Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 14-15

ஜனங்கள் மீண்டும் முறையிடுதல்

14 அன்று இரவு, முகாம்களில் உள்ள அனைவரும் கூக்கூரலிட்டுப் புலம்பினார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக முறையிட்டனர். அவர்கள் அனைவரும் கூடி மோசேயிடமும், ஆரோனிடமும், “நாம் எகிப்து நாட்டிலோ பலைவனங்களிலோ மரித்துப்போயிருக்கலாம், இவ்வாறு புதிய நாட்டில் கொல்லப்படுவதைவிட அது மேலானது. நாம் இப்புதிய நாட்டில் போரில் கொல்லப்படுவதற்காகத்தான், கர்த்தர் இங்கே அழைத்து வந்தாரா? எதிரிகள் நம்மைக் கொன்றுவிட்டு, நமது மனைவியரையும், பிள்ளைகளையும் அபகரித்துக்கொள்வார்கள். இதைவிட நாம் எகிப்துக்குத் திரும்பிப் போவது நல்லது” என்றனர்.

பிறகு ஜனங்கள் ஒருவரோடு ஒருவர், “நாம் வேறு தலைவரைத் தேர்ந்தெடுத்து, எகிப்துக்குத் திரும்பிப் போவோம்” எனப் பேசிக்கொண்டனர்.

அங்கே கூடியிருந்த அனைத்து இஸ்ரவேல் ஜனங்களின் முன்பும், மோசேயும், ஆரோனும் தரையில் பணிந்து வணங்கினார்கள். யோசுவாவும் காலேப்பும் மிகவும் மனமுறிவடைந்தனர். (யோசுவா நூனின் மகன். காலேப் எப்புன்னேயின் மகன். இருவரும் கானான் நாட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்தவர்கள்.) அங்கே கூடியிருந்த இஸ்ரவேல் ஜனங்களிடம் அந்த இருவரும், “நாங்கள் பார்த்த அந்த நாடு நன்றாக இருக்கிறது. அது நல்ல பொருட்கள் பலவற்றால் நிறைந்த நாடு. கர்த்தர் நம்மீது விருப்பம் உடையவராக இருந்தால், அவர் அந்த நாட்டுக்குள் நம்மை வழி நடத்திச் செல்லுவார். அந்த நாட்டை கர்த்தர் நமக்குத் தருவார். எனவே கர்த்தருக்கு எதிராக திரும்பாதீர்கள். அந்த நாட்டின் ஜனங்களுக்குப் பயப்படாதீர்கள்! நாம் அவர்களைத் தோற்கடிக்க முடியும். அவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை, எதுவும் அவர்களைக் காப்பாற்றாது. ஆனால், நம்மோடு கர்த்தர் இருக்கிறார். எனவே, பயப்படவேண்டாம்” என்றனர்.

10 அனைத்து ஜனங்களும் யோசுவாவையும் கலேபையும் கல்லெறிந்து கொன்றுவிட வேண்டும் என்று பேச ஆரம்பித்தார்கள். ஆனால் கர்த்தரின் மகிமை, ஆசரிப்புக் கூடாரத்தின் மேலே அவர்கள் அனைவரும் காணும்படி தோன்றியது. 11 கர்த்தர் மோசேயுடன் பேசினார். அவர், “எவ்வளவு காலத்திற்கு இந்த ஜனங்கள் எனக்கெதிராக இருப்பார்கள்? என் மீது நம்பிக்கையில்லை என்பதைக் காட்டுகிறார்கள், என் வல்லமையின் மீது நம்பிக்கை இல்லை என்பதைக் காட்டுகிறார்கள். நான் எத்தனையோ அடையாளங்களை அவர்களுக்கு காட்டியிருக்கிறேன். எனினும் என்னை அவர்கள் நம்ப மறுக்கிறார்கள். நான் அவர்களுக்கிடையில் பலப் பெருங்காரியங்களைச் செய்திருக்கிறேன். 12 அவர்கள் அனைவரையும் பெருநோயால் கொன்றுவிடுவேன். அவர்களை அழிப்பேன். நான் இவர்களை விட உங்கள் ஜனத்தை பெரியதாகவும் பலமிக்கதாகவும் பண்ணுவேன்” என்றார்.

13 பிறகு மோசே கர்த்தரிடம், “நீர் இதனைச் செய்துவிட்டால், எகிப்தியர்கள் இதனைப் பற்றி கேள்விப்படுவார்கள். நீர் உமது வல்லமையைப் பயன்படுத்தி உமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே மீட்டுவந்தீர், என்பதை அவர்கள் அறிவார்கள். 14 எகிப்திய ஜனங்கள் கானான் ஜனங்களிடம் இதைப்பற்றி கூறினார்கள். நீரே கர்த்தர் என்பதை ஏற்கெனவே அவர்கள் அறிந்திருக்கின்றனர். நீர் உமது ஜனங்களோடு இருப்பதையும், ஜனங்கள் உம்மைப் பார்த்தனர் என்பதையும் அறிந்திருக்கின்றனர். அவர்களுக்குத் தனிச்சிறப்புடைய மேகத்தைப் பற்றி தெரியும். பகல் பொழுதில் நீர் மேகத்தின் மூலம் வழிநடத்திச் சென்றதையும், இரவில் அம்மேகம் நெருப்பாகி ஜனங்களுக்கு வெளிச்சம் தந்ததையும் அவர்கள் அறிவார்கள். 15 எனவே இப்போது நீர் இந்த ஜனங்களை அழிக்கக்கூடாது. நீர் இவர்களை அழித்தால், உமது வல்லமையைப்பற்றி அறிந்த அனைத்து ஜனங்களும், 16 ‘கர்த்தர் தான் வாக்களித்தபடி தன் ஜனங்களுக்கு நாட்டை அளிக்க முடியவில்லை. எனவே, அவர் அவர்களை பாலைவனத்தில் கொன்றுவிட்டார் என்று பேசுவார்கள்’

17 “இப்போதும், ஆண்டவரே, உமது பலத்தைக் காட்டும்! உம்மைப்பற்றி நீரே சொல்லியிருக்கிறபடி செய்யும்! 18 ‘நீர் கர்த்தர் கோபப்படுகிறதற்கு தாமதம் பண்ணுகிறார். கர்த்தர் பேரன்பு கொண்டவர். சட்டங்களை மீறி குற்றம் செய்கின்றவர்களை கர்த்தர் மன்னிப்பார். ஆனால் அக்கிரமக்காரர்களையும், அவர்கள் பிள்ளைகளையும், பேரப்பிள்ளைகளையும், அவர்களின் பிள்ளைகளையும் தண்டிப்பார்’ என்று உம்மைப்பற்றி சொல்லியிருக்கிறபடியால், 19 இப்போது உமது பேரன்பை இந்த ஜனங்களிடம் காண்பித்து, இவர்களின் பாவத்தை மன்னித்தருளும், எகிப்தை விட்டுப் புறப்பட்ட நாள்முதல் நீர் மன்னித்து வருவது போலவே, இப்போதும் மன்னித்துவிடும்” என்றான்.

20 இதற்கு கர்த்தர், “ஆம்! நீ கேட்டுக்கொண்டபடியே இந்த ஜனங்களை மன்னித்துவிடுகிறேன். 21 ஆனால் உனக்கு ஒரு உண்மையைக் கூறுகிறேன். நான் இந்த பூமியில் இருப்பது எவ்வளவு உண்மையோ, அதுபோலவே எனது மகிமையும் பூமியில் நிறைந்திருக்கும் என்பதும் உண்மையாகும். 22 எகிப்திலிருந்து என்னால் அழைத்து வரப்பட்டவர்கள் எவரும் கானான் நாட்டைக் காணமாட்டார்கள். நான் எகிப்தில் செய்த அற்புதங்களையும் நான் பாலைவனத்தில் செய்த பெருஞ்செயல்களையும், அவர்கள் கண்டிருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. என்னைப் பத்துமுறை சோதித்திருக்கிறார்கள். 23 நான் அவர்களின் முற்பிதாக்களிடம் அவர்களுக்கு ஒரு நாட்டைத் தருவதாக வாக்களித்தேன். ஆனால் எனக்கு எதிராக உள்ள எவரும் அந்த நாட்டிற்குள் நுழைய முடியாது. 24 ஆனால் எனது ஊழியனான காலேப் வேறுபட்டவன். என்னை அவன் முழுமையாகப் பின்பற்றினான். எனவே அவனை ஏற்கெனவே அவன் பார்வையிட்ட நாட்டிற்குள் அழைத்துச் செல்வேன். அவனது ஜனங்கள் அந்நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். 25 அமலேக்கியரும், கானானியரும் இந்தப் பள்ளத்தாக்கில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாளை இந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு செங்கடலுக்குச் செல்லும் சாலையின் மேலுள்ள பாலைவனத்துக்குச் செல்லுங்கள்” என்றார்.

கர்த்தர் ஜனங்களைத் தண்டித்தல்

26 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 27 “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்தத் தீய ஜனங்கள் எனக்கு எதிராக முறையிடுவார்கள்? நான் இவர்களின் முறையீடுகளையும், புலம்பல்களையும் பலமுறை கேட்டிருக்கிறேன். 28 நீங்கள் முறையிட்டபடியே கர்த்தர் நிச்சயம் உங்களுக்குச் செய்வார் என்று அவர்களிடம் சொல். இதுதான் உங்களுக்கு நடை பெறப்போகிறது: 29 நீங்கள் பாலைவனத்தில் மரித்துப்போவீர்கள். இருபதும் அதற்கு மேலும் வயதுள்ள, எண்ணி கணக்கிடப்பட்ட ஜனங்கள் மரிப்பார்கள். கர்த்தராகிய எனக்கு எதிராக முறையிட்டீர்கள். 30 எனவே, நான் வாக்களித்திருந்த நாட்டிற்குள் எப்புன்னேயின் மகனான காலேபும், நூனின் மகனான யோசுவாவும் தவிர வேறு எவரும் நுழைய முடியாது. 31 அந்நாட்டிலுள்ள உங்களது பகைவர்கள், உங்கள் பிள்ளைகளை அபகரித்துக்கொள்வார்கள் என்று அஞ்சி முறையிட்டீர்கள். ஆனால், நான் உங்களுக்குக் கூறுகிறேன், அந்தப் பிள்ளைகள் அந்நாட்டிற்குள் செல்வார்கள். நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிப்பார்கள். 32 உங்களைப் பொறுத்தவரையில், நீங்கள் இந்தப் பாலைவனத்திலேயே மரித்துப் போவீர்கள்.

33 “உங்கள் பிள்ளைகள் இந்தப் பாலைவனத்தில் மேய்ப்பர்களாக 40 ஆண்டுகள் அலைந்து திரிவார்கள், நீங்கள் எனக்கு உண்மையுள்ளவர்களாக இல்லாததால், அவர்கள் துன்பப்படுவார்கள். நீங்கள் அனைவரும் இப்பாலைவனத்தில் மரித்து விழும்வரை அவர்கள் துன்பப்படுவார்கள். 34 40 ஆண்டுகள் உங்கள் பாவங்களுக்காக நீங்கள் துன்பப்படுவீர்கள். (நீங்கள் கானான் நாட்டைச் சுற்றி பார்த்தது 40 நாட்கள். ஒரு நாளுக்கு ஒரு ஆண்டு வீதம் 40 ஆண்டுகள்.) உங்களுக்கு எதிராக என்னை நிறுத்தி வைப்பது எவ்வளவு பயங்கரமானது என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

35 “நானே கர்த்தர். நான் சொல்லியிருக்கிறேன், தீய ஜனங்கள் அனைவருக்கும் நான் சொன்னபடியே செய்வேன் என்று உறுதியாய்க் கூறுகிறேன். இந்த ஜனங்கள் அனைவரும் எனக்கு எதிராக ஒன்று சேர்ந்தார்கள். எனவே அனைவரும் இப்பாலைவனத்திலேயே மரித்துப்போவார்கள்” என்றார்.

36 புதிய நாட்டைப் பார்வையிட்டு வருமாறு மோசே அனுப்பி வைத்தவர்களில் சிலர் இஸ்ரவேல் ஜனங்களிடம் வதந்தியைப் பரப்பினார்கள். அந்நாட்டிற்குள் நுழைகிற அளவிற்குத் தமக்குப் பலமில்லை என்றனர். 37 இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் அவநம்பிக்கையைப் பரப்பியதற்கு இவர்களே பொறுப்பாகும். எனவே கர்த்தர் அந்த ஜனங்களை கொல்லும்படி நோயைக் கொண்டு வந்தார். 38 ஆனால் நூனின் மகனான யோசுவாவும், எப்புன்னேயின் மகனான காலேபும் கானான் நாட்டை பார்வையிட்டவர்களில் இந்த இருவரையும் கர்த்தர் காப்பாற்றினார். மற்றவர்களைச் சாகடித்த அந்நோய் இவர்களுக்கு வரவில்லை.

கானான் நாட்டிற்குள் ஜனங்கள் நுழைய முயலுதல்

39 இஸ்ரவேல் ஜனங்களிடம் மோசே இவை அனைத்தையும் சொன்னான். அவர்கள் மிகவும் துக்கப்பட்டு மனங்கசந்து அழுதனர். 40 மறுநாள் அதிகாலையில் அவர்கள் உயரமான மலைநாட்டிற்குள் பிரவேசிக்கப் புறப்பட்டனர். அவர்கள்: “நாங்கள் பாவம் செய்துவிட்டோம். நாங்கள் கர்த்தரை நம்பாமல் போனதற்காக வருத்தப்படுகிறோம். கர்த்தர் வாக்களித்த நாட்டிற்குள் நாங்கள் போவோம்” என்றனர்.

41 ஆனால் மோசே, “கர்த்தரின் கட்டளைக்கு ஏன் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள். நீங்கள் வெற்றியடையப் போவதில்லை. 42 அந்த நாட்டிற்குள் போகாதீர்கள். கர்த்தர் இப்போது உங்களோடு இல்லை. எனவே, உங்கள் பகைவர்கள் உங்களை எளிதில் வென்றுவிடுவார்கள். 43 அமலேக்கியரும், கானானியரும் உங்களுக்கு முன்னே அங்கே இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சண்டையிடுவார்கள். நீங்கள் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டீர்கள். எனவே நீங்கள் அவர்களோடு சண்டையிடும்போது கர்த்தர் உங்களோடு இருக்கமாட்டார். எனவே நீங்கள் அனைவரும் போரில் கொல்லப்படுவீர்கள்” என்றான்.

44 ஆனால் மோசேயின் வார்த்தைகளை ஜனங்கள் நம்பவில்லை. அவர்கள் மலை நாட்டை நோக்கிச் சென்றனர். ஆனால் மோசேயும், கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியும் அவர்களோடு போகவில்லை. 45 மலைநாட்டில் வாழ்ந்த அமலேக்கியரும், கானானியரும் கீழே இறங்கி வந்து அவர்களைத் தாக்கி, அவர்களை எளிதில் தோற்கடித்தனர். அவர்களை ஓர்மா வரை துரத்தி அடித்தனர்.

பலிகளைப் பற்றிய விதிகள்

15 கர்த்தர் மோசேயிடம், “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி இதனைக் கூறு. உங்கள் வீடாக இருக்கும்படி நான் உங்களுக்கு ஒரு நாட்டைக் கொடுக்கிறேன். நீங்கள் அதனுள்ளே நுழைந்ததும், நீங்கள் கர்த்தருக்குச் சில சிறப்புக்குரிய தகன பலிகளைச் செலுத்த வேண்டும். அவற்றின் வாசனை கர்த்தருக்கு விருப்பமானது. நீங்கள் உங்கள் மாடுகளையும், ஆடுகளையும், வெள்ளாடுகளையும் தகனபலிக்குப் பயன்படுத்தலாம். அவற்றை சிறப்பு காணிக்கைகள், உற்சாக பலிகள், சமாதானப் பலிகள் அல்லது சிறப்புப் பண்டிகைப் பலிகள், ஆகியவற்றுக்காகவும் பயன்படுத்த வேண்டும்.

“ஒருவன் கர்த்தருக்கு காணிக்கையைக் கொண்டு வரும்போது, அவன் தானியக் காணிக்கையையும் கொண்டுவர வேண்டும். தானியக் காணிக்கை என்பது, ஒரு மரக்காலில் பத்தில் ஒரு பங்கு மெல்லிய மாவில் காற்படி எண்ணெய் பிசைந்து கொண்டு வரவேண்டும். ஒரு ஆட்டுக்குட்டியைத் தகனபலியாகக் கொண்டுவரும் ஒவ்வொரு முறையும், நீங்கள் காற்படி திராட்சை ரசத்தையும், பானங்களின் காணிக்கையாகப் படைக்கவேண்டும்.

“நீங்கள் ஒரு ஆட்டுக்கடாவைப் படைக்கும்போது, தானியக் காணிக்கையையும் சேர்த்து படைக்கவேண்டும். இந்தத் தானியக் காணிக்கை, ஒரு மரக்காலில் பத்தில் இரண்டு பங்கான, மெல்லிய மாவிலே ஒருபடியில் மூன்றில் ஒரு பங்கு, ஒலிவ எண்ணெயோடு பிசைந்து கொடுக்க வேண்டும். ஒரு படியில் மூன்றில் ஒரு பங்கு திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானது.

“ஓர் இளங்காளையைத் தகனபலியாகவோ, சிறப்பான பொருத்தனைப் பலியாகவோ, சமாதான பலியாகவோ, கொடுக்கலாம். அப்போது, அதனோடு தானியக் காணிக்கையையும், ஒரு காளையையும் படைக்கவேண்டும். அதாவது, ஒரு மரக்காலில் பத்தில் மூன்று பங்கான மெல்லிய மாவுடன், அரைப்படி ஒலிவ எண்ணெயைப் பிசைந்து கொடுக்க வேண்டும். 10 அதோடு பானங்களின் காணிக்கையாக அரைப்படி திராட்சைரசத்தையும் கொடுக்கவேண்டும். இதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமாக இருக்கும். 11 நீங்கள் கர்த்தருக்கு தகனபலியாக கொடுக்கப் போகும் பலி, காளை அல்லது ஆட்டுக்கடா அல்லது செம்மறி ஆட்டுக் குட்டி அல்லது வெள்ளாட்டுக் குட்டியை இம்முறையில்தான் அளிக்கவேண்டும். 12 நீங்கள் படைக்கும் ஒவ்வொரு மிருகத்திற்கும் இவ்வாறுதான் செய்யவேண்டும்.

13 “இவ்வாறே ஒவ்வொரு இஸ்ரவேலனும் கர்த்தருக்குப் பிரியமான முறையில் தகன பலியைச் செலுத்த வேண்டும். 14 உங்களிடையே பிறநாட்டு ஜனங்களும் வாழ்வார்கள். அவர்களும் தகனபலி கொடுத்து கர்த்தரை வழிபட விரும்பினால் இந்த முறையில்தான் செலுத்தவேண்டும். 15 இதே விதிகள்தான் உங்களுக்கும், உங்களோடு வாழும் பிற நாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியதாக விளங்கும். கர்த்தருக்கு முன்பு, நீங்களும், உங்களோடு வாழும் மற்றவர்களும், சமமாகக் கருதப்படுவார்கள். 16 எனவே, நீங்கள் இந்த விதிகளையும், சட்டங்களையும் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பதுதான் இதற்குப் பொருள். அந்தச் சட்டங்களும், விதிகளும் இஸ்ரவேல் ஜனங்களாகிய உங்களுக்கும், உங்களோடு வாழும் மற்ற ஜனங்களுக்கும் பொருந்தும்” என்றார்.

17 கர்த்தர் மேலும் மோசேயிடம், 18 “இவற்றை இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. நான் உங்களை வேறு நாட்டிற்கு அழைத்துச் செல்வேன். 19 அங்கு நீங்கள் விளைந்த உணவை உண்பதற்கு முன்னால், அதில் ஒரு பங்கை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும். 20 நீங்கள் தானியத்தைச் சேகரித்து, மாவாக அரைக்கவேண்டும். அது அப்பம் செய்வதற்கு ஏற்றதாக இருக்கவேண்டும். முதலில் செய்யப்படும் அப்பத்தை, கர்த்தருக்கு காணிக்கையாகக் கொடுக்கவேண்டும். போரடிக்கிற களத்தில் தானியத்தைக் காணிக்கையாகக் கொடுப்பது போன்று இது இருக்கும். 21 இவ்விதிமுறை எக்காலத்திற்கும் தொடர்ந்திருக்கும். நீங்கள் பிசைந்த மாவின் முதற்பகுதியை, கர்த்தருக்கு அன்பளிப்பாகக் கொடுக்க வேண்டும்.

22 “இந்தக் கட்டளையை மறதியினால் தவறி நீங்கள் அநுசரியாமற்போனால், நீங்கள் அதற்காக என்ன செய்யவேண்டும்? 23 இந்தக் கட்டளைகளை கர்த்தர் உங்களுக்கு மோசே மூலமாகக் கொடுத்தார். உங்களுக்கு கொடுத்த அந்நாளிலேயே இக்கட்டளைகள் செயல்படத் துவங்கியது. அந்நாள் முதல் எல்லாக் காலத்திற்கும் இக்கட்டளைகள் உங்களுக்குத் தொடர்ந்து வரும். 24 எனவே, இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும் திட்டமிடாமல் இந்தக் கட்டளைகளை காக்கத் தவறினால் அதற்கு என்ன செய்வீர்கள்? இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் இந்தத் தவறைச் செய்தால், அவர்கள் அனைவரும் சேர்ந்து, ஓர் இளங்காளையைப் பலி கொடுக்க வேண்டும். அதன் மணம் கர்த்தருக்கு மிகவும் விருப்பமானதாகும். அதோடு தானியக் காணிக்கையையும், பானங்களின் காணிக்கையையும் ஒரு காளையோடு காணிக்கையாக கொடுக்கவேண்டும். பாவநிவாரண பலியாக ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் பலி கொடுக்கவேண்டும்.

25 “ஜனங்களைத் சுத்தப்படுத்த ஆசாரியன் அனைத்து சடங்குகளையும் செய்ய வேண்டும். அவன் இவற்றை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்காகவும் செய்யவேண்டும். தாங்கள் பாவிகள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், எப்போது அவர்களுக்கு அது தெரிய வருகிறதோ, அப்போதே அவர்கள் கர்த்தருக்கு அன்பளிப்புச் செலுத்த வேண்டும். அவர்கள் தகனபலியையும் பாவ நிவாரண பலியையும் கொடுக்க வேண்டும். அதனால் அவர்கள் பாவங்கள் மன்னிக்கப்படும். 26 இஸ்ரவேலின் அனைத்து ஜனங்களும், அவர்களோடு வாழும் மற்ற ஜனங்களும் மன்னிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நாம் தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாதிருந்தால் அவர்களும் மன்னிக்கப்படுவார்கள்.

27 “ஒரே ஒரு மனிதன் மட்டும் தவறிப் பாவம் செய்தால் அவன் ஓராண்டு வயதுள்ள பெண் வெள்ளாட்டைக் கொண்டு வர வேண்டும். அது பாவப்பரிகார பலியாகும். 28 அவனைத் சுத்தப்படுத்துவதற்குரிய நியமனத்தை ஆசாரியன் நிறைவேற்றவேண்டும். அந்த மனிதன் கர்த்தர் முன்னால் தவறி குற்றம் செய்து பாவியானால் ஆசாரியன் அவனுக்கு நிவாரணம் செய்தபின் அவன் சுத்தமாக்கி மன்னிக்கப்படுகிறான். 29 குற்றம் செய்து பாவியாகிற எவனுக்கும் இந்தச் சட்டம் உரியதாகும். இச்சட்டங்கள் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், அவர்களிடையே வாழும் அயல் நாட்டுக்காரர்களுக்கும் உரியதாகும்.

30 “ஆனால் ஒருவன் அறிந்தே பாவம் செய்துகொண்டேயிருக்கிறவனாயிருந்தால் அவன் கர்த்தருக்கு எதிராகிறான். அவன் தம் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படவேண்டும். இந்தச் சட்டம் இஸ்ரவேல் குடும்பத்தில் பிறந்த ஜனங்களுக்கும், உங்களோடு வாழும் பிறநாட்டு ஜனங்களுக்கும் உரியதாகும். 31 கர்த்தரின் வார்த்தைகள் முக்கியமானவை என்று அந்த மனிதன் நினைக்கவில்லை. அவன் கர்த்தரின் கட்டளையை உடைத்துவிட்டான். அப்படிப்பட்டவன் உங்கள் குழுவிலிருந்து நிச்சயம் விலக்கப்பட வேண்டும். அவன் குற்றவாளியாகித் தண்டிக்கப்படுவான்!” என்றார்.

ஓய்வு நாளில் ஒருவன் வேலை செய்தால்

32 இந்த நேரத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் பாலைவனத்திலேயே இருந்தனர். ஒருவன் ஓய்வு நாள் ஒன்றில் எரிப்பதற்கான விறகுகளைக் கண்டு அவற்றைச் சேகரித்தான். சிலர் இதனைப் பார்த்தனர். 33 அவன் விறகைச் சேகரித்துக்கொண்டு வரும்போது, அவர்கள் அவனை மோசேயிடமும், ஆரோனிடமும் அழைத்து வந்தனர். மற்றவர்களும் அவர்களோடு சேர்ந்து வந்தனர். 34 அவனுக்கு என்ன தண்டனை கொடுப்பது என்பது தெரியாததால் அவனை காவலுக்குள் வைத்திருந்தனர்.

35 பிறகு மோசேயிடம் கர்த்தர், “இவன் சாகவேண்டும். முகாமிற்கு வெளியே அவனைக் கொண்டு போய் அனைவரும் அவன் மேல் கல்லெறியுங்கள்” என்றார். 36 எனவே, ஜனங்கள் அவனை முகாமிற்கு வெளியே கொண்டு போய் கல்லால் எறிந்தனர். அவர்கள் இதனை மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டபடியே செய்தனர்.

ஜனங்கள் விதிகளை நினைவுப்படுத்திக்கொள்ள தேவன் உதவுதல்

37 கர்த்தர் மோசேயிடம், 38 “இஸ்ரவேல் ஜனங்களிடம் பேசி கீழ்க்கண்டவற்றை அவர்களிடம் கூறு. எனது கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ள நான் உங்களுக்கு உதவுவேன். பல துண்டு நூல் கயிறுகளைச் சேர்த்து, உங்கள் ஆடைகளின் மூலையில் தொங்கல்களைக் கட்டிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு தொங்கலிலும் நீல நிற நூலைக் கட்டிக்கொள்ளுங்கள். இதனை இப்போதும் எக்காலத்திற்கும் அணிந்துகொள்ள வேண்டும். 39 நீங்கள் இம்முடிச்சுகளைப் பார்க்கும்போதெல்லாம் கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நினைவுப்படுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படிவீர்கள். இதனால் மறதி காரணமாக பாவம் செய்யாமல் இருப்பீர்கள். உங்கள் உடம்பும், கண்களும் விரும்புகிற காரியங்களை செய்யமாட்டீர்கள். 40 எனது அனைத்து கட்டளைகளுக்கும் நீங்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அப்போது நீங்கள் உங்கள் தேவனுக்கென்று பரிசுத்தமாக இருப்பீர்கள். 41 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். நானே உங்களை எகிப்திலிருந்து மீட்டு வந்தேன். நான் உங்கள் தேவனாயிருக்க இவற்றைச் செய்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்” என்று கூறினார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center