றுவிட்டால், அடைக்கலப் பட்டணங்களுக்குள் ஓடிப்போக வேண்டும். 12 சாகடிக்கப்பட்டவனின் உறவினர் யாராலும் இடையூறு வராமல், வழக்கு மன்றத்தில் தீர்ப்பளிக்கப்படும்வரை அங்கு பாதுகாப்பாக இருப்பான். 13 ஆறு நகரங்கள் பாதுகாப்பின் நகரங்களாக விளங்கும். 14 இவற்றில் மூன்று நகரங்கள் யோர்தான் நதிக்கு கிழக்கே இருக்கும். மேலும் மூன்று நகரங்கள் கானான் நாட்டிற்குள் யோர்தான் நதிக்கு மேற்கே இருக்கும். 15 இந்த நகரங்கள் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் அவர்களிடையே வாழும் அயல்நாட்டு ஜனங்களுக்கும் பயணிகளுக்கும் பாதுகாப்பிற்காக இருக்கும். விபத்தில் எவனையாவது கொன்றுவிட்டால், பாதுகாப்புக்காக இந்நகரங்களுக்குள் ஓடி ஒளிந்துகொள்ளலாம்.

16 “எவனாவது இரும்பு ஆயுதத்தை பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவன் கொலை செய்யப்பட வேண்டும். 17 எவனாவது கல்லைப் பயன்படுத்தி இன்னொருவனைக் கொன்றால், அவனும் கொலை செய்யப்படவேண்டும். (ஆனால் பொதுவாக கொலைசெய்யப்படத்தக்க அளவுள்ள கல்லே கொலை செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.) 18 ஒருவன் இன்னொருவனை மரத்தடியைப் பயன்படுத்திக் கொன்றால், அவனும் கொலை செய்யப்பட வேண்டியவன். (பொதுவாக மரத்தடியே பிறரைக் கொல்ல ஆயுதமாக பயன்படுத்தப்படும்.) 19 கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.

20-21 “ஒருவன் இன்னொருவனைத் தன் கையால் அடித்துக் கொலைசெய்து விடலாம் அல்லது ஒருவன் இன்னொருவனைத் தள்ளி விட்டுக் கொன்றுவிடலாம். அல்லது ஒருவன் இன்னொருவன் மீது எதையாவது வீசியும் கொன்றுவிடலாம். ஒருவன் இவற்றை வெறுப்பின் காரணமாகச் செய்தால் அவன் கொலைகாரனாகிறான். அவன் கொலை செய்யப்பட வேண்டியவன் ஆவான். கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்திலுள்ள ஒருவன் கொலைகாரனை விரட்டிப்போய் கொன்றுவிடலாம்.

22 “ஆனால் ஒருவன் எதிர்பாராத விதத்தில் ஒருவனைக் கொன்றுவிடலாம். கொன்றுவிட்ட மனிதனின் மேல் அவனுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. எதிர்பாராத விதத்தில் நடந்தது இது அல்லது ஒருவன் எதையோ வீச அது எதிர்பாராதவிதமாக இன்னொருவன் மீது பட்டு அவன் மரிக்கலாம். அவன் திட்டமிட்டுக் கொலை செய்யவில்லை. 23 அல்லது ஒருவன் ஒரு கல்லை வீச அது இன்னொருவன் மீது பட்டு அவன் மரித்துப் போகலாம். அவன் யாரையும் கொல்லத் திட்டமிடவில்லை. அவன் யாரையும் வெறுக்கவில்லை. எதிர்பாராத விதத்தில் கொலை செய்துவிட்டான். 24 இவ்வாறு நிகழ்ந்தால், பிறகு சமுதாயம் தான் முடிவெடுக்க வேண்டும். அவர்களுக்குரிய வழக்குமன்றமே நிறைவேற்ற வேண்டியதைத் தீர்மானிக்கும். சமூக நீதிமன்றமே கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ள ஒருவன், கொலைகாரனை கொலை செய்யலாமா என்பதைத் தீர்மானிக்கும். 25 சமுதாய நீதிமன்றமானது கொலைகாரனைத் தண்டிக்க வேண்டாம் என்று எண்ணினால் அவனை அடைக்கலப் பட்டணத்துக்கு அனுப்பிவிடலாம். அவன், அப்போதைய தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்த பட்டணத்தில் இருக்க வேண்டும்.

26-27 “அவன் பாதுகாப்பான நகரத்தின் எல்லைகளை விட்டு வெளியே போகாமல் இருக்க வேண்டும். அவ்வாறு போனால், அப்போது கொலை செய்யப்பட்டவனின் குடும்பத்தில் உள்ளவர்கள் அவனைப் பிடித்துக் கொன்றால், அது கொலை குற்றம் ஆகாது. 28 எதிர்பாராத விதமாக இன்னொருவனைக் கொன்ற ஒருவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை பாதுகாப்பான நகரத்திற்குள்ளேயே இருக்க வேண்டும். தலைமை ஆசாரியனின் மறைவிற்குப் பின்னர் அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பிப் போகலாம். 29 உங்கள் ஜனங்கள் வாழும் நகரங்களில் எல்லாம் இந்த விதிகள் என்றென்றைக்கும் இருக்கும்.

30 “சாட்சிகள் இருந்தால்தான், ஒருவனைக் கொலைகாரன் என்று முடிவு செய்து கொன்றுவிட தீர்ப்பளிக்க முடியும். ஒரு சாட்சி மட்டும் இருந்தால் ஒருவனைக் கொலைக் குற்றவாளியாக்க முடியாது.

31 “ஒருவன் கொலைகாரன் என்று முடிவானால், அவன் மரண தண்டனைக்குத் தகுதியாவான். அவனிடம் பணத்தை பெற்றுக்கொண்டு தண்டனையை மாற்ற வேண்டாம். கொலைகாரன் கொல்லப்பட வேண்டும்.

32 “ஒருவன் மற்றொருவனைக் கொன்றுவிட்டு பாதுகாப்பான நகரத்திற்கு ஓடிவிட்டால் அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு அவனை வீட்டிற்கு அனுப்பிவிடாதீர்கள். அவன் தலைமை ஆசாரியன் மரிக்கும்வரை அந்நகரத்திலேயே இருக்க வேண்டும்.

33 “குற்றமில்லாத இரத்தம் சிந்தி உங்கள் நாட்டை அசுத்தப்படுத்திவிடாதீர்கள். இரத்தம் சிந்திய பூமியை கொலைகாரனின் இரத்தத்தைக் கொண்டு தவிர வேறு எதினாலேயும் பரிகாரம் செய்ய முடியாது. 34 நானே கர்த்தர், நான் உங்கள் நாட்டில் இஸ்ரவேல் ஜனங்களோடு வாழ்வேன். நான் அங்கே வாழ்வதால் அந்த இடத்தை அறியாதவர்களின் இரத்தத்தால் தீட்டு உள்ளதாகச் செய்யவேண்டாம்” என்றார்.

செலோப்பியாத்தின் மகள்களின் பகுதி

36 மனாசே யோசேப்பின் மகன். மாகீர் மனாசேயின் மகன். கீலேயாத் மாகீரின் மகன். கீலேயாத் கோத்திரத்தின் தலைவர்கள் மோசேயோடும் மற்ற இஸ்ரவேல் கோத்திரங்களின் தலைவர்களோடும் பேசப் போனார்கள். அவர்கள், “ஐயா, எங்கள் நிலத்தின் பங்குகளைச் சீட்டுக்குலுக்கல் மூலம் நாங்கள் பெறுமாறு கர்த்தர் கட்டளையிட்டு இருக்கிறார். அதோடு செலோப்பியாத்தின் நிலப்பங்கானது அவனது மகள்களுக்குச் சேர வேண்டும் என்றும் கர்த்தர் கூறியிருக்கிறார். செலோப்பியாத் எங்களது சகோதரன். வேறு ஒரு கோத்திரத்தில் உள்ளவர்கள் செலோப்பியாத்தின் மகளை மணக்க நேரிடலாம். அப்போது அந்தப் பங்கு எங்கள் குடும்பத்தை விட்டுப் போய்விடுமே. வேறு ஒரு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் அந்தப் பூமியை பெற்றுக்கொள்வார்களா? இவ்வாறு சீட்டுக் குலுக்கல் மூலம் நாங்கள் பெற்ற நிலப்பாகத்தை நாங்கள் இழந்துவிடுவதா? ஜனங்கள் தங்கள் நிலத்தை விற்கலாம். ஆனால் யூபிலி ஆண்டில் எல்லா நிலமும் உண்மையில் நில உரிமையாளனுக்கே திரும்பி அளிக்கப்படும். அப்போது செலோப்பியாத்தின் மகள்களுக்குரிய நிலம் யாருக்கு வந்து சேரும்? நித்தியத்துக்கும் எங்கள் குடும்பம் அந்த நிலத்தை இழந்து விட வேண்டியதுதானா?” என்று கேட்டனர்.

மோசே பின்வரும் கட்டளையை இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்தான். இந்தக் கட்டளை கர்த்தரிடமிருந்து வந்தது. “யோசேப்பின் கோத்திரத்தில் உள்ள மனிதர்கள் கூறுவது சரியே. செலொப்பியாத்தின் மகள்கள் விஷயத்தில் கர்த்தர் கூறும் கட்டளைகளாவன: அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்துகொள்ளலாம். எனினும் அவர்கள் தங்கள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இதனால் இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் உள்ள சொத்தானது இன்னொரு கோத்திரத்திற்குச் செல்லாமல் இருக்கும். எனவே ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலங்களைப் பாதுகாத்துக்கொள்வான். ஒரு பெண் தன் தந்தைக்குரிய நிலத்தைப் பெற்றால், பின்னர் அவள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும். இந்த முறையில் ஒவ்வொரு இஸ்ரவேல் குடிமகனும் தங்கள் முற்பிதாக்களின் சொத்துக்களைத் தம் வசமே வைத்திருப்பார்கள். எனவே, இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு கோத்திரத்தில் இருந்து இன்னொரு கோத்திரத்திற்கு நிலம் போகாமல் இருக்கும். ஒவ்வொரு இஸ்ரவேலனும் தன் முற்பிதாக்களுக்குரிய நிலத்தை பாதுகாத்துக்கொள்வான்.”

10 செலொப்பியாத்தின் மகள்கள், மோசேக்கு கர்த்தர் அளித்த கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தனர். 11 எனவே மக்லாள், திர்சாள், ஓக்லாள், மில்காள், நோவாள் எனும் செலொப்பியாத்தின் மகள்கள் தம் தந்தையின் சகோதரரின் மகன்களை மணந்துகொண்டனர். 12 அவர்கள் யோசேப்பின் மகனாகிய மனாசேயின் கோத்திரத்தினரை மணந்துகொண்டபடியால் அவர்களின் சொத்தானது அக்கோத்திரத்திற்குள்ளேயே இருந்தது.

13 எரிகோவின் எதிரே, யோர்தானுக்கு இக்கரையில் மோவாப் சமவெளியில் கர்த்தர் மோசேக்கு கொடுத்த சட்டங்களும் கட்டளைகளும் இவைகளேயாகும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center