Beginning
இறைச்சி உண்பது பற்றிய விதிகள்
11 கர்த்தர் மோசேயிடமும், ஆரோனிடமும், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீங்கள் கூற வேண்டியதாவது: நீங்கள் உண்ணத்தக்க மிருகங்கள் பின்வருவனவாகும், 3 இரண்டாகப் பிளந்த குளம்புடைய மற்றும் அசைபோடும் மிருகங்களின் இறைச்சியை உண்ணலாம்.
4-6 “சில மிருகங்கள் அசைபோடும். ஆனால் அவற்றுக்குப் பிளந்த குளம்புகள்Ԕஇருக்காது. அவற்றை நீங்கள் உண்ணக் கூடாது. ஒட்டகம், குழிமுயல், முயல் ஆகிய மிருகங்கள் அவ்வகையைச் சார்ந்தவை. அவை தீட்டு உள்ளவை. 7 இன்னும் சில மிருகங்களுக்குக் குளம்புகள் விரிந்திருக்கும். ஆனால் அசை போடாது. அவற்றையும் நீங்கள் உண்ணக் கூடாது. பன்றிகள் இத்தகையவை. எனவே இவை தீட்டுள்ளவை. 8 அவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள்! அவற்றின் பிணத்தையும் தொடாதீர்கள்! அவை உங்களுக்குத் தீட்டுள்ளவை!
கடல் உணவைப்பற்றிய விதிகள்
9 “சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ வாழ்ந்து அவற்றுக்குச் செதில்களும், சிறகுகளும் இருந்தால் அவற்றை நீங்கள் உண்ணலாம். 10-11 ஆனால் சில மிருகங்கள் கடல் தண்ணீரிலோ, ஆற்று தண்ணீரிலோ, வாழ்ந்தும் அவற்றுக்குச் செதில்களும் சிறகுகளும் இல்லாவிட்டால் அவற்றை உண்ணக் கூடாது. கர்த்தர் இத்தகைய மிருகங்கள் உண்பதற்குத் தகுந்தவையல்ல என்கிறார். இவற்றின் இறைச்சியை உண்ணாதீர்கள். இவற்றின் பிணத்தைத் தொடவும் கூடாது. 12 எனவே தண்ணீரில் வாழ்ந்தும் செதில்களும், சிறகுகளும் இல்லாத மிருகங்களை தேவன் சொன்னபடி உண்ணத் தகாதவை என்று கருதுங்கள்.
உண்ணத் தகாத பறவைகள்
13 “தேவன் உண்ணத்தகாத மிருகங்களைப்பற்றி சொன்னது போலவே உண்ணத்தகாத பறவைகளைப்பற்றியும் கூறியிருக்கிறார். அதாவது கழுகு, கருடன், கடலுராஞ்சி, 14 பருந்து, வல்லூறு வகைகள், 15 காக வகைகள், 16 நெருப்புக் கோழி, கூகை, செம்புகம், டேகை, 17 ஆந்தைகள், நீர்க்காகம், கோட்டான், 18 நாரை, கூழக்கடா, குருகு, 19 கொக்கு, ராஜாளி வகைகள், புழுக்கொத்தி, வௌவால் ஆகியவற்றை நீங்கள் உண்ணக் கூடாது.
உண்ணத்தக்க பூச்சிகள் பற்றிய விதிகள்
20 “சிறகும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை உண்ணக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டிருக்கிறார். 21 ஆனால் நீங்கள் தரையிலே தாவுவதற்கேற்ற வகையில் கால்களுக்கு மேல் தொடைகளைக் கொண்டவற்றை உண்ணலாம். 22 வெட்டுக்கிளி வகைகளையும், சோலையாம் என்னும் கிளி வகைகளையும் அர்கொல், ஆகாபு என்னும் கிளி வகைகளையும் நீங்கள் உண்ணலாம்.
23 “ஆனால் சிறகுகளும் கால்களும் கொண்டு ஊர்ந்து செல்லும் பூச்சிகளை, கர்த்தர் உண்ணக் கூடாது என்றார். 24 அப்பூச்சிகள் உங்களைத் தீட்டுக்குள்ளாக்கும். எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டாலும் மாலைவரை தீட்டுள்ளவர்களாவர். 25 எவராவது இத்தகையவற்றின் பிணத்தைத் தொட்டு எடுத்தால் அவர்கள் தங்கள் ஆடைகளை துவைக்க வேண்டும். அவர்கள் மாலைவரை தீட்டாக இருப்பார்கள்.
மிருகங்களைப்பற்றி மேலும் சில விதிகள்
26-27 “சில மிருகங்களுக்குப் பிளந்த குளம்புகள் இருக்கும். ஆனால் அவை சரியாக இரண்டாக பிளந்திருக்காது. சில மிருகங்கள் அசைபோடாது. சில மிருகங்கள் குளம்புகளால் நடக்காமல் உள்ளங்கால்களால் நடக்கும். இவை அனைத்தும் தீட்டுள்ளவை. அவற்றைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள். 28 எவராவது இவற்றின் சடலத்தை எடுத்தால் அவர்கள் தம் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவர்களும் மாலைவரை தீட்டு உள்ளவர்களாக இருப்பார்கள். அம்மிருகங்கள் உங்களுக்கு தீட்டானவை.
ஊர்ந்து செல்லும் பிராணிகள் பற்றிய விதிகள்
29 “பெருச்சாளி, எலி, பெரிய பல்லி வகைகள், 30 உடும்பு, அழுங்கு, ஓணான், பல்லி, பச்சோந்தி 31 ஆகிய ஊர்ந்து செல்லும் பிராணிகள் அனைத்தும் உங்களுக்குத் தீட்டானவை. இவற்றின் செத்த உடலைத் தொடுகிற எவரும் மாலைவரை தீட்டுள்ளவர்களாக இருப்பார்கள்.
தீட்டான மிருகங்களைப்பற்றிய விதிகள்
32 “மேற்சொன்ன தீட்டான மிருகங்கள் செத்து எதன் மேலாவது விழுந்தாலும் அது தீட்டாகும். அவை மரப்பொருள், ஆடை, தோல், துக்க நேரத்திற்குரிய ஆடை, வேலைக்குரிய கருவி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். எதுவானாலும் உடனடியாக அதை தண்ணீரால் கழுவ வேண்டும். அது மாலைவரை தீட்டாக இருக்கும். அதன் பிறகே அவை தீட்டு கழிந்து சுத்தமாகும். 33 அவற்றில் ஒன்று மண்பாத்திரத்தில் விழுந்தால், பாத்திரமும் அதில் உள்ள பொருளும் தீட்டாகிவிடும். எனவே அதனை உடைத்துப் போட வேண்டும். 34 தீட்டான மண்பாத்திரத்தில் இருந்து தண்ணீர் விழுந்து உணவுப் பொருட்கள் மேல் படுமேயானால், அவ்வுணவும் தீட்டாகிவிடும். 35 மரித்து தீட்டாகிப் போன மிருகத்தின் உடலானது எதன் மேலாவது விழுமானால், அதுவும் தீட்டாகிப்போகும். அது களிமண்ணாலான அடுப்பாகவோ, அல்லது மண் தொட்டியாகவோ இருக்கலாம், அவற்றை உடைத்துப் போட வேண்டும். அவை உங்களுக்குத் தீட்டாய் இருக்கட்டும்.
36 “நீரூற்றும், தண்ணீருள்ள கிணறும் சுத்தமாக இருக்கும். ஆனால் எவராவது தீட்டான மிருகத்தின் செத்த உடலைத் தொட்டால் அவர்களும் தீட்டாகிவிடுவார்கள். 37 தீட்டான மிருகங்களின் செத்த உடலானது விதைகளின் மேல் விழுந்தால் அவை தீட்டாகாது. 38 ஆனால் தீட்டான மிருகங்களின் செத்த உடலின் பாகங்கள் தண்ணீர் பட்ட விதையின்மேல் பட்டால் அது உங்களுக்குத் தீட்டாயிருக்கும்.
39 “உங்களது உணவுக்கான ஒரு மிருகம் செத்தால், அதன் உடலைத் தொடுகிறவன் மாலைவரை தீட்டாக இருப்பான். 40 அதன் இறைச்சியைத் தின்றவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான். அம்மிருகங்களின் செத்த உடலைத் தூக்குகிறவன் தன் ஆடைகளைத் துவைக்க வேண்டும். இவனும் மாலைவரை தீட்டுள்ளவனாக இருப்பான்.
41 “தரையில் ஊர்ந்து செல்லுகிற மிருகங்களை கர்த்தர் உண்ணத்தகாதவை என்று கூறியுள்ளார். நீங்கள் அவற்றை உண்ணக் கூடாது. 42 தரையில் ஊர்ந்து செல்லும் சகல மிருகங்களிலும் வயிற்றினால் நகர்ந்து செல்லுகின்றவற்றையும் நாலு கால்களால் நடமாடுகின்றவற்றையும் பற்பல கால்கள் உள்ளவற்றையும் உண்ண வேண்டாம். அவை தீட்டுள்ளவை. 43 அவை உங்களைத் தீட்டுப் பண்ணாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 44 ஏனென்றால் நான் தேவனாகிய கர்த்தர். நான் பரிசுத்தமானவர் நீங்களும் உங்களைப் பரிசுத்தமானவர்களாக வைத்துக்கொள்ளுங்கள். ஊர்வனவற்றால் உங்களைத் தீட்டாக்கிக்கொள்ளாதீர்கள். 45 நான் உங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்தேன். நான் இதைச் செய்ததால் நீங்கள் சிறப்பான ஜனங்களாக விளங்குகிறீர்கள். உங்களது தேவனாகிய நான் பரிசுத்தமானவராக இருக்கிறேன். நீங்களும் பரிசுத்தமுள்ளவர்களாக இருங்கள்” என்றார்.
46 இவை அனைத்தும் மிருகம், பறவை, ஊர்வன பற்றிய விதிகள் ஆகும். இவை அனைத்தும் கடலிலும், தரையிலும் உள்ள மிருகங்களைப்பற்றியவை. 47 இதன் மூலம் ஜனங்கள் தீட்டுள்ள மிருகங்களுக்கும் தீட்டில்லாத மிருகங்களுக்கும் உள்ள வேறு பாட்டைக் கண்டுகொள்ளலாம். அதோடு உண்ணத் தக்க மிருகம் எது, உண்ணத்தகாத மிருகம் எது என்றும் அறிந்துகொள்ளலாம்.
புதிய தாய்மார்களுக்கு விதிகள்
12 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் நீ கூற வேண்டியதாவது: ஒரு பெண், ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றிருந்தால், அவள் ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவளாக இருப்பாள். இது மாதவிலக்காக இருக்கும் நாட்களைப் போல் இருக்கும். 3 எட்டாவது நாள் அந்த குழந்தை விருத்தசேதனம் பண்ணப்பட வேண்டும். 4 பிறகு அவள் முப்பத்துமூன்று நாட்கள் இரத்த சுத்திகரிப்பு நிலையில் இருக்க வேண்டும். அந்நாட்களில் அவள் பரிசுத்தமான எந்தப் பொருட்களையும் தொடவோ, பரிசுத்தமான எந்த இடத்திற்குள்ளும் நுழையவோ கூடாது. 5 அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் இரு வாரங்களுக்குத் தீட்டாக இருப்பாள். அந்நாட்கள் அவளுக்கு மாத விலக்கான நாட்களைப் போன்றே கருதப்படும். இரத்த சுத்திகரிப்புக்கு அவளுக்கு அறுபத்தாறு நாட்கள் தேவைப்படும்.
6 “ஒரு பெண், ஆண் அல்லது பெண் பிள்ளையைப் பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் முடிந்தபின் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சிறப்பான பலிகளைக் கொண்டு வர வேண்டும். அவள் ஆசாரியனிடம் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் பலிகளை வழங்க வேண்டும். அவள் ஓராண்டு நிறைந்த ஆட்டுக் குட்டியை தகன பலிக்காகவும், ஒரு புறாக்குஞ்சு அல்லது காட்டுப்புறாவைப் பாவப்பரிகார பலிக்காகவும் கொண்டு வர வேண்டும். 7-8 ஒரு பெண்ணுக்கு ஆட்டுக் குட்டியைக் கொடுக்க முடியாவிட்டால் அவள் இரண்டு புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக் குஞ்சுகளையாவது கொண்டு வரலாம். இவற்றில் ஒரு புறா தகன பலிக்காகவும் இன்னொரு புறா பாவப்பரிகார பலிக்காகவும் பயன்படும். ஆசாரியன் இவற்றை கர்த்தரின் சந்நிதானத்தில் பலியிட வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அவளுக்காக பாவ நிவாரணம் செய்ய வேண்டும். அவள் அப்படியே சுத்தமாவாள். இவையே ஆண் அல்லது பெண் குழந்தைப் பெற்ற ஒரு புதிய தாய்க்குரிய விதிகள் ஆகும்” என்று கூறினார்.
தோல் வியாதியைப்பற்றிய விதிகள்
13 கர்த்தர் மோசேயிடமும் ஆரோனிடமும், 2 “ஒரு மனிதனின் தோல்மீது வீக்கமோ அல்லது தடிப்போ, அல்லது வெள்ளைப் புள்ளியோ காணப்படலாம். அவை தொழுநோயின் அறிகுறியாய் இருந்தால் அவனை ஆசாரியனான ஆரோன் அல்லது அவனது மகன்கள் முன்னால் அழைத்துவர வேண்டும். 3 ஆசாரியன் அவனது தோலில் ஏற்பட்ட நோயைக் கவனித்துப் பார்க்கவேண்டும். நோயுள்ள இடத்தின் முடிகள் வெளுத்திருந்தாலும் நோயுள்ள இடம் மற்ற தோலைவிட பள்ளமாக இருந்தாலும் அந்நோய் தொழுநோயாக இருக்கும். எனவே ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
4 “சில நேரங்களில் நோயாளியின் உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஏற்படலாம். ஆனால் அவை தோலின் பரப்பைவிட ஆழமாக இல்லாமல் இருக்கலாம். அப்பகுதியிலுள்ள முடி வெள்ளை ஆகாமல் இருக்கலாம். அப்போது, ஆசாரியன் அந்நோயாளியைத் தனியாக ஏழு நாட்கள் ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். 5 ஏழாவது நாளில் ஆசாரியன் நோயாளியைக் கவனித்துப் பார்க்க வேண்டும். அப்போது புண் மாறியிருக்காவிட்டாலோ, தோலில் மேலும் பரவி இருக்காவிட்டாலோ மேலும் ஏழு நாட்களுக்கு அந்நோயாளியைத் தனியே வைத்திருக்க வேண்டும். 6 அந்த ஏழு நாட்களும் முடிந்த பிறகு ஆசாரியன் அந்த நோயாளியை மீண்டும் பார்க்கவேண்டும். அப்போது புண்கள் ஆறி இருந்தாலோ, மற்ற பகுதிகளில் பரவாமல் இருந்தாலோ ஆசாரியன் அவன் குணமாகிவிட்டதை அறிவிக்க வேண்டும். அந்தப் புண் வெறும் வடு மட்டுமே. அவன் தன் ஆடைகளைத் தோய்த்து மீண்டும் சுத்தமாக இருக்க வேண்டும்.
7 “நோயாளி தன்னை ஆசாரியனிடம் காட்டி சுத்தமுள்ளவனாகத் தீர்மானித்த பிறகும் ஒரு வேளை வெண்திட்டு உடலில் பரவலாம். அதையும் ஆசாரியனிடம் காட்ட வேண்டும். 8 அப்பொழுது வெண்திட்டு தோலிலே படர்ந்து வருகிறது என்று ஆசாரியன் கண்டால் அவனைத் தீட்டானவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய் ஆகும்.
9 “ஒருவனுக்குத் தொழுநோய் ஏற்பட்டால் அவனை ஆசாரியனிடம் கொண்டு வர வேண்டும். 10 ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். தோலிலே வெள்ளைத் தடிப்புகள் இருந்தாலும், முடி வெண்மையாகியிருந்தாலும், தோலானது கொப்புளங்களில் காய்ந்து இருந்தாலும் 11 அது நெடுநாளாகவே அவன் தோலில் உள்ள தொழுநோயாகவே கருதப்பட வேண்டும். ஆசாரியன் உடனே அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அந்நோயாளியை மற்றவர்களிடமிருந்து கொஞ்சக்காலம் தனியே பிரித்துவைக்க வேண்டிய தேவையில்லை. ஏனென்றால் அவன் ஏற்கெனவே தீட்டுள்ளவன்.
12 “சில வேளைகளில் தொழுநோயானது ஒருவனின் உடல் முழுவதும் பரவியிருக்கலாம். தலை முதல் கால்வரை அந்நோய் அவனை மூடி இருக்கலாம். ஆசாரியன் அவனை முழுமையாகச் சோதித்துப் பார்க்க வேண்டும். 13 அவனது உடல் முழுவதும் வெள்ளையாகியிருந்தால் அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். 14 எனினும் கொஞ்சம் புண்நிறைந்த தோல் இருந்தால் அவன் தீட்டுள்ளவனே. 15 ஆசாரியன் அதனைக் கண்டதும் அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும் புண்நிறைந்த தோல் தீட்டுள்ளது. அது தொழுநோய்.
16 “தோலின் நிறம் மாறி வெண்மையானால் பின் அவன் ஆசாரியனிடம் வரவேண்டும். 17 ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் வெண்மையாகியிருந்தால் அவனது நோய் குணமாகிவிட்டதென்று பொருள். எனவே, அவனைத் தீட்டு இல்லாதவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும்.
18 “ஒருவனுக்குத் தோலின் மேல் புண் ஏற்பட்டு அது குணமாகலாம். 19 அதே புண் பிற்பாடு வெள்ளைத் தடிப்பாகவோ அல்லது சிவந்த நிறத்தில் வெண் புள்ளிகளாகவோ மாறக்கூடும். அப்படி நேரும்போது அப்புண்ணை ஆசாரியனிடத்தில் காட்ட வேண்டும். 20 ஆசாரியன் அவற்றைச் சோதித்துப் பார்க்க வேண்டும். அப்புண்ணானது தோலின் பரப்பைவிட ஆழமாக இருந்தாலோ, அதிலுள்ள முடிகள் வெண்மையானாலோ அது தொழுநோய் என்றே கருதப்பட வேண்டும். உடனே அவனைத் தீட்டுள்ளவனாக அறிவிக்க வேண்டும். அது புண்ணில் ஏற்பட்ட தொழுநோயாகும். தொழுநோயானது அப்புண்ணின் உள்ளிருந்து உருவாகியுள்ளது. 21 சோதிப்பின்பொழுது தடிப்பின் மேற் பகுதியில் வெள்ளை முடி இல்லாதிருந்தாலும், தோலில் அவ்வளவு ஆழமற்றதாக ஆனால் வெளுத்து இருந்தாலும், ஆசாரியன் அவனை ஏழு நாட்கள் தனியே பிரித்து வைக்கவேண்டும். 22 பின்பு வெள்ளைத் தடிப்பு அதிக அளவில் தோலில் படர்ந்திருந்தால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான். 23 அந்த வெள்ளைப்படரானது அதிகப்படாமல் பழைய அளவில் நின்றிருக்குமானால் அதுவெறும் புண்ணின் தழும்புதான். எனவே அவனைச் சுத்தமுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்கவேண்டும்.
24-25 “ஒருவனது உடம்பின் மேல் நெருப்புப்பட்டு வெந்து அது ஆறிப்போன இடத்தில் தோலில் நிறம் இழந்தோ, அல்லது வெண்மையாகவோ இருக்கலாம். ஆசாரியன் அதனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். வெண்மையான தடிப்பு தோலுக்கு அடியில் ஆழமாக இருந்தாலும் தடிப்பின் மேல் உள்ள முடியின் பரப்பு வெளுத்திருந்தாலும், அதைத் தொழுநோயாகக் கருதலாம். தொழுநோய் வெந்த இடத்தில் வெளிப்பட்டு வளர்ந்து பெருகிவிட்டது. ஆகவே ஆசாரியன் அவனைத் தொழுநோயாளி என்று அறிவிக்கலாம். 26 ஆசாரியன் சோதித்துப் பார்க்கும்போது, படரிலே வெள்ளை முடி இல்லை என்றாலோ அல்லது படர் மற்றப் பகுதிகளைவிடக் குழியாமல் இருந்தால் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைத்திருக்க வேண்டும். 27 ஏழாம் நாளில் அவனை மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அது தோலில் அதிகமாகப் பரவியிருந்தால் ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்தான். 28 தோலில் படரானது பரவாமல் இருந்தாலோ அல்லது படர் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இல்லாமல் இருந்தாலோ அது வெந்ததால் உண்டான கொப்புளம் என்று எண்ண வேண்டும். அவனை ஆசாரியன் சுத்தமானவன் என்று அறிவிக்க வேண்டும்.
29 “ஒருவனுக்குத் தலையில் அல்லது தாடியில் எரிச்சல் உண்டாகலாம். 30 ஆசாரியன் அதனைச் சோதித்து பார்க்க வேண்டும். அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே உள்ள முடிகள் பொன்நிறமும், மிருதுவாயும் இருந்தால் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது சொறி தொழுநோய். 31 ஆசாரியன் இதனைப் பார்க்கும்போது அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமாய் இராமல் இருக்கலாம். அதிலே கறுமையான முடிகள் இல்லாமல் இருக்கலாம். அவ்வாறானால் அவனை ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்க வேண்டும். 32 ஏழாவது நாள் அப்புண்ணை ஆசாரியன் மீண்டும் சோதித்துப் பார்க்க வேண்டும். அந்த நோய் பரவாமல் இருந்தாலோ அல்லது பொன் நிறமாக முடி மாறாமல் இருந்தாலோ அல்லது நோயுள்ள இடம் மற்ற தோல் பகுதியை விடப் பள்ளம் இல்லாமல் இருந்தாலோ, 33 அவன் சொறியுள்ள இடம் தவிர மற்ற இடத்தை மழித்துக்கொள்ள வேண்டும். மேலும் அவனை ஏழு நாள் தனியே பிரித்து வைக்க வேண்டும். 34 ஏழாம் நாளில் ஆசாரியன் மீண்டும் சோதித்து பார்க்கும்போது சொறி பரவாமலும், அவ்விடம் மற்ற இடங்களைவிடப் பள்ளமில்லாமலும் இருந்தால் அவனை ஆசாரியன் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அவன் தன் ஆடைகளைத் துவைத்தபின் சுத்தமாய் இருப்பான். 35 ஆனால் அந்தச் சொறி அதற்குப்பிறகு பரவினால் 36 மீண்டும் ஆசாரியன் அவனைச் சோதிக்க வேண்டும். சொறி தோலில் பரவியிருந்தாலோ, முடியும் பொன் நிறமாகியிருந்தாலோ ஆசாரியன் மறுபடியும் சோதிக்க வேண்டியதில்லை. அவன் தீட்டுள்ளவனே. 37 அவன் சோதிக்கும்போது சொறி நீங்கியிருந்தால், கறுமையான முடிகள் முளைத்திருந்தால் சொறி குணமாயிற்று என்று பொருள். அவன் சுத்தமானவன். ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும்.
38 “யாராவது ஒருவனுக்கு உடல்மீது வெள்ளைப் புள்ளிகள் ஏற்பட்டால், 39 அதனை ஆசாரியன் சோதித்து பார்க்க வேண்டும். தோலில் மங்கின வெள்ளைப் புள்ளிகள் இருந்தால் அது அவ்வளவாகப் பாதிப்பற்ற வெள்ளைத் தேமல். அவனும் சுத்தமுள்ளவனே.
40 “ஒருவனுடைய தலைமுடி உதிரக்கூடும், அவன் சுத்தமானவனே. அது ஒரு வகை வழுக்கை ஆகும். 41 தலையைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்து முடி உதிரக்கூடும். அவனும் சுத்தமானவனே, அதுவும் இன்னொரு வகை வழுக்கை ஆகும். 42 ஆனால் வழுக்கையான இடத்தில் சிவப்பாகவோ அல்லது வெண்மையாகவோ தடிப்புகள் இருக்குமேயானால், அது தோல் வியாதி ஆகும். 43 ஆசாரியன் அதனைச் சோதிக்க வேண்டும். அவனது வழுக்கைத் தலையிலாவது அரை வழுக்கைத் தலையிலாவது மற்ற உறுப்புகளின் மேல் உண்டாகும் குஷ்டத்தைப்போல் சிவப்பு கலந்த வெண்மையான தடிப்பு இருந்தால் அவன் தொழுநோயாளி. 44 அவன் தீட்டுள்ளவன் என்று ஆசாரியன் அறிவிக்க வேண்டும். அவனது நோய் தலையில் உள்ளது.
45 “ஒருவனுக்கு தொழுநோய் இருந்தால் அவன், மற்றவர்களை எச்சரிக்க வேண்டும். அவன் ‘தீட்டு தீட்டு’ என்று கத்த வேண்டும். அவனது ஆடைகள் கிழிக்கப்பட்டிருக்க வேண்டும். அவன் தன் தலை முடியை நன்றாக வளர்க்க வேண்டும். அவன் தன் வாயை மூடி மறைத்துக்கொண்டிருக்க வேண்டும். 46 அந்நோய் அவனிடம் இருக்கும்வரை அவன் தீட்டுள்ளவனாகக் கருதப்படுகிறான். எனவே அவன் தனியே குடியிருக்க வேண்டும். அவன் வீடு கூடாரத்திற்கு அப்பால் இருக்க வேண்டும்.
47-48 “ஆட்டுமுடி அல்லது பஞ்சால் ஆன ஆடையில் நோய் இருக்கும். அந்த ஆடை நெய்யவோ பின்னவோபட்டிருக்கலாம். தோல் துண்டிலோ அல்லது தோலால் ஆன ஆடையிலோ நோய் இருக்கும். 49 அதில் பச்சை அல்லது சிவப்புப் புள்ளிகள் காணப்பட்டால் அதை ஆசாரியனுக்குக் காட்ட வேண்டும். 50 ஆசாரியன் அதைச் சோதித்துப் பார்த்துவிட்டு ஏழு நாட்கள் தனியே அடைத்து வைக்கவேண்டும். 51 ஏழாம் நாள் ஆசாரியன் அவனைச் சோதித்துப் பார்க்க வேண்டும். ஆடையிலாவது பாவிலாவது, தோல் துண்டிலாவது, தோலால் ஆன ஆடையிலாவது அது அதிகப்பட்டிருந்தால் அது அரிக்கிற தொழுநோய் என்று கருதலாம். அது தீட்டு உள்ளது. 52 அந்த நோய் இருக்கிற மயிராடை, நூலாடை, தோலாடை போன்றவற்றை ஆசாரியன் சுட்டெரிக்க வேண்டும். இது அரிக்கிற தொழுநோய். எனவே அதனை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
53 “ஆசாரியன் சோதிப்பின்போது அரிப்பானது மேலும் பரவவில்லை என்பது உறுதியானால், அந்த ஆடையையோ அல்லது தோலையோ துவைக்க வேண்டும். அது தோலா அல்லது துணியா அல்லது நெய்யப்பட்டதா அல்லது பின்னப்பட்டதா என்பதில் வித்தியாசமில்லை. 54 பிறகு தோல் ஆடையை அல்லது துணியைத் துவைக்கும்படி ஆசாரியன் ஜனங்களுக்கு ஆணையிட வேண்டும். பிறகு துணியை ஏழு நாட்களுக்குப் பிரித்துத் தனியே வைக்க வேண்டும். 55 அதற்குப் பின்பு அதை மீண்டும் சோதிக்க வேண்டும். அந்த அரிப்பானது நிறம் மாறாமல் இருந்தால் அது தீட்டு என எண்ண வேண்டும். அரிப்பு பரவாமல் போனாலும் கூட, அதை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும்.
56 “தோல் ஆடையை அல்லது துணியைப் பார்க்கும்போது அரிப்புப் பகுதி மங்கியிருந்தால், அரித்த பகுதியை மட்டும் தோலாடையில் இருந்தும் அல்லது துணியில் இருந்தும் நெய்யப்பட்ட துணியா அல்லது பின்னப்பட்ட துணியா என்று பாராமல் ஆசாரியன் தனியே வெட்டி எடுக்க வேண்டும். 57 அரிப்பானது மீண்டும் துணியிலோ அல்லது தோல் ஆடையிலோ வரக் கூடும். அப்போது அத்துணியை அல்லது தோலை நெருப்பில் சுட்டெரிக்க வேண்டும். 58 கழுவிய பிறகு அந்நோய் அதைவிட்டு போய்விட்டதென்றால், மீண்டும் கழுவப்பட வேண்டும். அப்போதுதான் அது சுத்தமாகும்” என்றார்.
59 இவையே, தோலாடை அல்லது நூலாடை, பின்னப்பட்டது அல்லது நெய்யப்பட்ட ஆடைகளின் மேல் தோன்றும் தொழுநோய் பற்றிய விதிகள் ஆகும் என்று கூறினார்.
2008 by World Bible Translation Center