Beginning
22 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 2 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர். 3 உங்களது சந்ததியார் எவரும் அப்பொருட்களைத் தொட்டால் அவர்கள் தீட்டுள்ளவர்களாகிறார்கள். அவர்கள் என்னிடமிருந்து விலக்கி வைக்கப்பட வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் அப்பொருட்களை எனக்குக் கொடுத்தனர். நானே கர்த்தர்.
4 “ஆரோனின் சந்ததிகளில் எவருக்காவது தொழுநோய் இருந்தால் அல்லது உடற்கழிவுகள் இருந்தால் அவனது தீட்டு நீங்கும்வரை பரிசுத்த உணவை உண்ணக்கூடாது. இது, தீட்டுள்ள ஆசாரியர்கள் அனைவருக்கும் உரிய விதியாகும். ஒரு ஆசாரியன் பிணத்தைத் தொடுவதன் மூலமோ, தன் விந்துக்கழிவின் மூலமோ தீட்டு அடையலாம். 5 தீட்டுள்ள எந்த ஊர்கின்ற மிருகங்களை அவன் தொட்டாலும் தீட்டு அடையலாம். தீட்டுள்ள மனிதனைத் தொட்டாலும் ஆசாரியன் தீட்டு அடையலாம். எது அவனைத் தீட்டுப்படுத்தியது என்பது ஒரு பொருட்டல்ல. 6 ஒருவன் மேற்கூறியவற்றுள் ஏதாவது ஒன்றினைத் தொட்டால் அதன் மூலம் அவன் மாலைவரை தீட்டுள்ளவனாக இருக்கிறான். அவன் பரிசுத்தமான உணவு வகைகளில் எதையும் தின்னக் கூடாது. அவன் தண்ணீரால் தன்னைக் கழுவிக்கொண்டாலும் அவன் பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. 7 சூரியன் மறைந்த பிறகே அவன் தீட்டு இல்லாதவன் ஆகிறான், பிறகு அவன் பரிசுத்த உணவை உண்ணலாம்.
8 “ஒரு மிருகம் தானாகவோ அல்லது இன்னொரு மிருகத்தாலோ செத்துப் போயிருக்கலாம். எனினும் ஒரு ஆசாரியன் அதனை உண்ணக்கூடாது. அவன் அதனை உண்டால் அதனால் தீட்டுள்ளவன் ஆகிறான். நானே கர்த்தர்.
9 “ஆசாரியன் எனக்குச் சேவை செய்வதற்கென்று சிறப்பான நேரங்கள் உள்ளன. அந்த நேரங்களில் அவர்கள் கவனம் உள்ளவர்களாக இருக்க வேண்டும். பரிசுத்தமானவற்றைப் பரிசுத்தமற்றதாகச் செய்துவிடக் கூடாது. அவர்கள் கவனமாக இருந்தால் அழிந்து போகமாட்டார்கள். கர்த்தராகிய நான் அவர்களைச் சிறப்பான வேலைக்கென்று தனியாகப் பிரித்துவைத்திருக்கிறேன். 10 ஆசாரியர்களின் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே பரிசுத்த உணவை உண்ண வேண்டும். இவர்களின் வீட்டிற்கு வரும் விருந்தினனோ கூலிக்கு வேலை செய்யும் வேலைக்காரனோ பரிசுத்த உணவை உண்ணக் கூடாது. 11 ஆனால் ஆசாரியன் தனது சொந்தப் பணத்தின் மூலம் ஒரு அடிமையை வாங்கியிருந்தால், அந்த அடிமை பரிசுத்தமான உணவில் கொஞ்சம் உண்ணலாம். ஆசாரியன் வீட்டிலேயே பிறந்து வளர்ந்த அடிமைகளும் ஆசாரியனின் உணவை கொஞ்சம் உண்ணலாம். 12 ஆசாரியனின் மகள் ஆசாரியன் அல்லாத ஒருவனை மணந்துகொண்டால் அவளும் பரிசுத்த பலி உணவுகளை உண்ணக்கூடாது. 13 ஒரு ஆசாரியனின் மகள் விதவையாகலாம், அல்லது அவளுக்கு விவாகரத்து செய்யப்படலாம், அல்லது அவளுக்கு உதவ குழந்தைகள் இல்லாமல் போனதால் அவள் தான் பிறந்து வளர்ந்த தந்தையின் வீட்டிற்குத் திரும்பிவர நேரலாம். அப்போது அவள் தன் தந்தையின் உணவை கொஞ்சம் உண்ணலாம். ஆனால் ஆசாரியன் குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே இந்த உணவை உண்ண வேண்டும்.
14 “ஒருவன் தவறுதலாக பரிசுத்த உணவை உண்டால், அவன் அதற்குரிய விலையில் ஐந்தில் ஒரு பங்கை ஆசாரியனிடம் கூட்டிக் கொடுக்க வேண்டும்.
15 “இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அந்த காணிக்கைகள் பரிசுத்தமானவை. எனவே ஆசாரியர்கள் பரிசுத்தமான அவற்றை அசுத்தமாக்கக் கூடாது. 16 ஒருவேளை ஆசாரியர்கள் அவற்றை அசுத்தமாக்கிவிட்டால் அவர்கள் பரிசுத்த உணவை உண்ணும்போது தங்கள் பாவத்தை மிகுதிப்படுத்துகிறார்கள். கர்த்தராகிய நான் அவர்களை பரிசுத்தமாக்குவேன்” என்று கூறினார்.
17 தேவனாகிய கர்த்தர் மோசேயிடம், 18 “ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கூறு. இஸ்ரவேல் குடிமக்களில் ஒருவனோ அல்லது அந்நியரில் ஒருவனோ எனக்குப் பலி கொண்டுவர விரும்பலாம். அது அவன் செய்த சிறப்பான பொருத்தனையாக இருக்கலாம், அல்லது அது அவன் கொடுக்க விரும்பும் சிறப்பான பலியாக இருக்கலாம். 19-20 அவர்கள் அந்த அன்பளிப்புகளைக் கொண்டுவரலாம். ஏனென்றால் உண்மையில் அவர்கள் தேவனுக்கு அன்பளிப்பு செலுத்த விரும்புகின்றனர். அந்த அன்பளிப்புகளில் ஏதாவது குறை இருக்குமானால் அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது. அந்த அன்பளிப்பால் நான் மகிழ்ச்சியடையமாட்டேன். அந்த அன்பளிப்பானது ஒரு காளையாகவோ, ஆடாகவோ, வெள்ளாடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆணாக இருக்க வேண்டும். அதில் எவ்வித குறையும் இருக்கக்கூடாது.
21 “ஒருவன் சமாதானப் பலியை கர்த்தருக்குக் கொண்டு வரலாம். அந்த சமாதானப் பலியானது அவன் ஏற்கெனவே செய்த சிறப்பான பொருத்தனைக்கு உரியதாக இருக்கலாம். அல்லது சிறப்பாக அவன் கர்த்தருக்குக் கொடுக்கக் கூடிய அன்பளிப்பாக இருக்கலாம். அது மாடாகவோ ஆடாகவோ இருக்கலாம். ஆனால் அது ஆரோக்கியமானதாகவும், ஊனமற்றதாகவும் இருக்க வேண்டும். 22 குருடான, அல்லது எலும்பு முறிந்த, அல்லது நொண்டியான, அல்லது உடற்கழிவுடைய, அல்லது சொறியும் புண்ணும் உடைய மிருகங்களை கர்த்தருக்குப் பலியாகக் கொடுக்கக்கூடாது. நோயுற்ற மிருகங்களையும் கர்த்தரின் பலிபீடத்தில் செலுத்தக் கூடாது.
23 “சில நேரங்களில் மாடு அல்லது ஆட்டிற்கு கால்கள் மிக நீளமாகவோ அல்லது குறுகியோ இருக்கலாம். எனினும் ஒருவன் இதனை கர்த்தருக்கு சிறப்பான அன்பளிப்பாகக் கொடுக்க விரும்பினால் அது ஏற்றுக்கொள்ளப்படலாம்; ஆனால் இது சிறப்பான பொருத்தனையின் அன்பளிப்பாக ஒருவனால் கொடுக்கப்பட்டால் அது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
24 “ஒரு மிருகம் காயப்பட்டதாகவோ, நசுங்கியதாகவோ, விதை நொறுங்கியதாகவோ இருந்தால் அதை கர்த்தருக்கு பலியாகக் கொடுக்கக்கூடாது.
25 “நீங்கள் அந்நியரிடமிருந்து மிருகங்களை கர்த்தருக்குரிய பலியாக எடுத்துக்கொள்ளக் கூடாது. ஏனென்றால் அம்மிருகம் ஏதாவது ஒரு இடத்தில் புண் உள்ளதாகவோ, குறையுடையதாகவோ இருக்கலாம். எனவே, அவற்றை ஏற்றுக்கொள்ளக் கூடாது!” என்று கூறினார்.
26 கர்த்தர் மேலும் மோசேயிடம், 27 “ஒரு கன்றுக் குட்டியோ, ஒரு செம்மறி ஆட்டுக் குட்டியோ, ஒரு வெள்ளாட்டுக் குட்டியோ பிறந்ததும் அது ஏழு நாட்கள் தன் தாயோடு இருக்க வேண்டும். எட்டாவது நாளே அது தகன பலியாக கர்த்தருக்கு முன்பு பலியிடத் தகுதியுள்ளதாகும். 28 ஆனால் தாயையும், குட்டியையும் ஒரே நாளில் பலியிடக்கூடாது. இந்த விதி பசுவுக்கும் கன்றுக் குட்டிக்கும் பொருந்தும்.
29 “நீ நன்றி தெரிவிப்பதற்காக கர்த்தருக்குச் சிறப்பான பலியைச் செலுத்த விரும்பினால் அது உன் விருப்பத்தைப் பொருத்தது. ஆனால் அது தேவனுக்கும் விருப்பமானதாக அமைய வேண்டும். 30 ஆனால் பலியிடப்படும் முழு மிருகத்தையும் அன்றே சாப்பிட்டுவிட வேண்டும். மறுநாள் காலையில் அதன் இறைச்சியில் எதுவும் மீதியிருக்கக் கூடாது. நானே கர்த்தர்.
31 “எனது கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றுக்குக் கீழ்ப்படிந்து நட. நானே கர்த்தர். 32 எனது பரிசுத்தமான பெயருக்கு மதிப்புகொடு. நான் இஸ்ரவேல் ஜனங்களுக்குச் சிறப்பானவராயிருப்பேன். கர்த்தராகிய நான் உங்களை என் சிறப்பான ஜனங்களாக்கியிருக்கிறேன். 33 நான் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வந்தேன். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
சிறப்பான பண்டிகைகள்
23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 2 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. கீழ்க்கண்ட பண்டிகைகள் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பரிசுத்த கூட்டங்கள் என்று அறிவி:
ஓய்வு நாள்
3 “ஆறு நாட்கள் வேலை செய்யுங்கள். ஏழாவது நாள் ஓய்விற்குரிய சிறப்பு நாள். பரிசுத்தமான சபை கூடும் நாள். அன்று ஒரு வேலையும் செய்யக் கூடாது. இது கர்த்தருக்குரிய சிறப்பு ஓய்வு நாளாக உங்கள் வீடுகளில் விளங்கவேண்டும்.
பஸ்கா
4 “கர்த்தர் தேர்ந்தெடுத்த விடுமுறை நாட்கள். பரிசுத்தக் கூட்டங்கள் கூடும் குறித்த காலங்களை நீ அறிவிக்கவேண்டும். 5 முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும்.
புளிப்பில்லா அப்பப் பண்டிகை
6 “அதே (நிசான்) மாதத்தில் 15ஆம் நாள் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை வரும். நீங்கள் புளிப்பில்லாத அப்பத்தை ஏழு நாட்கள் உண்ணவேண்டும். 7 பண்டிகையின் முதல் நாளில் சிறப்பு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. 8 ஏழு நாட்களிலும் கர்த்தருக்கு தகன பலிகள் வழங்கப்பட வேண்டும். பிறகு ஏழாவது நாளும் சிறப்பான ஒரு சபைக் கூட்டம் இருக்கும். அந்நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது” என்று கூறினார்.
முதல் அறுவடைப் பண்டிகை
9 மேலும் கர்த்தர் மோசேயிடம், 10 “இஸ்ரவேல் ஜனங்களிடம் சொல். நான் கொடுத்த நாட்டிற்குள் நீங்கள் சென்று அங்கே பயிர் செய்து அறுவடை செய்வீர்கள். அப்போது முதல் கதிரில் ஒரு கட்டை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். 11 ஆசாரியன் அக்கதிரை கர்த்தருடைய சந்நிதியில் அசைப்பான். பிறகு அது ஏற்றுக்கொள்ளப்படும். ஆசாரியன் அசைவாட்டும் பலியை ஞாயிற்றுக்கிழமை காலையில் செய்ய வேண்டும்.
12 “கதிரை அசைவாட்டும் பலி செய்கிற நாளில் ஒரு வயதுள்ள குறையற்ற ஒரு ஆண் செம்மறி ஆட்டுக்குட்டியைக் கொண்டு வந்து தகன பலியாகக் கொடுக்க வேண்டும். 13 நீங்கள் தானியக் காணிக்கையையும் வழங்க வேண்டும். 16 கிண்ணங்கள் அளவுள்ள அரைத்த மாவையும், ஒலிவ எண்ணெயையும் கலந்து பலியாக வழங்க வேண்டும். மேலும் திராட்சைப் பழரசத்தில் கால் படியும் கொடுக்க வேண்டும். இக்காணிக்கையின் மணமானது கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 14 புதிய தானியத்தையோ, பழங்களையோ, புதிய மாவால் செய்த அப்பத்தையோ உங்கள் தேவனுக்கு பலிகளை செலுத்துவதற்கு முன் உண்ணக் கூடாது. இது உங்கள் தலைமுறை தோறும் தொடர வேண்டிய சட்டமாகும்.
பெந்தெகோஸ்தே பண்டிகை
15 “அறுவடை செய்த கதிரை கர்த்தருக்கு முன்பு அசைவாட்டும் பலியாக வழங்கிய ஞாயிறு காலையிலிருந்து ஏழு வாரங்களை எண்ணுங்கள். 16 50 நாட்களுக்குப் பிறகு வரும் ஏழாவது ஞாயிற்றுக்கிழமையன்று கர்த்தருக்கு புதிய தானியக் காணிக்கைகளை கொண்டு வாருங்கள். 17 அன்று உங்கள் வீட்டிலிருந்து இரண்டு அப்பங்களைக் கொண்டு வாருங்கள். இவை அசைவாட்டும் பலிக்குரியவை. 16 கிண்ணங்கள் அளவுள்ள மாவைப் புளிப்பு சேர்த்து அந்த அப்பங்களைத் தயார் செய்யப் பயன்படுத்துங்கள். இது முதல் அறுவடையானதும் கர்த்தருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய காணிக்கையாகும்.
18 “ஒரு காளை, இரண்டு ஆட்டுக்கடா, ஒரு வயது நிறைந்த ஏழு ஆட்டுக் குட்டிகளையும் தகனபலியாக தானியக் காணிக்கையோடு ஜனங்கள் கொடுக்க வேண்டும். அம்மிருகங்களில் எவ்வித குறையும் இருக்கக் கூடாது. அவற்றைத் தகன பலியாக செலுத்த வேண்டும். இதன் வாசனை கர்த்தருக்கு மிகவும் பிரியமாயிருக்கும். 19 மேலும் நீங்கள் பாவப்பரிகார பலியாக ஒரு ஆட்டுக் கடாவையும், சமாதான பலியாக ஒருவயதான இரண்டு ஆண் ஆட்டுக்குட்டிகளையும் கொண்டுவர வேண்டும்.
20 “ஆசாரியன் கர்த்தருக்கு முன்பாக அசைவாட்டும் பலி செலுத்தவேண்டும். முதல் அறுவடையின் தானிய மாவால் செய்த அப்பத்தோடு இரண்டு ஆட்டுக் குட்டிகளையும் அசைவாட்டும் பலியாக செலுத்த வேண்டும். கர்த்தருக்குப் பரிசுத்தமான அவைகள் ஆசாரியர்களுக்கு உரியவை. 21 அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்.
22 “நீங்கள் உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது, வயலின் மூலைகள் வரை சேர்த்து அறுவடை செய்யாதீர்கள். தரையில் விழுந்த தானியங்களை பொறுக்காதீர்கள். அவற்றை ஏழை ஜனங்களுக்கும், அந்நியர்களுக்கும், வழிப்போக்கருக்கும் பயன்படும்படி விட்டுவிடுங்கள். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
எக்காளப் பண்டிகை
23 மேலும் கர்த்தர் மோசேயிடம், 24 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு. ஏழாவது மாதத்தில் முதல் நாள் உங்களுக்கு ஓய்வுக்குரிய சிறப்பான நாள் உண்டு. அன்று பரிசுத்த சபைக் கூட்டமும் உண்டு. அன்று எக்காளத்தை ஊதி சிறப்பு நேரத்தை நினைவூட்ட வேண்டும். 25 அன்று ஒரு வேலையும் செய்யாமல் கர்த்தருக்குரிய தகனபலியைச் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.
பாவப்பரிகார நாள்
26 கர்த்தர் மோசேயிடம், 27 “ஏழாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாவப்பரிகாரம் செய்யும் பண்டிகை வரும். அப்போது ஒரு பரிசுத்த சபைக் கூட்டம் உண்டு. அன்று வேலை எதையும் செய்யாமலும், சாப்பிடாமலும் இருக்க வேண்டும். கர்த்தருக்குரிய தகன பலியைக் கொண்டு வரவேண்டும். 28 அந்த நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது. ஏனென்றால் அது பாவப் பரிகாரநாள். அந்நாளில் ஆசாரியர்கள் கர்த்தருடைய சந்நிதியில் உங்களைச் சுத்திகரிப்பு செய்யும் சடங்குகளைச் செய்வார்கள்.
29 “அன்று எவனாவது உபவாசம் இருக்க மறுத்தால் அவன் தன் ஜனங்களிடமிருந்து தனியே பிரிக்கப்படுவான். 30 இந்நாளில் எவனாவது வேலை செய்தால் அவனை மற்ற ஜனங்களிடமிருந்து நான் அழித்துப் போடுவேன். 31 நீங்கள் எந்த வேலையும் அன்று செய்யக்கூடாது என்பது என்றென்றும் தொடர்ந்து வருகிற சட்டமாகும். 32 அது உங்களுக்கு ஒரு சிறப்பான ஓய்வு நாளாகும். அந்நாளில் வேறு எதுவும் நீங்கள் செய்யாமல் தாழ்மையான மனதுடன் இருக்க வேண்டும். அந்த சிறப்பான பண்டிகை அம்மாதத்தின் ஒன்பதாவது நாள் மாலையிலிருந்து மறுநாள் மாலைவரை தொடர்ந்திருக்கும்” என்று கூறினார்.
கூடாரப் பண்டிகை
33 கர்த்தர் மோசேயிடம், 34 “இஸ்ரவேல் ஜனங்களிடம் கூறு; ஏழாவது மாதத்தின் 15 ஆம் தேதி முதல் ஏழுநாட்கள் கூடாரப் பண்டிகை நடைபெறும். 35 முதல் நாள் பரிசுத்தமான சபைக்கூட்டம் ஒன்று நடைபெறும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. 36 நீங்கள் ஏழு நாட்கள் தகன பலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். மறுபடியும் எட்டாவது நாள் பரிசுத்த சபைக் கூட்டம் நடை பெறும். நீங்கள் தகனபலியை கர்த்தருக்குக் கொண்டு வர வேண்டும். இதுவே பரிசுத்த சபைக் கூட்டமாகும். அன்று நீங்கள் எந்த வேலையும் செய்யக் கூடாது.
37 “இவை கர்த்தரின் சிறப்பான விடுமுறைகள். அந்நாட்களில் பரிசுத்த சபைக் கூட்டங்களும் நடைபெறும். நீங்கள் கர்த்தருக்குத் தகன பலிகளையும், தானிய காணிக்கைகளையும், பானங்களின் பலியையும் சரியான நேரத்தில் கொண்டு வர வேண்டும். 38 கர்த்தரின் ஓய்வு நாட்களை நினைவுபடுத்துவதோடு இந்த விடுமுறை நாட்களையும் நீங்கள் கொண்டாடவேண்டும். மற்ற அன்பளிப்போடு இவைகளையும் கர்த்தருக்குக் கொண்டு வரவேண்டும். சிறப்பான பொருத்தனைகளுக்கான பலிகளையும் கர்த்தருக்குக் கொண்டுவர வேண்டும். கர்த்தருக்காகச் சிறப்பாக கொடுக்கப்படும் பலிகளோடு இவைகளையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.
39 “ஏழாவது மாதத்தின் 15வது நாளில் நிலத்தின் விளைச்சலைச் சேர்த்து வைக்கும்போது கர்த்தருக்கு ஏழு நாள் பண்டிகையைக் கொண்டாடுங்கள். முதல் நாளிலும் எட்டாவது நாளிலும் நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும். 40 முதல் நாள் பழமரங்களில் இருந்து நல்ல பழங்களையும், ஈச்சமரத்தின் கிளைகளையும், தழைத்துள்ள மரக்கிளைகளையும், வில்லோ மரக்கிளைகளையும் எடுத்துகொண்டு வந்து, ஏழு நாட்கள் தேவனாகிய கர்த்தரின் சந்நிதானத்தில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுங்கள். 41 ஒவ்வொரு ஆண்டும் இப்பண்டிகையை கர்த்தருக்கு முன் ஏழு நாட்கள் கொண்டாடுங்கள். இவ்விதிகள் எக்காலத்திற்கும் உரியவையாகும். இதனை நீங்கள் ஏழாவது மாதத்தில் கொண்டாட வேண்டும். 42 நீங்கள் ஏழு நாட்களிலும் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருக்கவேண்டும். இஸ்ரவேலில் பிறந்த அனைத்து ஜனங்களும் இக்கூடாரங்களில் தங்க வேண்டும். 43 ஏனென்றால் எகிப்திலிருந்து உங்களை அழைத்து வரும்போது நீங்கள் தற்காலிகமான கூடாரங்களில் தங்கியிருந்தீர்கள் என்பதை உங்கள் சந்ததியினர் உணர்ந்துகொள்ள வேண்டும். நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!” என்று கூறினார்.
44 எனவே, மோசே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தரைக் கனப்படுத்துகிற பண்டிகைகளைப்பற்றிக் கூறினான்.
2008 by World Bible Translation Center