Historical
19 யூதாவின் ராஜாவாகிய யோசபாத் எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தான். 2 யெகூ என்னும் ஞானதிருஷ்டிக்காரன் யோசபாத்தை சந்திக்க வந்தான். அவனது தந்தையின் பெயர் அனானி. அவன் ராஜாவிடம், “ஏன் கெட்டவர்களுக்கு உதவினாய்? கர்த்தரை வெறுப்பவர்கள் மேல் ஏன் அன்பு செலுத்தினாய். அதனால் தான் கர்த்தர் உன் மீது கோபமாக இருக்கிறார். 3 ஆனால் உனது வாழ்வில் சில நன்மைகளும் உள்ளன. நீ விக்கிரகங்களை அழித்தாய். நீ மனப்பூர்வமாகத் தேவனைப் பின்பற்றவேண்டும் என்று எண்ணினாய்” என்றான்.
யோசபாத் நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கிறான்
4 யோசபாத் எருசலேமில் வாழ்ந்தான். பெயர்செபா நகரம் முதல் எப்பிராயீம் மலை நாடுவரை வாழும் ஜனங்களுடன் சேர்ந்து வாழும் பொருட்டு, மீண்டும் யோசபாத் வெளியேறினான். அந்த ஜனங்களை அவன் அவர்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடம் திரும்பக் கொண்டுவந்தான். 5 யோசபாத் யூதாவில் நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்தான். அவன் தேர்ந்தெடுத்த நீதிபதிகளை ஒவ்வொரு கோட்டையிலும் இருக்கச் செய்தான். 6 யோசபாத் நீதிபதிகளிடம், “நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நீங்கள் ஜனங்களுக்காக நியாயந்தீர்க்கவில்லை. கர்த்தருக்காக நியாயந்தீர்க்கிறீர்கள். நீங்கள் ஒரு முடிவு எடுக்கும்போது கர்த்தர் உங்களோடு இருக்கிறார். 7 இப்போது உங்களில் ஒவ்வொருவரும் கர்த்தருக்குப் பயப்படவேண்டும். நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதில் கவனமாக இருங்கள். ஏனென்றால் நமது தேவனாகிய கர்த்தர் நியாயமானவர். அவர் அநீதியானவற்றை யாருக்கும் செய்யமாட்டார். மேலும் தனது நியாயத்தீர்ப்புகளை மாற்றிக்கொள்ள பணத்தைப் பெற்றுக்கொள்ளமாட்டார்” என்றான்.
8 எருசலேமில், யோசபாத் சில லேவியர்களையும் ஆசாரியர்களையும், இஸ்ரவேல் கோத்திர தலைவர்களில் சிலரையும் நீதிபதிகளாகத் தேர்ந்தெடுத்தான். இவர்கள் எருசலேமில் உள்ள ஜனங்களின் சிக்கல்களை தேவனுடைய சட்டத்தால் சரி செய்யவேண்டும். 9 யோசபாத் அவர்களுக்குக் கட்டளையிட்டான். அவன், “நீங்கள் உங்கள் மனப்பூர்வமாகவும் உண்மையாகவும் சேவைச் செய்யவேண்டும். நீங்கள் கர்த்தருக்கு பயப்படவேண்டும். 10 உங்களிடம் கொலை, சட்டப்பிரச்சனைகள், கட்டளை, விதிமுறை அல்லது வேறு சில சட்டங்கள் பற்றிய வழக்குகள் வரும், அனைத்து வழக்குகளிலும் நீங்கள் ஜனங்களைக் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்யாதபடிக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். நீங்கள் உண்மையாக சேவை செய்யாவிட்டால் கர்த்தருடைய கோபம் உங்கள் மேலும் உங்கள் சகோதரர்கள் மேலும் ஏற்படும். நீங்கள் இப்படி செய்தால் குற்றவாளிகளாகமாட்டீர்கள்.
11 “அமரியா தலைமை ஆசாரியன். கர்த்தரைப் பற்றிய காரியங்களில் அவன் உங்களுக்கு மேலாக இருப்பான். ராஜாவைப் பற்றிய விவகாரங்களில் செபதியா உங்களுக்கு உயர்ந்தவனாக இருப்பான். செபதியாவின் தந்தையின் பெயர் இஸ்மவேல். செபதியா யூதா கோத்திரத்தின் தலைவனாக இருக்கிறான். லேவியர்கள் உங்களுக்கு எழுத்தாளர்களாக சேவை செய்வார்கள். நீங்கள் செய்யும் அனைத்து செயல்களிலும் உறுதியாக இருங்கள். சரியானவற்றைச் செய்கின்ற ஜனங்களோடு கர்த்தர் துணை இருப்பாராக” என்றான்.
யோசபாத் போரை எதிர் நோக்கியிருக்கிறான்
20 பிறகு மோவாபிய ஜனங்களும், அம்மோன் ஜனங்களும், சில மியூனிய ஜனங்களும் யோசபாத்துக்கு எதிராகப் போரிடத் தொடங்கினார்கள். 2 சிலர் யோசபாத்திடம் வந்து, “உங்களுக்கு எதிராகப் போரிட ஏதோமிலிருந்து ஒரு பெரும்படை வந்துகொண்டிருக்கிறது. அவர்கள் மரணக் கடலின் மறுகரையில் இருந்து வருகிறார்கள். அவர்கள் ஏற்கெனவே ஆசாசோன் தாமாரில் உள்ளார்கள்!” என்றனர். (ஆசாசோன் தாமார் எங்கேதி என்றும் அழைக்கப்படுகிறது.) 3 யோசபாத்துக்குப் பயம் ஏற்பட்டது. என்ன செய்யவேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கத் தீர்மானித்தான். யூதாவிலுள்ள எல்லோரும் உபவாசம் இருக்க ஒரு நேரத்தைக் குறித்தான். 4 யூதாவிலுள்ள ஜனங்கள் ஒன்று கூடி கர்த்தரிடம் உதவி கேட்டனர். யூதாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கர்த்தருடைய உதவியை வேண்டினார்கள். 5 யோசபாத் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்தான். அங்கு புதுப்பிரகாரத்திற்கு முன்னால் இருந்தான். யூதாவிலிருந்தும் எருசலேமிலிருந்தும் வந்த ஜனங்கள் கூட்டத்தின் முன்னர் நின்று பேசினான். 6 அவன் சொன்னதாவது:
“எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே நீர் பரலோகத்திலிருக்கிற தேவன். அனைத்து நாடுகளிலும் உள்ள அரசுகளை நீர் ஆண்டுவருகிறீர். உமக்கு அதிகாரமும் பலமும் உள்ளது. உமக்கு எதிராக எவராலும் நிற்க முடியாது. 7 நீரே எங்களுடைய தேவன். இந்த நிலத்திலிருந்து ஜனங்கள் வெளியேறுமாறு நீர் கட்டாயப்படுத்தினீர். இதனை உம்முடைய இஸ்ரவேல் ஜனங்களின் முன்னிலையிலேயே நீர் செய்தீர். நீர் இந்த நிலத்தை ஆபிரகாமின் சந்ததியினருக்கு எக்காலத்திற்கும் உரியதாக்கினீர். ஆபிரகாம் உமது நண்பர். 8 ஆபிரகாமின் சந்ததியினர் இந்த நிலத்தில் வாழ்ந்தார்கள். உமது நாமத்தால் ஒரு ஆலயத்தைக் கட்டினார்கள். 9 அவர்கள், ‘எங்களுக்கு வாளாலோ, தண்டனையாலோ, நோயாலோ, பஞ்சத்தாலோ துன்பங்கள் வந்தால் நாங்கள் உமது ஆலயத்தின் முன்னால் உமக்கு முன் நிற்போம். உம்முடைய நாமம் இவ்வாலயத்தின் மேல் உள்ளது. நாங்கள் துன்பத்தில் இருக்கும்போது உம்மை நோக்கிச் சத்தமிடுவோம். பின் நீர் அதைக் கேட்டு எங்களைக் காப்பாற்றுவீர்.’
10 “ஆனால் இப்போது, இங்கே அம்மோன், மோவாப், சேயீர் மலை ஆகிய ஜனங்கள் இருக்கின்றனர். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறி வந்தபோது அவர்களது நிலத்தின் வழியாகச் செல்ல நீர் அனுமதிக்கவில்லை. எனவே இஸ்ரவேல் ஜனங்கள் இவர்களை விட்டு விலகி, அழிக்காமல் போனார்கள். 11 ஆனால் பாரும், நாங்கள் அவர்களை அழிக்காமல் விட்டதற்கு அவர்கள் எங்களுக்குத் தரும் வெகுமதியைப் பாரும். அவர்கள் உம்முடைய நாட்டை விட்டு வெளியேறுமாறு எங்களைக் கட்டாயப்படுத்துகிறார்கள். இந்த நாட்டை நீர் எங்களுக்கு கொடுத்தீர். 12 எங்களுடைய தேவனே, அந்த ஜனங்களைத் தண்டியும். எங்களுக்கு எதிராக வந்திருக்கும் இப்பெரும் படையை எதிர்க்க எங்களிடம் பலம் இல்லை. என்ன செய்யவேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை. அதனால் நாங்கள் உம்மிடம் உதவியை வேண்டுகிறோம்!” என்றான்.
13 யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களும் தங்களுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் பிள்ளைகளுடன் கர்த்தருக்கு முன்னால் நின்றார்கள். 14 பிறகு கர்த்தருடைய ஆவி யகாசியேல் என்பவன் மீது வந்தது. யகாசியேல் சகரியாவின் குமாரன். சகரியா பெனாயாவின் குமாரன். பெனாயா ஏயெலின் குமாரன். ஏயேல் மத்தனியாவின் குமாரன். யகாசியேல் ஒரு லேவியன். இவன் ஆசாபின் சந்ததியான். கூட்டத்தின் நடுவில் 15 யகாசியேல், “நான் சொல்வதைக் கேளுங்கள். யோசபாத் ராஜாவே, யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே, கர்த்தர் உங்களுக்கு இதனைக் கூறுகிறார்: ‘இப்பெரும் படையைக்கண்டு அஞ்சவோ, கவலைப்படவோ வேண்டாம். ஏனென்றால் இது உங்களுடைய போரல்ல. இது தேவனுடைய போர். 16 நாளை கீழே இறங்கிப்போய் அவர்களோடு சண்டையிடுங்கள். அவர்கள் சிஸ் என்ற மேட்டு வழியாக வருகிறார்கள். அவர்களை நீங்கள் யெருவேல் எனும் வனாந்தரத்திற்கு எதிரான பள்ளத்தாக்கின் முடிவில் சந்திப்பீர்கள். 17 இப்போரில் நீங்கள் சண்டையிடவே வேண்டாம். உங்கள் இடங்களில் உறுதியாக நில்லுங்கள். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவதைக் காண்பீர்கள். யூதா நாட்டினரே! எருசலேமியர்களே! அஞ்சாதீர்கள். கவலைப்படாதீர்கள்! கர்த்தர் உங்களோடு இருக்கிறார். எனவே நாளை அவர்களுக்கு எதிராகச் செல்லுங்கள்’ என்றார்” என்று சொன்னான்.
18 யோசபாத் குனிந்து வணங்கினான். அவனது முகம் தரையைத் தொட்டது. யூதாவில் வாழும் ஜனங்களும் எருசலேமில் வாழும் ஜனங்களும் கர்த்தருக்கு முன்பாக தரையில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள் அனைவரும் கர்த்தரை தொழுதுகொண்டனர். 19 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை, கோகாத் மற்றும் கேரா ஆகிய கோத்திரத்தில் உள்ள லேவியர்கள் எழுந்து நின்று துதித்தனர். அவர்கள் கர்த்தரை மிகச் சத்தமாகத் துதித்தனர்.
20 அதிகாலையில் யோசபாத்தின் படையானது தெக்கோவா வனாந்தரத்திற்குப் போனது. அவர்கள் புறப்படும்போது யோசபாத் நின்ற வண்ணம், “யூதா மற்றும் எருசலேமில் உள்ள ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நம்புங்கள். விசுவாசத்தில் உறுதியாயிருங்கள். கர்த்தருடைய தீர்க்கதரிசிகளை நம்புங்கள். அதனால் வெற்றி பெறுவீர்கள்” என்றான்.
21 பிறகு யோசபாத் ஜனங்களை அறிவுரைகளால் உற்சாகப்படுத்தினான். பின்னர் கர்த்தரைத் துதித்துப் பாடப் பாடகர்களைத் தேர்ந்தெடுத்தான். கர்த்தர் பரிசுத்தமும், அற்புதமும் கொண்டவர். இவரைத் துதித்துப் பாடிக் கொண்டே பாடகர்கள் படைக்கு முன்னால் சென்றார்கள். அவர்கள்,
“கர்த்தரைத் துதியுங்கள்,
ஏனென்றால் அவரது அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்!” என்று பாடினார்கள்.
22 தேவனை இவர்கள் பாடித் துதிக்கத் தொடங்கியதும், கர்த்தர் அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் மீது ஒரு மறைமுகத் தாக்குதல் நடத்தினார். இவர்களே யூதா நகரின் மேல் போர் தொடுத்து வந்தவர்கள். அவர்கள் அடிக்கப்பட்டார்கள். 23 அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேர்ந்து சேயீர் மலை நாட்டினர் மீது போரிடத் தொடங்கினார்கள். அம்மோனியர்களும், மோவாபியர்களும் சேயீர் மலை நாட்டினரைக் கொன்று அழித்தார்கள். சேயீர் மலை நாட்டினரைக் கொன்று முடித்த பிறகு தமக்குள்ளாகவே போரிட்டுக் கொல்லத் தொடங்கினார்கள்.
24 யூதா ஜனங்கள் வனாந்தரத்தில் பார்ப்பதற்கு வசதியான ஒரு இடத்திற்கு வந்தனர். அங்கிருந்து அவர்கள் பெரும் படையைக் கவனித்தனர். அவர்கள் செத்துப்போன பிணங்களைத்தான் பார்க்க முடிந்தது. எவரும் அங்கு உயிரோடு இல்லை. 25 யோசபாத்தும் அவனது படையும் வந்து மரித்துப் போனவர்களிடம் இருந்த விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச்சென்றார்கள். அவர்கள் பல மிருகங்களையும், செல்வங்களையும், ஆடைகளையும் விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றினார்கள். அவர்கள் அவற்றைத் தமக்கு எடுத்துக்கொண்டனர். அவர்கள் இவ்வாறு விலையுயர்ந்த பொருட்களை மூன்று நாட்களாக கொள்ளையிட்டனர். ஏனென்றால் அவற்றின் அளவு அவ்வளவு மிகுதியாயிருந்தது. 26 நான்காவது நாள் யோசபாத்தும் அவனது படைகளும் பெராக்கா பள்ளத்தாக்கில் கூடினார்கள். அந்த இடத்தில் அவர்கள் கர்த்தரைத் துதித்தனர். எனவே அந்த இடம், “பெராக்கா பள்ளத்தாக்கு” என்று இதுவரையிலும் அழைக்கப்படுகிறது.
27 பிறகு யோசபாத் யூதா மற்றும் எருசலேம் ஜனங்களை எருசலேமிற்குத் திரும்ப அழைத்துக் கொண்டு போனான். அவர்களின் பகைவர்கள் அழிக்கப்பட்டதால் அவர்களைக் கர்த்தர் மிகவும் மகிழ்ச்சியோடு வைத்தார். 28 அவர்கள் எருசலேமிற்குத் தம்புருக்களோடும், சுரமண்டலங்களோடும், எக்காளங்களோடும் வந்து கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்றனர்.
29 அனைத்து நாடுகளிலும் உள்ள அனைத்து அரசுகளும் கர்த்தருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் அவை இஸ்ரவேலின் எதிரிகளோடு கர்த்தர் போரிட்டதைப் பற்றி கேள்விப்பட்டனர். 30 அதனால் யோசபாத்தின் அரசாங்கம் சமாதானமாக இருந்தது. யோசபாத்தின் தேவன் அவனைச் சுற்றிலும் சமாதானத்தைத் தந்தார்.
யோசபாத் ஆட்சியின் முடிவு
31 யோசபாத் யூதா நாடு முழுவதையும் அரசாண்டான். இவன் ஆளத்தொடங்கும்போது இவனுக்கு வயது 35, இவன் எருசலேமில் 25 ஆண்டுகள் ஆண்டான். இவனது தாயின் பெயர் அசுபாள். இவள் சில்கியின் குமாரத்தி. 32 யோசபாத் தனது தந்தை ஆசாவைப் போன்று சரியான வழியில் வாழ்ந்தான். அவன் ஆசாவின் வழியைப் பின்பற்றுவதில் இருந்து மாறவில்லை. கர்த்தருடைய பார்வையில் நல்லவற்றையேச் செய்தான். 33 ஆனால் மேடைகள் அகற்றப்படவில்லை. தம் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவனைப் பின்பற்றுவதற்காக ஜனங்கள் தங்களுடைய இருதயத்தைத் திருப்பவில்லை. 34 யோசபாத் செய்த மற்ற செயல்களைப் பற்றி தொடக்கம் முதல் இறுதிவரை உள்ளவற்றைப் பற்றி ஆனானியின் குமாரனாகிய யெகூவின் ஆவணங்களில் எழுதப்பட்டுள்ளன. பிரதி செய்யப்பட்டு, இஸ்ரவேல் ராஜாக்களின் வரலாறு என்னும் புத்தகத்தில் இவை சேர்க்கப்பட்டன.
35 பிறகு யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேல் ராஜாவாகிய அகசியாவோடு ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். அகசியா தீமைச் செய்தான். 36 யோசபாத் அகசியோவோடு சேர்ந்து கொண்டு தர்ஷீசுக்குச் செல்ல கப்பல் கட்டினான். அவர்கள் கப்பல்களை எசியோன் கேபேரிலே கட்டினார்கள். 37 பிறகு எலியேசர் யோசபாத்துக்கு எதிராகப் பேசினான். எலியேசரின் தந்தை பெயர் தொதொவா. எலியேசர் மரேசா ஊரினன். அவன், “யோசபாத், நீ அகசியாவோடு சேர்ந்துவிட்டாய். அதனால்தான் கர்த்தர் உனது வேலைகளை அழிப்பார்” என்றான். கப்பல்கள் நொறுங்கிப்போயின. அதனால் யோசபாத்தும், அகசியாவும் தம் ஆட்களை தர்ஷீசுக்கு அனுப்பமுடியாமல் போயிற்று.
21 யோசபாத் மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவன் தாவீதின் நகரிலே அடக்கம் செய்யப்பட்டான். யோராம் யோசபாத்தின் இடத்தில் புதிய ராஜா ஆனான். யோராம் யோசபாத்தின் குமாரன். 2 அசரியா, ஏகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா எனும் சகோதரர்கள் யோராமிற்கு இருந்தனர். இவர்கள் யோசபாத்தின் குமாரர்கள். யோசபாத் யூதாவின் ராஜா ஆவான். 3 யோசபாத் தன் குமாரர்களுக்கு வெள்ளி, பொன், விலையுயர்ந்த பொருட்கள் என்று பல பரிசுகளைக் கொடுத்தான். பலமான கோட்டைகளையும் அவர்களின் பொறுப்பில் விட்டான். ஆனால் அவன் தனது ஆட்சியை யோராமிடம் கொடுத்தான். ஏனென்றால் அவன்தான் மூத்த குமாரன்.
யூதா ராஜாவாகிய யோராம்
4 யோராம் தனது தந்தையின் அரசை ஏற்றுக் கொண்டதும் தன்னை பலப்படுத்திக் கொண்டான். பிறகு வாளால் தன் சகோதரர்கள் அனைவரையும் கொன்றான். இஸ்ரவேல் தலைவர்கள் சிலரையும் இவன் கொன்றான். 5 யோராம் ஆட்சிக்கு வந்தபோது அவனுக்கு 32 வயது. அவன் எருசலேமில் 8 ஆண்டுகள் ஆண்டான். 6 இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலேயே அவனும் ஆண்டான். ஆகாபின் குடும்பத்தைப் போன்றே அவனும் வாழ்ந்தான். ஏனென்றால் அவன் ஆகாபின் குமாரத்தியை மணந்திருந்தான். கர்த்தருடைய பார்வையில் யோராம் தீயவற்றைச் செய்தான். 7 ஆனால் கர்த்தர் தாவீதின் வம்சத்தை அழிக்க விரும்பவில்லை. ஏனென்றால் கர்த்தர் தாவீதோடு ஏற்கெனவே உடன்படிக்கை செய்திருந்தார். தாவீதிற்கும் அவனது குடும்பத்திற்கும் என்றென்றைக்கும் விளக்கேற்றி வைப்பதாகக் கர்த்தர் வாக்களித்திருந்தார்.
8 யோராமின் காலத்தில் யூதாவின் ஆட்சிக்குள்ளிருந்த ஏதோம் தனியாகப் பிரிந்தது. அவர்கள் தங்களுக்கென்று ஒரு ராஜாவையும் தேர்ந்தெடுத்துக்கொண்டனர். 9 எனவே யோராம் தனது அனைத்து தளபதிகளோடும் இரதங்களோடும் ஏதோமிற்குச் சென்றான். ஏதோமியப் படை யோராமையும், அவனது இரதப்படையையும் சூழ்ந்துக்கொண்டனர். ஆனால் இரவில் யோராம் அவர்களை முறியடித்தான். 10 அந்த நேரத்திலிருந்து இன்றுவரை ஏதோம் நாடு யூதாவிற்கு எதிராகக் கலகம் செய்தவாறு உள்ளது. லீப்னா ஊரினைச் சேர்ந்தவர்களும் யோராமுக்கு எதிராகத் திரும்பினார்கள். யோராம் தேவனாகிய கர்த்தரைவிட்டு நீங்கியதால் இது நடந்தது. யோராமின் முற்பிதாக்கள் பின்பற்றிய தேவன் அவரே. 11 யோராமும் யூதாவின் மலைப்பகுதிகளில் மேடைகளை அமைத்தான். எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புவதை செய்யாதவாறு யோராம் ஆண்டான். அவன் யூதாவின் ஜனங்களைக் கர்த்தரைவிட்டு விலக்கி வழிநடத்திச் சென்றான்.
12 எலியா தீர்க்கதரிசியிடமிருந்து யோராம் ஒரு செய்தியைப் பெற்றான். அந்தச் செய்தி சொன்னதாவது:
“தேவனாகிய கர்த்தர் சொன்னது இது தான். உனது தந்தையான தாவீது பின்பற்றிய தேவன் இவர்தான். ‘யோராம்! நீ உனது தந்தை யோசபாத் வாழ்ந்த வழியில் வாழவில்லை. யூதாவின் ராஜாவாகிய ஆசா வாழ்ந்த வழியிலும் நீ வாழவில்லை. 13 நீயோ இஸ்ரவேலின் ராஜாக்கள் வாழ்ந்ததுபோன்று வாழ்ந்து வருகிறாய். யூதா மற்றும் எருசலேம் ஜனங்கள் தேவன் விரும்புகிறதைச் செய்யாதிருக்க செய்துள்ளாய். ஆகாபும் அவன் குடும்பத்தினரும் செய்தது இதுவே. அவர்கள் தேவனுக்கு நன்றியுடையவர்களாக இல்லை. நீ உன்னுடைய சகோதரர்களைக் கொன்றிருக்கிறாய். உனது சகோதரர்கள் உன்னைவிட நல்லவர்கள். 14 எனவே, இப்போது கர்த்தர் விரைவில் உனது ஜனங்களை அதிக தண்டனை கொடுத்துத் தண்டிப்பார். உனது குழந்தைகள், மனைவிகள், உனக்குரிய சொத்துக்கள் ஆகிய அனைத்தையும் கர்த்தர் தண்டிப்பார். 15 நீ கொடிய குடல் நோயால் அவதிப்படுவாய். இது நாளுக்கு நாள் மிகுதியாகும். பிறகு உனது கொடூரமான நோயால் உனது குடல் வெளியில் வரும்’ என்று கர்த்தர் கூறுகிறார்.”
16 கர்த்தர் பெலிஸ்திய ஜனங்களையும், எத்தியோப்பியர்களுக்கு அருகில் வசித்த ஆராப் ஜனங்களையும் யோராமின் மீது கோபங்கொள்ளுமாறு விளைவித்தார். 17 அவர்கள் யூதா நாட்டைத் தாக்கினார்கள். ராஜாவின் வீட்டிற்குச் சொந்தமான அனைத்துச் செல்வங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றார்கள். யோராமின் மனைவிகளையும் பிள்ளைகளையும் கைப்பற்றினர். யோராமின் இளைய குமாரன் மட்டும் விடப்பட்டான். அவனது பெயர் யோவாகாஸ்.
18 இவையனைத்தும் நிகழ்ந்த பிறகு கர்த்தர் யோராமிற்குக் குடல்நோய் வரும்படி செய்தார். அது குணப்படுத்த முடியாத அளவிற்கு இருந்தது. 19 பிறகு இரண்டாண்டுகள் கழிந்து அவனது நோயின் காரணமாக குடல் வெளியில் வந்தது. அவன் மிகுந்த வலியால் மரித்துப்போனான். இவனது தந்தைக்கு வாசனை பொருட்களை எரித்ததுபோல் இவனுக்கு ஜனங்கள் எரிக்கவில்லை. 20 யோராம் ராஜாவாகியபோது 32 வயதுள்ளவனாயிருந்து 8 வருஷம் எருசலேமில் அரசாண்டு மரித்துப் போனான். அவன் மரித்ததும் அவனுக்காக எவரும் துக்கப்படவில்லை. ஜனங்கள் யோராமை தாவீதின் நகரத்திலே அடக்கம் செய்தனர். ஆனால் ராஜாக்களுக்குரிய கல்லறையில் அடக்கம் செய்யவில்லை.
2008 by World Bible Translation Center