Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 31-32

மீதியானியர்களுடன் இஸ்ரவேலர்களின் யுத்தம்

31 மோசேயிடம் கர்த்தர் பேசினார். அவர், “மீதியானியர்களையும் மேற்கொள்ளும்படியாக நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவுவேன். அதன் பிறகு நீ மரித்துப் போவாய்” என்றார்.

எனவே மோசே ஜனங்களோடு பேசினான். அவன் “உங்கள் ஆண்களில் வீரர்களைத் தேர்வு செய்துகொள்ளுங்கள். கர்த்தர் அவர்களை மீதியானியர்களையும் வெல்லும்படி செய்வார். இஸ்ரவேல் ஜனங்களின் ஒவ்வொரு கோத்திரத்தில் இருந்தும் 1,000 ஆண்களைத் தேர்ந்தெடுங்கள். ஆகமொத்தம் இஸ்ரவேல் கோத்திரங்களில் இருந்து 12,000 பேர் வீரர்களாவார்கள்” என்றான்.

மோசே அவர்களைப் போருக்கு அனுப்பினான். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகனான பினேகாசையும் அவர்களோடு அனுப்பினான். எலெயாசார் பரிசுத்தமான பொருட்களோடு, கொம்புகளையும், எக்காளத்தையும் எடுத்து சென்றான். இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தர் கட்டளையிட்டபடியே மீதியானியர்களோடு போரிட்டு அவர்களைக் கொன்றனர். மீதியானிய அரசர்களில் ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் ஐந்து பேரையும் கொன்றுபோட்டார்கள். அவர்கள் பேயோரின் மகனான பிலேயாமையும் வாளால் கொன்றார்கள்.

இஸ்ரவேல் ஜனங்கள் மீதியானிய பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாகப் பிடித்தனர். அவர்களது மந்தைகளையும் பசுக்களையும் மற்ற யாவற்றையும் எடுத்துக்கொண்டனர். 10 பிறகு அவர்களது நகரங்களையும், கிராமங்களையும் எரித்துவிட்டனர். 11 அவர்கள் அனைத்து ஜனங்களையும், மிருகங்களையும் கைப்பற்றினர். 12 தாங்கள் கைப்பற்றிய அனைத்தையும் மோசேயிடம், ஆசாரியனாகிய எலெயாசார் மற்றும் மற்ற ஜனங்களிடத்திலும் கொண்டு வந்தனர். அங்கே அவர்கள் கவர்ந்த அனைத்துப் பொருட்களையும் முகாமுக்குள் கொண்டு வந்தனர். மோவாபிலுள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் அவர்கள் கூடாரம் அமைத்திருந்தனர். அந்த இடம் யோர்தானைக் கடந்து கிழக்குப் பகுதியில் எரிகோவின் எதிரில் இருந்தது. 13 பிறகு மோசேயும், ஆசாரியனாகிய எலெயாசாரும், ஜனங்கள் தலைவர்களும் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து வீரர்களைச் சந்தித்தனர்.

14 படைத்தலைவர்களுக்கு எதிராக மோசே கோபங்கொண்டான். அவன் போரிலிருந்து திரும்பி வந்திருந்த 1,000 வீரர்களின் தலைவரோடும் 100 வீரர்களின் தலைவரோடும் கோபங்கொண்டான். 15 மோசே அவர்களிடம், “ஏன் பெண்களை உயிரோடு விட்டீர்கள். 16 இப்பெண்களே பிலேயாமின் நாட்களில் பேயோரில் நடந்ததுபோல் இஸ்ரவேல் ஆண்கள் கர்த்தரை விட்டு விலகுவதற்கு காரணமாயிருந்தவர்கள். கர்த்தருடைய ஜனங்களுக்கு மீண்டும் அந்த நோய் ஏற்படும். 17 இப்போது எல்லா மீதியானிய சிறுவர்களையும், வாழ்க்கைப்பட்ட மீதியானிய பெண்களையும், ஒருவனோடு பாலின உறவுகொண்ட ஒவ்வொரு மீதியானிய பெண்ணையும் கொன்றுவிடுங்கள். 18 எந்தவொரு மனிதனோடும் பாலின உறவுகொள்ளாத இளம் பெண்ணை மட்டும் வாழவிடுங்கள். 19 பிறகு மற்றவர்களைக் கொன்ற அனைவரும் கூடாரத்திற்கு வெளியே ஏழு நாட்கள் தங்கி இருங்கள். உங்களில் எவரேனும் பிணத்தைத் தொட்டிருந்தாலும் அவன் கூடாரத்திற்கு வெளியே இருக்கவேண்டும். மூன்றாவது நாள், நீங்களும் உங்கள் கைதிகளும் சுத்தப்படுத்தப்பட வேண்டும். இவற்றை மீண்டும் நீங்கள் ஏழாவது நாள் செய்ய வேண்டும். 20 நீங்கள் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அதோடு தோல், கம்பளி, மரம் போன்றவற்றால் செய்யப்பட்டப் பொருட்களையும் கழுவவேண்டும். நீங்கள் சுத்தமாக வேண்டும்” என்றார்.

21 பிறகு ஆசாரியனாகிய எலெயாசார் வீரர்களோடு பேசினான். அவன், “இவ்விதிகள் எல்லாம் கர்த்தரால் மோசேக்குக் கொடுக்கப்பட்டவை. இவ்விதிகள் போரிலிருந்து திரும்பிவரும் வீரர்களுக்கு உரியவை. 22-23 ஆனால் நெருப்பில் இடப்படும் பொருள்களுக்கு உரிய விதிகள் வேறு விதமானவை. நீங்கள் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, தகரம் போன்றவற்றை நெருப்பில் இடலாம். பிறகு அவற்றை தண்ணீரில் கழுவும்போது அவை சுத்தமாகும். நெருப்பில் இட முடியாத பொருட்களை தண்ணீரால்தான் சுத்தப்படுத்த முடியும். 24 ஏழாவது நாளில் உங்கள் ஆடைகளைத் துவைக்க வேண்டும். பிறகு நீங்கள் சுத்தம் அடைவீர்கள். அதன் பின்னரே நீங்கள் கூடாரத்திற்குள் வரமுடியும்” என்றான்.

25 பிறகு கர்த்தர் மோசேயிடம், 26 “நீயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் தலைவர் அனைவரும் கைதிகளையும், மிருகங்களையும், கைப்பற்றி வந்த பொருட்களையும், எண்ணிக் கணக்கிட வேண்டும். 27 பிறகு அவற்றைப் போருக்குச் சென்று வந்த வீரர்களுக்கும், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கும் பங்கிட வேண்டும். 28 போருக்குச் சென்று வந்த வீரர்களிடமிருந்து ஒரு பகுதியை எடு. அது கர்த்தருக்கு உரியது. 500-ல் ஒன்று கர்த்தருடைய பங்காகும். இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் என அனைத்திற்கும் பொருந்தும். 29 அவர்களுடைய பாதிப்பங்கில் எடுத்து ஆசாரியனாகிய எலெயாசாருக்குக் கொடுக்க வேண்டும். இது கர்த்தருக்கு உரிய பங்காகும். 30 பிறகு பிற ஜனங்களுடைய பங்கில் 50-ல் ஒன்றை எடு. இது ஜனங்கள், பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றுக்குப் பொருந்தும். இப்பங்கை வேவியர்களுக்குக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தக் கூடாரத்திற்குப் பொறுப்பாளிகள்” என்றார்.

31 மோசேக்கு கர்த்தர் கொடுத்த கட்டளையின்படி மோசேயும் எலெயாசாரும் செய்தனர். 32 வீரர்கள் 6,75,000 ஆடுகளையும், 33 72,000 பசுக்களையும் 34 61,000 கழுதைகளையும், 35 32,000 பெண்களையும் கைப்பற்றியிருந்தனர். (இப்பெண்கள் எந்த ஆணோடும் இதுவரை பாலின உறவு கொள்ளாதவர்கள்.) 36 இவற்றில் போருக்குச் சென்ற வீரர்கள் 3,37,500 ஆடுகளைப் பெற்றார்கள். 37 அவர்கள் 675 ஆடுகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். 38 வீரர்கள் 36,000 பசுக்களைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 72 பசுக்களை கர்த்தருக்குக் கொடுத்தனர். 39 வீரர்கள் 30,500 கழுதைகளைப் பெற்றுக்கொண்டு அவற்றில் 61 கழுதைகளை கர்த்தருக்குக் கொடுத்தனர். 40 வீரர்கள் 16,000 பெண்களை அடைந்தனர். அவர்களில் 32 பெண்களை கர்த்தருக்கு அர்ப்பணித்தனர். 41 கர்த்தர் அவனுக்கு ஆணையிட்டபடி கர்த்தருக்கு உரிய இந்த அன்பளிப்புகளையெல்லாம் ஆசாரியனான எலெயாசாரிடம் மோசே கொடுத்தான்.

42 பிறகு மோசே வீரர்கள் கைப்பற்றியவைகளில் இஸ்ரவேல் ஜனங்களுக்குரிய பங்காகிய பாதிப்பகுதியை எண்ணினான். போருக்குச் சென்ற வீரர்களிடமிருந்து மோசே ஜனங்களுக்காகப் பெற்றுக்கொண்டதாவது. 43 3,37,500 ஆடுகள், 44 36,000 பசுக்கள். 45 30,500 கழுதைகள், 46 16,000 பெண்களையும் பெற்றனர். 47 இவற்றில் 50-ல் ஒன்றை கர்த்தருக்காக மோசே எடுத்துக்கொண்டான். இவற்றில் ஜனங்களும் மிருகங்களும் அடங்கும். பிறகு அவன் அவற்றை லேவியர்களுக்குக் கொடுத்தான், ஏனென்றால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தமான கூடாரத்தைக் கவனிப்பவர்கள். மோசே இதனை கர்த்தருடைய கட்டளைப்படி செய்து முடித்தான்.

48 பிறகு படைத்தலைவர்கள் (இவர்கள் 1,000 பேருக்கு தலைவராகவும் 100 பேருக்கு தலைவராகவும் இருந்தனர்.) மோசேயிடம் வந்தனர். 49 அவர்கள் மோசேயிடம், “நாங்கள் உங்களது வேலைக்காரர்கள். எங்கள் வீரர்களை எண்ணி கணக்கிட்டிருக்கிறோம். அவர்களில் யாரையும் தவறவிடவில்லை. 50 நாங்கள் ஒவ்வொரு வீரரிடமிருந்தும் கர்த்தருக்குரிய அன்பளிப்புகளைக் கொண்டு வந்துள்ளோம். நாங்கள் கொண்டுவந்தவற்றுள், தங்கத்தாலான வளையங்கள், கை வளையல்கள், மோதிரங்கள், காதணிகள், கழுத்தணிகள் ஆகியவை அடங்கும். கர்த்தருக்கான இந்த அன்பளிப்புகள் எங்களைச் சுத்தப்படுத்தும்” என்றார்கள்.

51 எனவே மோசே பொன்னாலான அத்தனை அணிகலன்களையும் எடுத்து ஆசாரியனான எலெயாசாரிடம் கொடுத்தான். 52 1,000 பேருக்கும், 100 பேருக்கும் தலைவரானவர்கள் கொடுத்த பொன்னணிகள் 420 பவுண்டு இருந்தது. 53 வீரர்கள் தங்கள் பங்காகக் கிடைத்த பொருட்களை வைத்துக்கொண்டனர். 54 மோசேயும், ஆசாரியனான எலெயாசாரும் 1,000 ஆண்களுக்கும் 100 ஆண்களுக்கும் உரிய தலைவர்களிடமிருந்து பொன்னைப் பெற்றுக்கொண்டனர். பிறகு அவர்கள் அவற்றை ஆசரிப்புக் கூடாரத்தில் வைத்தனர். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைவு அடையாளமாக வைக்கப்பட்டது.

யோர்தான் நதிக்குக் கீழ்ப்பகுதியிலுள்ள கோத்திரங்கள்

32 ரூபன் மற்றும் காத்தின் கோத்திரத்தினர் ஏராளமான பசுக்களைப் பெற்றிருந்தனர். அந்த ஜனங்கள் யாசேர் மற்றும் கீலேயாத் நாட்டைப் பார்த்ததும் அவை ஆடு மாடுகளுக்கு ஏற்ற இடம் என்று எண்ணினார்கள். எனவே காத் மற்றும் ரூபனின் கோத்திரத்தில் உள்ள ஜனங்கள் மோசேயிடம் வந்தனர். அவர்கள் மோசே, ஆசாரியரான எலெயாசார் மற்றும் தலைவர்களோடு பேசினார்கள். 3-4 அவர்கள், “உங்கள் வேலைக்காரர்களாகிய எங்களிடம் ஏராளமான ஆடுமாடுகளை வைத்திருக்கிறோம். கர்த்தரால் கொடுக்கப்பட்ட இந்த பூமியானது கால் நடைகளுக்கு ஏற்ற நல்ல இடமாக உள்ளது. இந்த நாடானது அதரோத், தீபோன், யாசேர், நிம்ரா, எஸ்போன், எலேயாலெ, சேபாம், நேபோ, பெயோன் எனும் நகரங்களைக் கொண்டது. உங்கள் கண்களில் எங்களுக்குத் தயவு கிடைத்தால் அவற்றை நீங்கள் எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறோம். எங்களை யோர்தான் நதியின் அக்கரைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம்” என்றார்கள்.

ரூபன் மற்றும் காத்தின் கோத்திரங்களுடன் மோசே பேசி, “உங்கள் சகோதரர்கள் போருக்குப் போகும்போது நீங்கள் மட்டும் இங்கே இருப்பீர்களோ? நீங்கள் எதற்காக இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்துகிறீர்கள்? அவர்கள் நதியைக் கடந்து சென்று கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த நாட்டைப் பெற்றுக்கொள்ள ஏன் தடையாக இருக்கிறீர்கள்? உங்கள் தந்தைமார்களும் இதையே முன்பு என்னிடம் செய்தார்கள். அவர்களை காதேஸ்பர்னேயாவிலிருந்து அனுப்பினபோது இது நடந்தது. அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கு வரை சென்று அந்நாட்டைப் பார்த்தார்கள். பின் அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை அதைரியப்படுத்தினார்கள். கர்த்தர் கொடுத்த நாட்டுக்குப் போகாதபடிக்கு அவர்கள் செய்துவிட்டனர். 10 கர்த்தர் அந்த ஜனங்கள் மீது மிகுந்த கோபம் கொண்டார். கர்த்தர் இந்த ஆணையை இட்டார்: 11 ‘எகிப்திலிருந்து வந்தவர்களில் 20 வயதும் அதற்கு மேலும் உள்ளவர்களில் எவரும் அந்த நாட்டை காண்பதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் இந்த நாட்டைக் கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னை உண்மையாக பின்பற்றவில்லை. எனவே இந்த நாட்டை அவர்கள் பெறுவதில்லை. 12 கேனேசியனான எப்புன்னேயின் மகனான காலேபும் நூனின் மகனான யோசுவாவும் கர்த்தரை உண்மையாகவே பின்பற்றியபடியால் அந்நாட்டைப் பொறுவார்கள்!’

13 “இஸ்ரவேல் ஜனங்களுக்கு எதிராக கர்த்தர் பெருங்கோபம் கொண்டிருந்தார். எனவே கர்த்தர் அவர்களை 40 ஆண்டுகள் பாலைவனத்தில் இருக்கும்படி செய்தார். கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தவர்கள் எல்லோரும் மரிக்கும் வரைக்கும் அவர்களை பாலைவனத்திலேயே இருக்கச் செய்தார். 14 இப்போது நீங்களும் உங்கள் தந்தைமார்கள் செய்தது போலவே செய்கிறீர்கள். பாவிகளாகிய நீங்கள், மேலும் கர்த்தர் தமது ஜனங்களுக்கு விரோதமாக இன்னும் கோபங்கொள்ள வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? 15 நீங்கள் கர்த்தரைப் பின்பற்றாமல் விலகிப்போனால் அவர் உங்களை மீண்டும் பாலைவனத்தில் இருக்கச் செய்வார். பிறகு நீங்கள் அனைத்து ஜனங்களையும் அழித்து விடுவீர்கள்!” என்று கூறினான்.

16 ஆனால் ரூபன் மற்றும் காத் கோத்திரங்களிலுள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் எங்கள் பிள்ளைகளுக்காக நகரங்களையும், எங்கள் மிருகங்களுக்குத் தொழுவங்களையும் உருவாக்குவோம். 17 பிறகு இந்நாட்டிலுள்ள ஜனங்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால், மற்ற இஸ்ரவேல் ஜனங்களுக்கு நாங்கள் மகிழ்ச்சியோடு வந்து உதவி செய்வோம். அவர்களின் நாட்டுக்கு அவர்களைக் கொண்டு வருவோம். 18 இஸ்ரவேல் ஜனங்களில் ஒவ்வொருவரும் இந்நாட்டில் தங்களின் பங்கைப் பெறும் வரை, நாங்கள் வீட்டிற்குத் திரும்பிவரமாட்டோம்! 19 யோர்தான் ஆற்றுக்கு மேற்கே உள்ள அந்த நாட்டையும் நாங்கள் எடுத்துக்கொள்ள மாட்டோம்! யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகள் தான் எங்கள் பங்குக்கு உரியவை” என்றனர்.

20 எனவே மோசே அவர்களிடம், “நீங்கள் இவற்றையெல்லாம் செய்தால், இந்த நாடு உங்களுக்கு உரியதாகும். ஆனால் உங்கள் வீரர்கள் கர்த்தருக்கு முன் போருக்குச் செல்லவேண்டும். 21 உங்கள் வீரர்கள் யோர்தானைக் கடந்து சென்று அங்கேயுள்ள எதிரிகளோடு போரிட வேண்டும். 22 எல்லோரும் தங்கள் நாட்டைப்பெற கர்த்தர் உதவிய பிறகு நீங்கள் வீட்டிற்குத் திரும்பலாம். அப்போது கர்த்தரும் இஸ்ரவேலரும் உங்களைக் குற்றவாளிகளாகக் கருதாமல் நீங்களும் இந்த நாட்டைப் பெற்றுக்கொள்ள உதவுவார். 23 ஆனால், நீங்கள் இவற்றையெல்லாம் செய்யாவிட்டால், கர்த்தருக்கு எதிராகப் பாவிகள் ஆவீர்கள். உங்கள் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவீர்கள் என்பதையும் உறுதியாகத் தெரிந்துகொள்ளுங்கள். 24 உங்கள் பிள்ளைகளுக்கு நகரங்களையும், மிருகங்களுக்குத் தொழுவங்களையும் அமையுங்கள். ஆனால் நீங்கள் வாக்களித்தபடி செய்து முடிக்க வேண்டும்” என்றான்.

25 பிறகு காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் மோசேயிடம், “நாங்கள் உம்முடைய வேலைக்காரர்கள், நீர் எங்கள் எஜமானர். எனவே நீர் சொன்னபடியே நாங்கள் செய்வோம். 26 எங்கள் மனைவியரும், குழந்தைகளும் அனைத்து மிருகங்களும் கீலேயாத்தின் நகரங்களில் தங்கி இருப்பார்கள். 27 ஆனால் உம் அடியார்களாகிய நாங்கள் யோர்தான் ஆற்றைக் கடப்போம். எங்கள் எஜமானர் சென்னபடி நாங்கள் ஆயுதபாணிகளாக கர்த்தருக்கு முன்னால் செல்லுவோம்” என்றனர்.

28 எனவே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா மற்றும் இஸ்ரேவேலின் அனைத்து கோத்திரங்களிலும் உள்ள தலைவர்கள் அனைவரும் அவர்களின் வாக்குறுதியைக் கேட்டனர். 29 பிறகு மோசே அவர்களிடம், “காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து செல்வார்கள். கர்த்தரின் முன்னால் போருக்கு ஆயுதபாணிகளாக அணிவகுத்து நிற்பார்கள். உங்கள் நாட்டை கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவுவார்கள். பின்பு நீங்கள் கீலேயாத் பகுதியை அவர்களது நாட்டின் சுதந்திரமாகும்படி கொடுப்பீர்கள். 30 கானான் தேசத்தை நீங்கள் எடுத்துக்கொள்வதற்கு அவர்கள் உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றனர்” என்றான்.

31 காத் மற்றும் ரூபனின் ஜனங்கள் பதிலாக, “கர்த்தர் ஆணையிட்டபடியே நாங்கள் செய்வதாக வாக்களித்துள்ளோம். 32 நாங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்வோம். நாங்கள் கர்த்தருக்கு முன்பாக ஆயுதம் தரித்தவர்களாகக் கானான் நாட்டிற்குச் செல்வோம். யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே உள்ள நாடுகளே எங்கள் பங்குக்கு உரிய நாடுகளாகும்” என்றனர்.

33 எனவே மோசே, காத்தின் ஜனங்களுக்கும் ரூபனின் ஜனங்களுக்கும் மனாசேயின் ஜனங்களில் பாதிப்பேருக்கும் அந்த பகுதியைக் கொடுத்தான். (மனாசே யோசேப்பின் மகன்.) இந்த பூமியானது எமோரிருடைய அரசனாகிய சீகோனின் பட்டணத்தையும் பாசானுடைய அரசனாகிய ஓகின் பட்டணத்தையும் அவற்றைச் சேர்ந்த பூமியையும் கொண்டது. அந்த பூமியானது அவற்றின் எல்லையைச் சுற்றிலுமுள்ள நகரங்களையும் கொண்டது.

34 பின்பு காத் ஜனங்கள் தீபோன், அதரோத், ஆரோவேர், 35 ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா, 36 பெத்நிம்ரா, பெத்தாரன் எனும் நகரங்களையும் அவற்றின் பலமான சுவர்களையும், களஞ்சியங்களையும், தொழுவங்களையும் கட்டினார்கள்.

37 ரூபன் ஜனங்களோ, எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம், 38 நேபோ, பாகால் மெயோன், சீப்மா என்னும் நகரங்களைக் கட்டினார்கள். அவர்கள் நேபோ, பாகல் மெயோன் எனும் பெயர்களை மாற்றிக்கொண்டனர்.

39 மாகீரின் ஜனங்கள் கீலேயாத்திற்கு போனார்கள். (மாகீர் மனாசேயின் மகன்.) அவர்கள் அந்நகரத்தைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த எமோரியர்களை விரட்டியடித்தனர். 40 எனவே மோசே, மனாசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த மாகீர் ஜனங்களுக்கு கீலேயாத்தைக் கொடுத்தான். எனவே அந்தக் குடும்பம் அங்கே தங்கிற்று. 41 மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான். 42 நோபாக், கேனாத்தையும் அதன் அருகிலுள்ள நகரத்தையும் தோற்கடித்தான். பிறகு அந்த இடத்தைத் தன் பெயரால் அழைத்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center