Print Page Options
Previous Prev Day Next DayNext

Beginning

Read the Bible from start to finish, from Genesis to Revelation.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
எண்ணாகமம் 26-27

ஜனங்கள் கணக்கிடப்படுதல்

26 பெருநோய் ஏற்பட்ட பிறகு கர்த்தர் மோசேயிடமும் ஆரோனின் மகனும், ஆசாரியனுமாகிய எலெயாசரிடமும் பேசினார். அவர், “இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிடுங்கள். 20 வயதும் அதற்கு மேலுமுள்ள ஆண்களைக் குடும்ப வாரியாகக் கணக்கிட்டு பட்டியல் செய்யுங்கள். இவர்களே இஸ்ரவேல் படையில் சேர்ந்து பணியாற்றும் தகுதி உடையவர்கள்” என்றார்.

இந்த நேரத்தில் ஜனங்கள் மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்குப் பகுதியில் முகாமிட்டிருந்தார்கள். இது, யோர்தான் ஆறு எரிகோவிலிருந்து வந்து கடக்கும் இடமாகும். எனவே மோசேயும் ஆசாரியனாகிய எலெயாசாரும் ஜனங்களிடம் இங்கே பேசினர். அவர்கள், “நீங்கள் 20 வயதும் அதற்கு மேற்பட்டுமுள்ள ஆண்களை எண்ணிக் கணக்கிட வேண்டும். கர்த்தர் மோசேயிடம் இந்த ஆணையை அளித்திருக்கிறார்” என்றனர்.

எகிப்திலிருந்து வெளியேறி வந்த ஜனங்களின் பட்டியல் இதுதான்:

ரூபன் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்கள் தான்: (ரூபன் இஸ்ரவேலின் மூத்த மகன்.) அந்தக் குடும்பங்களாவன:

ஆனோக்கியர் குடும்பத்துக்குத் தந்தையான ஆனோக்,

பல்லூவியர் குடும்பத்துக்குத் தந்தையான பல்லூ,

எஸ்ரோனியர் குடும்பத்துக்குத் தந்தையான எஸ்ரோன்,

கர்மீயர் குடும்பத்துக்குத் தந்தையான கர்மீ.

இவர்கள் ரூபனின் குழுவில் உள்ள குடும்பத்தினர். இவர்களில் மொத்தம் 43,730 ஆண்கள் கணக்கிடப்பட்டனர்.

பல்லூவின் மகன் எலியாப். எலியாப்புக்கு மூன்று மகன்கள். அவர்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் ஆகியோர். இவர்களில் தாத்தான் அபிராம் என்ற இரு தலைவர்களும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரும்பினவர்கள் ஆவார்கள். இவர்கள் கர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட கோராகைப் பின்பற்றினார்கள். 10 அப்போது பூமி பிளந்து கோராகையும் அவனைப் பின்பற்றியவர்களையும் விழுங்கிவிட்டது. அதினால் 250 பேர் மரித்துப் போனார்கள்! அது இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் எச்சரிக்கையாய் இருந்தது. 11 ஆனால் கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த பலர் மரிக்கவில்லை.

12 சிமியோனின் கோத்திரத்திலும் பல குடும்பங்கள் இருந்தன:

நேமுவேல் குடும்பத்தின் தந்தையான நேமுவேல்,

யாமினியர் குடும்பத்தின் தந்தையான யாமினி,

யாகீனியர் குடும்பத்தின் தந்தையான யாகீன்,

13 சேராகியர் குடும்பத்தின் தந்தையான சேராகி,

சவுலியர் குடும்பத்தின் தந்தையான சவுல்.

14 இவர்களே சிமியோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 22,200 பேர் இருந்தனர்.

15 காத் கோத்திரத்தில் கீழ்க்கண்டவர்கள் இருந்தனர்.

சிப்போனியர் குடும்பத்தின் தந்தையான சிப்போன்,

ஆகியரின் குடும்பத்தின் தந்தையான ஆகி,

சூனியர் குடும்பத்தின் தந்தையான சூனி,

16 ஒஸ்னியர் குடும்பத்தின் தந்தையான ஒஸ்னி,

ஏரியர் குடும்பத்தின் தந்தையான ஏரி,

17 ஆரோதியர் குடும்பத்தின் தந்தையான ஆரோத்,

அரேலியர் குடும்பத்தின் தந்தையான அரேலி,

18 இவர்களே காத்தின் குடும்பத்திலுள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 40,500 பேர் இருந்தனர்.

19-20 யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்களின் பெயர்கள்:

சேலாவியர் குடும்பத்தின் தந்தையான சேலாவி,

பாரேசியர் குடும்பத்தின் தந்தையான பாரேசி,

சேராவியர் குடும்பத்தின் தந்தையான சேரா ஆகியோர்.

(யூதாவின் ஏர், ஓனான் எனும் இரு மகன்களும் கானான் நாட்டில் மரித்துப் போனார்கள்.)

21 பாரேசின் மகன்களின் குடும்பத்தில்,

எஸ்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக எஸ்ரோனியும்,

ஆமூலியர் குடும்பத்தின் தந்தையாக ஆமூலும் இருந்தனர்.

22 இவர்கள் அனைவரும் யூதாவின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 76,500 பேர் இருந்தனர்.

23 இசக்காரின் கோத்திரத்தில்,

தோலாவியர் குடும்பத்தின் தந்தையாக தோலாவும்

பூவாவியர் குடும்பத்தின் தந்தையாக பூவாவும்.

24 யாசூபியர் குடும்பத்தின் தந்தையாக யாசூபும்

சிம்ரோனியர் குடும்பத்தின் தந்தையாக சிம்ரோனும் இருந்தனர்.

25 இவர்கள் இசக்காரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,300 பேர் இருந்தனர்.

26 செபுலோனியர் கோத்திரத்தில்,

சேரேத்தியர் குடும்பத்தின் தந்தையாக சேரேத்தும்,

ஏலோனியர் குடும்பத்தின் தந்தையாக ஏலோனும்,

யாலேயேலியர் குடும்பத்தின் தந்தையாக யாலேயேலும் இருந்தனர்.

27 இவர்கள் செபுலோனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களின் ஆண்கள் மொத்தம் 60,500 பேர் இருந்தனர்.

28 யோசேப்பிற்கு மனாசே, எப்பிராயீம் எனும் இரண்டு மகன்கள் இருந்தனர், இருவரும் தம் சொந்தக் குடும்பங்களோடு, ஒரு கோத்திரமாக உருவானார்கள். 29 மனாசேயின் குடும்பங்கள் பின்வருமாறு:

மாகீர்-மாகீரியர் குடும்பம் (மாகீர் கிலெயாத்தின் தந்தை)

கிலெயாத்-கிலெயாத்தின் குடும்பம்.

30 கிலெயாத்தின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

ஈயேசேர்-ஈயேசேரியரின் குடும்பம்.

ஏலேக்-ஏலேக்கியரின் குடும்பம். 31 அஸ்ரியேல்-அஸ்ரியேலரின் குடும்பம்.

சேகேம்-சேகேமியரின் குடும்பம்.

32 செமீதா-செமீதாவியரின் குடும்பம்.

ஏப்பேர்-ஏப்பேரியரின் குடும்பம்.

33 ஏப்பேரின் மகன் செலோப்பியாத். ஆனால் அவனுக்கு மகன்கள் இல்லை. மகள்கள் மட்டுமே இருந்தனர். மக்லாள், நோவாள், ஓக்லாள், மில்காள், திர்சாள் என்பவை அவர்களின் பெயர்களாகும்.

34 இவர்கள் மனாசேயின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 52,700 பேர் இருந்தனர்.

35 எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

சுத்தெலாகி-சுத்தெலாகியரின் குடும்பம்,

பெகேர்-பெகேரியரின் குடும்பம்,

தாகான்-தாகானியரின் குடும்பம்,

36 ஏரான் சுத்தெலாகியர் குடும்பத்தவன்.

இவனது குடும்பம் ஏரானியர் குடும்பம் ஆயிற்று.

37 இவர்கள் எப்பிராயீமுடைய கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 32,500 பேர் இருந்தனர்.

இந்த ஜனங்கள் அனைவரும் யோசேப்பின் குடும்பத்தில் உள்ளவர்கள்:

38 பென்யமீனின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

பேலா-பேலாவியரின் குடும்பம்,

அஸ்பேல்-அஸ்பேலியரின் குடும்பம்,

அகிராம்-அகிராமியரின் குடும்பம்,

39 சுப்பாம்-சுப்பாமியரின் குடும்பம்,

உப்பாம்-உப்பாமியரின் குடும்பம்,

40 போலாவின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

ஆரேது-ஆரேதியரின் குடும்பம்,

நாகமான்-நாகமானியரின் குடும்பம்,

41 இவர்கள் அனைவரும் பென்யமீனின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45, 600 பேர் இருந்தனர்.

42 தாணின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

சூகாம்-சூகாமியரின் குடும்பம்.

இது தாணின் கோத்திரத்திலிருந்து வந்த கோத்திரங்களாகும். 43 சூகாமியரின் கோத்திரத்தில் ஏராளமான குடும்பங்கள் இருந்தன. இவர்களில் ஆண்கள் மொத்தம் 64,400 பேர் இருந்தனர்.

44 ஆசேருடைய கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

இம்னா-இம்னாவியரின் குடும்பம்,

இஸ்வி-இஸ்வியரின் குடும்பம்,

பெரீயா-பெரீயாவியரின் குடும்பம்,

45 பெரீயாவின் குடும்பங்களில் உள்ளவர்கள்:

ஏபேர்-ஏபேரியரின் குடும்பம்,

மல்கியேல்-மல்கியேலியரின் குடும்பம்.

46 சாராள் என்ற பேரில் ஆசேருக்கு ஒரு மகள் இருந்தாள். 47 இவர்கள் அனைவரும் ஆசேரின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 53,400 பேர் இருந்தனர்.

48 நப்தலியினுடைய குடும்பத்தில் உள்ள குடும்பங்கள்:

யாத்சியேல்-யாத்சியேலியரின் குடும்பம்,

கூனி-கூனியரின் குடும்பம்.

49 எத்சேர்-எத்சேரியரின் குடும்பம்.

சில்லேமின்-சில்லேமியரின் குடும்பம்.

50 இவர்கள் அனைவரும் நப்தலியின் கோத்திரத்தில் உள்ளவர்கள். இவர்களில் ஆண்கள் மொத்தம் 45,400 பேர் இருந்தனர்.

51 எனவே மொத்தம் 601, 730 இஸ்ரவேல் ஆண்கள் இருந்தனர்.

52 கர்த்தர் மோசேயிடம், 53 “இந்த நாடானது பங்கிடப்பட்டு இவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு கோத்திரமும் போதுமான நிலத்தைப் பெற்றுக்கொள்ளும். 54 பெரிய கோத்திரம் மிகுதியான நிலத்தைப் பெறும். சிறிய கோத்திரம் குறைந்த அளவு நிலத்தைப் பெறும். அவர்கள் பெற்றுள்ள இந்த நாடானது சமமாகப் பங்கு வைக்கப்பட்டு அவர்களுக்குக் கொடுக்கப்படும். 55 ஆனால் நீயோ சீட்டுக் குலுக்கல் முறை மூலமே எந்தப் பகுதி எந்தக் கோத்திரத்திற்கு உரியது என்பதை முடிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு கோத்திரமும் தனது பங்கினைப் பெற வேண்டும். அப்பங்கானது கோத்திரத்தின் பெயரிலேயே கொடுக்கப்பட வேண்டும். 56 சிறியதும் பெரியதுமான அனைத்து கோத்திரத்திற்கும் நிலங்கள் கொடுக்கப்படும். இதனை முடிவுசெய்ய சீட்டு குலுக்கல் முறையைக் கையாளவேண்டும்” என்றார்.

57 அவர்கள் லேவியின் கோத்திரத்தையும் எண்ணிக் கணக்கிட்டனர். லேவியின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

கெர்சோன்-கெர்சோனியரின் குடும்பம்.

கோகாத்-கோகாத்தியரின் குடும்பம்.

மெராரி-மெராரியரின் குடும்பம்.

58 ஆகிய இவை லேவியரின் கோத்திரத்தில் உள்ள குடும்பங்கள்:

லிப்னீயரின் குடும்பம்,

எப்ரோனியரின் குடும்பம்,

மகலியரின் குடும்பம்,

மூசியரின் குடும்பம்,

கோராகியரின் குடும்பம்

அம்ராமும் கோகாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் 59 அம்ராமின் மனைவியின் பெயர் யோகெபேத். இவளும் லேவியின் கோத்திரத்தில் உள்ளவள். அவள் எகிப்திலே பிறந்தவள். யோகெபேத்தும் அம்ராமும் ஆரோனையும் மோசேயையும் பெற்றனர். அவர்களுக்கு மிரியம் என்ற மகளும் உண்டு.

60 ஆரோன் நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் ஆகியோரின் தந்தை. 61 ஆனால் நாதாபும் அபியூவும் மரித்துப்போனார்கள். ஏனென்றால் அவர்கள் அங்கீகரிக்கப்படாத அக்கினியால் கர்த்தருக்கு பலியைச் செலுத்தினார்கள்.

62 லேவியின் கோத்திரத்தில் ஆண்கள் மொத்தம் 23,000 பேர் இருந்தனர். ஆனால் இவர்கள் மற்ற இஸ்ரவேல் ஜனங்களோடு சேர்த்து எண்ணி கணக்கிடப்படவில்லை. அவர்கள், மற்றவர்களுக்கு கர்த்தர் கொடுத்த நாட்டின் பங்குகளையும் பெறவில்லை.

63 மோசேயும் எலெயாசாராகிய ஆசாரியனும் சேர்ந்து அனைத்து ஜனங்களையும் எண்ணிக் கணக்கிட்டனர். மோவாபின் யோர்தான் பள்ளத்தாக்கில் இருந்தபோது அவர்கள் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். இந்த இடம் யோர்தானுக்கு அப்பால் எரிகோவின் அருகில் இருந்தது. 64 பல ஆண்டுகளுக்கு முன்னால், சீனாய் பாலைவனத்தில் மோசேயும் ஆரோனும் இஸ்ரவேல் ஜனங்களை எண்ணிக் கணக்கிட்டனர். ஆனால் அவர்கள் மரித்துவிட்டனர். அவர்களில் யாரும் உயிரோடு இல்லை. 65 ஏனென்றால் அவர்கள் அனைவரும் பாலைவனத்திலேயே மரித்துப் போவார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் அவர்கள் மரித்தார்கள். அவர்களில் இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர். ஒருவன், எப்புன்னேயின் மகனான காலேப். இன்னொருவன் நூனின் மகனாகிய யோசுவா.

செலோப்பியாத்தின் மகள்கள்

27 செலோப்பியாத் ஏபேரின் மகன். ஏபேர் கிலெயாத்தின் மகன். கிலெயாத் மாகீரின் மகன். மாகீர் மனாசேயின் மகன். மனாசே யோசேப்பின் மகன். செலோப்பியாத்திற்கு ஐந்து மகள்கள் இருந்தனர். அவர்களின் பெயர்கள் மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் என் பவையாகும். இந்த ஐந்து பேரும் ஆசரிப்புக் கூடாரத்திற்குச் சென்று அங்கே மோசே, ஆசாரியனாகிய எலெயாசார், தலைவர்கள் மற்றும் ஜனங்கள் முன்னால் நின்றனர்.

அந்த ஐந்து பேரும், “நாங்கள் பாலை வனத்தின் வழியாகப் பயணம் செய்தபோது எங்கள் தந்தை மரித்துப்போனார். அவரது மரணம் ஒரு இயற்கை மரணம். அவர் கோராவின் குழுவைச் சேர்ந்தவரல்ல. (கோரா கர்த்தருக்கு எதிராக மாறியவன்.) ஆனால் எங்கள் தந்தைக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் சொல்ல ஆண் வாரிசுகள் இல்லை. எங்கள் தந்தையின் பெயர் தொடர்ந்து வழங்கப்படாதது சரியல்ல. அவருக்கு ஆண் குழந்தைகள் இல்லாததால் அவரது பெயர் முடிந்து போகிறது. ஆகையால் எங்கள் தந்தையின் சகோதரர்கள் பெற்ற நிலங்களில் ஒரு பங்கை எங்களுக்கும் தருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று முறையிட்டார்கள்.

இதனால் என்னச் செய்யலாம் என்று மோசே கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர் மோசேயிடம், “செலோப்பியாத்தின் மகள்கள் கூறுவது சரிதான். அவர்கள் தம் தந்தையின் சகோதரர்களோடு தங்கள் பங்கைப் பெற்றுக்கொள்ளலாம். எனவே இவர்களின் தந்தைக்குரிய நிலத்தை இவர்களுக்கே கொடுக்கவும்.

“இஸ்ரவேல் ஜனங்களுக்கு இந்தச் சட்டத்தையும் ஏற்படுத்து: ‘ஒருவேளை ஒருவனுக்கு ஆண்பிள்ளை இல்லாவிடில் அவன் மரித்தபின் அவனுக்குரிய அனைத்தும் அவனது பெண் பிள்ளைகளுக்கு உரியதாகும். ஒருவனுக்கு பெண் குழந்தைகளும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது சகோதரர்களுக்கு உரியதாகும். 10 ஒருவனுக்குச் சகோதரர்களும் இல்லாவிட்டால் அவனுக்குரிய அனைத்தும் அவனது தந்தையின் சகோதரர்களுக்கு உரியதாகும். 11 ஒருவனது தந்தைக்கும் சகோதரர்கள் இல்லாவிட்டால் பிறகு அவன் குடும்பத்திலுள்ள நெருங்கிய உறவினருக்கு அவனுக்குரிய அனைத்தும் உரியதாகும். இது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு சட்டமாக வேண்டும்’” என்றார்.

புதிய தலைவராக யோசுவா

12 பிறகு கர்த்தர் மோசேயிடம், “யோர்தான் நதிக்குக் கிழக்கேயுள்ள பாலைவனப் பகுதியில் உள்ள மலைகள் ஒன்றின் மீது ஏறிச்செல். அங்கே நான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அளித்த பூமியை நீ பார்க்கலாம். 13 நீ அந்த நாட்டைப் பார்த்த பிறகு, நீயும் உனது சகோதரன் ஆரோனைப்போன்று மரித்துப் போவாய். 14 சீன் என்னும் பாலைவனத்தில் தண்ணீர் விஷயமாக இஸ்ரவேல் ஜனங்கள் கலகம் செய்ததை நினைத்துப்பார். நீயும் உனது சகோதரன் ஆரோனும் நான் கூறியபடி செய்யவில்லை. நான் பரிசுத்தமானவர் என்பதை ஜனங்களுக்குக் காட்டி என்னை கனப்படுத்தாமல் விட்டு விட்டீர்கள்.” (இது சீன் என்னும் பாலைவனத்தில், காதேஸ் என்ற இடத்தில் மேரிபா தண்ணீருக்காக நிகழ்ந்தது.)

15 மோசே கர்த்தரிடம், 16 “ஜனங்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது கர்த்தராகிய உமக்கு நன்கு தெரியும். கர்த்தாவே! இந்த ஜனங்களுக்கு ஒரு புதிய தலைவனைத் தேர்ந்தெடுத்து விட வேண்டும் என்று உம்மை வேண்டிக்கொள்கிறேன். 17 இந்த ஜனங்களை இந்த நாட்டிலிருந்து அழைத்துப் போய் புதிய நாட்டில் சேர்க்கும் புதிய தலைவனை கர்த்தர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன். அதற்குப் பின்பு இந்த ஜனங்கள் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப் போன்று ஆகமாட்டார்கள்” என்றான்.

18 எனவே கர்த்தர் மோசேயிடம், “நூனின் மகனான யோசுவாவே புதிய தலைவன். அவன் மிகவும் ஞானம் உள்ளவன். அவனைப் புதிய தலைவனாக்கு. 19 முதலில் அவனை ஆசாரியனாகிய எலெயாசார் முன்பும் மற்ற ஜனங்கள் முன்பும் நிறுத்து. பிறகு அவனைத் தலைவனாக ஏற்படுத்து.

20 “நீ அவனைத் தலைவனாக்குவதை ஜனங்கள் காணும்படி செய். அப்போது ஜனங்கள் அவனுக்கு அடங்கி நடப்பார்கள். 21 யோசுவா எதைப்பற்றியாவது முடிவு எடுக்க வேண்டுமானால், அவன் ஆசாரியனாகிய எலெயாசார் முன் நிற்கவேண்டும். எலெயாசார் ஊரிமைப் பயன்படுத்தி கர்த்தருடைய பதிலை அறிந்துகொள்வான். பின் கர்த்தர் சொல்வதை யோசுவாவும் இஸ்ரவேல் ஜனங்களும் செய்ய வேண்டும். அவன், ‘போருக்குப் போங்கள்’ என்று சொன்னால் அவர்கள் போருக்குப் போவார்கள். அவன் ‘வீட்டிற்குப் போங்கள்’ என்று சொன்னால், அவர்கள் வீட்டிற்குப் போவார்கள்” என்றார்.

22 கர்த்தருடைய வார்த்தைகளுக்கு மோசே கீழ்ப்படிந்தான். இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் முன்பு நிறக்குமாறு யோசுவாவிடம் மோசே கூறினான். 23 பின் தனது கையை அவன்மேல் வைத்து அவனைப் புதிய தலைவனாக ஆக்கினான். அவன் இதனை கர்த்தர் சொன்னபடியே செய்து முடித்தான்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center